
சிக்மகளூர் இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் அமைந்துள்ள ஓர் அழகிய நகரமாகும். இது மலை வாழிடத்திற்கு பெயர் பெற்றதாகும். புகழ்பெற்ற முல்லையன கிரி மலைத்தொடர் அடிவாரத்தில் இவ்வூர் அமைந்துள்ளது. சிக்மகளூர் கர்நாடகாவின் காபி விளையும் நிலமாக மிகவும் புகழ்ப்பெற்று விளங்கும் இடமாகும். சமவெளிப் பகுதிகளும், மலைப்பகுதிகளும் நிறைந்து காணப்படும். தனிமை, இனிமை இயற்கை அழகினை இங்கு தங்கி அணு அணுவாக அனுபவிக்கலாம். உடல், மனம் இரண்டிற்கும் அமைதியைத் தரக்கூடிய இடங்களில் சிக்மகளூரும் ஒன்றாகும். இந்த நகருக்கு அருகில் தான் மங்களூர் சர்வதேச விமான நிலையம் உள்ளது.
சிக்மகளூரின் வரலாறு சுவாரசியமானது. இது மலைகள் சூழ்ந்த இடமாகும். இவ்வூர் "இளைய மகளின் ஊர்" என்று அழைக்கப்படுகிறது. இதற்கு ஒரு கதையும் நிலவுகிறது. முற்காலத்தில் இருந்த ஓர் அரசர் தன் இளையமகளுக்கு இவ்வூரைத் தானமாக அளித்தாராம். அதனால் இப்பெயர் பெற்றது என்பார்கள்.
இங்குள்ள தூய்மையான காற்று பெரும்பாலும் அனைவருக்கும் ஏற்றது. இது மனதுக்கு உகந்த சுற்றுலா நகரமும் கூட. இந்தியாவில் இருக்கும் பன்முகம் கொண்ட சுற்றுலாத் தலங்களுள் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கதாகும். இங்குள்ள மலைப்பிரதேசங்கள், நீர் வீழ்ச்சிகள், கோயில்கள், வனப்பகுதிகள், காபித்தோட்டங்களைப் பார்த்து மகிழ வேண்டியது அவசியமாகும். இவ்வூரைச்சுற்றி காபி தோட்டங்கள் பச்சைப்பசேலென படர்ந்து இருக்கின்றன.
கர்நாடகாவின் உயர்ந்த இடமான முல்லையன கிரியை நேரில் கண்டு ரசிக்க வேண்டும். இத்தகைய பல பெருமைகளைக்கொண்டு விளங்கும் இவ்வூருக்கு நேரில் வந்து தங்கி அனுபவித்து பார்த்தால் மட்டுமே புரிந்துக்கொள்ள முடியும் என்பதை கேட்டறிந்தோம். எனவே "நேரில் சென்று சிக்மகளூரைப் பார்க்க வேண்டும்" என்ற எண்ணம் ஒரு சிறிய சுற்றுலாப் பயணமாக மலர்ந்தது.
பெங்களூர்! பனிபடர்ந்த சில்லென்ற விடியற்காலை. நேரம் 6.00 மணி. வீட்டிலிருந்து சுடச்சுட மல்லிகைப்பூ போன்ற இட்லிகள், இட்லிப்பொடி, காரச் சட்னி, பிளாஸ்கில் தேநீர், ஆரஞ்சு பழங்கள், சாக்லேட்ஸ் நிறைந்த சாப்பாட்டுக் கூடையுடன் சிக்மகளூர் கிளம்பினோம். என் மகன், மருமகள், பேத்தி நால்வரும் உற்சாகமாக காரில் கிளம்பினோம். லேசாக வெளியில் பனித் தூறல்! சாலையில் கார் சீராக சென்றுக் கொண்டிருந்தது.
காலை எட்டுமணி இருக்கும்! எல்லோருக்கும் நல்ல பசி! உடனே என் மகன் சாலையோரத்தில் நல்ல நிழல் இருக்கும் இடத்தில் காரை நிறுத்தியவுடன் எல்லோரும் இறங்கி வெளியில் வந்து நின்று கொண்டோம். மரநிழலில், அந்த ஜிலு ஜிலுவென்ற காற்று! சுகந்தான்……. வாழை இலையில் கட்டிக்கொண்டு வந்த இட்லிப் பொட்டலங்களைத் திறந்து சட்னி, பொடியோடு சாப்பிட்டோம். ஆஹா! ருசியோ ருசி! வீட்டில் சாப்பிடுவதைவிட இரண்டு இட்லி கூடுதலாக சாப்பிட முடிந்தது. பிளாஸ்கில் இருந்த டீ தேவாமிர்தமாக இருந்தது. சாப்பிட்டு முடித்தவுடன் கார் கிளம்பியது. வழியில் எங்கும் நிற்கவில்லை. நாங்கள் தங்கப்போகும் ரிசார்ட்டை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது.
வழி நெடுகிலும் தோன்றிய இயற்கைக் காட்சிகளை ரசித்துக்கொண்டே சென்றோம். மதியம் 11.30-க்கு ரிசார்ட்டுக்குள் கார் நுழைந்தது. இருபுறமும் பெரிய மரங்கள், மலைப்பாறைகள் சூழ்ந்திருந்தன. அருமையான ரம்யமான சூழலில் நாங்கள் தங்கும் இடம் அமைந்திருந்தது. நாங்கள் ரிசார்ட்டுக்குள் சென்றதும் மூலிகை பானம் வழங்கினார்கள். நல்ல ஒரு மணமாக இருந்தது. பின்பு நாங்கள் தங்கப்போகும் 'வில்லா' வீட்டிற்கு அவர்களது காரில் அழைத்துச்சென்றார்கள். நாங்கள் கொண்டு சென்ற சூட்கேஸ்கள் மற்றும் எல்லா சாமான்கள் மீதும் சானிடைஸ் செய்தார்கள். அங்கு பணிபுரிபவர்கள் அனைவரும் எங்களை வரவேற்ற விதம், பொருள்களை சுத்தம் செய்தது, அவர்களுடைய தூய்மை அனைத்தும் எங்களை நம்பிக்கையோடு உள்ளே செல்ல அனுமதித்தன.
நாங்கள் தங்கியிருந்த வில்லா வீட்டின் பெயர், 'குவாஹாவா வில்லா' (QUAHVA VILLA) நல்ல பெரிய வீடாக இருந்தது. வீட்டின் முன்புறம் இரண்டு சிறிய திண்ணைகள், வீட்டின் முகப்பில் ஒரு சிறிய தோட்டம், வீட்டின் பின்புறம் பார்த்தால் பசுமையாக மரஞ்செடி, கொடிகள் சூழ்ந்திருந்தன. மொத்தத்தில் ஒரு காட்டின் நடுவே இருப்பதுபோல இருந்தது. எல்லோரும் ஆவலுடன் உள்ளே சென்றோம். உள்ளே ஒரு பெரிய ஹால் இருந்தது. நடுவில் பெரிய படுக்கையும் அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது. அறை முழுவதும் உயரமான கண்ணாடி சன்னல்கள் மூடியிருந்தன. அச்சன்னல்களை மெல்லிய, வெண்மையான திரைச்சீலைகள் அலங்கரித்துக் கொண்டிருந்தன. திரைச்சீலைகளை விலக்கினால் இயற்கையின் அழகை ரசிக்கலாம். உள்ளே சென்றால் ஒரு சிறிய சமையல் அறை. அனைத்து வசதிகளும், அதாவது மின்சார சாதனங்களும் இருந்தன. அந்த வீட்டில் உள்ள குளியல் அறை, ஹால் அளவுக்குப் பெரிதாக இருந்தது. குளிப்பதற்கு இரண்டு இடங்கள், ஷவர் பாத் மற்றும் இளையவர்கள் விரும்பும் ஜக்கூஸி (JACUZZI) ஒன்றும் இருந்தன. சுவரின் கீழே விளக்குகள் எரிந்து கொண்டு இருந்தன.
ஹாலில் இருந்து பக்கவாட்டில் உள்ள கதவைத் திறந்தால் ஆஹா! அழகுதான்! கூடைப்படுக்கை (COUCH)! இதில் படுத்துக்கொண்டு இயற்கையை ரசிப்பது என்பது நிச்சயமாக நமது நகரத்தில் பெறமுடியாது. சுற்றிலும் பச்சைப் பசேலென மரஞ்செடி கொடிகள் கண்களை கவர்ந்திழுத்தன. அழகான தேன்சிட்டுகள் 'கீச்கீச்'சென்று சத்தமிட்டபடியே பறந்துக் கொண்டிருந்தன.
காலை வேலைகளில் அழகான மயில்கள் தோகையை விரித்து ஆடிக்கொண்டிருந்தன. இந்த காட்சிகள் நம்மை ஏதோ ஒரு புதிய உலகிற்கு அழைத்துச்செல்வதாக உணர முடிந்தது. அந்த தனிமை ஒரு விவரிக்க முடியாத ஒரு சுக அனுபவத்தைத் தந்தது! என்று கூறலாம்.
உணவு:- காலை டிபன் என்று பார்க்கும் போது இட்லி, தோசை, பூரி, உப்புமா, வெண்பொங்கல், மசால் வடை, 2 வகை சட்னிகள், வேகவைத்த முட்டைகள், சிக்கன் கிரேவி, ரொட்டி வகைகள், பிஸ்கட்ஸ், கெலோக்ஸ், பழங்கள், காபி, டீ, ஜூஸ் வகைகள் என்று வைக்கப்பட்டிருந்தன. இதில் தினமும் கொஞ்சம் மாற்றம் இருக்கலாம் என்று நினைக்கிறேன். மதிய வேளைகளில் சைவ சாப்பாடு மற்றும் அசைவ சாப்பாடு பரிமாறுகிறார்கள். அசைவத்தில் சிக்கன், மீன் பிராதனமாக உள்ளன. அதிலும் வாழை இலையில் சுற்றப்பட்ட வறுத்த மீன் வெகு ஜோர்!
மாலை வேளைகளில் பிஸ்கட்ஸ், ஃபிரட், பஜ்ஜி, காபி, டீ, ஹார்லிக்ஸ் போன்ற பானங்களைத் தருகிறார்கள்.
இரவு வேளைகளிலும் சைவம், அசைவமும் உள்ளன. அதில் கொண்டகடலையை நிலக்கடலையைப்போல வறுத்துக் கொடுக்கிறார்கள். அருமையான ருசி! இரவில் டிபன் வகைகள் தான் அதிகமாக உள்ளன. சப்பாத்தி, நாண் வகைகள், தோசை என்று சாப்பிட முடிந்தது. இந்த நேரத்திலும் காய்கறிகளும், சிக்கன், மீன் அதிக அளவில் உள்ளன. நமக்கு வேண்டியதை நாம் எடுத்துக்கொண்டு சாப்பிடும் முறையான BUFFET தான் உள்ளது. இருந்தாலும் எங்கள் பேத்தி கேட்ட உணவையும் உடனே தயார் செய்து கொடுத்ததையும் மறக்க முடியாது! உணவு விடுதியின் உள்ளேயும், இயற்கையை ரசித்துக்கொண்டு இருட்டில் மேசை விளக்கின் சன்னமான ஒளியில் அமர்ந்து கொண்டு உணவருந்தியது ஒரு புதிய அனுபவமாக இருந்தது.
முதல் நாள் நாங்கள் தங்கியிருந்த ரிசார்ட்டுக்குள்ளேயே நடந்து சென்று அங்கிருந்த இயற்கை அழகினை ரசித்தோம். மலை மீது நின்று சுற்றிலும் இருக்கும் அழகை ரசிப்பது என்பது தனி சுகமே! ரிசார்ட்டுக்குள் கிரிம்சன் பீக் (CRIMSON PEAK) என்று ஒரு இடம். அதில் நிறைய படிக்கட்டுகள் இருந்தன. மாலை வேளையில் அதன் மீது ஏறி சென்று சூரியன் மறைவதைக் காணலாம். அங்கும் பிஸ்கட்ஸ், காபி கொடுப்பார்கள். தேநீரை, காபியை அருந்திக்கொண்டு இயற்கையை ரசிக்கும் போது மனம் உற்சாகத்தில் மிதக்கும்.
அடுத்ததாக பிறந்தநாள் விழா மற்றும் திருமணநாள் விழாவினைக் கொண்டாடுவதற்காக இங்கு தனி இடத்தை உயரமான இடத்தில் அமைத்துள்ளார்கள். இரவில் அந்த சிறிய இடம் பலூன்களால் அலங்கரிக்கப்பட்டு பிரகாசிக்கும். அந்த இடத்தை "CANDLE LIGHT DINNER SPACE" என்று அழைக்கிறார்கள். இந்த இடம் ரிசார்ட்டுக்குள்ளேயே அமைந்துள்ளது.
விடியற்காலையில் நாங்கள் "சாந்தி அருவி"க்குச் சென்றோம். இது சின்ன அருவி. அன்று மக்கள் கூட்டம் இருந்தது. எங்கு பார்த்தாலும் குரங்குகள் கூட்டம் இருந்தது. பின்பு அங்கிருந்து மாணிக்யதாரா அருவிக்கு சென்றோம். வெகு தூரம் பயணம் செய்தோம். அந்த அருவிக்குச் செல்வதற்கு 100 படிக்கட்டுகள் இருந்தன. கொஞ்சம் ஏறமுடியாமல் தவித்தோம். மேலே செல்வதற்கு வேறு வசதிகள் கிடையாது. இந்த அருவிக்குச் செல்லும்போது சாலையின் இருபுறமும் அருமையாக அமைந்துள்ள மலையின் அழகினை படம் எடுத்தப்படியே சென்றோம். செல்லும்போதே வழியில் இறங்கி மலையின் உயரத்தில் நின்று கொண்டு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். எல்லோரும் உற்சாகமுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் நாங்கள் சென்றபோது இந்த அருவியில் எதிர்ப்பார்த்த அளவிற்கு நீரோட்டம் இல்லை. எனவே, இங்கு செல்வதற்கு முன் அருவியில் தண்ணீர் உள்ளதா என்பதை கேட்டு அறிந்து கொண்டு செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மாலை தங்குமிடத்திற்கு வந்த பிறகு அங்கேயே உள்ளே இருக்கும் காபி தோட்டத்திற்கு ரிசார்ட்டின் வழிகாட்டி பத்து பேர் அடங்கிய குழுவை அழைத்துச் சென்றார். இது ஒரு த்ரில்லிங்கான அனுபவம் என்றுதான் சொல்ல வேண்டும். ஒற்றையடிப்பாதை, வலது புறம் கிடுகிடுவென்ற பள்ளம், இடதுபுறம் மேலே உயரமான வனப்பகுதிபோல ஒரு தோற்றம். அந்த ஒற்றையடிப்பாதையில் மரங்களின் சருகுகள் கொட்டிக் கிடந்தன. எது மேடு, பள்ளம் என்று தெரியவில்லை. இருபுறமும் காபி தோட்டங்கள் சூழ்ந்து இருந்தன. நாங்கள் சென்ற நேரத்தில் காபி பூக்கள் பூத்திருந்தன. வழிகாட்டி காபி செடியின் வகைகளை விளக்கிக்கொண்டு வந்தார். மிகுந்த கவனமாக வெகுதூரம் நடந்து சென்றுவிட்டு, பிறகு அதே வழியில் திரும்பி ரிசார்ட்டுக்கு வந்தோம். இதன் இடையில் ஒரு நகைச்சுவை! பள்ளத்திலிருந்து ஒரு புலியும், வனப்பகுதியிலிருந்து ஒரு கரடியும் வந்து விட்டால் என்ன செய்வது? என்று நினைத்த மாத்திரத்தில் இனந்தெரியாத ஒரு பயம் குடிகொண்டது. ஏனென்றால் நடக்கும்போது சருகுகளின் சத்தம் மட்டும்தான் கேட்கிறது! ஆனால் வழிகாட்டி "எந்த மிருகங்களும் இங்கு கிடையாது! என்றவர் அங்கு தோகை விரித்து ஆடிக்கொண்டிருக்கும் மயில்களை சுட்டிக்காட்டினார்". அதற்கு பிறகுதான் எங்களுக்கு தைரியம் வந்தது எனலாம். இரவு சாப்பாட்டுக்குப் பிறகு நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு அருமையான தூக்கம் எங்களை அரவணைத்துக்கொண்டது.
மூன்றாது நாள்:- வாழ்க்கையில் மறக்க முடியாத மிகவும் ஆனந்தமாக இருந்த நாள் அது! சிக்மகளூரில் நினைவு கூற வைக்கும் இடம் "ஜரி அருவி அல்லது பட்டர் மில்க் அருவி" (JHARI FALLS OR BUTTER MILK FALLS ). 'அருவி' என்ற சொல்லே மகிழ்ச்சியை அளிக்கும். நாங்கள் சென்ற நேரம் மழை நேரம் அல்ல. ஆனால், இங்கு குளிக்கலாம் என்றவுடன் எங்கள் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் பிரகாசம் தோன்றியது. எங்கள் காரை சாலையில் விட்டு விட்டு, அங்கு உள்ள ஒரு ஜீப்பில் பயணமானோம். நல்ல டிரைவர். பேசிக்கொண்டே வந்தார். எங்களால்தான் பேச முடியவில்லை? ஏன் தெரியுமா? இந்த பயணம் மிகவும் த்ரில்லிங்கான, 'திக் திக்' என்ற இரண்டாவது பயணம். "யார் ஜீப்பிலிருந்து வெளியே விழுந்து விடுவார்களோ" என்ற அளவிற்கு கைப்பிடியை பிடித்துக்கொண்டு சத்தமிட்டபடியே உட்கார்ந்துக் கொண்டு சென்றோம். ஏனென்றால் உண்மையிலேயே செங்குத்தான இறக்கத்தில் வண்டி சென்று கொண்டிருந்தது. வயதானவர்கள் மற்றும் தனியே கார் ஓட்டி செல்வதும் பாதுகாப்பு அல்ல என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்! ஜீப் குலுங்க… குலுங்க… செம்மயான த்ரில் பயணம்! மறக்க முடியாதது. அருவி நெருங்குவதை அருவித் தண்ணீர் விழும் சத்தம் காட்டிக்கொடுத்தது. சீசன் இல்லை என்பதால் கூட்டம் இல்லை. மேலும் நாங்கள் விடியற்காலையில் பொழுது புலரும் நேரத்தில் கிளம்பியதும் ஒரு காரணம். நிறைய பாறைகள். அங்கே திருமணத்திற்காக இப்போதெல்லாம் எடுக்கப்படும் புகைப்படங்களுக்காக பெண்ணும், மாப்பிள்ளையும் விதவிதமாக நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். அருவியைப் பார்த்ததும் பிரமித்துப் போனோம். அவ்வளவு பெரிய அருவி. பெயருக்கு ஏற்றாற்போல் வெள்ளி நிறத்தில் அடர்த்தியாக வேகமாக அருவி தண்ணீரைப் பொழிந்து கொண்டு இருந்தது. அதைப் பார்த்ததும் வேகமாக தண்ணீரில் காலை வைத்தோம்! ஒரு பரவச நிலை அனைவருக்கும் ஏற்பட்டது என்றே சொல்ல வேண்டும்!
ஜஸ்கட்டியைக் காட்டிலும் குளிர்ந்த தண்ணீர். 5 வினாடிகள் தொடர்ந்து நிற்க முடியவில்லை. அப்படி ஒரு குளிர்ச்சியை உணரலாம். நீரின் வேகம் அனைவரையும் நனைத்து விடுகிறது. என் மகன் மட்டும் அந்த அருவியில் குளித்தார். சிறிது நேரம் தான் நிற்கமுடிகிறது. அப்படி ஒரு வேகம்! நாங்கள் சென்ற நேரம் சரியான நேரம். இதுவே மழைக் காலமாக இருந்தால் அருவியின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால், பாறைகள் தெரியாமல் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டும் என்பதால் அப்போது யாரும் அங்கு குளிப்பதற்கு அனுமதி கிடையாது என்றனர். அங்கிருந்து வருவதற்கு மனம் வரவில்லை. இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு அதே ஜீப்பில் கிளம்பி பாதுகாப்பாக வந்து சேர்ந்தோம்.
அன்று மதியம் பெங்களூர் கிளம்பினோம். ரிசார்ட் உணவு விடுதியில் எங்களுக்கு மதிய உணவினை அருமையாக தயார் செய்து பைகளில் வைத்து கொடுத்தார்கள். ஒவ்வொரு பணியாளரும் நன்றாக கவனித்துக்கொண்டார்கள்.
அங்கு பிரபலமான காபித்தூள் வாங்குவதற்கு சிறந்த கடையாக ரிசார்ட்டில் கூறிய, சிக்மகளூர் கடைத் தெருவில் உள்ள "ஜெயந்தி காபி" கடைக்கு வந்தோம். அங்கு விதவிதமான பலசுவைகளில் காபித்தூள் வகைகள் இருந்தன. எங்களுக்கு வேண்டியதை வாங்கிக்கொண்டோம்.
பனிபோர்த்திய மலைகளும், அடர்ந்த வனப்பகுதிகளும், ஆர்ப்பரிக்கும் அருவிகளும் நிறைந்த கர்நாடகாவின் மலை அரசி "சிக்மகளூர்" பயணம் எங்கள் மனதை விட்டு நீங்காது! என்றென்றும் அதன் நினைவுகள் இனிய தென்றலாய் சுகமாக வீசிக்கொண்டிருக்கும்!