
ராக்கியப்ப முதலி தெருவில் வெள்ளிக்கிழமை காலையில் விச்ராந்தியாக அன்றைய அக்கப்போர்களை அலசிவிட்டு, மெதுவாக குளித்து, காலை ஒன்பது மணிக்கே சம்பிரமாக சாம்பார், ரசம், மோர் என்று சாப்பிட்டுவிட்டு, வேஷ்டி – சட்டை போட்டுக்கொண்டு சைக்கிளில் ஏஜிஎஸ் ஆஃபீசுக்குப்போகும் இரண்டு ஆசாமிகள் பேச்சு.
"என்ன ஒய்! இன்னிக்கு பேப்பர்ல என்கேஜ்மென்ட் காலம் பாத்தேளா?"
"என்ன விசேஷம்?
"என்ன விசேஷமா? இன்னிக்கு ஆறரை மணிக்கு அரியக்குடி பாட்டுங்காணும்!"
"அடேடே! சரி நான் அஞ்சரைக்கே ரெடியாய்டறேன்! நீர் ஆஃபீஸுலேர்ந்து வந்துடுவேளோல்லியோ?"
"பின்ன வராம! இன்னிக்கு டெல்லிலேர்ந்து ஆடிட் ஆஃபீசர் வந்திருக்கான். ஆனா நான் நாலு மணிக்கே தல வலிக்கறதுன்னுட்டு ஓடி வந்துட மாட்டேன்!"
இதைப் படிக்கும் நாம் "ஓஹோ இருவரும் கிளம்பி ஏதோ சபாவில் பாட்டு கேட்கப்போகிறார்களோ" என்று நினைப்போம்.
அதான் இல்லை.
இன்றைய காந்தி சிலைக்குப் பின்னால் பீச்சுக் கரையில் மணலில் ஆங்காங்கே பெரிய கம்பம் நட்டு, மேலே லவுட் ஸ்பீக்கர் கட்டி, ஆல் இந்தியா ரேடியோவிலிருந்து ஒலிபரப்பப்படும் பாட்டுக் கச்சேரி கேட்கத்தான்!
ஆம், கேள்விப்படாத டி.வி.யும், டிரான்ஸ்ஸிஸ்டரும், ஏன்… ரேடியோவும்கூட அரிதான நாட்களில், நடுத்தர மற்றும் ஏழை மக்கள் ரேடியோ நிகழ்ச்சிகளைக் கேட்கத் தோதாக ஆல் இந்தியா ரேடியோவின் சில நிகழ்ச்சிகளை இந்த மாதிரி பீச் மற்றும் பார்க்குகளில் ஒலிபரப்ப, ஜனம் வந்து ஆனந்தமாக கேட்டு ரசித்த நாட்கள்.
"நேத்து மதுர மணி வெள்ளைத்தாமரை பூவில் ரசிச்சேளா?"
"எங்க ஓய்! சாந்தோம்ல ஒரே கரகரன்னு லவுட் ஸ்பீக்கர் பாடாய்ப்படுத்தி ஒழுங்கா கேக்க விடாம ஒரே அவஸ்தை!"
"நா பேசாம நாகேஸ்வர ராவ் பார்க்குக்கு போய்ட்டேன்! அங்க புது ஸ்பீக்கர் வெச்சிருக்கான். அடுத்த கச்சேரிக்கு அங்க வந்துடும்! பேஷா கேக்கலாம்!"
தி.நகர் பனகல் பார்க் பக்கம் ஒரு பஞ்சகச்சம் வேஷ்டி கட்டின ஆசாமிக்கும், கை ரிக்ஷா இழுப்பவருக்கும் இடையே இந்த மாதிரி உரையாடல் கேட்கப்பட்டதாக ஆதாரப்பூர்வ செய்திகள் உண்டு.
"என்னப்பா ரிக்ஷா வருமா? நுங்கம்பாக்கம் வரைக்கும் போகணும்!"
"மணி என்ன ஆச்சு சாமி?"
"இப்ப மணி தெரிஞ்சு உனக்கென்னப்பா ஆகப்போகுது!"
"நீ மணி சொல்லு சாமி…?"
"ஆறேகால் ஆவுதுப்பா?"
"இல்ல சாமி… ரிக்ஷா வராது!"
"அட இதென்னப்பா புதுசா இருக்கு? டைம் பாத்துதான் நீ ரிக்ஷா ஓட்டறியா?"
"அட என்ன சாமி நீ? பார்த்தா படிச்சவராட்டமா தெரியுது! பேப்பர் பாக்கலியா? இன்னிக்கு ஆறரை மணிக்கு மகாராஜபுரம் விசுவநாதய்யர் கச்சேரி! பனகல் பார்க்க வுட்டு நகருவேனா நானு! நீயும் உக்காரு! இங்கயே கேட்டுட்டு அப்பால உன்னை நுங்கம்பாக்கத்துல இட்டுக்கினு போய் உடறேன்!"
ஆல் இந்தியா ரேடியோ தொடங்கின 1937லிருந்தே இந்த மாதிரியான லவுட் ஸ்பீக்கர் வைத்து முக்கியமான பொது இடங்களில் மக்கள் கூடி ரேடியோ நிகழ்ச்சிகளைக் கேட்கும் வசதி செய்திருந்தார்கள்.
நமக்கெல்லாம் தெரியாத 'ஹைகோர்ட் பீச்' என்று ஒன்று உண்டாம்! அதாவது ஹைகோர்ட்டுக்கு அருகாமை கிழக்குப்பக்க பீச்சைத்தான் அப்படிக் குறிப்பிடுவார்கள். அந்த பீச் இப்போது போர்ட் டிரஸ்டால் விழுங்கப்பட்டுவிட்டது. ஜார்ஜ் டவுன் மற்றும் பார்க் டவுன்வாசிகளுக்கு இந்த ஹைகோர்ட் பீச் ரேடியோ கேட்க மிகச் செளகரியமாக இருந்திருக்கிறது.
நெகிழ்ச்சியான இன்னொரு சமாசாரம் நடந்த நாள், ஆகஸ்டுப் பதினாலாம் தேதி 1947. மிகப்பெரிய கூட்டம் மெரினாவில் கூடின. காரணம், ஜவஹர்லால் நேருவின் சுதந்திர தின பேச்சைக் கேட்க. அப்போதிருந்த வட்ட வடிவ சிமெண்ட் பெஞ்சில் திருவல்லிக்கேணி – மைலாப்பூர் மக்கள் அன்றைய நிலா வெளிச்ச இரவு பதினொன்றரை மணிக்கு கூடி நேருவின் உரையைக் கேட்டு நெகிழ்ந்தார்கள். இந்தக் காட்சியை நேரில் கண்ட என் அப்பா சொல்லக் கேட்டிருக்கிறேன்!
இந்த லவுட் ஸ்பீக்கர் சமாசாரம் மக்களிடையே மிகப் பிரசித்தி பெற்றது என்பதற்கு அடையாளமாய் 'என் மனைவி' திரைப்படத்தில் ஒரு பாட்டே வைத்திருந்தார்கள்.
"சாயங்கால நேரத்திலே சமுத்திரக்கரை ஓரத்திலே
மாயமான கம்பம் ஒண்ணு மனுஷன் போலப்பாடுதய்யா…"
வெண்மை நிற ஒயர் நீண்டு காதுக்குள் நுழைத்து மடியில் ஐ பாடுடன் சிரித்தபடி முகம் மலர்ந்து இருக்கும் இரண்டு வயதுக் குழந்தையைக் கேட்டால், "பாபா பிளாக் ஷீப் கேக்கறேன்" என்று சொல்லும் இந்நாளோடு ஒப்பிடுகையில், ரேடியோ வாங்க இயலாத பொது ஜனம் பீச்சுக்கும் பார்க்குகளுக்கும் போய் நிகழ்ச்சிகளைக் கேட்ட நாட்களிலிருந்து நாம் வெகு தொலைவில் வந்துவிட்டோம் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால்… "மனித நேயத்திலும் ஒற்றுமையிலும் சகமனித அக்கறையிலும் மனதளவில் முன்னேறிவிட்டோமா?" என்னும் கேள்வியைக் கேட்கத் தோன்றுகிறதல்லவா?