
நவீன உலகின் வேகமான வாழ்க்கை முறையில் பெரும்பான்மையான மக்கள் மன அழுத்தம், நிம்மதியின்மை, மனக்குழப்பத்தால் அவதிப்பட்டு வருகிறார்கள். ஆனால், மிக நீண்ட ஆயுளோடு நிம்மதியான வாழ்க்கையை வாழும் ஜப்பானியர்கள், தங்களின் அன்றாட வாழ்வில் சில பாரம்பரிய தத்துவங்களையும் நுட்பங்களையும் பின்பற்றி வருகிறார்கள். ஒருவரின் வாழ்க்கையை முழுமையாக மாற்றியமைக்க உதவும் 10 ஜப்பானிய வாழ்க்கை முறை நுட்பங்களைப் பற்றி இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம்.
பொதுவாகப் பலருக்கும் வரவுக்கு மீறிச் செலவு செய்யும் பழக்கம் உள்ளது. தனது வருமானம் எவ்வளவு, தினமும் செய்யும் செலவுகள் என்னென்ன என்பவற்றை ஒரு டைரியிலோ அல்லது நோட்டுப் புத்தகத்திலோ கையால் எழுதிப் பார்ப்பதே 'ககீபோ' முறையின் சிறப்பம்சமாகும். இதன் மூலம் ஒருவர் தான் எவ்வளவு சம்பாதிக்கிறார், மாதாமாதம் எவ்வளவு பணத்தைச் சேமிக்க விரும்புகிறார், எவ்வளவு செலவு செய்கிறார் போன்ற கேள்விகளுக்குத் தெளிவான விடையைக் காண முடியும். சின்னச் சின்னச் செலவுகளைக் கூட எழுதி வைக்கும் போது, தேவையற்ற செலவுகளை நிச்சயம் தவிர்க்கலாம். இதனால் கணிசமான பணம் மிச்சமாகிச் சேமிப்பு அதிகரிக்கும்; நிதி சுதந்திரத்தையும் மன அமைதியையும் பெற முடியும்.
வாழ்க்கையில் உயர வேண்டுமென்றால் பெரிய இலக்குகளும் லட்சியங்களும் அவசியம். ஆனால், பலருக்கும் அதை நினைத்து அச்சமும் தயக்கமும் உண்டு. குறுகிய காலத்தில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவர முயற்சிப்பதை விட, தினமும் சிறிய அளவில் இலக்கை நோக்கிப் பயணிப்பதற்கான முயற்சிகளைச் செய்யலாம். தினமும் 1% (ஒரு சதவீதம்) என்ற அளவில் மிகச்சிறிய முயற்சியையும் முன்னேற்றத்தையும் அடைவதே கைஸென் முறையின் நோக்கமாகும். உதாரணமாக, படிப்பில் பின்தங்கிய ஒரு மாணவன் தினமும் 1% கூடுதல் முயற்சி செய்தால், நிச்சயம் கல்வியில் சிறந்த முன்னேற்றம் காண்பான். அதுபோலவே, நாம் பணிபுரியும் இடம், தனிப்பட்ட பழக்கவழக்கங்கள் என ஒவ்வொன்றிலும் சிறு சிறு மாற்றங்களை தினமும் செய்து வரும்போது, நினைத்த இலக்கை அடைய முடியும். இத்தகைய தொடர்ச்சியான சிறு முன்னேற்றங்கள் நிலையான வளர்ச்சிக்கு வழிவகுப்பதோடு, மாபெரும் வெற்றியையும் தேடித் தரும்.
'இக்கிகய்' என்பது மனிதன் வாழ்வதற்கான அடிப்படை நோக்கத்தையும் காரணத்தையும் குறிக்கும் ஒரு ஜப்பானிய வாழ்க்கை முறை தத்துவம் ஆகும். பிடித்தமான விஷயம், திறமையான செயல், வருமானம் தரும் தொழில் மற்றும் சமூகத்திற்குப் பயன்படும் நன்மை ஆகிய நான்கு அம்சங்களும் ஒன்றிணையும் புள்ளியே இக்கிகாய் எனக் கருதப்படுகிறது. ஒவ்வொரு நாளும் காலையில் விழிக்கும்போதே மனதில் சலிப்பு ஏற்படாமல், ஒருவித புது உற்சாகத்தையும் சுறுசுறுப்பையும் தரக்கூடிய செயலைக் கண்டறிவதே இதன் முக்கிய மையக்கருத்தாகும். வாழ்க்கையில் தெளிவான இலக்குடன் கூடிய மகிழ்ச்சியையும், மன நிறைவையும் அடைய இந்தத் தத்துவம் பெருமளவில் வழிகாட்டுகிறது.
இயற்கையோடு இணைந்து வாழ்வதே மன அழுத்தத்திற்குச் சிறந்த மருந்தாகும். 'ஷின்ரின்-யோகு' என்பது காடுகள் அல்லது அடர்ந்த மரங்கள் நிறைந்த இயற்கை சூழலில் நேரத்தைச் செலவிட்டு உடலையும் மனதையும் புத்துணர்ச்சி பெறச் செய்வதைக் குறிக்கிறது. மொபைல் போன், கணினி போன்ற மின்னணு சாதனங்களை முற்றிலும் விலக்கி வைத்துவிட வேண்டும். அமைதியான காட்டு வழியில் நடைப்பயிற்சி, மரங்களின் இயற்கை நறுமணம், பறவைகளின் ஒலி, சலசலக்கும் ஓடைகள், மற்றும் பசுமையான காட்சிகளை 5 புலன்களாலும் முழுமையாக அனுபவித்து உணர வேண்டும். மரங்கள் வெளியிடும் 'ஃபைட்டான்சைடு' (Phytoncides) என்ற இயற்கை வேதிப்பொருள் இரத்த அழுத்தத்தைக் குறைத்து, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிகக்கிறது. வனக் குளியல் அமைதியையும், புத்துணர்ச்சியையும், ஆழ்ந்த நிம்மதியையும் அளிக்கிறது.
'ஹாரா ஹாச்சி பு' என்பது வயிறு முழுமையாக (100%) நிரம்பும் வரை அளவுக்கு அதிகமாக உண்ணாமல், 80% பசி அடங்கியவுடனேயே சாப்பிடுவதை நிறுத்துவதாகும். ஜப்பானின் ஒகினாவா பகுதியில் வாழும் மக்கள் 100 ஆண்டுகளைக் கடந்து ஆரோக்கியமான நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு இந்த பாரம்பரிய உணவுப் பழக்கமே முதன்மை காரணமாகும். நாம் உண்ணும் உணவு மூளைக்குச் சென்று வயிறு நிறைந்துவிட்டதை உணர்த்துவதற்குச் சுமார் 20 நிமிடங்கள் ஆகும்.
எனவே, அவசரப்படாமல் உணவை மெதுவாக மென்று உண்டு,, சிறிது பசி இருக்கும்போதே உண்பதை முடித்துக் கொள்ளவேண்டும். செரிமானத்தை சீராக்கி, உடல் எடையைச் கட்டுப்பாட்டில் வைப்பதுடன், சாப்பிட்ட பிறகு ஏற்படும் தூக்கக் கலக்கத்தையும் மந்தமான உணர்வையும் தடுத்து, நாள் முழுவதும் உடலைச் சுறுசுறுப்பாகவும் ஆற்றலுடனும் வைத்திருக்கப் பெருமளவில் உதவுகிறது.
'ஓசோஜி' என்பது வெறும் வீட்டைப் பெருக்குவது மட்டுமல்ல; அது மனதைச் சுத்தப்படுத்தும் ஒரு ஆன்மீகச் சடங்காகும். ஜப்பானியர்கள் புத்தாண்டுக்கு முன்பாகத் தங்கள் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளை ஆழமாகத் தூய்மைப்படுத்துவார்கள். பழைய, தேவையில்லாத பொருட்களை அகற்றுவதன் மூலம், கடந்த கால எதிர்மறை ஆற்றல்களை வெளியேற்றி, புதிய நேர்மறை ஆற்றல்களையும் புதிய தொடக்கங்களையும் நமது வாழ்க்கைக்குள் வரவேற்கிறோம் என்பதே இதன் ஆழமான தத்துவமாகும். இதனால் வீடு தூய்மையாவதுடன் மனமும் லேசாகும்.
'டான்ஷாரி' என்பது மூன்று சொற்களின் சேர்க்கையாகும்: 'டான்' (தேவையற்றதை மறுத்தல்), 'ஷா' (பழைய கழிவுகளை தூக்கி எறிதல்), மற்றும் 'ரி' (பொருட்களின் மீதான பேராசையிலிருந்து விடுபடுதல்). நம்மிடம் இருக்கும் தேவையற்றப் பொருட்களைக் குறைத்து, அத்தியாவசியமான பொருட்களுடன் வாழக் கற்றுக்கொள்வதே இதன் மையக்கருத்து. இது பொருள் சார்ந்த ஆசைகளைக் குறைத்து, மனதிற்குள் இருக்கும் குழப்பங்களை நீக்கி தெளிவான சிந்தனையைத் தருகிறது.
இயற்கையான உலகில் எதுவுமே நிலையானதோ, பூரணமானதோ இல்லை என்பதை உணர்த்தும் தத்துவமே 'வாபி-சாபி' ஆகும். பழைய, உடைந்த அல்லது குறைபாடுகள் உள்ள பொருட்களிலும், வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களிலும் ஒரு தனித்துவமான அழகு இருக்கிறது என்பதை இது கற்பிக்கிறது. பரிபூரணத்தை (Perfectionism) தேடி அலைந்து மன அழுத்தத்திற்கு ஆளாகாமல், வாழ்க்கையை அதன் இயல்போடும் குறைகளோடும் ஏற்றுக்கொண்டு வாழ இது வழிவகுக்கிறது. எளிமையான, இயற்கையான வாழ்க்கையை நேசிக்கவும், கால மாற்றத்தால் ஏற்படும் சிதைவுகளையும் புன்னகையோடு ஏற்றுக்கொள்ளவும் இது கற்றுத் தருகிறது.
ஒரு தவறு நடக்கும் போது மற்றவர்களைக் குறை கூறாமல், தங்களைத்தானே சுய பரிசோதனை செய்துகொள்ளும் முறையே 'ஹன்ஸெய்' ஆகும். நாம் செய்த தவறுகளை மறைக்காமல் நேர்மையுடன் ஒப்புக்கொண்டு, ‘எங்கே தவறு நடந்தது?, தவறை சரி செய்து, அடுத்த முறை இதை எவ்வாறு சிறப்பாகச் செய்யலாம்?’ என்று சிந்திப்பதே இதன் அடிப்படை. இந்த சுய பிரதிபலிப்புப் பழக்கம், ஒரு மனிதனைத் தன் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, சுய ஒழுக்கத்துடன் வாழ வைக்கிறது.
ஜப்பானிய தொழில்முறை அமைப்புகளில், குறிப்பாக ரயில்வே மற்றும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான பாதுகாப்புப் மேலாண்மை முறை (Safety Management System) ஆகும். மனிதக் கவனக்குறைவால் ஏற்படும் தவறுகளையும், விபத்துகளையும் தவிர்ப்பதே இதன் முதன்மை நோக்கமாகும்.
வெறும் கண்களால் பார்ப்பதை விட, கை அசைவு, பார்வை மற்றும் சத்தம் ஆகிய மூன்று உணர்வுகளையும் ஒன்றாகப் பயன்படுத்தும்போது மூளை விழிப்புடன் செயல்படுகிறது. ஆய்வுகளின்படி, இந்த முறையைப் பின்பற்றுவதன் மூலம் வேலை செய்யும் போது ஏற்படும் தவறுகள் 85% வரை குறைகின்றன என நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த 10 ஜப்பானிய வாழ்க்கை முறை நுட்பங்களும் வெறும் தத்துவங்கள் மட்டுமல்ல, அவை வாழ்வியல் கலைகள். இவற்றை நமது அன்றாட வாழ்க்கையில் சிறிது சிறிதாகப் பயிற்சி செய்வதன் மூலம் மன அழுத்தம் இல்லாத, சுறுசுறுப்பான மற்றும் அர்த்தமுள்ள வாழ்க்கையை நாம் வாழ முடியும்.