16 டிசம்பர், இந்திய சரித்திரத்தில் ஒரு பொன்னாள்! ஏன் தெரியுமா?

இந்தியாவெற்றி வாகை சூடிய நாள்
இந்தியாவெற்றி வாகை சூடிய நாள்

1971ஆம் வருடம் டிசம்பர் மாதம் 16ஆம் தேதி இந்தியாவிற்கு மிக முக்கியமான நாள். நம் மீது திணிக்கப்பட்டப் போரில் வெற்றி வாகை சூடி, பாகிஸ்தானின் ஒரு அங்கமாக இருந்த கிழக்கு பாகிஸ்தானுக்கு விடுதலைக் கனியை பரிசளித்த நாள். இந்த வெற்றி உணர்த்தும் பாடங்கள் அநேகம்.

1. மதம் ஒன்று மட்டும் மக்களை ஒன்றுபடுத்தாது.

2. பெரிய வல்லரசாக இருந்தாலும், எண்ணம் தவறானால் வெற்றியடைய முடியாது. அநீதிக்குத் துணை போனால் அவமானம் தான் மிஞ்சும்.

3. நல்ல நண்பனின் நட்புறவு ஆபத்தில் உயிர் கொடுக்கும்.

4. அரசின் உறுதியான தலைமை, முப்படையின் ஒன்றிணைந்த செயல் வெற்றிக்கு வழி வகுக்கும்.

5. நாட்டிற்கு இக்கட்டான நிலையென்றால், கட்சி, மதம், சாதி, மொழி வேறுபாடின்றி இந்திய மக்கள் ஒன்றிணைவர்.

பிரித்தாளும் கலையில் வல்லுநரான ஆங்கிலேயர், இந்திய துணைக் கண்டத்தை நீங்கும் முன் மதச்சார்பற்ற இந்தியா, முஸ்லீம் பாகிஸ்தான் என்று இரண்டாகப் பிரித்தனர். மேற்கு பாகிஸ்தானில் வசிப்பவர்கள் பஞ்சாபி மொழி பேசுபவர்கள். கிழக்கு பாகிஸ்தானில் வங்க மொழி பேசுபவர்கள். பாகிஸ்தானின் ராணுவம், அரசியல், ஆட்சி அதிகாரங்களில் மேற்குப் பாகிஸ்தான் ஆதிக்கம் அதிகமிருந்தது. அதிகாரங்களில் பங்கு வேண்டும், ஜனநாயகம் வேண்டுமென்று கிழக்குப் பாகிஸ்தானில் கிளர்ச்சி எழுந்தது..

ராணுவ ஆட்சியிலிருந்த பாகிஸ்தானில் 1970 ஆம் வருடம் நடந்த தேர்தலில், கிழக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த அவாமி கட்சி கிழக்கில் வெற்றி பெற்றதுடன், பாகிஸ்தான் தேசிய சட்ட மன்றத்திலும் அறுதிப் பெரும்பான்மை பெற்றது. இதை மேற்கில் உள்ள அரசியல் கட்சிகளும், ராணுவமும் ஏற்க மறுத்தன. அவாமி கட்சித் தலைவர்கள் சிலர் சிறையில் அடைக்கப் பட்டனர். அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. கல்கத்தாவில் புகலிடம் எடுத்துக் கொண்ட அவாமி தலைவர்கள் சுதந்திர பங்களா தேச அரசு அமைத்தார்கள். பாகிஸ்தானுக்கு எதிரான கொரில்லா போரைத் துவக்கினார்கள்.

 ஒப்பந்தம் கையெழுத்தாகிறது...
ஒப்பந்தம் கையெழுத்தாகிறது...

பத்து மில்லியன் அகதிகள் இந்தியாவில் தஞ்சம் புகுந்தனர். இந்தியா உலக நாடுகளிடம் தன் நிலையை எடுத்துச் சொல்ல பல ஐரோப்பிய நாடுகளும், சோவியத் ரஷ்யாவும் இந்தியா சார்பு நிலை எடுத்தன. அமெரிக்காவும், சீனாவும் பாகிஸ்தான் பக்கம். அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு ஆயுதம் அளித்து உதவியது. அந்த வருடம், ஆகஸ்ட் மாதம் இந்தியா, சோவியத் ரஷ்யாவுடன் இருபது வருட அமைதி, நட்பு, ஒத்துழைப்பு என்று ஒப்பந்தம் செய்து கொண்டது.

1971ஆம் வருடம், டிசம்பர் 3ஆம் தேது, பாகிஸ்தான் மேற்கிந்தியாவிலுள்ள இந்திய விமானப் படைத் தளங்களை எதிர்பாராத முறையில் தாக்கியது. இது நடக்கலாம் என்று ஊகித்திருந்த இந்திய விமானப் படை முன்னரே, போர் விமானங்களை பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பியிருந்தது.

இந்த தாக்குதலினால் கோபம் கொண்ட இந்தியா, பங்களா தேசத்தை அங்கீகரித்தது. தரைப் படைத் தளபதி ஜெனரல் ஜெ.எஸ்.அரோரா தலைமையில், இந்திய ராணுவம் கிழக்குப் பாகிஸ்தானில் நுழைந்து தலைநகர் டாக்கா நோக்கி முன்னேறியது.

பாகிஸ்தான் இரண்டாக பிளவுபடாமல் காப்பாற்ற, இந்தியாவை அச்சுறுத்தும் விதமாக அமெரிக்க குடியரசுத் தலைவர் நிக்ஸன் ஆணைப் படி அமெரிக்காவின் ஏழாவது கடற்படையும், அதற்கு உதவ அணுசக்தியால் இயங்கும் விமானமும், வங்காள விரி குடா வந்தடைந்தன. அமெரிக்காவிற்கு உதவ பிரிட்டிஷ் கடற்படையும் வந்தது. சர்வாதிகார ஆட்சிக்கு உதவவும், உலகத்தின் மிகப் பெரிய குடியரசு நாடான இந்தியாவை அச்சுறுத்தவும், உலகத்தின் இரண்டு குடியரசு நாடுகள் இந்தியக் கடல் பிராந்தியத்திற்கு விரைந்தன. இந்திய அரசு ரஷ்யாவை தொடர்பு கொள்ள, பதினாறு சோவியத் கப்பல் படைகள், அணுசக்தியில் இயங்கும் ஆறு சப்மரீன் சகிதம் இந்தியக் கடலுக்கு விரைந்தன.

ஜெனரல் மாநெக்க்ஷா
ஜெனரல் மாநெக்க்ஷா

நம்மால் அமெரிக்க கடற்படையை எதிர்த்து நிற்க முடியாது என்று இந்தியா மலைக்க, அமெரிக்க கடற்படை சிட்டகாங்க் வருவதற்கு முன், சோவியத் நீர் மூழ்கிக் கப்பல்கள், இந்திய கடற் படைக்கும், அமெரிக்க கடற்படைக்கும் நடுவில் நின்றன. நிலைமை தங்களுக்குச் சாதகமாக இல்லை என்று உணர்ந்த அமெரிக்க, பிரிட்டிஷ் கடற்படைகள் விலகிச் சென்றன.

பிரதம் மந்திரி இந்திராகாந்தி உத்தரவுப் படி, ராணுவத் தலைவர் ஜெனரல் மாநெக்க்ஷா கட்டளைப்படி, இந்திய ராணுவம் டிசம்பர் 13ஆம் தேதி தலைநகர் டாக்காவை சுற்றி வளைத்தது. 93000 போர் வீரர்கள் கொண்ட பாகிஸ்தான் ராணுவம், இந்திய ராணுவத்திடம் டிசம்பர் 16ஆம் தேதி சரணடைந்தது.

பதின்மூன்று நாள் போர் முடிந்து பங்களா தேசம் விடுதலை அடைந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com