முடிவுக்கு வரும் பிரதமரின் 18 வருட மணவாழ்க்கை!

முடிவுக்கு வரும் பிரதமரின் 18 வருட மணவாழ்க்கை!

தினெட்டு வருட மணவாழ்க்கைக்குப் பிறகு கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தான் காதலித்து மணந்த சோஃபி க்ரிகோரியைப் பிரிய முடிவெடுத்துள்ளதாகத் தன்னுடைய “இன்ஸ்டாகிராம்” இணைய தளத்தில் பதிவிட்டார். “பல அர்த்தமுள்ள மற்றும் கடினமான உரையாடல்களுக்குப் பிறகு, நானும், சோஃபியும் பிரிவதென்று முடிவு செய்துள்ளோம்” என்கிறது அவருடைய அறிக்கை.

ட்ரூடோ, சோஃபி காதல் திருமணம் 2005 ஆம் வருடம் நடந்தது. பள்ளி ஆசிரியராக வாழ்வைத் தொடங்கிய ட்ரூடோ 2007 ஆம் வருடம் பொது வாழ்க்கையில் இறங்கினார். லிபரல் கட்சியின் தலைவராக உள்ளார். 2015ஆம் ஆண்டு முதல் கனடாவின் பிரதம மந்திரியாக இருக்கிறார்.

உயர்ந்த பதவிக்கான போட்டியில் இறங்குவதற்கு முன்னர் அதைப் பற்றி, மனைவியிடம் விவாதித்ததாக ஒரு பேட்டியில் கூறினார். “என்னுடைய தந்தை அரசியலில் இருந்ததால், அரசியல் எத்தனை கடினமானது என்று எனக்குத் தெரியும். என்னால் அதை சமாளிக்க முடியும். ஆனால், இந்த வாழ்க்கை மனைவியையோ, என்னுடைய குழந்தைகளையோ பாதிக்கக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.”

தன்னுடைய அரசியல் வாழ்வில் மனைவி சோஃபி உறுதுணையாக இருப்பதாகக் கூறினார். “அரசியலில், அதில் உள்ள அழுத்தம் மற்றும் நிர்பந்தத்தால், தனிப்பட்ட உணர்வுகளை மதிக்காமல் போக நேரிடும். ஆனால், அவ்வாறு ஏற்படாமல் என்னை காப்பாற்றியது என்னுடைய மனைவிதான்.”

உலகளவில் மற்றவர்களின் கவனத்தைக் கவர்ந்த ஜோடியாகப் பார்க்கப்பட்டது இந்த ஜோடி. பொது இடங்களில் கூட மற்றவர்கள் முன்னிலையில் தங்களுடைய அன்பை காட்டத் தவறவில்லை இவர்கள். ஆனால், பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில் தங்களுக்கு இடையே இருந்த கருத்து வேற்றுமைகளை வெளிப்படுத்தி வந்தனர்.

2014ஆம் வருடம் “காமன் க்ரௌண்ட்” என்ற பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ட்ரூடோ, “எங்களுடைய திருமணம் பொருத்தமானது என்று நான் சொல்ல மாட்டேன். எங்கள் மண வாழ்வில் ஏற்ற, இறக்கங்கள் உள்ளன. ஆனால், என்னுடைய மனைவி சோஃபி என்னுடைய நல்ல தோழி, எனக்குத் துணையாக இருக்கிறார். என்னுடைய அன்பிற்கு உரியவள்” என்று பதிவிட்டார்.

2015ஆம் வருடம் அவரது மனைவி அளித்த பேட்டியில் “எங்கள் இருவருக்கும் பல்வேறு கனவுகள் உள்ளன. அதை நடைமுறைப்படுத்த முயற்சி செய்கிறோம். எங்களால் முடிந்தவரை ஒன்றாக இருக்க முயற்சி செய்வோம்.” என்றார்.

பொதுவாக மேலைநாடுகளில் அரசியல் வாதிகளின் சொந்தப் பிரச்சனை அதிகமாக விவாதிக்கப் படுவதில்லை. ஜஸ்டின் ட்ரூடோவின் தந்தை பியரி ட்ரூடோ 1968ஆம் வருடம் கனடாவின் பிரதம மந்திரி பதவியேற்றார். 1971 ஆம் வருடம் மார்கரெட் சின்க்ளேர் என்ற பெண்ணை மணம் புரிந்துகொண்டார். அவர்களுடைய விவாகரத்து 1977ல் நடந்தது. ஜஸ்டின் ட்ரூடோவிற்கு அப்போது ஆறு வயது. பதவியில் இருக்கும் போது மணந்து பின் விவாகரத்து பெற்ற முதல் பிரதமர் என்ற பெயர் பெற்றார் பியரி ட்ரூடோ. அவருடைய விவாகரத்து மிகவும் பேச்சுப் பொருளானது. அந்த விவாகரத்தைப் பற்றி பத்திரிகைகளில் வந்த உண்மைக்குப் புறம்பான செய்திகள் தன்னை பாதித்ததாக பின்னர் குறிப்பிட்டார் ஜஸ்டின் ட்ரூடோ. பியரி ட்ரூடோ 15வருடம், 5.5 மாதங்கள் பிரதம மந்திரியாக இருந்தார். ஜஸ்டின் ட்ரூடோ 7வருடம், 9 மாதங்களாக பிரதமராக இருக்கிறார்.

ட்ரூடோ, சோஃபி தம்பதியருக்கு ஹாட்ரியன்(9 வயது) எல்லா கிரேஸ் (14), சேவியர் (15), என்று மூன்று குழந்தைகள்.   குடும்பத்துடன் இந்தியாவிற்கு 2018ஆம் வருடம் தனிப்பட்ட முறையில் வந்தார். இந்திய பண்டிகைகளுக்குத் தவறாமல் வாழ்த்து தெரிவிக்கும் அரசியல் தலைவர்களில் முதன்மையானவர் ஜஸ்டின் ட்ரூடோ. உலகத் தலைவர்களில் அவர் புகழ் குறியீடு 40%. பாரதப் பிரதமரின் புகழ்குறியீடு 78%.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com