
1941–ல் கல்கி வார இதழ் ஆரம்பித்தது. 1942-ல் கல்கி தீபாவளி மலரை வெளியிட்டு வாசகர்கள் அனைவரையும் திக்குமுக்காட செய்துவிட்டார் கல்கி அவர்கள். அன்றைய தினம் கல்கி தீபாவளி மலர் தயாரிப்பதில் இருந்து விநியோகிப்பது வரை உள்ள சவால்களை கல்கி நவம்பர் 1 1942 மற்றும் நவம்பர் 10 இதழ்களின் தலையங்கங்களில் வெளியிட்டுள்ளார் கல்கி அவர்கள். அதற்கடுத்த இதழில் கல்கி தீபாவளி மலருக்கு வாசகர்கள் அளித்த பெரும் வரவேற்பை பற்றியும் தமது தலையங்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மிகவும் சுவாரசியத் தகவல்களுடன் அந்த தலையங்கங்கள் இதோ உங்களுக்காக...
என்ன சேதி? - (நவம்பர் 1, 1942, 2½ அணா, பக்கம் 7)
தீபாவளி மலரின் முழு ஸ்வரூபத்தையும் ஒருவாறு கண்ணால் பார்த்தாகிவிட்டது. 6உ யன்று தமிழ்நாட்டின் பல இடங்களிலும் மலர் "விநியோகிக்க"ப்படும்.
"விற்கப்படும்" என்று நாம் சொல்லாததின் காரணம், அச்சிட்டிருக்கும் எல்லாப் பிரதிகளுக்கும் ஏற்கெனவே நேயர்களிடமிருந்து முன்பணம் கிடைத்து விற்பனையாகிவிட்டதுதான்!
"கல்கி"யிடம் நேயர்கள் வைத்திருக்கும் அபார அபிமானத்துக்கும் நம்பிக்கைக்கும் அறிகுறியாகவே இதைக் கருதி நன்றி செலுத்துகிறோம். ஆகவே, தீபாவளி மலரின் விற்பனையைக் கருதி, அதில் வெளியாகப் போகும் அம்சங்களைப் பற்றி ஒன்றும் சொல்லவேண்டிய அவசியமில்லை. இருந்தாலும், நம்முடைய மகிழ்ச்சியை ஓரளவேனும் நேயர்களுடன் பங்கிட்டுக்கொள்ளாமல் இருக்க முடியவில்லை.
இந்தத் தீபாவளி மலரின் அட்டையைப் பார்த்ததுமே, "இவ்வளவு உயர்தரமான அட்டைச் சித்திரம் இதுவரை தமிழ்நாட்டில் வந்ததில்லை" என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. "அட்டைச் சித்திரத்தைப் பார்த்துக்கொண்டே இருந்துவிடலாம் - உள்ளே பார்க்கவே வேண்டாம்'' என்றும் தோன்றுகிறது.
உள்ளே பிரித்துப் பார்த்தாலோ, ஒவ்வொரு அம்சமும் அப்படியே நம்முடைய கவனத்தை முழுதும் கவர்ந்து, "தோள் கண்டார் தோளே கண்டார்" என்று கம்பர் இராமபிரானை வர்ணித்ததை நினைவூட்டுகின்றது. பழந் தமிழ்நாட்டு மன்னர்களின் பெருமையை விளக்கும் நாலு சரித்திரக் காட்சிப் படங்கள் - வர்ணப் படங்கள் இம்மலருக்கு மிகுந்த சிறப்பை அளிக்கின்றன. இன்னும் கவிதைச் சித்திரங்கள், ஹாஸ்ய சித்திரங்கள், புகைப்படங்கள் நிழல் படங்கள், கதைப் படங்கள் எல்லாம் "இம் மாதிரி பார்த்ததேயில்லை" என்று சொல்லும்படிதான் இருக்கின்றன.
கதைகளையும், கட்டுரைகளையும் வாசிக்கும்போதோ, "இந்த ஆசிரியர் இதற்குமுன் இவ்வளவு நன்றாக எழுதியதுண்டா?" என்ற கேள்வி எழுகின்றது. இதெல்லாம் ஒருவேளை "காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு" என்ற ரீதியில் நமக்கு ஏற்படும் அபிப்பிராயமாயிருக்கலாம். ஆகவே நேயர்களுடைய அபிப்பிராயத்துடன் ஒத்திட்டுப்பார்க்க மிக்க ஆவலுள்ளவர்களாயிருக்கிறோம். நேயர்களின் இந்த வருஷத்துத் தீபாவளிக் கொண்டாட்டத்தின் குதூகலம் "கல்கி" தீபாவளி மலரினால் சிறிதேனும் அதிகமாயிற்று என்று தெரிந்தால் பெரிதும் திருப்தி யடைவோம்.
தீபாவளி மலர்க் கொண்டாட்டம் - (நவம்பர் 10, 1942, 2½ அணா, பக்கம் 7)
கலை அழகு பொருந்திய ஒரு பொருளை உண்டாக்குவதில் எவ்வளவோ ஆனந்தம் இருக்கிறது. அதைக்காட்டிலும் அதிக ஆனந்தம் தரும் விஷயம் ஒன்று உண்டு என்றால், அந்தக் கலைப்பொருளின் அழகை எல்லாரும் பாராட்டுகிறார்கள், அநுபவிக்கிறார்கள் என்று தெரிந்துகொள்வதுதான். இந்த இரண்டுவித ஆனந்தத்தையும் "கல்கி" தீபாவளி மலர் நமக்குப் பரிபூரணமாக அளித்திருக்கிறது.
இந்த வருஷத்துத் தீபாவளிக் கொண்டாட்டத்தைத் தீபாவளி மலர்க் கொண்டாட்டமாகவே நடத்தியதாக நேயர்கள் பலர் தெரிவித்திருக்கிறார்கள். பொதுவாகக்' கல்கி' தீபாவளி மலர் அனைவருக்கும் அளித்துள்ள குதூகலம் ஒருபுறமிருக்க, சிற்சிலருக்குச் சிற்சில அம்சங்கள் விசேஷ திருப்தியை அளித்திருக்கிறது. இளம் சங்கீத வித்வான்களுக்குப் பிராதான்யம் அளித்து அவர்களுடைய படங்களை அழகாகப் பிரசுரித்திருப்பதைச் சிலர் விசேஷமாகப் பாராட்டுகிறார்கள்.
''சரித்திரக் காட்சிப் படங்களைப்பற்றி எவ்வளவு சொன்னாலும் போதாது" என்பது சிலருடைய அபிப்பிராயம்.
"அட்டைப் படத்தையே பார்த்துக்கொண்டிருக்கிறோம். உள்ளே பிரவேசிப்பதற்கே மனம் வரவில்லை" என்று ரொம்பப் பேர் சொல்கிறார்கள்.
ஸ்ரீமதி எம்.எஸ். சுப்புலக்ஷ்மியின் அபிநயத் தோற்றங்கள் கலை உள்ளம் படைத்தவர்களைப் பரவசத்தில் ஆழ்த்தி யிருக்கிறது. "நீலவானத்தில் ஜொலிக்கும் நட்சத்திரங்கள் எவ்வளவோ அழகான காட்சிதான். ஆனால், எல்லா நட்சத்திரங்களும் ஒரே மாதிரிதான் ஜொலிக்கின்றன. எம்.எஸ்.ஸின் தோற்றங்களோ விதவிதமான உள்ள உணர்ச்சிகளை வெளியிட்டுப் பிரகாசிக்கின்றன" என்று ஒரு ரஸிகர் தெரிவிக்கிறார்.
வித்வான் ராஜமாணிக்கம் பிள்ளையின் பிடில் வாசிப்பை ஸ்ரீ கே. சாரங்கபாணி அநுபவித்து, தமது உள்ளக்கிளர்ச்சியை விதவிதமாக வெளியிட்டிருப்பதைச் சிலர் ரொம்பவும் பாராட்டுகிறார்கள்.
"கல்கிக்கு எழுதினால் மட்டும் எல்லாரும் இவ்வளவு நன்றாய் எழுதுகிறார்களே, அது எப்படி?" என்பது சிலருடைய வியப்பு.
"தமிழ்நாட்டில் இவ்வளவு எழுத்தாளர்களா இருக்கிறார்கள்?" என்பது சிலருடைய ஆச்சரியம். ஆசிரியர் வ. ரா.. ஸ்ரீ பிச்சமூர்த்தி, கு.ப. ராஜகோபாலன், க நா. சுப்பிரமணியம் ஆகிய மறுமலர்ச்சி இயக்கத் தலைவர்கள் தீபாவளி மலரில் எழுதியிருப்பது சிலருக்கு விசேஷ திருப்தியை அளித்திருக்கிறது.
மொத்தத்தில், "கல்கி தீபாவளி மலர் காக்கைக் குஞ்சு அல்ல; பொன் மயில்தான்!" என்பது நேயர்களுடைய அபிப்பிராயம் என்பதை அறிந்து அளவில்லாத மகிழ்ச்சி கொள்கிறோம்.
"கடவுள் அருளால் நடந்தது" என்று எல்லாக் காரியத்துக்குமே சம்பிரதாயமாகக் குறிப்பிடுவது வழக்கமென்றாலும், இந்தத் தீபாவளி மலர் விஷயத்தில் அது பரிபூரண உண்மையாகும். அடுத்த ஆண்டில் இதைவிடச் சிறந்த தீபாவளி மலரைக் கொண்டுவருவதற்கு முருகனுடைய அருள் துணை செய்ய வேண்டுமென்று நேயர்களுடன் சேர்ந்து நாமும் பிரார்த்திக்கிறோம்.
கல்கி ஆன்லைன் அன்பர்களே!
மேற்படி தலையங்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ள 1942 ஆம் ஆண்டின் தீபாவளி மலர் பிரதி கைவசம் இல்லாததால், 1943ஆம் ஆண்டின் மலரை நீங்கள் கட்டணமின்றி படித்து மகிழ, கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து இங்கே பதிவேற்றுகிறோம். படித்து பெருமிதப்படுங்கள் கல்கி அன்பர்களே!
1942 மற்றும் அடுத்தடுத்து வந்த கல்கி தீபாவளி மலர்களைப் பார்த்து, படித்து பரவசமடைய இன்றே கல்கி களஞ்சியத்துக்கு சந்தா செலுத்துங்கள்.