வாக்கும்… வாக்குச் சேகரிப்பும்… நாமினேஷனும்!

Election campaign
Election campaignImg credit: AI Image
Updated on
Kalki Strip
Kalki Strip

தேர்தல் திருவிழா வந்து விட்டாலே நாட்டில் ஒரு சுறுசுறுப்பும், உற்சாகமும் கரை புரண்டோடத் தொடங்கி விடும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவரவர் தகுதிக் கேற்ப தேர்தல் பணிகளில் ஐக்கியமாகி விடுவார்கள்.

எங்கள் பள்ளி நாட்களில், பள்ளி முடிந்ததும் எங்களுக்குப் பிடித்த வேட்பாளர்களுக்கு ஓட்டுக்கேட்டு வீடு வீடாகப் போனதும், சாக்பீஸ், கரித்துண்டு கொண்டு சாலைகளுக்குப் பக்கத்திலுள்ள வீடுகளின் சுவர்களிலும், குளங்களின் குளிக்கும் படித்துறைகளிலும் சின்னங்களை வரைந்து, அதன் மேலோ, கீழோ ‘உங்கள் சின்னம்’ என்று எழுதியதும் பசுமையாய் மனதில் இன்றைக்கும் வலம் வருகிறது. அது ஏனென்று தெரியவில்லை! அறியா வயதிலேயே அரசியல் நம்மை ஆட் கொண்டு விட்டது போலும்! ஆனால் இன்றைய அரசியல் போல் அந்த நாட்களில் இல்லை.

முந்தா நாள் வரை முட்டிக் கொண்டவர்கள், தேர்தல் தேதி அறிவித்ததும் சிநேகிதர்களாகி ஒன்றாக வலம் வருவதும், மக்களை ஏமாற்ற, ‘நாங்கள் போட்டது பங்காளிச் சண்டைதான்!’ என்று சப்பைக் கட்டு கட்டிப் பங்காளிச் சண்டையைக் கேவலப் படுத்துவதும், இப்பொழுதெல்லாம் தேர்தல் நேரத்தில் வாடிக்கையாகி விட்ட ஒன்று.

எந்த உண்மைத் தொண்டனாவது, ’’கூட்டணியே கிடையாது என்று சவால் விட்ட நீங்கள் இப்பொழுது கூட்டணியை அறிவிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது” என்று முகத்துக்கு நேரே கேட்டிருந்தால், தலைவர்கள் சற்றே யோசிக்கவாவது செய்வார்கள். தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மைகளாய் மக்கள் இருப்பதாலேயே, தலைவர்களால் தலை நிமிர முடிகிறது.

இன்னொரு கூத்தை இப்பொழுதெல்லாம் எல்லா வேட்பாளர்களும் அரங்கேற்றுகின்றனர். ஓரிடத்திற்கு ஓட்டுக் கேட்கச் செல்கையில், "என்னைத் தேர்ந்தெடுத்தால் இந்தந்தப் பிரச்னைகளுக்கு இவ்வாறெல்லாம் தீர்வு காண்பேன்! உங்கள் கஷ்டங்களை முழுதாய் நானும் அறிந்திருக்கிறேன்!" என்று சொல்லி ஓட்டுக் கேட்பதுதானே முறை!

அதனை விட்டு விட்டு,

- டீ போட்டுக் கொடுப்பது

- வடை சுட்டுக் கொடுப்பது

- பனியாரம் சுடுவது

- பரோட்டா போடுவது

- நூல் நூற்பது

- ஆடை நெய்வது

- கிரிக்கட் விளையாடுவது

- கம்பு சுற்றுவது

- வயலில் இறங்கி நடவு நடுவது

- டான்ஸ் ஆடுவது

இப்படி இன்னும் என்னென்ன உண்டோ, அத்தனையையும் செய்து அவர்கள் வயிற்றிலும் அடித்து வருகிறார்கள்.

ஏனெனில், யாம் அறிந்த வரை, அரசியல்வாதிகளில் பெரும்பாலானோர் அவர்கள் சாப்பிடுபவற்றுக்கே காசு கொடுக்க மாட்டார்களாம்! அடுத்தவர்கள் சாப்பிடுவதற்கா இவர்கள் காசு கொடுத்து விடப் போகிறார்கள். இந்தக் கணக்கெல்லாம் தேர்தல் செலவுக் கணக்கில் சேருமா? என்று தெரியவில்லை.

ஒரு வேளை, எலக்‌ஷன் முடிந்த பிறகு, ’இப்படிச் செய்தவர்களுக்கெல்லாம் நாங்கள் ஓட்டுப் போடவில்லை!ஏனென்றால் டீ போடுபவர்களும், நூல் திரிப்பவர்களும் அந்தப் பணிகளுக்கே லாயக்கு என்று கருதி, அவர்களை எதற்குச் சட்டசபைக்கு அனுப்ப வேண்டுமென்று விலக்கி விட்டோம்!’ என்று வாக்காளர்கள் குரல் கொடுப்பார்களானால் இந்த சர்க்கஸ் வேலைகள் குறைய வாய்ப்புண்டு! ஏனெனில் இந்தக் கூத்துக்களெல்லாம் இரண்டு மூன்று தேர்தல் களங்களில் தொடர்கதையாகி வருகின்றன.

தேர்தல் திருவிழா என்று அதைத் தெய்வீகமாக அழைக்கக் காரணமே, அதன் புனிதத்தையும் முக்கியத்துவத்தையும் உணர்ந்தே! மக்களாட்சி நடைபெறும் மாபெரும் நாட்டில், நம்மை யார் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஆள வேண்டுமென்ற முடிவை, நாமே எடுக்கும் நலமான விழா அது! அதைக் கேலிக் கூத்தாக்குவதும், வேட்பாளர்கள் என்ற பெயரில் ஜோக்கர்கள் கூத்தடிப்பதும் எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. ஏதோ ஒரு முறை என்றால்கூட விட்டு விடலாம். இதனையே தொடர்ந்து தொழிலாகச் செய்து வருபவர்களை தேர்தல் ஆணையம் தவிர்க்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
வாய்னிச் புத்தகம் பற்றி கர்னல் கந்தசாமி கண்டுபிடிப்பு!
Election campaign

உலகிலேயே அதிக மக்கட்தொகை கொண்ட நம் நாட்டில், ஒவ்வொரு மாநிலத்திலும் பல்லாயிரம் தேர்தல் வாக்குச் சாவடிகளை அமைத்து, தேர்தல் முறையாக நடைபெறுமாறு பார்த்துக் கொள்வதென்பது எவ்வளவு பெரிய விஷயம்!

அதற்கு மக்களாகிய நாம் நமது முழு ஒத்துழைப்பையும் நல்க வேண்டும். தேர்தல் ஆணையத்திலும் நமது சகோதரர்கள்தான் பணியாற்றுகிறார்கள். ஒவ்வொரு பூத்துக்கும் குண்டூசி தொடங்கி, தேவைப்படும் அத்தனை பொருட்களையும் வழங்கி, வருகின்ற வாக்காளர்களின் நலன் கருதி குடிநீர், நிழல் தரும் பந்தல், ஊனமுற்றோரும் எளிதாக ஓட்டுப் போடும் வசதிகள் என்று அத்தனையையும் பார்த்துப் பார்த்துச் செய்யும் அவர்களுக்குப் பக்க பலமாக இல்லா விட்டாலும், உபத்திரவம் கொடுக்காமலாவது இருக்கலாம் அல்லவா?

ஒரு தேர்தல் வாக்குச் சாவடியில் ஒரு நாள் நடக்கும் தேர்தல், நாம் பலநாள் முயன்று நம் வீட்டில் நடத்தும் ஒரு திருமணம் போன்றது. பல்லாயிரம் திருமண நிகழ்ச்சிகளை ஒரே நாளில் நடத்திக் காட்டும் தேர்தல் ஆணையத்தை எவ்வளவு புகழ்ந்தாலும் தகும்! அவர்களின் திட்டமிடலும், செயற்பாடும் பாராட்டப்பட வேண்டிய ஒன்றல்லவா?

நாமினேஷன் போது நடைபெறும் கூத்துக்கள் மனதை நோகவே செய்கின்றன. ஒருவர் பலமுறை தேர்தலில் நிற்பதைத் தன் தொழிலாகவே செய்கிறாராம்.

மற்றவரோ, சுடுகாடு சென்று அங்கிருந்து சாம்பல் பானையுடன் நாமினேஷன் செய்ய வந்தாராம்! சிலரோ சாமி வேஷமிட்டும், சாது வேஷமிட்டும் வந்து தங்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனராம். மாட்டு வண்டியில், குதிரை வண்டியில், குதிரை மீதேறி இப்படிப் பலவிதமாக வந்து தங்கள் வேட்பு மனுக்களை அளித்தனராம்.

சிலரோ டெபாசிட் தொகையை 10 ரூபாய் நாணயங்களாகக் கொண்டு வந்து ஆபீசர்கள் முன்னர் கொட்டினராம். ஏனெனில் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வேறு வேலை இல்லை பாருங்கள். இந்த நாணயங்களை எண்ணி அவர்கள் பார்த்துக்கொள்ள வேண்டுமாம். இந்தக் காலத்திலும் இவையெல்லாம் புதுமை என்று எண்ணிச் செய்யும் நமது மக்களை என்னென்பது? இதில் பெரும் வேடிக்கை என்னவென்றால் இவர்களெல்லாம் நம்மை ஆள்வதற்கான தேர்தலில் போட்டியிட வந்தவர்களாம். சிறு வணிகர்கள் சில்லறை தட்டுப்பாட்டால் அவதிப்படும் இக்காலத்தில், இது போன்று நாணயங்களைச் சேர்த்து வைப்பதே தப்பென்று கூறி இவர்களைத் தண்டிக்கக் கூடாதா? ஜனநாயகத்தில் எல்லோருக்கும் எல்லா உரிமைகளும் உண்டென்றாலும், புதுமை செய்கிறேன் என்று கூறி அறிவுக்கு ஒவ்வாதவற்றைச் செய்வதைத் தடுப்பதில் தப்பில்லையே!

இதையும் படியுங்கள்:
சிறுகதை: கபடானந்தா!
Election campaign

இப்பொழுதெல்லாம் நீதி மன்றங்கள் கூட பல வழக்குகளில், கோர்ட் நேரத்தை வீணடிப்பதாகவும், தகுதியற்ற சில வழக்குகளைப் போடுவதாகவும், சிலர் தங்கள் தனிப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள நீதி மன்றங்களை அணுகுவதாகவும் கூறி, பல நேர்வுகளில் ரூபாய் ஆயிரக்கணக்கிலும், லட்சக் கணக்கிலும் அபராதங்கள் விதிப்பதைக் காண்கிறோம். அது போலவே தேர்தல் ஆணையமும் செயல்பட வேண்டிய நேரம் வந்து விட்டது என்றே தோன்றுகிறது!

எது எப்படியோ! நாமினேஷன் முடிந்து தேர்தலும் நெருங்கி விட்டது. தேர்தலன்று பூத் சென்று, அமைதியாக அடுத்த ஐந்தாண்டுகள் நம்மை ஆள வேண்டியவர்களைத் தேர்ந்தெடுப்போம்! சரிதானே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com