
1. சுற்றுலா வாக்குறுதி
அரையாண்டுத் தேர்வுகள் தொடங்கியதுமே அப்பாவிடம் கறாராகச் சொல்லிவிட்டேன். “பத்து நாட்கள் விடுமுறையில் கண்டிப்பாக சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். காலாண்டுத் தேர்வின்போது வாக்குறுதி அளித்துவிட்டு ஏமாற்றிய மாதிரி ஏமாற்றக் கூடாது. அப்புறம், நிஜமாகவே உங்களோடு பேச மாட்டேன். ஐஸ்லெட். க்ரீம்சாக் – எது வாங்கித் தந்தாலும் சமாதானமாக மாட்டேன்!”
அப்பா என்னை வாஞ்சையோடு அரவணைத்துக்கொண்டார். “ஓ.கே. செல்லக்குட்டி! போன முறை எனக்கு அலுவலகத்தில் கடுமையான கெடுபிடி காரணமாக வர முடியவில்லை. ஆனால், நிச்சயமாக இந்த முறை சுற்றுலா செல்லலாம். ஒரு வாரம் வேண்டுமானாலும் தங்கிவிட்டு வரலாம்!”
“பொய் வாக்குறுதிகள் கொடுத்து குழந்தையை ஏமாற்றாதீர்கள். அவள் ஏங்கிப் போயிருக்கிறாள்!” அம்மா எச்சரித்தாள்.
“இல்லை. இந்த முறை உறுதியாக நாம் மூவரும் சுற்றுலா செல்லலாம்.”
“சத்தியமாக?” நான் என் உள்ளங் கையை நீட்டிக் காட்டினேன்.
“கடவுள் மீது சத்தியமாக!” அப்பா தனது கனத்த வாலை முன்னுக்கு வளைத்து, வால் நுனியால் என் உள்ளங் கையைத் தொட்டு சத்தியம் செய்தார்.
எனக்கு குஷியாகிவிட்டது. “அப்படியானால் அப்பா,… இந்த முறை நாம் பக்கத்தில் உள்ள ஆண்ட்ரோமெடா, ட்ரியாங்குலம் ஆகிய விண்மீன் மண்டலங்களுக்கு (galaxy) செல்ல வேண்டாம். அங்கே நம்மை மாதிரி ஜீவராசிகள்தான் இருக்கின்றன. இந்த முறை பால்வீதியில் உள்ள பூமிக்கு செல்லலாம். அங்கே வாழ்கிற, மனிதர்கள் என்ற விசித்திரமான ஜீவராசிகளைப் பார்க்க எனக்கு ஆவலாக இருக்கிறது!”