85 வருட புரட்டாசி சனிக்கிழமை உற்சவம் – கொத்தமங்கலம் சுப்பு! என்ன தொடர்பு?

85 வருட புரட்டாசி சனிக்கிழமை உற்சவம் – கொத்தமங்கலம் சுப்பு! 
என்ன தொடர்பு?

"பொன்னுருகக் காய்ந்து மண்ணுருகப் பெய்யும் புரட்டாசியில்" என்பது சான்றோர் வாக்கு. தங்கமே உருகிவிடும் அளவிற்கு பகலில் வெயில் சுட்டெரிக்கும்; மண்ணுருகி வழிந்தோடும்படி இரவினில் மழை பெய்யும் மாதமே புரட்டாசியாகும்... என்பது இதன் உட்கருத்தாகும். சூரிய பகவான் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் காலம் என்பதால் ‘கன்யா’ மாதம் எனும் பெயரும் உண்டு.

புரட்டாசி, திருமாலுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் ஸ்ரீமந் நாராயணனை வணங்குபவர்களை சனி பகவானின் பார்வை அதிகமாகத் தாக்குவதில்லை என்பது பரவலாக இருக்கும் நம்பிக்கை. எனவே, புரட்டாசி சனிக்கிழமைக்கு எப்போதும் ஒரு தனிச்சிறப்பு உண்டு.

மஹாளய அமாவாசை, நவராத்திரி, மஹாளய பட்சம் எனும் முன்னோர்களுக்கு நேர்த்திக் கடன் செலுத்துவது, திருப்பதி குடை போன்றவை புரட்டாசி மாதத்தின் முக்கிய நிகழ்வுகளாகும். 

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த புரட்டாசி மாதத்தில் தனி மனிதர் ஒருவரின் தூண்டுதலின் பேரில் எந்தவொரு முன்னேற்பாடுமின்றி ஒரு புரட்டாசி சனிக்கிழமையில், ஆங்கிலத்தில் ‘Just Like That’ என்று சொல்வார்களே, அப்படி ஆரம்பிக்கப்பட்ட ஒரு உற்சவம் 85 வருடங்களாக காலங்கள் பல கடந்து தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதைப் பற்றி தெரிந்துகொள்வோமா?

எஸ்.எஸ் வாசன் அவர்களின் ஜெமினி திரைப்பட நிறுவனத்தில் அங்கம் வகித்த பல முக்கியஸ்தர்களுள் கொத்தமங்கலம் சுப்புவும் ஒருவர். இவர் ஒரு பல்துறை கலைஞர். ‘தில்லானா மோகனாம்பாள்’, ‘காந்தி மகான் கதை’ போன்ற அமரகாவியங்களைப் படைத்தவர்.

கொத்தமங்கலம்  சுப்புவுடன் பித்துக்குளி முருகதாஸ்
கொத்தமங்கலம் சுப்புவுடன் பித்துக்குளி முருகதாஸ்

கொத்தமங்கலம் கிராமத்தில் ஒரு செட்டியார் வீட்டில் சுப்பு அவர்கள் வேலை பார்த்து வந்த காலகட்டம். ஒரு நாள் வேலை முடிந்ததும் ஊர்த் திருவிழாவில் நடைபெறவிருந்த நாடகமொன்றை தன் நண்பர் கொத்தமங்கலம் சீனு அவர்களுடன் கண்டு களிக்க எண்ணி புறப்படத் தயாரானார் சுப்பு. ஆனால், தமக்குச் சேர வேண்டிய பணத்தை ஒரு நபரிடமிருந்து வாங்கித் தந்து விட்டுச் செல்லும்படி பணித்தார் செட்டியார். அச்சமயம் இஸ்லாமிய நண்பரும் தையற்காரருமான அப்துல் என்பவர் எதிரில் வர அவரிடம் சீனுவை தமது இல்லத்தில் வந்து காத்திருக்கும்படியும் சிறிது நேரத்தில் தாம் வந்து சேருவதாகவும் சொல்லச் சொன்னார் சுப்பு.

 "ஓ… இன்று புரட்டாசி சனிக்கிழமை. அதனால் பஜனை செய்யப் போகிறீர்களா..?" என்று ஒரு போடு போட்டார் அப்துல். புரட்டாசி சனிக்கிழமையான அன்று தமக்குப் பூஜை செய்ய வேண்டுமென்பதை அப்துல் மூலமாக அந்தப் பெருமாளே அசரீரியாகச் சொல்லி ஞாபகப்படுத்தியதை எண்ணி வியந்து போய்விட்டார் சுப்பு...! உடனடியாக பூஜைக்கு வேண்டிய பொருட்களை வாங்கி வரும்படி இரண்டு ரூபாய் பணத்தையும் அப்துலிடம் கொடுத்து அப்படியே நண்பர் சீனுவிடம் இந்தச் செய்தியையும் தெரியப்படுத்தச் சொன்னார் சுப்பு.

விஷயத்தைக் கேள்விப்பட்டு ஓடோடி வந்த சீனுவை துணைக்கு வைத்துக் கொண்டு பழைய தினசரியில் வந்திருந்த வெங்கடாஜலபதி படத்தைக் கத்தரித்து சுவற்றில் ஆணி அடித்து மாட்டினார். பூஜா திரவியங்களைக் கொண்டு பூஜை செய்தார். நண்பர் சீனு, தந்தையார் மகாலிங்க ஐயர் ஆகியோரைக் கொண்டு பஜனைப் பாடல்களைப் பாடி புரட்டாசி சனிக்கிழமை உற்சவ கொண்டாட்டத்திற்குப் பிள்ளையார் சுழி போட்டார். நாடகத்திற்கு கிளம்பியவர் நாராயண நாம பஜனை செய்யும்படி ஆனது அந்தப் பெருமாளின் திருவிளையாடலினால்தானே?

கொத்தமங்கலம் கிராமத்தில் தொடங்கிய அந்த உற்சவம் பின்னர் அக்குடும்பம் சென்னைக்குக் குடிபெயர்ந்ததும், புரசைவாக்கம் சுப்பிரமணியன் தெரு, மயிலாப்பூர் அப்பர்சாமி கோயில் தெரு என்று தொடங்கி இன்றும் அவ்வை சண்முகம் சாலையில் கொத்தமங்கலம் சுப்பு இல்லத்தில் நடைபெற்று வருகிறது. புரட்டாசி மாதத்தில் வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் இங்கு இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

ஆரம்ப காலங்களில் மதுரை மணி ஐயர், ஜி.என். பாலசுப்பிரமணியம், ஆலத்தூர் சகோதரர்கள், கொத்தமங்கலம் சீனு, ராமனாதபுரம் கிருஷ்ணன் போன்றோர் நிகழ்ச்சிகள் நடத்தி சிறப்பித்துள்ளனர்.

பின்னர், லால்குடி ஜெயராமன், சீர்காழி கோவிந்தராஜன், நீடாமங்கலம் கிருஷ்ணமூர்த்தி பாகவதர், ஆவுடையார் கோயில் ஹரிஹர பாகவதர், திருவையாறு அண்ணாசாமி பாகவதர், டி.எஸ். பாலகிருஷ்ண சாஸ்திரிகள், கிருபானந்த வாரியார், புல்லாங்குழல் டி.ஆர்.மகாலிங்கம், பித்துக்குளி முருகதாஸ், குருஜி சுவாமி ஹரிதாஸ் கிரி, ஏ.கே.சி. நடராஜன்,  எஸ்.வி. வெங்கட்ராமன், காருகுறிச்சி அருணாசலம் என பட்டியல் நீண்டுகொண்டே போகும் அளவிற்கு நிறைய ஜாம்பவான்களின் நிறைவான நிகழ்ச்சிகள்…

ஆரம்ப காலங்களில் இரண்டு பெரிய வழவழப்பான தேக்குமர பெஞ்சுகள் போடப்பட்டு, ஈரோடு ஜமுக்காளம் விரிக்கப்பட்டு, மைக்குகள் பொருத்தப்படும். கச்சேரி மேடை தயார். பிள்ளையார், வெங்கடாஜலபதி, பரமசிவன் பார்வதி, மகாலட்சுமி, சரஸ்வதி, முருகன், கிருஷ்ணர் படங்கள் புதுப்பொலிவுடன் சாமந்தி ரோஜா மாலைகளுடன் ஜொலிக்கும். இசைக் கலைஞர்களுக்கு இதமான இளஞ்சூடான வெந்நீர் மற்றும் காப்பி, பால், சர்பத், சோடா வழங்கப்படும். கச்சேரி நிறைவுபெறும் நேரம் கொண்டைக்கடலை, பட்டாணி அல்லது கடலைப் பருப்பு சுண்டல், சாம்பாருடன் உப்புமா ஆகியவை நிவேதனம் செய்யப்பட்டு விநியோகிக்கப்படும்.

புரசைவாக்கத்தில் சுப்பு இருந்தபோது மயிலாப்பூரிலிருந்து இசைக் கலைஞர்கள் டிராம் பிடித்து வருவார்கள். கச்சேரி முடிந்ததும் உணவு அருந்திவிட்டு அரைத்த சந்தனத்தை உடலில் பூசிக்கொண்டு கும்பகோணம் வெற்றிலை, சீவல், சுண்ணாம்பு, ரஷிக்லால் வாசனை பாக்கு, பன்னீர் புகையிலை சகிதம் தாம்பூலம் தரிப்பார்களாம். தங்கசாலைத் தெரு கோதுமை அல்வா, காரா சேவ், மசாலா பால், வாழைப்பழம் ஆகியவை ஒரு ரவுண்டு வரும். இசை சம்பந்தமான ஆராய்ச்சிகளும் விடிய விடிய நடக்கும். அதுவும் உடுமலைப்பேட்டை நாராயண கவி போன்றோர் கலந்து கொள்ளும்போது கேட்கவும் வேண்டுமா!

இந்த உற்சவத்தில் பங்கு பெறும் எந்தவொரு இசைக் கலைஞருக்கும் சன்மானமாகப் பணம் கொடுக்கப் படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சீர்காழி கோவிந்தராஜன்
சீர்காழி கோவிந்தராஜன்

ஒரு சமயம் ‘நடு இரவில்’ பட ஷூட்டிங்கில் இருந்த வீணை எஸ். பாலசந்தர் நிஜமாகவே நடுநிசியில் வந்து மிகப்பிரமாதமான வீணை இசைக் கச்சேரியை வழங்கினாராம். இன்னொரு சமயம் கொட்டும் மழையில் சீர்காழி கோவிந்தராஜனின் கச்சேரி. வெளியிலே இடி மின்னலுடன் கனமழை. உள்ளே கோவிந்தராஜனின் கணீர் குரலில் கானமழை.

மற்றொரு சமயம் சீர்காழி கோவிந்தராஜனின் கச்சேரியின்போது, ‘அன்பர்’ ஒருவர் மேடைக்கு அருகில் நின்றபடி கச்சேரியை ரசித்துக்கொண்டிருந்தார். தாமும் ஒரு நாள் மேடையேறி பாடமாட்டோமா என்ற ஏக்கம் அவரது கண்களில் தெரிந்தது. சுப்புவிடம் வந்து தமக்கும் பாட சந்தர்ப்பம் வழங்குமாறு கேட்டுக்கொண்டார். கவிகுஞ்சரபாரதியின் பேரன் என்றும் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டார். தமது மூத்த சகோதரர் சோமு பாட்டெழுதி இசையமைக்கவும் செய்வார் என்றும் சொன்னார். ஆனந்தக் கண்ணீரோடு அவரை அணைத்து அந்த வருடம் முதல் தொடர்ந்து பாட சந்தர்ப்பம் அளித்தார் சுப்பு. அந்த ‘அன்பர்’ வேறு யாருமில்லை... பக்தி இசை கலைஞர் வீரமணிதான்.

இதேபோல் ஈமனி சங்கர சாஸ்திரி அவர்களின் வீணை இசைக் கச்சேரியில் அழகான இளைஞர் ஒருவர் வீணை வாசித்தார். அவர் வேறு யாருமில்லை. பிற்காலத்தில் வீணை இசையில் உச்சம் தொட்ட சிட்டி பாபு அவர்கள்தான்!

கொத்தமங்கலம் சுப்பு ஸ்ரீ நிவாசன்
கொத்தமங்கலம் சுப்பு ஸ்ரீ நிவாசன்

பிற்காலத்தில் இந்திப்படத் தயாரிப்பாளர் திரு. தாராசந்த் பர்ஜாத்யா பிரின்ட் போட்டுக் கொடுத்த வெங்கடாஜலபதி படத்தை பிரேம் போட்டு மஞ்சள் நிற ராம்-ராம் துண்டுதனை விரித்து அதில் நிறுத்தி வைப்பர். செங்காவி தீட்டப்பட்ட மாக்கோலம், மாவிலை, பொன்னிற தென்னங்குறுத்து தோரணங்கள் ஒரு பக்கம் ஒளிர, ஜரிகை சால்வைகள் மறுபக்கம் மின்னும். ரோஜா, கதம்பம், துளசி மாலைகள் தங்கச்சங்கிலி ஆகியவை பெருமாளின் அழகிற்கு அழகு சேர்க்கும். விஷ்ணு சஹஸ்ரநாமம், லட்சுமி அஷ்டோத்திரம், வெங்கடேச கத்யம் ஆகியவை தெய்வீகச் சூழலை மேலும் பரிமளிக்கும்படி செய்திடும். கடைசி சனிக்கிழமையன்று சகஸ்ரநாம அர்ச்சனை இருக்கும். வருடங்களும் , தலைமுறைகளும் பல கடந்து சென்றாலும் புரட்டாசி சனிக்கிழமை உற்சவம் அதே பக்தி சிரத்தையுடனும், பொலிவுடனும் இன்றளவிலும் நடத்தப்பட்டு வருகிறது...

கோவிந்தா....ஹரே கோவிந்தா.... ஸ்ரீநிவாசா கோவிந்தா...... தொடர்ந்து இன்றும் ஒலித்துக்கொண்டுதானிருக்கிறது....!

தகவல் மற்றும் படங்கள் நன்றி : கொத்தமங்கலம் சுப்பு ஸ்ரீ நிவாசன்  மற்றும் குடும்பத்தினர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com