வண்ணத்தில் கரைந்த தூரிகை!

வண்ணத்தில் கரைந்த தூரிகை!

-எம்.கோதண்டபாணி

னத்திரையில் முகிழும் உருவங்களை வெள்ளை அட்டைகளில் வார்த்தெடுக்கும் வல்லமை கைவரப்பெற்றவர் ஓவியர் மாருதி. சுருள் சுருளான நீண்ட தலைமுடி இரு காதுகளை மறைக்க, இனிய முகத்துடன் மென்மையான குரலில் பேசுவது ஓவியர் மாருதியின் அடையாளம் என்றே கூறலாம். தனது பெற்றோர்கள் மராத்தியத்தை பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும், தமிழகத்தின் புதுக்கோட்டையை தம் பிறந்த ஊராகக் கொண்ட ஓவியர் மாருதி, தனது ஓவியத்தில் ஜனிக்கும் மகளிரின் உருவங்களில் தமிழ் கலாசாரத்தையும் களையையும் அச்சுபிசகாமல் அழகாகக் கொண்டு வரும் வரத்தை கைவரப் பெற்றிருந்தார் என்றால் அது மிகையில்லை. ரங்கநாதன் எனும் இயற்பெயரைக் கொண்ட ஓவியர் மாருதி, ஓவியத்தின் மீது தாம் கொண்ட பேரார்வத்தின் காரணமாக தனது படிப்பையே பாதியில் நிறுத்தினார். நடிகர் சிவக்குமார் இவரது சக ஓவியத் தோழர் என்பது குறிப்பிடத்தக்கது.

திரைப்படங்களில் பேனர் வரையும் பணியில் ஈடுபட்டிருந்த காலத்திலேயே இவருக்கு, பத்திரிகைகளில் ஓவியம் வரையும் வாய்ப்பும் தேடி வந்தது. இரண்டு வெவ்வேறு துறைகளில் தன்னை வேறுபடுத்திக் காட்டிக்கொள்ளவே பத்திரிகைகளில் வரையும் தனது ஓவியங்களில் ‘மாருதி’ என்று தமது அடையாளத்தைக் குறிப்பிட்டார். இந்த மாருதி எனும் பெயருக்குப் பின்னாலும் ஒரு சுவாரசியம் ஒளிந்திருப்பதை அவரே ஒரு நேர்காணலில் குறிப்பிட்டு இருக்கிறார். தாம் சென்னை மயிலாப்பூரில் தங்கியிருந்த இடத்துக்கு அருகே இருந்த ஒரு மருந்துக் கடையின் பெயரே மாருதி. தமக்குப் பிடித்த அந்தப் பெயரையே தனது ஓவியத்துக்கு அடையாளமாக வைத்திருப்பதாக அவரே குறிப்பிட்டிருக்கிறார். மாருதி என்ற பெயரில் இவரது முதல் ஓவியம் 1959ம் ஆண்டே பிரபல வார இதழில், ‘அய்யோ பாவம்’ என்று சிறுகதைக்காக வரையப்பட்டு வெளியானது.

ஓவியர் மாருதி தஞ்சாவூரைச் சேர்ந்த அரசு ஊழியரான விமலா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சுபாஷினி, சுஹாசினி என இரு மகள்கள் உள்ளனர். தனது மனைவி விமலாவின் இறப்புக்குப் பிறகு, புனேவில் வசிக்கும் தனது மகளின் வீட்டில் தங்கி இருந்தார் ஓவியர் மாருதி. சமீபத்தில் ஓவியர் கே.மாதவனின் நூற்றாண்டு விழாவுக்காக இவர் சென்னைக்கு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரில் தனது மகளின் வீட்டில் தங்கியிருந்த ஓவியர் மாருதி, அடுத்த மாதம் ஆகஸ்ட் 28ம் தேதி தனது 85வது பிறந்த நாளைக் கொண்டாட இருந்த வேளையில் நேற்று (27.7.2023) பகல் 2.30 மணியளவில் காலமானார் அவருக்கு வயது 86. வண்ணங்களைக் குழைத்து வடிவங்களை நம் கண்முன்னே கொண்டு வந்த அந்த ஓவியத் தூரிகை இயற்கை எனும் வண்ணத்தில் தம்மை கரைத்துக் கொண்டது. பிரபஞ்சத்தில் உயிர்களைப் படைக்கும் வல்லமை பெற்றவர் பிரம்மா என்றால், தமது கற்பனை உலகில் மாந்தர்களை உருவாக்கும் இவரும் ஒரு பிரம்மாதான்.

மண்ணை விட்டு ஓவியர் மாருதி மறைந்தாலும், அவரது ஓவியங்கள் என்றும் நம்மை விட்டு மறையப் போவதில்லை. அவரது மறைவு ஓவியத்துறைக்கு பேரிழப்பு. அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்துக்கும், ஓவியத்துறை அன்பர்களுக்கும், ‘கல்கி குழுமம்’ தமது ஆழ்ந்த இழங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com