உலக நாடுகளை உலுக்கும் கொடிய நோய்!

image of Corruption
image of Corruptionpixabay.com

கொரோனா போன்ற கொடிய நோயைத் தடுக்க மருந்து உண்டு. ஆனால், உலக நாடுகளை வாட்டும் இந்தக் கொடிய நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. கொரோனாவை ஒழிக்க அரசுகள் தீவிர முயற்சி எடுத்தன. ஆனால், இந்த நோயை முழுவதுமாக ஒழிக்க அரசுகள் காட்டும் தீவிரம் கேள்விக்குறியது. ஆட்சியில் தொடர இந்த நோய் இருப்பது அவர்களுக்கு அவசியமாகிறது.

இந்த நோய்க்கு என்ன பெயர் என்றா கேட்கிறீர்கள். இதற்குப் பல பெயர்கள் உண்டு. ஊழல், லஞ்சம், கையூட்டு, அன்பளிப்பு என்று. ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் ஒன்பதாம் தேதி சர்வதேச ஊழல் ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. அரசு அலுவலகங்களில் எல்லோரும் ஒன்றுகூடி ‘ஊழலை ஒழிப்போம்’ என்று உறுதி எடுத்துக்கொள்வார்கள். இது ஒரு சம்பிரதாயச் சடங்கு. அவ்வளவே. இந்த சடங்கு 2005வது வருடம் முதல் நடந்து வருகிறது. ஊழல் எதிர்ப்பிற்கும், நாட்டின் அமைதி, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி ஆகியவற்றிற்கும் இடையேயான முக்கியமான தொடர்பை எடுத்துக்காட்டுவதற்காக இந்த ஊழல் எதிர்ப்பு தினம் ஐக்கிய நாடுகள் சபையால் பரிந்துரைக்கப்பட்ட்து.

ஊழல் என்பது உயர் பதவியில் இருப்பவர்களின் நாணயமற்ற நடவடிக்கை. ஊழல் செய்வது தவறு, கேவலம் என்ற நிலை மாறி, ஊழல் இன்றைய காலகட்டத்தின் தவிர்க்க முடியாத வாழ்க்கைமுறை என்று மாறிவிட்டது. ஊழல் பல்கிப் பெருகி நிற்பதற்கு பல காரணங்களைக் கூறுகிறார்கள் – வெளிப்படைத்தன்மை இல்லாமை, பலவீனமான நிறுவனங்கள், பயனற்ற சட்ட கட்டமைப்பு, குறைந்த வருவாய், அதிகாரத்துவ சிவப்பு நாடா, அரசியல் தலையீடு, கலாசார காரணிகள், ஊழலைக் கண்டறிந்து சொல்பவர்க்கு தகுந்த பாதுகாப்பு இன்மை, சமூகம் மற்றும் பொருளாதார சமத்துவம் இல்லாத நிலைமை.

ஒவ்வொரு வருடமும் உலகளாவிய ஊழல் உணர்வுகள் குறியீடு பட்டியல்  வெளியிடப்படுகிறது. அதன்படி குறியீடு ‘100’ சற்றும் ஊழல் இல்லாத நாடு. ‘0’ குறியீடு அதிக ஊழல் நிறைந்த நாடு. 2023ஆம் ஆண்டு நூற்று எண்பது நாடுகளின் ஊழல் குறியீட்டுப் பட்டியல் எடுக்கப்பட்டு, ‘90’ குறியீடு பெற்று டென்மார்க் முதலிடம் வகுக்கிறது. 24வது இடத்தில் அமெரிக்கா. அதன் குறியீடு ‘69’, இந்தியா 85வது இடத்தில், குறியீடு ‘40’.  பட்டியலின் கடைசியில் சோமாலியா குறியீடு ‘12’. இந்த மதிப்பீடு சொல்லும் உண்மை இதுதான். வளர்ந்த நாடுகளில், ஊழல், வளரும் மற்றும் வறுமைக் கோட்டில் இருக்கும் நாடுகளை விடக் குறைவு.

2021ஆம் ஆண்டு, இந்திய மாநிலங்களில் அதிகப்படியாக 773 ஊழல் குற்றச்சாட்டுகள் மகாராஷ்டிரா மாநிலத்தில் பதிவாயின. 423 ஊழல் குற்றச்சாட்டுக்களுடன் மூன்றாவது இடத்தில் தமிழ்நாடு. குற்றச்சாட்டு பதிவாகாத ஊழல்கள் எத்தனையோ?

“ஆவிற்கு நீரென்று இரப்பினும், நாவிற்கு இரவின் இளிவந்த(து) இல்” என்றார் தெய்வப்புலவர் திருவள்ளுவர். இதன் பொருள் – பசுவிற்குத் தண்ணீர் வேண்டும் என்று கேட்பதே அவமானம். ஆனால் “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” என்று பெருமை பேசும் தமிழகம் ஊழலில் மூன்றாவது இடத்தில்.

கூச்சமில்லாமல், இந்தக் காரியம் முடித்துக்கொடுக்க எனக்குப் பணம் கொடு என்று கேட்பவனுக்கும், “அம்மா தாயே, பிச்சை போடுமா” என்று கேட்கும் பிச்சைக்காரனுக்கும் என்ன வித்தியாசம்? ஒரு வித்தியாசம் சொல்லலாம். பின்னது பரிதாபப் பிச்சை. முன்னது அதிகாரப் பிச்சை.

இதையும் படியுங்கள்:
நல்லது - கெட்டது தெரிந்து வாழ்வோம்!
image of Corruption

பெருமளவில் செலவு செய்து, தேர்தலில் வாக்களிக்கப் பணம் கொடுத்து வாக்கு வாங்குபவர், தான் போட்ட முதலை எடுப்பதில் கவனம் செலுத்துவாரா, அல்லது “மக்கள் சேவை மகேசன் சேவை” என்று மக்களின் முன்னேற்றத்திற்குப் பாடுபடுவாரா? இழந்த பணத்தை மீட்க வேண்டும், அடுத்த தேர்தலுக்கும், அடுத்த தலைமுறைக்கும் சொத்து வேண்டும். பணம் கொடுத்து வாக்கு வாங்க, வறுமைக் கோட்டிற்குக் கீழே சில மக்களை வைக்க வேண்டிய கட்டாயம் அரசியல்வாதிகளுக்கு. ஊழல் வழக்கில் சிறை சென்றவர்கள், நாட்டிற்காகத் தியாகம் செய்து சிறை சென்றவர் போல நடமாடுவதும், அவரை நம்பியிருக்கும் கட்சியினர் அவரைத் தியாகி போலக் கொண்டாடுவதும் ஊழலை ஒழிப்பது கடினம் என்ற தோற்றத்தையே கொடுக்கிறது.

ஊழலற்ற பாரதம் எப்போது உருவாகும்? விடை தெரியாத கேள்வி. “திருடனாப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது” என்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் பாடல் வரிகள் நினைவிற்கு வருகின்றன.

 டிசம்பர் 9 – சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com