மாபெரும் உயிரினத்தின் மகத்தான பங்களிப்பு!

ஆகஸ்ட் 12 உலக யானைகள் தினம்!
மாபெரும் உயிரினத்தின் மகத்தான பங்களிப்பு!
Published on

யானைகள் உலகின் மிகப் பெரிய விலங்கினங்களுள் ஒன்று மட்டுமல்ல; அவை இயற்கைக்கு மிகப்பெரிய பங்களிப்பை செலுத்தும் மகத்தான உயிரினங்கள்கூட.  காடுகளினுடைய ராஜா சிங்கங்கள் அல்ல  யானைகள்தான் என்றால் மிகையாகாது.  யானைகள்தான் காடுகளை உருவாக்குகின்றன,  யானைகள்தான் வழித்தடங்களை ஏற்படுத்துகின்றன, யானைகள்தான் மரங்களுக்கான விதைகளை பரப்பவும், உரங்களை உற்பத்தி செய்யவும் உதவுகின்றன.

அதனாலயே சொல்கிறோம் யானை மாபெரும் உயிரினம் மட்டுமல்ல மகத்துவமிக்க உயிரினமும் கூட. ஆகஸ்ட் 12ஆம் தேதி உலக யானைகள் தினம். யானைகள் தினம் என்று ஏற்படுத்தி கொண்டாடுவதற்கு காரணம், அன்றாவது யானை மீதான அடக்குமுறைக்கும் ஒடுக்கு முறைக்கும் எதிராக மக்கள் பேச வேண்டும் என்பதற்காகவே. 2023 ஆண்டின் உலக யானைகள் தினத்திற்கான கருப்பொருள் ‘சட்ட விரோதமான வனவிலங்கு வர்த்தகத்தை தடுத்து நிறுத்துவோம்’ என்பதாகும்.

தந்தங்களுக்காக மிகப் பெரிய அளவில் யானைகள் உலகம் முழுவதும் வேட்டையாடப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் 20,000 யானைகள் அவற்றின் தந்தங்களுக்காக கொல்லப்படுகின்றன என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.  அதிலும் தற்போதைய நவீன சமூகம் யானைகள் வாழும் இடங்களை எல்லாம் ஆக்கிரமித்துவிட்டு ஊருக்குள் யானை புகுந்து விட்டது என்று டமாரம் அடிக்கின்றது.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் வனத்துறை சார்பில், யானைகள் கணக்கெடுக்கும் பணி மே மாதம் 17, 18, 19 ஆகிய நாட்களில் நடத்தப்பட்டது. அதில் தமிழ்நாட்டில் வாழும் யானைகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக  நீர் நிலைகளின் அருகில் தெரியும் அடையாளங்களின் அடிப்படையில் தகவல்கள் திரட்டப்பட்டு கணக்கெடுப்பு பணி நடத்தப்பட்டுள்ளது. இதில் நடைபாண்டில் 2961 யானைகள் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 2761 யானைகள் இருந்த நிலையில், தற்போது யானையினுடைய எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக தமிழ்நாடு அரசின் வனத்துறை கூறியுள்ளது.

இதுகுறித்து யானை நல ஆர்வலர் ஜெகதீஸ் ரவி கல்கி ஆன்லைனுக்கு கூறியது:

“இந்தியா போன்ற வளரும் நாடுகளில் யானைகள் மீதான தாக்குதல், யானைகள் மீதான பயங்கரவாதம் அதிகரித்திருக்கிறது. அன்பான உயிரினத்தின் மீது அடக்கு முறையான செயல்கள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. காடுகளை ஆக்கிரமித்துள்ள மனிதன் மின் வெளிகளை அமைத்தும், காடுகளை அழித்தும் யானைகளைக் கொன்று வருகிறான். இதிலிருந்து யானைகள் காப்பாற்றப்பட வேண்டும். யானைகள் இருந்தால்தான் காடுகள் உருவாகும், வழித்தடங்கள் அமையும். யானைகள் செல்லும் இடங்களில் எல்லாம் ஆக்கிரமிப்பு செய்யும் மனிதன் யானைக்கும் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இயற்கைக்கும் மிகப்பெரிய ஆபத்தாக மாறியுள்ளான்.

விதை பரவுதல்,காடுகள் மேலாண்மை, இயற்கை பாதுகாப்பு என அனைத்திற்கும் யானைகள் முக்கிய பங்கு அளிக்கின்றன. யானைகள்தான் இயற்கையின் ஆதார உயிர்.இது இருந்தால் மட்டுமே மற்ற உயிரினங்கள் வாழ்வதற்கான சூழல் உருவாகும். நாடு செழிக்க காடு முக்கியமென்றால், காடு செழிக்க யானை முக்கியமல்லவா? யானைகள் இறந்தால் விவசாயத்துக்கே தண்ணீர் கிடைக்காது. இந்தியாவில் வெறும் 28,000 யானைகளே உள்ளன. இன்று, யானை அழிவின் விளம்பில் உள்ள உயிரினமாகும்.

யானைகளையும் அதன் வழிதடங்களையும் பாதுகாக்க வேண்டும். ‘யானை இருந்தாலும் ஆயிரம் பொன். இறந்தாலும் ஆயிரம் பொன்’ என்பது மனித சுயநலத்தினால் உண்டான பழமொழி. யானைகளை பணத்தால் மதிப்பிட முடியாது. யானைகளின் சாணத்தில் உள்ள உப்பை உறிஞ்சி வாழும் வண்ணத்துப்பூச்சிகள் மகரந்த சேர்கை செய்வதன் மூலம் புதிய பழங்களை உருவாக்குகின்றன. அந்த பழத்தை உண்ணும் யானை முளைப்பு தன்மை கொண்ட விதைகளை உருவாக்குகிறது. இதையெல்லாம் மனிதர்களால் செய்து கொண்டிருக்க முடியாது. இந்த பூமியில் மனிதர்களுக்கு வாழ இருக்கும் உரிமையை விட யானைகளுக்கு கொஞ்சம் கூடுதலாகவே இருக்கிறது. இதை நம் உணர மறுத்தால் இயற்கை தன் வழியே சென்று அதனை நமக்கு உணர்த்தும்.

இந்த வருடத்தில் இரண்டு மாதங்களில் மட்டும் இந்தியாவில் 18 யானைகள் உயிரிழந்துள்ளன. அதில் குறிப்பாக 8 யானைகள் மின் வெளிகளில் சிக்கி உயிரிழந்து உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது தமிழ்நாட்டில் யானைகள் கூடுதலாக இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. அது சரியான கணக்கீடாக இருக்குமா என்பது சந்தேகத்திற்குரியது. ஏனென்றால் தமிழ்நாடு மனப்பரப்பில் இருக்கக்கூடிய யானைகள் தமிழ்நாட்டைச் சேர்ந்த யானைகள் மட்டுமல்ல. கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற அண்டை மாநிலங்களை சேர்ந்த யானைகளும் வந்து செல்கின்றன. நம்முடைய கணக்கின்படி நடப்பாண்டில் 2961 யானைகள் இருப்பதாக கண்டறியப்பட்டிருந்தாலும், அதே யானைகள் கர்நாடகா, கேரளா, ஆந்திரா யானைகள் கணக்கீடு பட்டியலுக்குள்ளும் வரலாம். இன்று இந்தப் பகுதியில் இருக்கும் யானை அந்த பகுதிக்கு செல்லலாம், அந்த பகுதியில் இருக்கும் யானை இந்த பகுதிக்கு வரலாம். எனவே இவ்வாறான கணக்கீடு என்பது சரியான புள்ளிவிவரமாக இருக்க வாய்ப்பில்லை.”

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com