யானை மீதேறி வந்த பெரியபுராண உரை

யானை மீதேறி வந்த பெரியபுராண உரை
Published on

சோழர் வரலாறு பேசும் கோவை சேக்கிழார் இல்லம்

“பொன்னியின் செல்வன்“ திரைப்படமாக வந்த பிறகு சோழ ராஜ்யமும், ராஜராஜனும் திக்கெட்டும் பேசு பொருளாகி உள்ளனர். அதில் தஞ்சைப் பெருவுடையார் கோயிலும் சேக்கிழார் பெரிய புராணமும் கூட சோழநாட்டுக்கே சொந்தம் என்று யாரும் மறுக்க முடியாது. ஆனால் கோவை நகரின் பிரதான மையப்பகுதிகளில் ஒன்றான வைசியாள் வீதியில் அமைந்திருக்கும் சேக்கிழார் இல்லத்திற்கும் அந்தப் பெருமையில் பங்கிருக்கிறது என்கிறது அங்கே பதிந்துள்ள வரலாற்றுச் சுவடுகள்.

12ம் நூற்றாண்டில் சேக்கிழாரையும், அவர் பாடிய பெரிய புராணத்தையும் தில்லை நடராஜர் சன்னதியில் யானை மீதேற்றி, புலவர் பின்னிருந்து கவரி வீசி மகிழ்ந்தான் மகாமன்னன் அநாபயன் என்பது நமக்கு தெரியும். இப் புராணத்திற்கு இதுவரை ஆயிரக்கணக்கான உரை எழுதப்பட்டிருந்தாலும், அதே தில்லையில் யானை மீதேற்றி ஊர்வலம் வந்த உரைநூல் எது என்று யாருக்காவது தெரியுமா?

அந்த உரை 7 தொகுதிகள், 7300 பக்கங்கள் கொண்டது. அதை எழுதியவர்  கோவையை சேர்ந்த C.K.S எனப்படும் சி.கே. சுப்பிரமணிய முதலியார்.  இவர் வீட்டிற்கு வ.உ.சி, உ.வே.ச, ரசிகமணி டி.கே.சி, சி.எஸ்., போன்றவர்கள் வந்து தங்கியுள்ளார்கள்.  அந்த இல்லம் இன்றைக்கும் பழைமை மாறாது அவரின் மூன்றாவது தலைமுறையினரால் பாதுகாக்கப்பட்டு வருகிறது!’

அது ஒரு பழமை மாறாத மச்சு மாடி வீடு. அகண்ட திண்ணை. நீண்ட தாழ்வாரம். வரிசையாய் பளபள தேக்கு மரத் தூண்கள். முகப்புச்சுவற்றில் ‘சேக்கிழார் நிலையம்’, ‘சிவக்கவிமணி  C.K. சுப்பிரமணிய முதலியார் B.A’ எனப் பொறித்த கல்வெட்டுகள்.

இடதும், வலதும் இரண்டு அறைகள். கடந்தால்  பெரிய ஹால். சுற்றிலும் திக்குக்குத் திக்கு தனித்தனி அறைகள். ஊஞ்சல், சுவற்றில் பிரேமிடப்பட்ட பழங்கால புகைப்படங்கள். ஓவியங்கள். ஹால் நடுவே ஒரு தொட்டிக்கட்டு, அதற்குள் ஒரு டேபிள். அதில் அடுக்கப்பட்டிருக்கும் புத்தகங்கள். இந்த இல்லத்தில் வசிப்பவர் சிவசுப்பிரமணியம் எதிர்ப்படுகிறார். அவர்தான். சிகேஎஸ்ஸின் பேரன். விவரம் கேட்டதும் மடமடவென்று இந்த சேக்கிழார் இல்லத்தின் கதையை சொல்ல ஆரம்பித்தார்.

 ‘‘சி.கே.எஸ்ஸோட அப்பா ‘வித்வான்’ கந்தசாமி முதலியார். இலக்கிய, சங்கீத ஞானம் கொண்டவர்.  20.02.1878ல் சி.கே.எஸ் பிறந்தது. கந்தசாமி முதலியார் மறைந்தது 1890ல். இடைக் காலத்தில் கட்டப்பட்டது கந்தசாமி முதலியார் வழக்குரைஞர். அவர் பேரூரை மையமாக வைத்து ‘திருப்பேரூர் பிள்ளை விடு தூது’ உள்ளிட்ட 30க்கும் அதிகமான நூல்கள் எழுதியிருக்கிறார். பேரூரில் பச்சை நாயகி அம்மன் சந்நிதி அவர் கட்டியதுதான். கந்தசாமி முதலியார் அவர் தந்தை உலகநாத முதலியாருக்கு ஒரே மகன். அதேபோல் கந்தசாமி முதலியாருக்கு சி.கே.எஸ்ஸூம் ஒரே மகன். இவரும் வக்கீல்.

சி.கே.எஸ்ஸிற்கு சைவ தொண்டில் மட்டுமல்ல,  அரசியலிலும் ஈடுபாடு உண்டு. பெரிய புராணத்தை முழுமையா ஃபீல்டு ஒர்க் பண்ணி 7300பக்கங்கள் (1935-36) உரை எழுதினார். பெரிய புராணத்திற்கு அவ்வளவு பெரிய உரையை அதற்கு முன்னரும், பின்னரும் எவரும் எழுதியதில்லை. அதற்காகவே சைவப் பெரியவர்கள்  சிதம்பரத்தில் கூடினார்கள்.  சேக்கிழார்  இயற்றிய நூலை எப்படி யானை மீதேற்றி  மரியாதை செய்தனரோ, அதே போல் இவரின் உரை நூலையும் யானை மீதேற்றி மரியாதை செய்தார்கள். அந்த நூலின் தொகுதிகளைத்தான் இப்போது எட்டாவது பதிப்புகளாக போட்டுக் கொண்டிருக்கிறேன்!’’ என்று சொல்லி பெரிய, பெரிய நூல்களை எடுத்துக் காட்டினார்.

‘‘தாத்தா இதை மட்டுமல்ல, ‘சேக்கிழாரும் சேயிழையார்களும், மாணிக்க வாசகர் அல்லது நீத்தார் பெருமை, லாகீசர் அல்லது மெய்யுணர்தல், அர்த்தனாரீஸ்வரர் அல்லது மாதிருக்கும் பாதியன், கரூவூர் தேவர் மற்றும் முருகனை பற்றியெல்லாம் என ஏராள நூல்கள் எழுதியிருக்கிறார். 344 பக்கங்கள் கொண்ட ‘பித்தன் ஒருவனின் சுயசரிதை‘ சிகேஎஸ்ஸின் சுயசரிதை நூல்.  தாத்தாவுக்கு சென்னை சட்டக் கல்லூரியில் படிக்கும் போது  சுப்பிரமணிய அய்யர், அரவிந்த் கோஷ் (அரவிந்தர்) தொடர்புகள் ஏற்பட்டிருக்கு. படிப்பு முடிஞ்சு கோவைக்கு வக்கீல் தொழில் பார்த்ததோடு, அரசியல் பிரச்சாரங்களிலும் ஈடுபட்டிருக்கார். வ.உ.சி. கோவை சிறையில் இருந்தப்ப, அவருக்காக’ 2 வழக்குகளில் வழக்காடியுள்ளார். அதிலொன்று சிறைக்கலகம்.  இன்னொன்று ‘அரசியல் கைதிகளை சலுகை அடிப்படையில் பிரிட்டீஸ் அரசு விடுவிக்கும்போது வ.உ.சிக்கு மட்டும் அது கிடைக்கல. அதை ஏன் தரலைன்னு வாதாடி ஜெயிக்கிறார். அந்த நன்றியுணர்ச்சியில் வ.உ.சி. தன் மகன் ஒருவருக்கு இவர் பெயரையே வைத்திருக்கிறார். இந்த வீட்டில் வந்து தங்கியுமிருக்கிறார். மணியாச்சி ரயில் நிலையத்தில் நடந்த சப்-கலெக்டர் ஆஷ் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர் நீலகண்ட பிரம்மச்சாரி. அவரை 3 நாள் இந்த வீட்டில் தங்க வைத்து தலைமறைவாக்கியிருக்கிறார் சி.கே.எஸ். அப்போது பிரிட்டீஷ் போலீஸ் சி.கே.எஸ். வீட்டிற்கு ‘சர்ச் வாரண்டு’டன் வந்திருக்கிறது. அவர்களை சி.கே.எஸ்ஸின் மனைவி, ‘அய்யா கோர்ட்டுக்கு போயிருக்கார்’ என சொல்லி திண்ணையில் உட்கார வைத்து விட்டு வீட்டிற்குள் இருந்த அரசியல் கடிதங்களை எல்லாம் தேடி எடுத்து தீ வைத்து எரித்து சாம்பலாக்கி  நீரில் கரைத்து கிணற்றுக்குள் ஊற்றியுள்ளார்!’’  

ரத்தினசபாபதி முதலியார் என்பவர்  கோவை நகராட்சி தலைவராகவும், (1921-36) சி.கே.எஸ். உப தலைவராகவும் இருந்திருக்கின்றனர். ரத்ன சபாபதி முதலியார் பெயரில்தான் கோவை ஆர்.எஸ்.புரம் உருவானது. அவர் காலத்தில்தான் கோவைக்கு சிறுவாணித் தண்ணீரும், பைக்காரா திட்டத்தில் மின்சாரமும் வந்திருக்கிறது. இதில் முதல் மின் இணைப்பு சி.கே.எஸ். வீட்டிற்குத்தான் கொடுக்கப்பட்டுள்ளது. பேரூர் கோயில் யானை ஜானகி ஆரம்பத்தில் சி.கே.எஸ். வீட்டில்தான் வளர்ந்திருக்கிறது. பின்னாளில்  பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத்திற்கு அது அளிக்கப்பட்டிருக்கிறது. கோவை வரலாறு உள்ளிட்ட நூல்கள் எழுதிய கோவை கிழாருடன் சேர்ந்து சி.கே.எஸ். கோவை தமிழ் சங்கம், சேக்கிழார் திருக்கூடம், சைவப் பிரசங்க சாலை என பல அமைப்புகளை நடத்தியிருக்கிறார்.  அதற்கான அரங்க கட்டிடமும் இங்கே  பழமை மாறாது இருக்கிறது. அதற்கு தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதய்யர், ரசிகமணி டிகேசி, முன்னாள் நிதி அமைச்சர் சிஎஸ்., பண்டிதமணி கதிரேசன் செட்டியார் என பலரும் வந்து தங்கி சென்றுள்ளனர்.

‘‘சி.கே.எஸ்.ஸிற்கு குழந்தை இல்லை. தன் மைத்துனர் மகனான சி.எஸ். கண்ணாயிரத்தை ஸ்வீகாரம் எடுத்துள்ளார். அவர்தான் என் அப்பா.  தாசில்தாராக இருந்தவர். திருவாசகத்திற்கு விரிவான விளக்க உரை  உட்பட 35க்கும் மேற்பட்ட நூல்களை அவரும் எழுதியுள்ளார். என் 10 வயசில் தாத்தா இறந்தார். அப்பா  தாத்தாவோட நூல்களை ‘சேக்கிழார் நிலைய வெளியீடுகள்’ என்ற பெயரில் சொந்த செலவில் பதிப்பித்து அன்பர்களுக்கு மலிவு விலையில் தந்து வந்தார். நான் வேளாண்துறையில் அலுவலரா இருந்தேன். 2007ல் விஆர்எஸ் வாங்கிட்டேன். அப்பாவிற்குப் பிறகு அவர் செஞ்ச பதிப்பு பணிகளை நானே செஞ்சுட்டு வர்றேன். ஒரு தொகுதி ரூ.1500 மதிப்பு கொண்டதானாலும் ரூ. 500 க்கு மலிவு விலையில்தான் தருகிறோம். உலகெங்கும் அன்பர்கள் இதற்கு முன்பதிவு செய்து கடிதம் எழுதுகிறார்கள். எங்கும் எதிலும் இதை நாங்கள் துளி விளம்பரப்படுத்துவதில்லை. எங்கள் பிள்ளைகள் வெளிநாட்டுப் பணியில் இருக்கிறார்கள்.  இன்றைக்கும் தாத்தா பெயரை சொன்னால் எழுந்து நின்று எங்களை கும்பிடுகிறார்கள். அந்த மரியாதை தாத்தாவின் மூலம் எங்களுக்கு கிடைப்பதே பெரும்பேறு!’’ என்று சொல்லி நெகிழ்ந்தார் சிவசுப்பிரமணியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com