நெதர்லாந்தின் பிரபல மதுபானத் தயாரிப்பு நிறுவனமான ஹைனிகன் (Heineken), தனது சொத்துக்களை ஒரு யூரோவிற்கு, அதாவது 90 ரூபாய்க்கு, ரஷ்யாவின் அர்னஸ்டு (Arnest) குழுமத்திற்கு விற்றுவிட்டு, ரஷ்யாவினை விட்டு வெளியேறியது. உண்மையில், அதனுடைய சொத்தின் மதிப்பு கிட்டத்தட்ட 300 மில்லியன் யூரோ அல்லது 384 மில்லியன் அமெரிக்க டாலர்கள். 300 மில்லியன் யூரோவிற்கு மாற்றாக, 1 யூரோவினை மட்டும், சம்பிரதாயமாகப் பெற்றுக் கொண்டு, தன்னுடைய மொத்த சொத்துக்களையும் ரஷ்யாவின் அர்னஸ்டு குழுமத்திற்கு விற்றுவிட்டது. 300 மில்லியன் யூரோ நஷ்டத்துடன், ஹைனிகன் ரஷ்யாவினை விட்டு வெளியேறி விட்டது.
ரஷ்யா உக்ரைனை நோக்கி படையெடுத்தவுடனே, முதலீட்டாளர்கள், பொதுமக்களின் வாயிலாக , ரஷ்யாவினை விட்டு விலக அழுத்தம் கொடுக்கப்பட்டது. அதன் காரணமாக, அந்நிறுவனங்களும் மேற்கத்திய நாடுகளின் நிறுவனங்களுக்கு, ரஷ்யாவினை விட்டு வெளியேறத் தொடங்கின. இவ்வாறு வெளியேறத் தொடங்கியவுடனே, அவற்றின் சொத்துக்களை விற்பதை ரஷ்யா கடுமையாக்கி விட்டது. மிகப்பெரிய அபராதத் தொகையை செலுத்தி மட்டுமே மேற்கத்திய நிறுவனங்கள் தங்களது சொத்துக்களை விற்க முடியும். 50% நிறுவனங்கள் மட்டுமே, பிரச்சனைகள் இல்லாமல் நீங்கின என்று யேல் பல்கலைக்கழகத்தின் அறிக்கை கூறுகிறது. 600 நிறுவனங்களில் 176 நிறுவனங்கள் நஷ்டங்களைச் சந்தித்துள்ளதாக, பினான்சியல் டைம்ஸ் ஆராய்ச்சி கூறுகிறது.
கடந்த 18 மாதங்களாக ஹைனிகன் ரஷ்யாவினை விட்டு நீங்குவதற்கு முயற்சி செய்து வந்தது. ஒருவழியாக இன்று அது வெளியேறியது. அதற்கு ரஷ்யாவில் 6 மதுபானத் தொழிற்சாலைகள் உள்ளன. அவற்றில் 1800 மக்கள் வேலைப் பார்க்கின்றனர். அவர்களைக் கருத்தில் கொண்டே, ஹைனிகன் தனது சொத்துக்களை அர்னஸ்டு குழுமத்திற்கு விற்று, மேலும் அடுத்த 3 வருடங்கள் அவர்கள் கண்டிப்பாக வேலையிலிருக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளது. அதற்கு அர்னஸ்டு குழுமம் ஒப்புதல் அளித்துள்ளது.
ஏதேனும் ஐரோப்பிய நிறுவனம் தகுந்த முறையில் வெளியேறாவிட்டால், அவற்றின் சொத்துக்கள் அரசுடமையாக்கப்படுகின்றன. சமீபத்தில், மிகப்பெரிய உணவு தயாரிப்பு நிறுவனமாக டெனான் (Denon) மற்றும் மதுபான நிறுவனமான கார்ல்ஸ்பர்க் (Carlsburg) போன்றவற்றின் சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட்டு விட்டன. தனது சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட்டு விடக் கூடாது என்பதற்காகவும், தனது தொழிலாளர்களின் எதிர்காலம் கருதியும், ஹைனிகன் இவ்வாறு தனது சொத்துக்களை 1 யூரோவிற்கு விற்றுவிட்டு, வேகமாக ரஷ்யாவினை விட்டு வெளியேறி விட்டது.
இவ்வாறு ஐரோப்பிய நிறுவனங்களின் கேட்பாரற்ற சொத்துக்கள், குப்பை டப்பாக்களைப் போன்று குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. இவற்றை ரஷ்யாவின் வணிகர்கள் வாங்குகின்றனர். இவர்கள் வாங்கிய சொத்தின் மதிப்பு கிட்டத்தட்ட 40 பில்லியன் யூரோ என்று கணக்கிட்டுள்ளனர். இதில் 18 பில்லியன் யூரோ சொத்துக்கள் மட்டும் , விளாடிமிர் போடானின் (vladimir Potanin) என்கிற, ரஷ்ய நாட்டின் மிகப்பெரிய பணக்காரரால் வாங்கப்பட்டுள்ளன.
இந்த ரஷ்ய- உக்ரைன் போர் மூலம், ஐரோப்பிய நிறுவனங்கள் கிட்டத்தட்ட 100 பில்லியன் யூரோவினை இழந்துவிட்டன. நம்மைப் போன்ற சில்லறை முதலீட்டாளர்கள், தங்களது முதலீடுகள் பரவலாக வைத்திருக்க வேண்டுமென்பதற்கு, ரஷ்ய உக்ரைன் போர், மற்றுமொரு உதாரணத்தைக் காட்டியுள்ளது.