நெருப்பாற்றில் நீந்தி மீண்ட காகிதக்கப்பல்

நெருப்பாற்றில் நீந்தி மீண்ட காகிதக்கப்பல்

வானவில் பண்பாட்டு மையம் சார்பில்   மஹாகவி பாரதியாரின் பிறந்த நாளை சென்னையில் ஆண்டுதோறும் இரண்டு நாள் விழாவாக மிகச் சிறப்பாகக் கொண்டாப்படுவது வழக்கம். திருவல்லிக்கேணி  பார்த்தசாரதி கோயிலில் இருந்து  பாரதியாரின் உருவச்சிலையை அவர் வாழ்ந்த இல்லத்துக்கு  பல்லக்கில் ஊர்வலமாக எடுத்துவந்து வைத்து, அதன் முன்னே  நாள் முழுவதும் பாரதியாரின் கவிதைகளைப் போற்றும் வண்ணம்   இசை, நடனம்,  கருத்தரங்கம் எனப் பல நிகழ்ச்சிகள் நடைபெறும். மாலையில் விருதுக் குழுவினரால்  தேர்ந்தெடுத்த ஒருவருக்கு “பாரதிவிருது”  ஆண்டுதோறும் வழங்கப்படும்.

இந்த “பாரதி விருது” தமிழறிஞர்களுக்கு மட்டுமில்லாமல் சிறந்த சாதனையாளர்களுக்கும் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு அந்த விருதைப்பெற்றவர் பத்மபூஷன் திரு. நம்பி நாராயணன் (இஸ்ரோவின் முன்னாள் ராக்கெட் விஞ்ஞானி)

விண்வெளிப் பயணத்துக்குப் பயன்படும் ராக்கெட்டைத் திரவ உந்துசக்தியின் மூலம் (Liquid Propulsion) செலுத்தும் அறிவியல் நுட்பத்தை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சேரும். அந்தத் தொழில் நுட்பம் இந்தியாவுக்குத் தெரிந்துவிடக் கூடாது என்று அயல்நாடுகள் செய்த சதியின் காரணமாகவோ அல்லது இங்கே உள்ள சிலருடைய தூண்டுதலின் பேரிலோ இவர் மீது பொய்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு நான்கு ஆண்டுகள் பல சித்திரவதைகளுக்கும், அவமானங்களுக்கும் ஆளானார். பல இன்னல்களுக்கு இடையில் திரவ உந்து சக்தியுடன் செயல்படும் இயந்திரத்தை இவர் வடிவமைத்துத் தந்ததோடு, தம் குருநாதர், அறிவியல் மேதை, திரு. விக்ரம் சாராபாய்க்குத் தம் காணிக்கையாக அந்த இயந்திரத்துக்கு “விகாஸ் என்ஜின்” என்று பெயரிட்டார். அந்த இயந்திரம் மூலமாக விண்வெளித் துறையில் நம் நாடு வெகுவாக முன்னேறியது என்பது வரலாற்று நிகழ்ச்சி. இவர் மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் சி.பி.ஐ. விசாரணையில் “பொய்” என்று நிரூபிக்கப்பட்டன. நம் உச்சநீதிமன்றமும் அதை ஏற்றுக்கொண்டதோடு “பொய்க்குற்றச்சாட்டுகளில் துன்புறுத்தப்பட்ட அவருக்குக் கேரள அரசு தக்க நஷ்ட ஈடு வழங்க வேண்டும்” என்றும் தீர்ப்பாணை வழங்கியது.

 சமீபத்தில், இவருடைய வாழ்க்கை வரலாறு திரைப்படமாக, "ராக்கெட்ரி த நம்பி இஃபெக்ட்' என்ற பெயரில் வெளியிடப்பட்டுப் பெரும் வெற்றி பெற்றது. 2019- ஆம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு பத்மபூஷன் விருது வழங்கிச் சிறப்புச் செய்தது. 

விழாவின் தொடக்கத்தில் வானவில் பண்பாட்டு மையம் இவ்விழாவிற்காகத்  தயாரிக்கபட்ட ஒரு குறும்படத்தை திரையிட்டது. சிறப்பான அந்தப் படத்தைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தின் மேநாள் நீதியரசர் திரு. இப்ராஹிம் கலிபுல்லா விருதை  வழங்கினார். விருதாளரை பாராட்டிய வானவில் அமைப்பின் புரவலர்களில் ஒருவரான எழுத்தாளர்  சிவசங்கரி,  நம்பி நாராயணனின்  சாதனைகளின் உச்சத்தையும் வேதனைகளின்  ஆழத்தையும் உணர்ச்சி பெருக்கோடு தன் உரையில் விவரித்தபோது நிரம்பியிருந்த அரங்கம் நெகிழ்ந்தது நிஜம். 

“அறிவியல் துறையில் இந்தியா முன்னேற்றம் அடைய வேண்டும்” என்று விரும்பியவன் பாரதி. அமெரிக்காவின் ‘நீல்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங்‘ சந்திரனில் அடியெடுத்து வைப்பதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்பே, “சந்திர மண்டலத்து இயல் கண்டு தெளிவோம்” என்ற பெருங்கனவைத் தன் கவிதையில் பாரதி வெளிப்படுத்தினான். அவனுடைய கனவு மெய்ப்படத் தொண்டாற்றிய சிலருள் திரு. நம்பி நாராயணன் குறிப்பிடத்தக்கவர். நிதிப் பற்றாக்குறையால் நம் நாடு விண்வெளித் துறையில் பெரிய நாடுகளுடன் போட்டி போட முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தபோது, குறைந்த நிதியில் திரவ உந்து சக்தி மூலம் ராக்கெட் செலுத்தும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்திச் "சிதையா நெஞ்சு கொள்; தீயோர்க்கு அஞ்சேல்; சேசத்தைக் காத்தல் செய்" போன்ற பாரதியின் புதிய ஆத்திச்சூடியில் உள்ள கட்டளைப்படி, பல இடையூறுகளையும் எதிர்கொண்டு நாட்டுக்கு உதவிய இந்த 81 வயது இளைஞருக்கு, "சூரரைப் போற்று” என்ற பாரதியின் வார்த்தைகளுக்கு ஏற்ப , பாரதி விருது வழங்கி கெளரவித்த வானவில் அமைப்பு நிறுவனர் வழக்கறிஞர் ரவி அவர்களும்  குழுவினரும் பாராட்டப்பட வேண்டியவர்கள் .

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com