அறிஞர் அண்ணா வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வந்தபின் 1968 இல் சட்டமன்றம் நடந்துகொண்டு இருந்த நேரத்தில்…
காங்கிரஸ் கட்சி உறுப்பினர் அனந்தநாயகி அவர்கள் கேள்வி நேரத்தில் அண்ணாவை நோக்கி முதல்வர் அவர்களே நீங்கள் வெளிநாட்டில் சிகிச்சை பெற்று திரும்பியதில் எவ்வளவு பணம் செலவு ஆனது... அது உங்கள் சொந்த பணமா அல்லது அரசு பணமா அல்லது உங்கள் கட்சி செலவா என்று கேட்க,
பேரறிஞர் அண்ணா சபையைச் சுற்றிப் பார்த்து, உங்கள் இந்தக் கேள்விக்கு நாளைக்கு நான் பதில் சொல்கிறேன் என்ற உடன் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் ஒரு மாதிரியாக சிரித்தனர்.
மறுநாள் சட்டப்பேரவை கூடியதும் அதே கேள்வி நேரத்தில் நேற்று எனது கேள்விக்கு என்ன பதில் என்று அனந்தநாயகி மீண்டும் கேட்க,
அறிஞர் அண்ணா எனது சிகிச்சை முழுச் செலவையும் நானும் கொடுக்கவில்லை.
தமிழக அரசும் கொடுக்கவில்லை. எங்கள் கட்சியும் அந்தச் செலவை ஏற்கவில்லை.
செலவான தொகை ரூபாய் ஒரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய் மொத்தமும் இங்கே இதோ சட்டமன்ற உறுப்பினர் ஆக அமர்ந்து இருக்கிற என் அன்பு தம்பி எம்.ஜி.ஆர். அவரின் உழைப்பின் மூலம் கிடைத்த பணத்தை எனக்காக என் சிகிச்சைக்காக செலவை அவரே ஏற்றுக்கொண்டு பணம் செலுத்திய ஆதாரம் இதோ.... ஆதாரத்தைக் காட்டினார்.
நேற்று அவர் அவைக்கு வரவில்லை. அவர் முன்னால் இந்த விளக்கத்தை சொல்ல வேண்டும் என்று எண்ணியே நேற்று நான் பதில் சொல்லவில்லை என்ற உடன் சட்டமன்ற அவையில் எழுந்த கரவொலி கட்டடம் தாண்டி கேட்டுக்கொண்டே இருந்தது.
- சுந்தரி காந்தி, சென்னை
மூன்றெழுத்தில் மூச்சிருக்கும்!
எனக்கு வயது 68. MGR நடித்த திரைப்படங்களை எப்போது பார்த்தாலும் எனக்கு உற்சாகம் ஊற்றெடுக்கும். MGR நடித்த திரைப்படங்களின் பெயரைக் கேட்டாலே நேர்மறை எண்ணங்கள் பொங்கி வழியும். ‘திருடாதே’, ‘பரிசு’, ‘நீதிக்குத்தலை வணங்கு’, ‘இன்று போல் என்றும் வாழ்க’, ‘பல்லாண்டு வாழ்க’, ‘ஊருக்கு உழைப்பவன்’, ‘உழைக்கும் கரங்கள்’, ‘உரிமைக்குரல்’ போன்ற திரைப்படங்களை உதாரணமாகச் சொல்லலாம்.
காதல் காட்சிகளில் இவர் செய்யும் குறும்புகள் இருபது வயது காதலன் செய்வது போலிருக்கும்.
சண்டைக் காட்சிகள் மிகவும் தத்ரூபமாக இருக்கும். சண்டைக் காட்சிகளில் இவரிடம் இருக்கும் சுறுசுறுப்பு வேறு சினிமா நடிகர்கள் எவரிடமும் கிடையாது.
ஜாக்கிசான் ஒரு பேட்டியில், தான் எம்.ஜி.ஆர் திரைப்படங்களைப் பார்த்துதான் சண்டைக் காட்சிகளில் சுறுசுறுப்பைக் கற்றுக்கொண்டதாக கூறியிருக்கிறார்.
மன்னர் உடையில் அலங்கரிக்கப்பட்டால் மிகவும் அழகாகத் தெரிபவர் எம்.ஜி.ஆர்.
'அச்சம் என்பது மடமையடா ' பாடலை செல்போன் ரிங்க் டோனாக வைத்திருக்கும் கோடான கோடி ரசிகர்களில் நானும் ஒருவன். உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் MGRக்கு நிகர் MGRதான்.
MGR மறைந்தபிறகு இப்பவும் ஒரு ஜோக் பிரபலமாக வலம் வந்து கொண்டிருக்கிறது.
English Alphabet எத்தனை என்று ஆசிரியர் எட்டு வயது மாணவனிடம் கேட்டதற்கு அவன் 23 என்று பதில் கூற ஆசிரியர் 'English Alphabet 26... இது கூடத் தெரியலையா?' என்று கேட்டிருக்கிறார்.
அதற்கு அந்த மாணவன் , "MGRதான் இல்லையே... அதான் 23 என்று சொன்னேன் " என்று கூறினானாம்.
'மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்' என்று MGR பாடினார்.
இன்று MGR என்ற மூன்றெழுத்து என்னைப் போன்ற பலரின் மூச்சை நீட்டி வைத்துக்கொண்டிருக்கிறது.
- வி.ஆவுடைநாயகம், மடிப்பாக்கம்
“சாப்பீட்டீர்களா?”
தேசத்தின் மீதும், தேச தலைவர்கள் மீதும்
மிகுந்த மரியாதையும், பக்தியும்
கொண்டவர் எம்ஜி.ஆர்.
சினிமாவிலும் தமிழக மக்கள் நெஞ்சங்களிலும் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துள்ளவர்.
புரட்சித்தலைவர், மக்கள் திலகம், பொன்மனசெம்மல் என்று மக்களாலும் தனது தொண்டர்களாலும், ரசிகர்களாலும், போற்றபட்ட எம்.ஜி.ஆர் தனது சொத்துக்கள் முழுவதையும் மக்களுக்கு எழுதி வைத்தார்.
இவர் நடிகராக இருந்து அரசியலுக்கு வந்தாலும் ஏழைகளின் நலனுக்காக வாரி வழங்கிய வள்ளல் என்று பெயர் எடுத்தவர். பலருக்கு தனிப்பட்ட வகையில் உதவிகள் செய்தவர். வறுமையில் வாடிய பலரது வாழ்வில் விளக்கேற்றிய வள்ளல் பெருந்தகை. தன்னை பற்றி யார் இழிவாக பேசினாலும் அதை மறந்து புறந்தள்ளி அவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக விளங்கியவர்.
இவர் தன்னைச் சந்திக்க வரும் பலரையும் குறிப்பாக ரசிகர்கள் அனைவரையும் "சாப்பிட்டீர்களா" என்று அன்புடன் விசாரிப்பது மட்டுமல்லாமல் அவர்களுக்கு உடனே விருந்தளிக்கவும் ஏற்பாடு செய்து சாப்பிட்ட பிறகே மற்ற விஷயங்களைப் பேசுவார்.
1936ல் ‘சதிலீலாவதி’ என்னும் திரைப்படத்தில் நடித்தாலும் அதில் புகழ் பெறவில்லை. இவர் நடித்த ‘காவல்காரன்’ திரைப்படம் மாபெரும் வெற்றிப் படமாகவும், திரையுலகில் அவரது ஆளுமையை மீண்டும் நிலை நிறுத்தும் நிகழ்வாகவும் அமைந்தது. 1971ஆம் ஆண்டு அகில இந்திய சிறந்த நடிகராக எம்ஜிஆரை மத்திய அரசு தேர்வு செய்து தேசிய விருதை வழங்கியது.
- வி. கலைமதி சிவகுரு, நாகர்கோவில்
(முற்றும்)