உயிர் காக்க உதவும் சாதனையாளர்!

உயிர் காக்க உதவும் சாதனையாளர்!

சிதம்பரம் தெற்கு சன்னதியில் சிற்றுண்டிகடை வைத்து நடத்தி வருபவர் ராமச்சந்திரன். வயது 56. இவர் சிறந்த சமூக சேவகர். விழுப்புரத்தில் நடைபெற்ற கள ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள், இவருக்கு சிறந்த சமூக சேவையாற்றியவர்களுக்கான நினைவு பரிசை வழங்கினார். இந்த சாதனையாளரை சந்தித்தோம்:

Q

நீங்க எத்தனை வயசுல ரத்த தானம் பண்ண ஆரம்பிச்சீங்க...?

A

1983 ஆம் ஆண்டு. எனக்கு அப்ப 17 வயசு. பத்தாம் வகுப்பு முடித்து இருந்தேன். என் நண்பர் சீனிவாசன் என்பவர் என்னை முதல் முதலில் ரத்த தானம் செய்ய அழைத்து சென்றார். இன்னும் நல்லா ஞாபகம் இருக்கு. அவங்க ஒரு இஸ்லாமிய பெண்மணி. அவசர நிலையில இருந்தப்ப அவங்களுக்கு நான் ரத்தம் கொடுத்து உதவினேன். நான் அப்போ ரொம்ப பயந்தேன். ரத்தம் கொடுத்தால் உடம்பில் இருக்கிற தெம்பல்லாம் போயிடும்ன்னு நினைத்தேன். ரத்ததானம் கொடுத்த பிறகுதான் தெரிந்தது இவ்வளவுதானான்னு. நிறைய தரலாமே மக்களையும் தர வைக்கலாமே அப்படின்னு அன்னைக்கு முடிவு பண்ணினதுதான். 38 வருஷம் முடிய போகுது.  இதுவரைக்கும் ரத்ததானம் கொடுத்து யாரிடமிருந்து எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் நானும் எனது நண்பர்களும் அதை செய்து வருகிறோம். என்னைப் பொறுத்தவரை ரத்தம் தானமாக மட்டுமே தருவேன்.

Q

இதுவரைக்கும் நீங்க பண்ணியிருக்கிற சாதனை என்ன?

A

1) 3600 ஜோடி கண்கள் தானம்.

2)16,000 யூனிட் ரத்த தானமும்.

 3) 330 பேர்கள் இறந்த உடல்களை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவ மாணவர்கள் படிப்புக்காக வழங்க முயற்சித்து, உடல் தானம் பெற்றுக் கொடுத்துள்ளேன்,

4) 20க்கும் மேற்பட்ட ஆதரவின்றி இறந்து போன உடல்களை அடக்கம் செய்துள்ளேன். இதில் 5 பேர்கள் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இறந்து போனவர்கள்

5) சாலையிலும் சாக்கடையிலும் உயிருடன் கிடந்த 20க்கும் மேற்பட்ட குழந்தைகளை மீட்டு தொட்டில் திட்டத்தில் கொண்டு போய் சேர்த்துள்ளேன்.

6) 140க்கும் மேற்பட்ட தடவை ரத்ததானம் நானே செய்துள்ளேன்.

Q

கல்யாணத்துக்கு முன்னாடி எப்படி வேண்டுமானாலும் இருந்திருப்பீங்க கல்யாணத்துக்கு பிறகு மனைவின்னு ஒருத்தங்க வந்திருப்பாங்களே... அவங்க எல்லாம் இதுக்கு அனுமதிச்சாங்களா?

A

ன்ன இப்படி கேட்டுட்டீங்க? பொண்ணு பாக்க போன இடத்திலேயே சொல்லிட்டேன் எனக்கு வரதட்சணையின் ஒரு பைசா வேண்டாம். ஆனா ஒரே ஒரு கண்டிஷன். கல்யாணத்துக்குப் பிறகு நீயும் ரத்த தானம் பண்ணனும்ன்னு. என் மனைவி சித்ரா அப்பவே சிரிச்சுக்கிட்டே ‘கண்டிப்பா உங்களோடு சேர்ந்து நானும் சமூக சேவை செய்கிறேனே’ என்று சொன்னாங்க.  அதே மாதிரி பாருங்க இதுவரைக்கும் 16 முறை ரத்த தானம் கொடுத்திருக்காங்க. இன்னொரு விஷயம் என் சாதனைக்கு  முதல்வரே அழைத்து என் சேவையை பாராட்டியதற்கு பின்னாலும் என் வளர்ச்சிக்கு பின்னாலும் இருப்பது என் மனைவிதான்.  ஒரு ஆணின் வளர்ச்சிக்கு பின்னால் ஒரு பெண் இருக்கிறாள். அதுக்கு நான்தான் சார் உதாரணம் என்றார் சிரித்தபடி.

Q

உங்க ஃபேமிலி எப்படி சார்?

A

னக்கு ஒரு மகன், ஒரு மகள், பையன் எம்.எஸ்.சி படிக்கிறான், அவன் கூட ஏழு முறை ரத்ததானம் பண்ணி இருக்கான். என் மகள் எம்.பி.பிஎஸ் முடிச்சு டாக்டராகப் போகுது. பொண்ணு டாக்டர் ஆனதும் சிதம்பரத்தில் ‘மக்கள் மருத்துவர்’ என்று போற்றப்பட்ட மறைந்த டாக்டர் அசோகன் அவர்களைப் போல சமூக சிந்தனையோடு செயலாற்ற வேண்டும் என்று கூறியுள்ளேன். 

புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? ராமசந்திரனின் சாதனைப் பயணம் நூறாண்டு காலத்திற்கு மேல் தொடர வாழ்த்திவிட்டு வந்தோம்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com