தமிழக அரசியலை அதிரவைத்த இந்த அசாத்திய வெற்றி சாத்தியமானது எப்படி?

TVK Vijay
TVK Vijay
Updated on
Kalki Strip
Kalki Strip

கதைக்கலாம் கலக்கலாம் வாங்க… கல்கி ஆன்லைன் வழங்கும் எழுத்து மேடையில்  கோலிவுட் To கோட்டை – “உங்கள் பார்வையில் தளபதியின் புதிய வழி” பற்றிய கருத்தை கேட்டிருந்தோம். அதில் தேர்வான சுவாரஸ்யமான கட்டுரைகளில் மூன்றாவது கட்டுரை இதோ…

உலக அரசியல் வரலாற்றில், திரைப்பட நடிகர்களாக இருந்து அவரவர் நாட்டின் அதிபர்களாக முன்னேறியோர் பலருண்டு! அமெரிக்காவின் ரொனால்ட் ரீகன்-ஹாலிவுட்டிலிருந்து 40 வது அமெரிக்க அதிபர்; வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, தொலைக்காட்சி நடிகராகவும், நகைச்சுவை நடிகருமாகிய இவர் உக்ரைனின் அதிபர்; ஜோசப் எஸ்ட்ராடா,பிலிப்பைன்சில் 100 படங்களுக்கு மேல் நடித்து அந்நாட்டின் 13 வது அதிபரானார்;ஜிம்மி மொரலெஸ், கௌதமாலா நாட்டின் தொலைக்காட்சி நகைச் சுவை நடிகராக இருந்து 2016ல் அதிபராகப் பொறுப்பேற்றார்;

போலந்து நாட்டில் குழந்தை நட்சத்திரமாகப் பிரகாசித்த லெக் கசின்ஸ்கி யும் அவரின் இரட்டைச் சகோதரரான ஜரோஸ்லாவ் கவின்ஸ்கியும் ஒருவர் பின் ஒருவராக ஆட்சி பீடத்தை அலங்கரித்தனர்; தாய்லாந்து நாட்டில் பிரதமராகப் பணியாற்றிய குக்கிரிட் பிரமோஜ் என்பவரும் நடிகரே!

நமது தென்னிந்திய நாட்டில் எம்.ஜி.ஆர்; ஜெயலலிதா; என்.டி.ஆர்., போன்றவர்களும் திரைத்துறையிலிருந்து ஆட்சி அரியணை ஏறியவர்கள். இவர்களின் வழியில் வந்தவர்தான் தற்போதைய தமிழக முதல்வர் மாண்புமிகு ஜோசப் விஜய் என்றாலும், இவரின் வளர்ச்சி அபரிமிதமானது; அனைவரையும் ஆச்சரியப்பட வைத்து அதர்ச்சிக்குள்ளாக்கியது என்றும் சொல்லலாம்.

அரசியலில் புகுந்த மிகக் குறுகிய காலத்திலேயே, குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் ஏக மனதான ஆதரவுடன் எல்லா வயதினரின் வாக்கைப் பெற்று, சுமார் 60 ஆண்டுகள் ஆட்சி செய்த திராவிடக் கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடிப்பது என்பது கற்பனைக்கும் எட்டாத ஒன்று! அதனைச் சாதித்துக் காட்டியுள்ள விஜய், வியப்பான மனிதரே! அந்தக் காலத்தில், மிகப் பெரும் கட்டிடங்கள், கோயில்கள், அரண்மனைகள் போன்றவையின் பிரமாண்டம் மனித சக்திக்கு அப்பாற்பட்டதாகத் தோன்றுகையில், அவற்றை இரவோடிரவாகப் பூதங்கள் கட்டியதாகக் கதை சொல்வார்கள். விஜயும் பூதத்தின் உதவியுடனேயே முதல்வர் ஆகிவிட்டாரோ என்றே எண்ணத் தோன்றுகிறது.

ஏனெனில் தமிழக மக்களால் பெரிதும் அறியப்படாத பலரே இன்று 108 எம்.எல்.ஏ.,க்களாக ஆகி இருக்கிறார்கள். ”நானே 234 தொகுதிகளிலும் நிற்பதாக நினைத்து ஆதரிக்க வேண்டுமென்ற விஜயின் ஒற்றை வேண்டுகோளுக்கு, மக்கள் அளித்த பற்றுதலான ஆதரவு, பலரையும் வியப்பின் உச்சத்திற்கே கொண்டு சென்றுள்ளது. கோலிவுட் என்பது கோடம்பாக்கத்தையே குறிக்கும்.

கோடம்பாக்கத்திற்கும் தலைமைச் செயலகத்திற்குமான தூரம் சுமார் 11 கி.மீ., என்றும், பயண நேரம் 25 முதல் 48 நிமிடங்கள் என்றும் கூறப்படும் நிலையில், இந்தப் பதினொரு கிலோ மீட்டரைக் கடக்க முடியாமல் எத்தனையோ பேர் நடுவில் நின்று போனதையும், சிலர் நெருக்கத்திற்கு வந்தும் அரியணையில் ஏறும் வாய்ப்பின்றி அகன்று போனதையும் சரித்திரம் பதிவு செய்தே வைத்திருக்கிறது.

இதையும் படியுங்கள்:
இந்திரா காந்தி முதல் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வரை: அரசியலை மாற்றியமைத்த மர்மமான ஜோதிட கணிப்புகள்!
TVK Vijay

சரித்திரமே சந்தோஷப்பட்டு செய்தது விஜயின் வெற்றியையாகத்தான் இருக்கும்.கோலிவுட்டிலிருந்து விரைந்து கோட்டையை அடைந்து, அரியணையிலும் அமர்ந்தாயிற்று! இது ட்ரைலர்தான்! இனிதான் மெயின் பிக்சர்! செய்ய வேண்டியதென்னவென்பதைச் சிறிது பார்ப்போமா? -தடாலடி, அதிரடி முடிவுகள் வேண்டாம்! அப்படிப்பட்ட முடிவால்தான் ஜோசியர் குறித்த ஆணை அடி வாங்கிற்று!

லஞ்சத்தை ஒழிப்பதே முதல் வேலை என்றாலும், சுமார் 60 ஆண்டுகளாகப் புரையோடிப்போன புண் அது! மிக லாவகமாகத்தான் அதனை அகற்றவேண்டும். -காமராஜர், அவர் ஆட்சிக் காலத்தில் 9 அமைச்சர்களைக் கொண்டே உயர்வான ஆட்சியைத் தந்தார்!

சிறியதே அழகானது;சிறந்தது (Small is Beautiful) என்பதற் கிணங்க, அமைச்சரவையை அதிகப் படுத்தாதீர்கள்! பல பிரச்னைகளை அது தவிர்க்கும்! -நூற்றுக்கணக்கில் தேர்தல் நேர உறுதிமொழிகள் அளிப்பது வேண்டாம். நிறை வேற்றப்படக் கூடிய, ஏழை, எளியவர்களுக்குப் பயன்தரக்கூடிய சிலவே போதும். -இலவசங்களைக் குறைத்து, ஒவ்வொரு குடும்பமும் தங்கள் சொந்தக் கால்களில் நிற்கும் நிலையை உருவாக்குங்கள்.

அனுபவம் உங்களுக்கு அதிகப்படியான ஐடியாக்களைத் தரும். நல்லதை நினைத்தே அரியணை ஏறியுள்ள உங்களுக்கு நல்லதே நடக்கும்!- நாட்டு மக்கள் ஆசியுடன்! சரித்திரம் மிக நீண்ட பக்கங்களுடன் உங்கள் சாதனைகளைப் பதிவு செய்யக் காத்திருக்கிறது!

logo
Kalki Online
kalkionline.com