பீர்பால் கதை: ஆந்தையின் திருமணச் சீதனம் உணர்த்திய பாடம்!

Akbar Birbal stories
Akbar Birbal stories
கே.என்.சுவாமிநாதன்

பொறியியல் பயின்று அரசுத் துறை, பொதுத் துறை, தனியார் குழுமங்களில் பணி புரிந்து, பின்பு, 15 ஆண்டுகளாக கணிதமும், தர்க்கமும் கற்பித்து வந்தேன்.. கதைகள், கட்டுரைகள், வெளியான இதழ்கள் - தினமலர் வாரமலர், கலைமகள், அமுதசுரபி, , தினமணி, சிறுவர்மணி, கதிர், நம் உரத்த சிந்தனை, மங்கையர் மலர், கொலுசு தீபம், கோகுலம் கல்கி ஆன் லைன். பெற்ற பரிசுகளில் சில தினமலர், கலைமகள், நம் உரத்த சிந்தனை, இலக்கிய பீடம் ஆகியவை. புத்தகங்கள் இரண்டு. கே.என்.சுவாமிநாதன், சென்னை

Updated on
Kalki strip
Kalki strip

பேரரசர் அக்பருக்கு வேட்டையாடுவதில் பிரியம் அதிகம். வேட்டையாடுவதற்கு புதிய காடுகளைத் தேடிச் செல்வார். அரசரின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக, அரசு அதிகாரிகள் கிராமங்களை அழித்து புதிய காடுகளை உருவாக்கத் தொடங்கினார்கள்.

கிராமங்கள் அழிந்து, வாழ்வாதாரங்களை அழிந்த மக்கள் செய்வதறியாது திகைத்தனர். அரசர் மனதை மாற்றி, கிராமங்கள் அழிவதைத் தடுக்க, பீர்பால் ஒருவரால் தான் முடியும் என்று உணர்ந்த மக்கள் அவரைச் சந்தித்து நிலைமையை விளக்கினார்கள். பீர்பாலும் முடிந்த உதவிகள் செய்வதாக வாக்களித்தார்.

ஒரு முறை அக்பர், பீர்பால் மற்றும் அவருக்கு நெருக்கமான பிரபுக்களுடன் வேட்டையாடுவதற்குச் சென்றார். அவர்கள் சென்ற காட்டுப் பாதையில், ஆலமரத்தில் இரண்டு ஆந்தைகள் அமர்ந்து கொண்டிருந்தன. ஆந்தைகள் கத்துவது அவை எதைப் பற்றியோ விவாதிப்பது போல இருந்தது. அக்பர் விளையாட்டாகப் பிரபுக்களிடம். “ஆந்தைகள் ஒன்றுக்கொன்று என்ன பேசிக் கொள்கின்றன என்று உங்களால் கூற முடியுமா” என்று கேட்டார். அதற்கு பிரபுக்கள் “இங்கு இருப்பவர்களில், எல்லாம் அறிந்தவர் பீர்பால் தான். அவர் தான் உங்களுக்கு பதில் கூற முடியும்” என்றனர்.

“என்ன பீர்பால், நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டார் அக்பர்.

தன்னுடைய மனதில் இருப்பதை அரசருக்குச் சொல்ல இது நல்ல சமயம் என்று உணர்ந்தார் பீர்பால். “ஆந்தைகள் பேசிக் கொள்வது என்ன என்று என்னால் சொல்ல முடியும். ஆனால், அரசர் நான் சொல்வதைத் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது” என்றார் பீர்பால்.

“நான் ஏன் உங்கள் மீது கோபம் கொள்ள வேண்டும். உங்கள் மனதில் உள்ளதை நீங்கள் தைரியமாகச் சொல்லுங்கள்” என்றார் அக்பர்.

“இரண்டு ஆந்தைகளும் கல்யாண சம்பந்தம் குறித்துப் பேசிக் கொண்டிருக்கின்றன. ஆந்தைகளில் ஒன்று பெண்ணின் தந்தை. மற்றொன்று பிள்ளையின் தந்தை. பிள்ளையின் தந்தை கல்யாண சீதனமாக 50 காடுகள் வேண்டுமென்று கேட்கிறார். பெண்ணின் தந்தை தற்சமயம் 50 காடுகள் இல்லை. ஆனால், கூடிய சீக்கிரம் 100 காடுகள் கொடுப்பது சாத்தியமாகும் என்கிறார்” என்று சொன்னார் பீர்பால்.

“அது எப்படி முடியும். 50 காடுகள் இல்லாத போது, அவை எப்படி கூடிய சீக்கிரத்தில் இரட்டிப்பாகும்” என்று கேட்டார் அக்பர்.

இதையும் படியுங்கள்:
Akbar and Birbal story: இரும்பு வாள் தங்கமாக மாறுமா?
Akbar Birbal stories

“பெண் ஆந்தையின் தந்தை சொல்கிறார். எங்கள் அரசருக்கு வேட்டையாடுவதில் அலாதிப் பிரியம். காடு காடுகளாகச் சென்று வேட்டையாடுவார். அரசரின் மகிழ்ச்சிக்காக, அரசு அதிகாரிகள் கிராமங்களை அழித்து காடுகளாக மாற்றி வருகிறார்கள். ஆகவே, 100 காடுகளை சீக்கிரமே உருவாக்கி விடுவார்கள்” என்றார் பீர்பால்.

பீர்பால் சொன்னது அரசரை சற்று நேரம் யோசனையில் ஆழ்த்தியது. பின்னர் பீர்பாலிடம் சொன்னார்...

“பீர்பால், புத்திசாகித்தனமாக என்னுடைய தவறை சுட்டிக் காட்டி விட்டாய். ஒரு தனி மனிதனின் மகிழ்ச்சிக்காக மக்களின் வாழ்வாதாரங்களை அழிப்பது தவறு என்று எனக்கு உணர்த்தி விட்டாய். இது இனி தொடராது.”

logo
Kalki Online
kalkionline.com