போம்பழி எல்லாம் அமணன் தலையோடே!

போம்பழி எல்லாம் அமணன் தலையோடே!
Published on

மீபத்தில் ஒடிடில் ‘ன்னா தான் கேஸ் கொடு’ என்ற அருமையான மலையாளப் படத்தைப் பார்த்தேன்.  சாதாரணக் கதைதான்.

ஒரு முன்னாள் சில்லறை திருடன் திருவிழா கச்சேரி முடிந்து வீட்டுக்கு வரும் வழியில் அவசரமாக உச்சா வர, எம்.எல்.ஏ. வீட்டு சுவரின் அருகே ஒதுங்கும் சமயம் ஒரு ஆட்டோ கன்ட்ரோல் இல்லாமல் அவன் மீது மோத வர,  அதிலிருந்து தப்பிக்க எம்.எல்.ஏ. வீட்டு சுவற்றில் ஏறி குதிக்க, எம்.எல்.ஏ. வீட்டு நாய்கள் அவன் பிருஷ்ட பாகத்தைப் பதம் பார்க்க, தனக்கு நேர்ந்த அநியாயத்துக்குக் காரணமான மந்திரியை கோர்ட்டுக்கு இழுக்கிறார். இதைத் தோய்வில்லாமல் சொல்லியுள்ளார்கள்.

குஞ்சாக்கோ போபன், காயத்திரி  போன்றவர்கள் நன்றாக நடித்திருந்தாலும், நீதிபதியாக குன்கிகிருஷ்ணன் மீது ஒரு ஈர்ப்பு உண்டாகிறது. ‘பெட்ரோல் விலை ஏற்றம், நீதிமன்றத்தில் பறக்கும் புறா’ என்று போகிற போகில் பல விஷயங்களை மெலிதான நகைச்சுவையுடன் சொல்லிவிட்டுப் போகிறார்கள்.

இந்தப் படத்தில் ”ஏன் சுவர் ஏறி குதித்தே?”  என்று கேள்வியில் ஆரம்பிக்கிறது கதை. 

அதற்குப் பதில் ஆட்டோ இடிக்க வந்தது. ஆட்டோ ஓட்டுநர் என் ஆட்டோவை வேறு ஒரு வண்டி பின்னாடி தட்டியது அதனால் அப்படி ஓட்டினேன். இடித்த வண்டியோ ஒரு சைக்கிள் காரன் குழியில் விழுந்துவிட்டான் அவன் மீது மோதாமல் நான் ஓட்டினேன்… என்று கடைசியில் குழி மீது பழி விழுகிறது. சரியாக போடாத ரோடு காண்ட்ராக்டர் அதற்குக் காரணமான மந்திரி என்று விசாரணை காட்சிகள் எல்லாம் சுவாரசியமாகக் கையாண்டிருக்கிறார்கள்.

“ஒரு பிரச்னை எதனால் ஏற்படுகிறது” என்று அதன் மூலகாரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். இதை ‘Root Cause Analysis’ என்பார்கள்.  கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்த ‘ஏன், எதற்கு, எப்படி ?’ கேள்விகளைக் கேட்க ஆட்களைச் சம்பளம் கொடுத்து வைத்துள்ளார்கள்.

சுலபமாகப் புரிய வேண்டும் என்றால், உங்களுக்கு டைபாய்ட் காச்சல் வந்தால் ஜுரம் வரும். இதற்குச் சாதாரண பாராசிட்டமால் மாத்திரை எடுத்துக் கொண்டால் தாற்காலிகமாக ஜுரம் சரியாகும். ஆனால், டைபாய்ட் குணமாகாது. டைபாய்ட் வருவதற்கான மூல காரணமான அதன் கிருமிகளைத்தான் அழிக்க வேண்டும்.

இந்த திரைப்படத்தைப் பார்க்கும் போது நம்மாழ்வாரின் திருவாய்மொழி உரையில் வரும் ’போம்பழி எல்லாம் அமணன் தலையோடே’ என்ற வாக்கியம் நினைவுக்கு வந்தது.

அந்தக் கதையும் சொல்லிவிடுகிறேன்.

ஒரு நாள் அரசன் முன் ஒரு பெண்மணி “என் கணவன் இறந்துவிட்டார். நீங்கள் தான் நீதி வழங்க வேண்டும்” என்று கேட்க, அரசன் “அடடா எப்படி?” என்று கேட்க, நேற்று இரவு திருடன் எங்கள் வீட்டுச் சுவரில் கன்னக்கோல் வைத்துத் திருடும்போது வீட்டுச் சுவர் இடிந்து.. என் கணவன் மீது விழுந்து…”

“கூப்பிடு அந்த வீட்டு சொந்தக்காரனை” என்று அரசன் கூற, வி.சொ. ஆஜராகி

“அரசே ! “நான் என்ன செய்வேன். சுவரைக் கட்டிய கொத்தனாரைத் தான் நீங்கள் கேட்க வேண்டும்” என்று கூற, கொத்தனார் “தண்ணீர் அதிகம் ஊற்றிய சித்தாளைக் கேட்க வேண்டும்”, சித்தாளோ ”எனக்குக் கொடுக்கப்பட்ட குடம் பெரியது, நீங்கள் குயவனைத்தான் கேட்க வேண்டும்”, குயவனோ, “நான் என்ன செய்வேன். குடம் செய்துகொண்டிருக்கும் போது ஒரு பெண் அங்கே சென்றாள். கவனம் தப்பிவிட்டது” பெண்மணி, ”துணிகளை வண்ணானிடம் கொடுத்தேன். அவன் துவைத்துத் தர நேரமாகிவிட்டது. அதனால் நானே நடந்து சென்றேன்.

“தாமதித்த வண்ணானைக் கூப்பிடு”

வண்ணான், ”துணிகளைத் துவைக்க ஆறு பக்கம் சென்றேன். படித்துறை  கல்லில் ஓர் அமணன் உட்கார்ந்திருந்தார். அவர் விலகக் காத்திருந்தேன். அதனால் தாமதம்”

அமணனை அழைத்து அவனிடம் கேள்வி கேட்க, அவரோ மௌன விரதத்தில் இருக்க. ''மௌனம் சம்மதம்'' என்று அமணன் தலை போனது.

படத்தில் ‘தமிழ்’ மக்களை இழிவாக பேசுவது போல ஒரு காட்சி ( தேவை இல்லாத ஆணி) வருகிறது.

ஃபேஸ்புக், டிவிட்டர் சிப்பாய்கள் இதை டிரண்டிங் செய்யாமல் இருப்பதற்கு மூலக்காரணம் என்ன ? யோசித்தேன். பலர் இந்தப் படத்தை இன்னும் பார்க்கவில்லை !

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com