அமரர் கல்கி அவர்களின் 125வது பிறந்த நாள் விழா - 'பேனா போராளி கல்கி' ஆவணப்படம் வெளியீடு!
-புகைப்படங்கள்; ஸ்ரீஹரி
அமரர் கல்கி அவர்களின் 125வது பிறந்த நாள் விழா நேற்று (8.9.2024) ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னை அடையாறு டி.என்.ராஜரத்தினம் கலையரங்கில் (முத்தமிழ்ப் பேரவை) விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு சென்னை ஐஐடி மெட்ராஸ் கல்வி நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் வீ.காமகோடி தலைமை தாங்கினார். கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளையின் அறங்காவலர் சீதா ரவி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். இறை வணக்கப் பாடலாக, அமரர் கல்கி எழுதிய 'திரைக்கடல் தூங்காதோ தோழி' என்ற பாடலை கௌரி நடராஜன் பாடினார். இவர் கல்கியின் கொள்ளுபெயர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது. மூத்த பத்திரிகையாளரும் கல்கி அறக்கட்டளை நிறுவனத்தின் அறங்காவலருமான சந்திரமௌலி வரவேற்புரையும் வாழ்த்துரையும் வழங்க, நிகழ்ச்சி இனிதே துவங்கியது.
1996ம் ஆண்டு முதல் கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை, வளர்ந்துவரும் கர்நாடக இசைக்கலைஞர்களுக்கு விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில் இந்த வருடத்திற்கான விருது நாதஸ்வர கலைஞர்களான தேசூர் சகோதரர்கள் - வித்வான்கள் தேசூர் எஸ்.ஷண்முகசுந்தரம், தேசூர் எஸ்.சேதுராமன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இவர்கள் காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலின் ஆஸ்தான வித்வான்கள் ஆவர். இந்த விருதினைப் பெறும் 4வது நாதஸ்வர கலைஞர்கள் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விருதினை காமகோடி வழங்க, தேசூர் சகோதரர்கள் பெற்றுக் கொண்டனர்.
கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை மாணவர்களின் கல்வி உதவிக்கு வருடந்தோறும் உதவி வருகிறது. இந்த வருடம் 124 மாணவர்கள் இதன் மூலம் பயனடைந்துள்ளனர். விருதினைப் பெற்றுக்கொண்ட இசை சகோதரர்கள் விருதுக்கு நன்றி தெரிவித்து, கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளையின் மாணவர்கள் சேவை மென்மேலும் வளர வேண்டுமென்று வாழ்த்தினர்.
அமரர் கல்கியின் 125வது பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக, 'பேனா போராளி கல்கி' என்ற பெயரில் கல்கியின் வாழ்க்கைக் குறித்த ஆவணப்படம் ஒன்று வெளியிடப்பட்டது. பட்டுப் பாரம்பரியத்துக்கு பேர்போன rmkv நிறுவனத்துடன் இணைந்து கல்கி குழுமம் இந்த ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. இது கல்கி ஆன்லைன் யூடியூப் சானலில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆவணப்படம் அமரர் கல்கியின் பன்முகத்தன்மையை வெகு நேர்த்தியாக விளக்குகிறது. கல்கி எவ்வாறு திரு.வி.க. அவர்களால் நவசக்தி பத்திரிகையில் ஊக்குவிக்கப்பட்டது, மதுவிலக்கிற்காக விமோசனம் பத்திரிகையில் பணியாற்றியது, அவர் மூன்று முறைகள் நாட்டின் விடுதலைக்காக சிறைக்குச் சென்றது, ஆனந்த விகடன் பத்திரிகையில் பல்வேறு புதிய முயற்சிகளைக் கையாண்டது, கல்கி பத்திரிகையை தனது நண்பர் சதாசிவத்துடன் இணைந்து தொடங்கியது என்று பல்வேறு தகவல்கள் நிரம்பிய அருமையான குறும்படமாக இது உள்ளது.
பத்திரிகையாளர், சுதந்திர போராட்ட தியாகி, இசை விமர்சகர், திரைப்பட விமர்சகர், தமிழிசை ஆர்வலர், தமிழ் கலைக்களஞ்சிய பங்கேற்பாளர், கவிஞர் போன்ற கல்கி அவர்களின் பன்முகங்கள் காணொளியில் காணக்கிடைக்கின்றன. பெண்கள் முன்னேற்றம், தீண்டாமை ஒழிப்பு, மதுவிலக்கு, பெண்கள் கல்வி, விதவை மறுமணம் போன்ற பல்வேறு குறிக்கோள்களை கல்கி அவர்கள் எவ்வாறு தனது கதைகள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார் என்பது குறித்தும் விவரிக்கிறது. மொத்தத்தில் கல்கியைப் போற்றும் தமிழ் கூறும் நல்லுலகம் காண வேண்டிய காணொளி.
பின்னர், பேசிய காமகோடி அவர்கள் படித்த பெண் வேலைக்குச் சென்று, கணவன் வீட்டை கவனித்துக்கொள்ளும் கருத்தையுடைய கல்கி அவர்களின் 'அருணாசலத்தின் அலுவல்' என்ற கதை தன்னை ஈர்த்தது என்று கூறி, பெண்கள் கல்வியைக் குறித்த கல்கி அவர்களின் சிந்தனையை நினைவு கூர்ந்தார். கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் மற்றும் கல்கியின் பல்வேறு நாவல்கள், கதைகளைத் தான் படித்ததை நினைவு கூர்ந்தார். கல்கி அவர்களின் பெண் கல்வி குறித்த சிந்தனையைக் குறிப்பிட்டு, ஐஐடியில் பெண்களின் சதவீதத்தை அதிகரிக்க எடுக்கப்படும் முயற்சிகள் குறித்துப் பகிர்ந்து கொண்டார். கல்கி பத்திரிகையில் வரும் 'அருள்வாக்கு' பகுதி, தமக்கு ஆன்மிக ரீதியாக பிடித்த பகுதி என்று குறிப்பிட்டார். ஐஐடியில் வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள மாணவர்கள் கல்வி பயில எடுக்கப்படும் முயற்சிகள் குறித்து பகிர்ந்து கொண்டார். வாய்ப்பாட்டில் மிளிர, நாயனத்தை அதிகம் கேட்க வேண்டுமென்று செம்மங்குடி அவர்கள் தன்னிடம் பகிர்ந்ததை நினைவு கூர்ந்து, நாதஸ்வர கலைஞர்களுக்கு விருது கொடுக்கப்பட்டதைப் பாராட்டினார்.
பின்னர் நிகழ்ச்சியில் தேசூர் சகோதரர்களின் நாதஸ்வர கச்சேரி நடைபெற்றது. பல அருமையான பாடல்களை சகோதரர்கள் இசைத்தனர். மல்லாரியுடன் கம்பீரமாகத் தொடங்கியது கச்சேரி. அடையாறு ஜி.சிலம்பரசனும் மயிலை எஸ்.கஜேந்திரனும் தங்கள் தவில் வாசிப்பால் மல்லாரிக்கு மேலும் அழகு சேர்த்துக்கொண்டே இருந்தனர். சஹானா ராகத்தில் முத்துஸ்வாமி தீக்ஷிதரின் கமலாம்பிகாயாம், வராளி ராகத்தில் கா வா வா (பாபநாசம் சிவன்) என்று, சாரம் மிக்க ராகங்களையும் பல விதமான தாளங்களையும் சகோதரர்கள் தேர்ந்தெடுத்து வாசித்தது மிக நேர்த்தியாய் அமைந்தது. சுருக்கமான ராக ஆலாபனைகளிலேயே ராகத்தின் வடிவத்தை சாறு பிழிந்து கொடுத்து கற்பனை ஸ்வரங்களில் அளவாக சாகஸம் காட்டி பளிச்சிட்டனர் சகோதரர்கள்.
கஜேந்திரனின் தவில் வாசிப்பு அவரது ஆழ்ந்த அனுபவத்தைப் பறைசாற்ற, சிலம்பரசனின் வாசிப்பு பாடல் வரிகளை அடியொற்றி பிரகாசிக்க, கச்சேரி நிறைவாக அமைந்தது.
கடைசி பாடல்களாக 'காற்றினிலே வரும் கீதம்' (அமரர் கல்கி இயற்றியது), ‘ஸ்ரீ சக்ர ராஜ சிம்ஹாசனேசுவரி’ ஆகியன மிக இதமாக அமைந்து விழாவுக்கு நிறைவு சேர்த்தன.