1970களின் ஆரம்ப வருடங்கள் என்று நினைக்கிறேன்.
வாரத்தில் ஒரு நாள்... நான், அக்கா, பாட்டி மூவரும் வாசலைப் பார்த்துத் தவித்துக்கொண்டிருப்போம் – எங்களைக் காக்க வைத்திருப்பது கல்கி இதழ். முதலில் அதை எடுத்துப் பொன்னியின் செல்வனைப் படிக்க வேண்டும் என்ற வெறி.
நான் படித்த பல நூறு தமிழ் மற்றும் ஆங்கில நாவல்களில் பொன்னியின் செல்வன் முதல் மூன்று இடங்களில் கண்டிப்பாக இருக்கும். எனக்கு மட்டும் அல்ல, பல பேருக்கு அப்படித்தான் என்று நான் உறுதியாக சொல்வேன்.
அப்படி என்னதான் இருக்கிறது பொன்னியின் செல்வனில்? என்று கேட்பவர்களுக்கு என் எதிர்க் கேள்வி:
என்னதான் இல்லை பொன்னியின் செல்வனில்?
ஒரு சரித்திர நாவலுக்கு வேண்டிய ஆராய்ச்சி – கல்கி அவர்கள் எப்பேற்ப்பட்ட ஒரு உன்னதமான, நேர்மையான படைப்பாளி என்பது இந்த நாவலில் உள்ள சரித்திர-நெருக்கத்தில் புலப்படும்.
நாவலுக்கு வேண்டிய வர்ணிப்பு - எழுத்து (டிஸ்க்ரிப்டிவ் ரைட்டிங்). காவிரி நதியாகட்டும், தஞ்சை நகரமாகட்டும், நாகப்பட்டினம் புத்தர் கோயிலாகட்டும், பொங்கியெழும் கடலாகட்டும், பற்றி எரிந்து மூழ்கும் கப்பலாகட்டும்... இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
விறுவிறுப்பு – 2,500 பக்கங்கள் கொண்ட நாவலைக் கொஞ்சம் கூடத் தொய்வு இல்லாமல் கொண்டு செல்வது, அசாத்தியமானது. நான் இந்தத் தொய்வின்மையைப 2-3 நாவல்களில் மட்டும்தான் (அதுவும் 1,000 பக்கங்கள் கொண்டவை) பார்த்திருக்கிறேன்.
கதாபாத்திரங்கள் – ஆஹா.. யாரைப் பற்றிச் சொல்வது, யாரை விடுவது.. கல்கி அவர்கள், ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நமது மனதில் ஒரு பதிவை, ஒரு பாதிப்பை செய்ய வைக்கிறார். ப்யூர் ஜீனியஸ்!!
பொன்னியின் செல்வனைப் பற்றி முழமையாக எழுத வேண்டுமென்றால் 100 பக்கங்களாவது வேண்டும்.
கீழ்க்கண்ட பகுதியை ஒரு ஸாம்ப்பிளுக்காகத் தருகிறேன் – இந்த மாதிரி ஒரு காதல் காட்சியை உன்னதமாக எழுத முடிந்தவர் மிக மிகச் சிலரே.
இளையபிராட்டி அப்போது தன்னுடைய திருக்கரத்தை நீட்டினாள். இது கனவா, நனவா என்ற தயக்கத்துடன் வந்தியத்தேவன் அந்த மலர்க்கரத்தைத் தன் இரு கைகளாலும் பற்றிக் கண்களில் ஒற்றிக் கொண்டான். அவனுடைய உள்ளமும் உடம்பும் பரவசமடைந்தன.
“வாணர் குலத்து வீரரே! கற்பென்னும் திண்மையைக் குலதனமாகப் பெற்ற பழந்தமிழ் மன்னர் வம்சத்தில் வந்தவள் நான். எங்கள் குலத்து மாநகரில் சிலர் கணவனுடன் உடன் கட்டை ஏறியதுண்டு. பதியின் உடலை எரித்த தீயைக்குளிர்ந்த நிலவென்று அவர்கள் கருதி அக்கினியில் குதித்தார்கள்.!”
“கேள்விப்பட்டிருக்கிறேன், தேவி!”
“உமது கரத்தைப் பற்றிய இந்த என் கரம் இன்னொரு ஆடவனுடைய கையை ஒரு நாளும் பற்றாது…”
வல்லவரையன் சொல்லிழந்து செயலிழந்து குந்தவையின் கண்ணீர் ததும்பிய கண்களைப் பார்த்த வண்ணம் மதியும் இழந்து நின்றான்.
வாழ்க பொன்னியின் செல்வன்!
வாழ்க கல்கி அவர்கள்!