அசத்தும் இளைஞர் காமராஜ்

அசத்தும்  இளைஞர் காமராஜ்
Published on

கா. சு.வேலாயுதன்

எம்.சி.ஏ. படித்தவர் குன்னுடையான் உடுக்கடி கதை பாடுகிறார்.

எம்.சி.ஏ. மற்றும் கம்யூட்டர் கோர்ஸ் படித்தவர்கள் ஐடி கம்பெனிகளின் வேலைக்குப் போவார்கள், லட்சம், லட்சமாய் சம்பளம் வாங்குவார்கள். அல்லது தாங்களே ஒரு ஐடி கம்பெனியை நிறுவி கோடி, கோடியாய் வருவாய் ஈட்டுவார்கள். கூடவே பல நூறு ஆயிரம் பேருக்கு வேலை கொடுத்து லட்ச லட்சமாய் சம்பளமும் தருவார்கள். ஆனால், திருப்பூர் மாவட்டம் அவிநாசிலிங்கம் பாளையத்தைச் சேர்ந்த 29 வயது இளைஞர் காமராஜ் எம்சிஏ படித்துள்ளார், கூடவே சில கம்ப்யூட்டர் கோர்ஸ்களும் படித்துவிட்டு உடுக்கடிக் கதைப்பாட்டு வடிவமான அண்ணன்மார்சுவாமியை கதையை கோவை கிராமங்கள்தோறும் உடுக்கடித்துப் பாடி வருகிறார்.

புராணக் கதைகளை நாட்டுப்புறங்களில் பரம்பரை பரம்பரையாய் நிகழ்த்தி வருவதில் ஏதும் அதிசயமில்லைதான். இவரோ அப்படி பரம்பரை வழி வந்தவர் அல்ல. தனக்குள் சுயம்புவாய் உருவானது இந்தக் கலை என்கிறார். அது மட்டுமல்ல, தன்னுடன் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவனை பெண்வேடமிட்டுப் பின்பாட்டுப் பாடுபவராகவும் உருவாக்கியிருக்கிறார்.

இவரைப் பற்றி தெரிந்து கொள்ளும் முன்னர் இந்த அண்ணன்மார்சுவாமி கதையைப் பற்றிய சுருக்கம் தெரிந்து கொள்வது அவசியம்.

மகாபாரதக் கதையில் பஞ்சபாண்டவர்கள் சொர்க்கம் சென்று சேர்ந்தபின்னர் அவர்களுக்கு மீதியிருந்த ஆயுள் பதினாறு வருடங்கள். அந்த எஞ்சியுள்ள ஆயுளை மாயவர் தயவால் சிவபார்வதி வழங்கிட பிறந்தவர்கள் பொன்னர் சங்கர். தாமரை நாச்சிக்கும், குன்னுடையார் கவுண்டருக்கும் நீண்டகாலம் பிள்ளையில்லாமல் தவசு மலையேறி தவமாய் தவமிருந்து மாயவர் தயவால் சிவபார்வதி அருளால் மேற்படி தம்பதிக்கு பொன்னர் சங்கருடன் அருக்காணித் தங்கமும் மகவாய் பிறந்தனர். இவர்கள் பதினாறு ஆண்டுகள் சீரும் சிறப்புமாய் வாழ்ந்து தலையூர்க்காளி என்பவருடன் போர்தொடுத்து வீரமரணம் எய்தி விண்ணகம் சென்று சேர்வது கதை.

இப்படியான புராணக்கதை கொங்கு மண்டலம் எனப்படும் கோவை கிராமங்களில் பிரசித்தம். டீவி, சினிமா, நாடகம், கலைக்கூத்துகள் எல்லாம் வராத காலத்திலேயே உடுக்கடிப் பாடல் வழியே பாடப்பெற்று வந்த கதை இந்தக் குன்னுடையான் கதைப்பாட்டு. தொடர்ந்து 30 நாட்கள் நிஜக்காட்சி போலவே மக்களை திரட்டி நடக்கும் இந்த கலைவடிவம் 50 ஆண்டுகளுக்கு முன்னிருந்தே மெல்ல மெல்ல அருகி காணாமலும் போகும் நிலையடைந்திருந்தது.

இந்த வாய்மொழிப் பாட்டுக்தையை கவிஞர் சக்திக்கனல் அண்ணன்மார்சுவாமி கதை, மசைச்சாமி குன்றுடையான் என்ற தலைப்புகளில் நூலாக எழுதியுள்ளார். இதை அடியொற்றி பலர் இந்த நூலை எழுதியுள்ளனர். குறிப்பாக கலைஞர் மு.கருணாநிதியின் ‘பொன்னர் சங்கர்’ கதை இதைத் தழுவியதுதான்.

அப்படியான கதைப்பாட்டை இப்பொதெல்லாம் ஊர்தோறும் மூத்தோர் சிலர் மீட்டெடுத்து வருகின்றனர். கிராமந்தோறும் அவை நிகழ்த்தப்பட்டும் வருகிறது. அதை நிகழ்த்துபவர்கள் பெரும்பாலும் பரம்பரை, பரம்பரையாய் கதைப்பாட்டு பாடி வந்தவர்கள். அல்லது 40- 50 வயதானவர்கள். ஆனால், இப்போது நாம் பார்க்கும் காமராஜ் எம்சிஏ மற்றும் பிஜிடிசிஏ கம்யூட்டர் கோர்ஸ் படித்த 29 வயது இளைஞராக இருந்தார்.

இவர், சமீபத்தில் திருப்பூர் மாவட்டம் அவிநாசி நம்பியாம்பாளையம் கிராமத்தில் 48 நாட்கள் இந்தக் கதைப் பாடலை நிகழ்த்தினார். அதில் பிள்ளை வரும் வேண்டி குன்னுடையான் கவுண்டர் - தாமரை நாச்சி தவசுக் கம்பம் ஏறி தவம் இருப்பதும், மாயவர், சிவன் தோன்றி பிள்ளை வரம் அளிப்பதும் நடந்தது. அந்த சமயம் நள்ளிரவில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களுக்கும் பிள்ளை வரம் வேண்டி மடியேந்தி நின்ற காட்சி பார்ப்போர் நெஞ்சை கரைய வைத்தது. பெண்கள் பலர் கண்ணீர் விட்டு அழுதனர். இந்த நிகழ்ச்சி முடிந்ததும், இதை நடத்திய காமராஜ் குழுவை “கல்கி”க்காக சந்தித்துப் பேசினோம்.

‘‘எனக்கு சின்னவயசிலிருந்தே மாரியம்மன் சாமி மேல நல்ல பிரியம். சாமி பக்தியும் மிகுதி. கோயிலுக்குப் போறதோட, சாமிக்குப் பூஜை எல்லாம் செஞ்சுட்டு வருவேன். அந்த சமயத்தில் பழைய கால கிராமியக்கலைகள் மேல தனியான ஆர்வம் இருந்துட்டே இருந்தது. என் நோக்கமே இந்த மாதிரி கிராமிய நாட்டியக் கலைக்குப் போகணும்ன்னு அதில் எல்லாம் ஈடுபட்டுட்டு வந்தேன். எனக்கு இருபது வயசு ஆகற போது இந்த அண்ணன்மார்சுவாமி கதைப் பாட்டு ஒரு ஊர்ல பாடறவங்களை கவனிச்சேன். அது மாதிரி நம்மளும் பண்ணோனும்ன்னு வீட்லயே உடுக்கை வாங்கி அடிச்சுட்டு சொந்தமா ஆடிப் பார்த்துட்டிருந்தேன். அப்பவே இந்தக்கலையை எடுத்து ஆடணும். இந்தக் கலையை நிகழ்த்தினவங்களைப் போய் பார்ப்பேன். எல்லாம் வயசானவங்களா இருந்தாங்க. இப்படியே இது விட்டா அழிஞ்சு போகும்ன்னு தோணுச்சு. அப்படி விடக்கூடாது; நாமளே இதை ஆடிப்பாடி காப்பாத்தணும்ன்னு முடிவு செஞ்சு நான் கும்பிடற மாரியம்மன் சாமியை நினைச்சுட்டு அப்பப்ப நிகழ்த்தினேன். வீட்லயும் சரி, கோயிலுக்குப் போயிருக்கும்போதும் சரி, இதைப் பாடி செலவிட்ட நேரம் நிறைய. கோயிலுக்குப் போனேன்னா இரண்டு மணி நேரம் மூணு மணி நேரம் தன்னைப் போல நான் விடாம பாட ஆரம்பிச்சுடுவேன். இதுக்குன்னு நான் எந்தக் குருமாரும் வச்சுக்கலை. உடுக்கையடிக்கறது கூட யாரும் எனக்கு சொல்லிக் கொடுக்கலை. மத்தவங்க செய்யறதைப் பார்த்து அப்படியே நான் கத்துக்கிட்டதுதான். அப்படி உடுக்கடிச்சு நான் பாடறதைப் பார்க்கறவங்க பரவசம் ஆனாங்க. அருள் வந்து ஆடினாங்க. அப்படி இந்த நாலஞ்சு வருஷத்தில் மட்டும் பத்துக்கு மேற்பட்ட ஊர்ல ஒரு வாரம் முதல் 48 நாள் ஒரு மண்டலம் வரை இந்த உடுக்கடிக் கதைப்பாட்டை நடத்தியிருக்கிறேன்!’’ என்றார்.

படித்த படிப்புக்கு இதுவரை எந்த வேலைக்கும் போனதில்லையா என்று கேட்டற்கு...

‘‘இந்தப் படிப்புக்கு ஐடி கம்பெனியில் வேலை செய்யலாம். அப்படி போயும் இருக்கேன். ஆனா, இந்தக் கலை எப்பவுமே இரவு நேரங்களில் நிகழ்த்துவது, விடிய, விடிய அதை நிகழ்த்தி விட்டு மறுபடி போய் கம்பெனியில் வேலை செய்வது கடினம். அப்படி வேலைக்குப் போனா இந்தக் கலையை நடத்தவே முடியாதுன்னு வேலையை விட்டுட்டேன். அடுத்தது சொந்தமா ஒரு தொழிலை பண்ணிட்டே செய்யலாம்ன்னு அதையும் செஞ்சு பார்த்தேன். அப்பவும் அந்த தொழிலை இது மேல இருக்கிற மோகத்தினால் செய்ய முடியலை. அதனால முழு நேரமாக ஒரு வருஷமா இது மட்டும்தான் செஞ்சுட்டு வர்றேன்..!’’ என்றவரிடம், ‘இந்தக் கதைப்பாட்டு எத்தனை நாள்தான் நடத்தறீங்க? ஓர் இடத்தில் ஒரு நாள் நடக்குது. சில இடங்களில் ஒரு மாசம் நடக்குது?’’ என்று கேட்டோம்.

‘‘இது முழுக்கதையும் படிக்கணும்ன்னா 48 நாள் தொடர்ந்து பண்ணனும். அப்படித்தான் இதுவரைக்கும் ஐந்து ஊர்ல பண்ணியிருக்கேன். சில ஊர்ல 30 நாள், ஒரு வாரம் கூட கேட்பாங்க. அதை ஒண்ணு ரெண்டு இடத்துல செஞ்சு கொடுத்திருக்கேன். அதையெல்லாம் தாண்டி இதை முழுமையா பாடி முடிக்க 60 நாள் வேணும். ஒரு ஊரில் எந்த அளவு வரவேற்பு இருக்கோ, அதுக்குத் தக்கபடி இதை மாற்றிக் கொள்கிறோம்!’’

இந்தக் கதைப்பாட்டு படிக்கும்போது குன்னுடையார் பிள்ளை வரம் கேட்கும்போது ஊரில் உள்ள பிள்ளையில்லா பெண்கள் எல்லாம் இங்கே கூடி வரம் கேட்டு நிற்கிறார்கள். அப்படி நிற்பவர்களுக்கு செல்லாண்டியம்மன் பிள்ளை வரம் தருவதாக ஐதீகம். அதேபோல் ‘பொன்னர் சங்கர்’ பிறக்கும்போது தொட்டில் தாலாட்டு நடக்கிறது. தாமரை கருவுற்றிருக்கும்போது சீமந்தம் நடக்கிறது. பொன்னர் சங்கர் திருமணமும் தத்ரூபமாக நடக்கிறது. படுகளம் என்னும் போர்க்களத்தில் அத்தனை பேர் இறந்து கிடப்பதும் தத்ரூபமாய் காட்சியமைத்து நடத்துகிறார்கள். இதற்கெல்லாம் லட்சக்கணக்கில் செலவாகிறது. அதற்காக ஊர் பெரிய மனிதர்கள் ஒரு தொகை கொடுக்கிறார்கள். மற்ற செலவுகளுக்கும் ஊர்க்காரர்களே ஸ்பான்சர் பிடித்துத் தருகிறார்கள். தவிர, நிகழ்ச்சி நடக்கும்போது பொதுமக்களும் அவரவரால் இயன்ற தொகை கொடுத்து உதவுகிறார்கள்.

‘‘எங்களுக்கு வருமானம் முக்கியமில்லை. இந்தக் கலையை நம் வாழ்க்கை போனாலும் பரவாயில்லை. காப்பாற்ற வேண்டும்ன்னு நடத்திட்டு வர்றோம். ஆனா இதுவரைக்கும் கை நட்டப்படும் நிலை வந்ததேயில்லை. இதை நடத்துவதற்கு அம்மன் அருளால எப்படியாவது தொகை வந்துடுது!’’ என்கிறார் காமராஜ்.

இவருடன் இருந்த பெண் வேடமிட்டவரின் கதை தனி. அவர் ஒரு கிராமத்தின் கோயில் திருவிழாவில் பெண் வேடமிட்டு நடனமாடியதை பார்த்திருக்கிறார். அவரை உடன் துணைக்கு நிறுத்தி பின்பாட்டு மட்டும் பாடுமாறு பணித்திருக்கிறார். அவர் சிறப்பாக செய்ய, இவருடனே ஐக்கியமாகி விட்டார். அதேபோல் பெண் வேடமிட்ட சிறுவன் ஒருவன். சங்கர் என்பது அவன் பெயர். காமராஜ் பாட்டுப்பாடும் வைபவத்தில் எல்லாம் கலந்து கொண்டு இவரைப் போலவே உடுக்கடித்துப் பாட ஆரம்பித்திருக்கிறான். அவனையும் பின்பாட்டுப் பாடுபவனாக வைத்திருக்கிறார். அவன் படிப்புக் கெட்டுப் போகும் என்று விரட்டி விட்டும் கூட, இந்தப் பாட்டுப் படிக்காமல் இருந்ததில் உடல்நிலை சரியில்லாமல் போனதாம். அதனால் அவன் தாய் தந்தையரே என் பிள்ளை நன்றாக இருந்தால் போதும் என்று இவரிடமே சேர்த்து விட்டனராம். அதனால் அவன் பள்ளிக்கூடம் போய்க் கொண்டே இவர்களுடனும் பாட்டுப் படிக்க வந்து விடுகிறானாம். இவர்களின் குன்னுடையான் கவுண்டன் கதை நிகழ்வுகளில் இந்த சங்கர்தான் ரொம்ப பிரபலம். அத்தனை பேரும் இவனையே அழைத்து உச்சி மோந்தார்கள்.

காமராஜ் ஆச்சர்யமான இளைஞர் மட்டுமல்ல, அவரின் டீமே ஆச்சர்யகரமானதுதான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com