“அணையா விளக்கு ” என்ற அந்தக் கட்டுரையின் ஒரு பகுதியை நேற்று பார்த்தோம்; இங்கே மீதி : | கலைஞர் 100

கலைஞரும் கல்கியும்
“அணையா விளக்கு ” என்ற அந்தக் கட்டுரையின் ஒரு பகுதியை நேற்று பார்த்தோம்; இங்கே மீதி : | கலைஞர் 100
Published on

கலைஞரின் நூற்றாண்டுவிழாவினை ஒட்டி கல்கி இதழின் 80 ஆண்டு கால களஞ்சியத்தில் இருந்து நமது நிருபர் எஸ். சந்திர மௌலி மூழ்கி எடுத்த முத்துக்களின் தொகுப்பு.

தமிழக வரலாற்றில் கடந்த பல தசாப்தங்களாக ஒரு அசைக்க முடியாத அரசியல் சக்தியாக விளங்கியவர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி.

16.08.2018 அன்று அவர் மறைந்தபோது, அகில இந்திய அளவில் அரசியல் தலைவர்கள் அவருக்கு புகழஞ்சலி செலுத்தினார்கள். 19.08.2018 இதழ் கல்கியில் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் பத்திரிகையாளர் இரா. சரவணன் எழுதிய ஒரு அட்டைப் பட அஞ்சலிக் கட்டுரை வெளியானது.

“அணையா விளக்கு” என்ற அந்தக் கட்டுரையின் ஒரு பகுதியை நேற்று பார்த்தோம்; இங்கே மீதி :

சில மாதங்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் துரைமுருகனுடன் பேசிக் கொண்டிருந்தேன். பேச்சுவாக்கில் “இந்நேரம் கலைஞர் மட்டும் ஆக்டிவாக இருந்திருந்தால் எடப்பாடி ஆட்சியைத் தூக்கி வீசியிருப்பார் அல்லவா?” என்றேன். அதற்கு துரைமுருகன், “ஜெயலலிதா அப்போலோவில் அட்மிட்டாகி இருந்தபோதே கலைஞர் எங்களை அழைத்துப் பேசினார். குறைந்த எம்.எல்.ஏ.க்கள் அளவிலேயே வித்தியாசம் இருப்பதால் உட்கட்சிக் குழப்பமாகி நம் ஆதரவைத் தேடி சிலர் வரக்கூடும். ஆனால், எக்காரணம் கொண்டும் இந்த நேரத்து இக்கட்டையும் நெருக்கடியையும் பயன்படுத்திக் கொள்கிறவர்களாக நாம் இருக்கக் கூடாது. ஒருவேளை ஜெயலலிதாவைக் காப்பாற்ற முடியாத நிலை வந்தாலும், அதனையொட்டி நடக்கிற எவ்விதச் சூழலையும் நமக்குச் சாதகமாக்கிக் கொள்ளக் கூடாது எனச் சொன்னார் தலைவர்.

அ.தி.மு.க.வில் நிலவும் இக்கட்டைப் பயன்படுத்தி இந்த ஆட்சியைத் தூக்கி வீச சில நாட்கள்கூட ஆகியிருக்காது. ஆனால், தலைவரின் வார்த்தைகளைக் காப்பாற்றுபவராக ஸ்டாலின் இருப்பதால்தான் இந்த ஆட்சி இன்னமும் நீடிக்கிறது” என்றார். அரசியலில் கிடைக்கிற நூலிழை வாய்ப்புகளைக்கூட வசப்படுத்திக் கொள்ள நினைக்கிற தலைவர்களுக்கு மத்தியில், எதையும் சாமர்த்தியப்படுத்தி சாதித்துக் கொள்ள எண்ணாதவர் கருணாநிதி.

33 வருடங்களுக்கு முன்னரே ‘ஓய்வெடுக்காமல் உழைத்தவன், இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ என தனது கல்லறை வாக்கியத்தைத்

தானே எழுதிக்கொண்ட தலைவன் அல்லவா கருணாநிதி. அதே வாக்கியத்துடன் அண்ணாவுக்கு அருகில் அணையா விளக்காக வீற்றிருக்கிறார் காலத்தால் வெல்ல முடியாத கம்பீரத் தலைவன்.

தமிழக அரசியலில் தவிர்க்கவே முடியாத ஆகச்சிறந்த ஆளுமையான கருணாநிதிக்கு அண்ணா சமாதியில் தாமாகவே இடம் ஒதுக்கி தமிழக அரசு பெருந்தன்மை காட்டியிருக்கலாம். அரசு மறுத்ததை நீதி நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறது. எதையுமே போராடிப் பெற்ற தலைவன், தான் துயில் கொள்ளும் இடத்தையும் போராடியே பெற்றிருக்கிறான்!

****************************

19.08.2018 இதழில் அஞ்சலிக் கட்டுரையோடு தலையங்கம் மூலமாகவும் கலைஞருக்கு அஞ்சலி செலுத்தி கௌரவித்தது. “மாமனிதருள் மாபெரும் மனிதர்” என்ற கல்கி தலையங்கம் பின்வருமாறு:

மாமனிதருள் மாபெரும் மனிதர்!

ஒரு துறையில் பெரிய சாதனை படைத்தால் மாமனிதர் என்று சொல்லுவோம். கலைஞர் கருணாநிதியோ மாமனிதர்களுள் மாபெரும் மனிதர். ஒரு துறை அல்ல.. மூன்று துறைகளில் மகத்தான சாதனைகளைப் புரிந்தவர்

திரைப்படத்துறையில் சீர்திருத்தக் கருத்துகளைப் புகுத்திய முன்னோடி, பராசக்தி, மனோகரா போன்றவை திரையுலகில் திருப்புமுனையாக அமைந்த படங்கள். சமுதாய மாற்றங்களுக்கு அவை பெரிதும் உதவின.

சமீபகாலத்தில் தொலைக்காட்சியிலும் காலூன்றி வெற்றி கண்டவர். அரசியலில் பெரியாரிடம் பயின்று அண்ணாவிடம் பண்பட்டவர். அடிப்படையில் நாத்திகக் கொள்கை கொண்டவர். ஆயினும் ஆத்திக அன்பர்களை நண்பர்களாகப் பெற்றவர். அண்ணாவுக்குப் பிறகு யார் என்ற கேள்வி எழுந்த போது, கருணாநிதியா, நெடுஞ்செழியனா என்ற நிலையில் ‘இதோ தான் இருக்கிறேன்' என்று முதலிடத்திற்கு வந்தவர் கருணாநிதி. உறுதியான முடிவு எடுக்கக் கூடியவர். எடுத்த முடிவில் உறுதியாக நின்றவர்.

அவரை அரசியல்வாதி என்று குறிப்பிடுவதைக் காட்டிலும் அரசியல் ஞானி என்று சொல்வதே பொருந்தும், பதவிக் காலத்தில் அவர் சாதித்தவை எண்ணிலடங்கா. எதிர்க்கட்சியினரை எதிரிகளாக அவர் கருதியதில்லை.

விமர்சனங்களை வரவேற்று. தெளிவான பதில்களை அளித்த உண்மை ஜனநாயகவாதி. சாமானிய நிலையிலிருந்து உயர்ந்த நிலைக்குப் போனாலும் பண்பாடு மறக்காதவர் எல்லோரையும் சமமாக பாவிக்கும் எண்ணம் கொண்டவர். எல்லோரும் அணுக முடிந்த ஓர் எளிய மனிதர்.

குடும்பம்-அரசியல் என இருவேறு குழல்களை சாமர்த்தியமாகக் கையாண்டவர். அவருடன் பழகும் எல்லோருக்கும் அவரிடம் ஒரு நெருக்கம் ஏற்படுவதை உணர முடியும். சகஜமாகப் பேசி, சகோதரப் பாலம் அமைத்திடுவார்.

நான்கு தலைமுறையினரைத் தமது பல்வேறு ஆற்றல்களால் வியக்கவைத்தார் கலைஞர். அரசியல் கூட்டமாயினும், இலக்கிய சங்கமாயினும் அவையினரை பிரமிக்கச் செய்யும் விதத்தில் சொற்பொழிவாற்றுவார். பண்டை

இலக்கியத்திலும் நவீன இலக்கியத்திலும் ஒரே அளவில் ஈடுபாடு கொண்டு பிரகாசித்த இன்னொருவரைக் காண்பது அரிது.

திருக்குறளுக்கு உரை எழுதினார். தொல்காப்பியப் பூங்கா படைத்தார். 'ரோமாபுரிப் பாண்டியன், பொன்னர் சங்கர்" என சரித்திரத் தொடர்களிலும் புகழ் பெற்றார். கர்நாடக சங்கீதத்தின் நுணுக்கங்களை அறிந்து கலைஞர்களைப் போற்றினார். அதே ஆர்வத்துடன் கிரிக்கெட் ஆட்டத்தையும் ரசிப்பார்.

மது விலக்கைத் தளர்த்தியது போன்ற சிற்சில குறைகள் அவர் மீது சுமத்தப்பட்டன. மனிதன் என்றால் சில குறைகள் இருக்கத்தானே செய்யும். சூரியன் உதயமானால் நிழலும் வரும்தானே. அந்தக் குறைகளெல்லாம் நிழல் போல் மறக்கப்பட்டு அரசியல் - இலக்கியம் - திரைப்படம் என மூன்று துறைகளிலும் உதயசூரியனாகவே என்றென்றும் ஜொலித்துக் கொண்டிருப்பார் கலைஞர் கருணாநிதி,

கல்கி 19.08.2018 இதழில் இருந்து

தொகுப்பு: எஸ். சந்திர மௌலி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com