அண்ணல் காந்தியின், ‘தமிழ் ஹரிஜன்’ நூல் தொகுப்பு!

அண்ணல் காந்தியின், ‘தமிழ் ஹரிஜன்’ நூல் தொகுப்பு!
Published on

பாரத தேசத்தின் விடுதலைக்கு வித்திட்ட மகாத்மா காந்தியடிகளின் உள்ளத்தை உணர்த்தும் காலக் கண்ணாடியாகத் திகழ்ந்தது, ‘ஹரிஜன்’ வார இதழ். காந்தியடிகளால் தொடங்கப்பட்ட இந்த இதழ், தமிழிலும் வெளிவந்தது என்பது பலரும் அறியாத வியப்பான ஒன்றாகும்.

காந்தியப் பணியின் பெருமை மிக்க அத்தியாயம் ஒன்று இதழ் வடிவில், அதிலும் தமிழிலும் வெளிவந்துள்ளது எனப் பெருமையோடு குறிப்பிடலாம். ‘தமிழ் ஹரிஜன்’ வார இதழ் காலத்தின் ஆவணம் மட்டுமல்ல, காந்தியக் கொள்கையின் கடைசி காலகட்ட வரலாறு என்று கூட இதைக் குறிப்பிடலாம். மனித குலத்தில் உதித்து மாமனிதனாக வாழ்ந்து முடித்த ஒரு மகாத்மாவின் வாழ்க்கை சித்திரம் இதுவென்றால் அதில் சிறிதளவும் ஐயமில்லை.

‘தமிழ் ஹரிஜன்’ இதழில் வெளியான அரும் பெரும் காந்திய சிந்தனைகள் பெரும்பாலானவர்களால் மறக்கப்பட்ட நிலையில், அதைத் தேடிப் பிடித்து அதற்கு வெளிச்சம் கொடுத்து இருக்கிறார்கள் கிருங்கை சேதுபதியும் அவரது இளவல் அருணன் கபிலனும். காந்தியடிகளின் அனுமதியுடன் 1946 தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் தனது பயணத்தைத் தொடங்கிய தமிழ் ஹரிஜன் வார இதழ், அண்ணலின் அமரத்துவம் வரை தொடர்ந்து வந்திருக்கிறது. ராஜாஜி தலைமையில் காந்திஜியே, ‘தமிழ் ஹரிஜன்’ இதழைத் தொடங்கி வைத்து இருக்கிறார். 1946ல் ஹரிஜன் இதழின் தமிழ்ப் பதிப்பை வெளியிட சென்னை இந்தி பிரசார சபைக்கு வருகை தந்தார் மகாத்மா காந்தியடிகள். அந்த நிகழ்ச்சியில் ராஜாஜியும் கல்கியும் சின்ன அண்ணாமலையை அறிமுகப்படுத்தி, ‘ஹரிஜன்’ இதழை இவரே வெளியிடுவார் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

அந்த நிகழ்ச்சியில் காந்தியடிகள் தம் கைப்பட, ‘தமிழ் ஹரிஜன்’ என்று தமிழில் எழுதி சின்ன அண்ணாமலையிடம் வழங்கினார். எட்டு பக்கங்கள் கொண்ட இந்த இதழுக்கு நாமக்கல் கவிஞரும் திருகூட சுந்தரம் பிள்ளையும் ஆசிரியர்களாகத் திகழ்ந்தனர். தமிழ்ப்பண்ணை வெளியீடாக வந்த தமிழ் ஹரிஜன் இதழுக்கு நிர்வாக ஆசிரியராக இருந்தார் அண்ணாமலை.

ந்நிலையில் தற்போது, 1946 ஏப்ரல் முதல் 1947 ஏப்ரல் வரை ஓராண்டு, அதாவது 52 வாரங்கள் தமிழ் ஹரிஜன் இதழில் வெளியான அனைத்து விஷயங்களும் முழுத் தொகுப்பாக தொகுக்கப்பட்டு, ‘தமிழ் ஹரிஜன்’ என்ற தலைப்பிலேயே முல்லை பதிப்பகத்தின் சார்பில் வெளிவந்திருக்கிறது. 1008 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தின் விலை 1500 ரூபாய் மட்டுமே.

அண்ணல் காந்தியடிகளின் தொலைநோக்குப் பார்வை, மனித நேயம், எந்தப் பிரச்னை குறித்தும் அவருக்கு இருந்த தெளிவான நோக்கு, உலகின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் காந்தியம் மட்டும்தான் தீர்வாக இருக்க முடியும் என்பதை இந்தப் புத்தகம் உறுதிப்படுத்துகிறது. அதுமட்டுமின்றி, தீண்டாமை, மொழிக் கொள்கை, மத நல்லிணக்கம், பொருளாதாரம், தேசிய மயமாக்கல், மதுவிலக்கு, இறைப்பற்று, அஹிம்சையின் தாத்பரியம் என்று காந்தியடிகள் கொண்ட கருத்துக்களை எல்லாம் இந்த நூல் எடுத்துக் கூறுகிறது.

இந்நூலில் இடம் பெற்றிருக்கும், ‘ராமராஜ்யம்’ குறித்த கேள்விக்கு அண்ணல் காந்தியடிகளின் பதில் பொட்டில் அறைந்தாற்போல் உள்ளது. “ராம ராஜ்யத்தை முஸ்லிம்கள், ‘குதாய் ராஜ்யம்’ என்றும் கிறிஸ்தவர்கள், ‘கர்த்தருடைய ராஜ்யம்’ என்றும் கொள்ள வேண்டும்” என்று அவர் பதில் அளித்திருப்பது அவரது சாதுர்யத்தையே காட்டுகிறது.

நூல் கிடைக்குமிடம்: முல்லை பதிப்பகம், 323/10, கதிரவன் காலனி, அண்ணாநகர் மேற்கு, சென்னை – 600 040. தொலைபேசி: 9840358301.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com