ரஞ்சனி புடவைக் கடையில் நுழைந்ததுமே சங்கீதா ஓடி வந்தாள்.
“அத்தை வந்தாச்சு.......நீங்க தான் எனக்கு முகூர்த்தப் புடவை செலக்ட் பண்ணித் தரணும்” என்றாள்.
அழகிய கண்கள் படபடக்க மணப்பெண் ஆகப் போகிற சங்கீதா மகிழச்சியுடன் ரஞ்சனியை கட்டிக் கொண்டாள்.
“என்னம்மா இவ்வளவு லேட்? நீ வராம சங்கீதா புடவை செலக்ட் பண்ண மாட்டேன்னு பிடிவாதம் பண்ணிட்டு இருக்கா.” என்றார் அண்ணா சந்திரன் அண்ணி கௌரியும் அதையேதான் சொன்னாள்.
எல்லோரும் சந்தோஷமாக புடவை செலக்ட பண்ண ஆரம்பித்தார்கள். புடவைகளை புரட்டிப் போட்டு பார்த்து கடைசியாக ஒரு ஆழ்ந்த வான்நீல கலரில் ஜரிகை கோடுகள் நிறைந்த ஒரு புடவையை ரஞ்சனி செலக்ட் பண்ணிக் கொடுத்தாள்.
“அத்த.....லவ்லி செலக்க்ஷன்?” என்றாள் சங்கீதா.
எல்லோருக்கும் பிடித்துவிட புடவை செலக்க்ஷன் முடிந்தது. அவர்கள் பணம் கட்டிவிட்டு பார்சல்களை எடுத்துக் கொண்டு வெளியே போக கிளம்பியபோது, மழை கொட்டத் தொடங்கியது. மழை கொஞ்சம் விட்டதும் போகலாம் என்று காத்துக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது முரளி கடைக்குள் நுழைந்தான். ரஞ்சனி தான் கவனித்தாள். நல்லவேளை வேறு யாரும் கவனிக்கவில்லை.
அவனைப் பார்த்ததும் அவளுக்குள் ஒரு வலி ஏற்பட்டது. அஞ்சு வருடங்களுக்கு முன் நடந்தது, அவள் நெஞ்சுக்குள் வந்து நின்றது. அவளையும் அறியாமல் அவள் கண்களில் நீர் முத்துக்கள் திரண்டது. சில துரோகங்கள் நெஞ்சை விட்டு அகல மறுக்கிறது. நீறு பூத்த நெருப்பாக அது கனன்று கொண்டு தான் இருக்கிறது. சங்கீதாவுக்கு அவள் வான் நீல நிறப் ஜரிகை நிறைந்த வேலைபாட்டுடன் கூடிய புடவையை செலக்ட் பண்ணித் தந்ததுக்கு ஒரு காரணம் உண்டு. அவள் எண்ணங்கள் பின் நோக்கி சென்றது. டீன் பருவத்து ஆசைகள்......
ரஞ்சனிக்கு ஜவுளிக் கடைக்கு போவதென்றால் ரொம்பப் பிடிக்கும். அதுவும் அம்மாவுடன் போவதென்றால் ஒரே குஷி தான். அம்மா தாராளமாக செலவு செய்வாள். பிடித்த புடவையை எடுக்க விடுவாள். பிறந்த நாளுக்கு, தீபாவளிக்கு, பொங்கலுக்கு என்று எடுக்கும் போது அம்மா அவளுக்கு ஒரு பெரிய தொகையை ஓதுக்கி விடுவாள்.
“என்ன நாச்சியார்......பொண்ணுக்கு இப்படி செலவு செய்யற?. பார்த்தும்மா, என்னை ஓட்டாண்டி ஆக்கிடாதே.” என்று அப்பா ஆறுமுகம் சிரிப்பார்.
“சும்மா இருங்க. நமக்கு இவ ஒரே பொண்ணு. மூத்தது ரெண்டும் பையனா போச்சு. அவங்க அமெரிக்கா, கனடான்னு போயாச்சு. இவ மட்டும் தானே? என் ராஜாத்தி......வாங்கிக்கட்டுமே.” என்பாள் அம்மா.
சின்ன வயதில் கவுன் அணிந்த காலத்திலேயே அம்மா அவளுக்கு செலக்ட் பண்ணும் நிறம்....ஆழ்ந்த ஆகாய நிறம் தான்.
“எங்க அம்மாவுக்கு ஆல் ஷேட்ஸ் ஆஃப் நீலம் பிடிக்கும். நாலு உடை எடுத்தால் அதில் ஒன்று கட்டாயம் ஆகாய நீலமாக இருக்கும்.” என்று சினேகிதிகளிடம் சொல்வாள் ரஞ்சனி.
“ஏம்மா உனக்கு இப்படி ஒரு நீலப் பயித்தியம்?” என்று கேட்டிருக்கிறாள் ரஞ்சனி. அம்மா சிரித்துக் கொண்டே சொல்வாள்.....
“எங்கப்பா அந்தக் காலத்தில் எங்களை நெதம் பீச்சுக்கு கூட்டிப் போவார். அப்ப கடலைகளில் கால்களை நனைச்சுக்கிட்டே எனக்கு ஒரு கவிதை சொல்வார். அது எமிலி டிக்கின்சன் எழுதியது.... ஆங்கிலக் கவிதை. அதை தமிழ் படுத்தி சொல்லணும்னா. எனக்கு தெரிந்தபடி சொல்றேன்.....
“இன்னொரு வானம் இருக்கிறது.......உனக்காக.
எப்பொழுதும் அமைதியாக அழகாக
அப்புறம் இன்னொரு சூரிய வெளிச்சமும் இருக்கிறது.
நீ எப்பொழுது வேண்டுமானாலும் இளைப்பாற வரலாம்.”
இப்படி ஆரம்பிக்கும் இந்தக் கவிதை. இந்தக் கவிதையின் சாராம்சம் எனக்கு ரொம்ப பிடிக்கும் ரஞ்சனி. அந்த கவிதை எழுதிய எமிலி தன் சகோதரனை தான் இருக்கும் ஊருக்கு அழைக்கிறாள். வந்துவிடு சகோ, நீ வாழும் இடத்தில் இருள் இருக்கலாம், நீ வாடலாம்.. அப்போ நினைவு கொள், இங்கே எப்பொழுதும் உனக்கான வெளிச்சம் இருக்கு. அன்பான இந்தத் தங்கையின் அன்பு இருக்கு. அது உனக்கு இன்னொரு வானம் மாதிரி என்கிறாள். அன்பான ஒரு இன்விடேஷன். நல்லாயிருக்கு இல்லே? அப்பா சொல்வார், உனக்கும் நான் அதைத் தான் சொல்வேன் மகளே. நீ எங்கெங்கோ போய் வாழலாம். அங்க உன்னை சோகம் சூழலாம். அப்ப......உனக்காக இந்த அப்பா இன்னொரு வானமாக இருப்பார்.....இளைப்பாற நீ வந்துவிடலாம். நியாபகம் வச்சுக்கோ என்பார். அதனாலேயே எனக்கு வானமும் அதன் நீல நிறமும் ரொம்ப பிடிக்கும். ரஞ்சனி......எனக்கு எப்பவும் அப்பா இன்னொரு வானமாக இருந்திருக்கிறார்.”
அம்மா இதை சொல்லும்போது அவள் கண்களில் கனிவு தெரிந்ததை ரஞ்சனி பார்த்திருக்கிறாள். உலகத்தை ஜெயித்துவிட்ட பெருமிதம் தெரியும், அந்த சுடர் கண்களில். அம்மாவின் அன்புக்கு உள்ள சக்தி எந்த அணுகுண்டிலும் இல்லை என்று ரஞ்சனிக்குத் தோன்றும். தன் அப்பா தனக்குத் தந்த அதே சக்தியை அம்மா தன் மகளான ரஞ்சனிக்குத் தந்தாள். அது அம்மா தந்த கிப்ட்.
தன் அப்பா இறந்தபோது, அம்மா ரொம்ப துடிச்சுப் போனதை அவள் பார்த்தாள். அம்மாவின் இன்னொரு வானம் காணாமல் போனது. .
அம்மா மகள் ரஞ்சனியின் இருபதாவது பிறந்த நாளன்று அவளுக்கு ஒரு நீல பட்டுப் புடவையை பீரோவிலிருந்து எடுத்துத் தந்தாள். ஜரிகை நிறைந்த ஆகாய வண்ண ஆழ்ந்த நீல நிறம்...அதில் ஆகாய வெண்ணில்லா பாதி தங்க நிறம் பாதி வெள்ளி நிறம்.
“ரஞ்சனி இந்தப் புடவை என் அப்பா என் பட்டமளிப்பு விழாவுக்கு வாங்கித் தந்தாங்க. அப்பாவே செலக்ட் செய்தது. இதை நான் உனக்குத் தரேன். நீ உன் ஒவ்வொரு பிறந்த நாளைக்கும் இதக் கட்டி தான் கொண்டாடனும்.” என்றாள். அந்தப் புடவையில் அம்மா ஃபிளவர் டஸ்ட் வைத்திருந்தாள். அதன் மெல்லிய வாசனை அம்மாவின் வாசம் போல் இருந்தது.
அவளுக்கு கல்யாணமாகி மகள்கள் பிரியா, மாலதி பிறந்து ஆளாக்கும் வரை அம்மா உயிரோடு இருந்தாள். அம்மா இறந்த தினம் ரஞ்சனி வாய் விட்டு அழுதாள். இப்போ அம்மாவின் நினைவாக அந்தப் புடவை தான் அவளுக்கு ஆறுதல் தந்தது.
பரியாவுக்கு கல்யாணமாகிவிட்டது. அம்மா புடவையை ரஞ்சனி இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறாள்.. அதிகம் உடுத்த மாட்டாள். தன்னோட ஒவ்வொரு பிறந்த நாளன்றும் ஆசையாக எடுத்து உடுத்திக் கொள்வாள். அன்று அம்மாவே தன்னை வந்து ஆசீர்வதிப்பது போல நினைத்துக் கொள்வாள். இறந்தவர்கள் அவர்களையும் அறியாமல் விட்டுச் செல்லும் நினைவுகள், உண்மையில் இன்னொரு வானம் தான் என்று ரஞ்சனிக்குத் தோன்றும். அவளுக்கு அந்தப் புடவையை கட்டி விட்டு, செக்கச் சிவந்த அம்மாவின் முகம் புன்னகையில் விரிய அவள் “அட..... என் பட்டுக் குட்டி புடவையில் எவ்வளவு அழகு?” என்று கர்வத்தோடு சொல்லி அவளை ஆறத் தழுவிய அந்த தருணத்தை மறக்க முடியுமா? அம்மாவின் அன்பை இப்பொழுது இந்தப் புடவையை பார்க்கும் போதெல்லாம் அந்த பீல் வருகிறது. அம்மாவின் அன்பு வனசனை.
வருஷங்கள் ஓட, அவளும் அம்பது வயதை எட்டிய போது,. மகள் பரியாவுக்கு குழந்தை பிறந்தது.. மகளின் பிரசவம் சிக்கல் நிறைந்த ஒன்றாக இருக்க முரளி, அவள் மருமகன்.....பரியாவின் அன்புக் கணவன் மனைவியை பொறந்த வீட்டுக்கு அனுப்ப மறுத்துவிட்டான்.. கணவரையும் கால்லூரியில் படிக்கும் இரென்டாவது மகள் மாலதியையும் விட்டுவிட்டு ரஞ்சனி பரியாவுடன் இருக்க வேண்டியதாக்கிவிட்டது. அங்கும் இங்குமாக பயணம் பண்ணி சமாளித்துக் கொண்டிருந்தாள்.
“அம்மா.....நீ எதுக்கு அலையறே? நான் பார்த்துக் கொள்கிறேன். நீ அக்காவை நன்கு கவனித்துக் கொள்.” என்றாள் கல்லூரியில் படிக்கும் மாலதி. அது சற்று ஆறுதலாக இருந்தது ரஞ்சனி.
ப்ரியாவின் கணவன் முரளி .......வேண்டாம் அது பற்றி சொல்லாமல் இருப்பது நல்லது. ரஞ்சனி மனம் அதை நினைக்கும்போது கணத்தது. பீரோவில் வைத்த பணம் குறைந்தது. வாட்சை கழற்றி வைத்த இடத்தில் காணவில்லை. வேலைக்காரி வந்துவிட்டது போகும் நேரம் அவள் கூடவே இருந்தாள். எனவே அவள் எடுக்க வாய்ப்பில்லை.
ரஞ்சனியை ஏ.டி.எம் மிஷினாக பயன்படுத்த ஆரம்பித்தான் முரளி. மகளுக்கு வேண்டிய எல்லா செலவும் அவள் தான் செய்து கொண்டிருந்தாள். மகளுக்கு வேண்டிய பழங்கள், வீட்டுக்கு வேண்டிய மளிகை சாமான் என்று லிஸ்ட் நீண்டு கொண்டிருந்தது. மகள் ஆஸ்பத்திரியில் இருக்கும் போது அவளிடம் போய் என்ன சொல்ல முடியும்? உன் கணவன் பணத்தை எடுக்கிறான் என்றா சொல்ல முடியும்?
குழந்தைக்கு மூன்று மாதம் ஆனது. ரஞ்சனிக்கு பிறந்த நாள் வந்தது. அம்மா புடவையை கட்டிக் கொள்ள அவள் பீரோவை திறந்த போது அதைக் காணவில்லை. என்னாச்சு? தேடித் தேடிப் பார்த்தாள்.
மறுநாள் குழந்தைக்கு செரலாக் வாங்கச் சென்றாள். வந்தபோது முரளி வேலைக்காரி மோகனாவிடம் பேசியது கேட்டது.
“ஏய் மோகனா? புடவையை வித்தியா இல்லயா? அந்தக் காலத்து புடவை. கெட்டி சரிகை. பத்தாயிரம் பெருமே.” என்றான்.
“ஆமாங்கய்யா.....இந்தாங்க பணம். நீலக் கலர்பட்டு ஜரிகை புடவை. அசல் வெள்ளி. அதான் சேட்டு கண்ணை மூடிட்டு கொடுத்திட்டான். உங்க மாமியார், புடவையை காணோமுன்னு தேட மாட்டாங்களா.?”
:”நீ வாயை மூடிட்டு போ. இந்தா உனக்கான கமிஷன்,:”
வெளியவே நின்று விட்டாள் ரஞ்சனி. மருமகனே நம்பிக்கை துரோகம் செய்தால் வேறு என்ன சொல்ல இருக்கு? அவளின் அன்பு அம்மா கொடுத்த புடவை யாரோ ஒரு சேட்டிடம்.....மற்றது போனது பற்றி கூட கவலையில்லை, ஆனால் அவள் பொக்கிஷமாக நினைத்த அம்மாவின் புடவையை போய்........எப்படி மனசு வருகிறது? அவள் மனம் உடைந்து போனாள். இப்படியும் ஒரு கௌரவ திருட்டு!
பிறகு முரளி மாற்றல் ஆகி குடும்பத்துடன் சிவகாசி சென்றுவிட்டான்.
அஞ்சு வருஷம் கடந்துவிட்டது. மாலதிக்கு கல்யாணம் நடந்தது. மாப்பிள்ளை பிரபு நல்ல மாதிரியாகத் தான் தெரிந்தான். யார் கண்டது? ரஞ்சனி சூடு பட்ட பூனை....
சங்கீதாவுக்கு புடவை செலக்ட் பண்ணிக் கொடுத்துவீட்டு வீட்டுக்கு வந்தாள் ரஞ்சனி. “ரஞ்சனி.....உனக்கு நாளைக்கு பிறந்த நாள். அம்பத்தஞ்சு வயசு. புதுப் புடவை வாங்கி இருக்கேன் பாரு. இதை நீ கட்டிக்கிட்டு கேக் வெட்டனும்.” என்றார் ஆறுமுகம் மனைவியிடம்.
“அதெல்லாம் என்னால் முடியாதுங்க. எப்ப என் அம்மாவின் புடவை போச்சோ, அன்றே எனக்கு பிறந்தநாள் கொண்டாடும் ஆசையே போச்சுங்க. இன்னிக்கு மூத்த மருமனை ஜவுளிக் கடையில் பாரத்தேன். மனசே சரியில்லை.” என்றாள் ரஞ்சனி. அவள் குரல் அழுகையில் உடைந்தது.
வாசலில் கார் சத்தம். மாலதியும் அவள் கணவன் பிரபுவும் வந்தனர். புது ஜோடிகள். மகள் முகத்தில் புன்சிரிப்பு.
“அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துக்கள் அத்த.” என்று சொன்ன மருமகன் ரஞ்சனி கையில் ஒரு அட்டைப் பெட்டியைக் கொடுத்தான்.
“அம்மா......பிரிச்சுப் பாருங்க.” என்றாள் மாலதி.
“அத்த......மாலதி சொன்னா. உங்க அம்மா புடவை காணாமல் போனதிலிருந்து நீங்க உங்க பிறந்த நாளை கொண்டாடுவதே இல்லையாமே?. அதான் அதே மாதிரி ஆகாய நீலத்தில் புடவை வாங்கிக் வந்திருக்கேன். கட்டிக்கிட்டு எங்களை ஆசீர்வாதம் பண்ணனும்.. கோவிலுக்குப் போய் அர்ச்சனை பண்ணிட்டு.....ஹோட்டலில் டின்னர் சாப்பிடலாம். அதான் பிளான். .” என்றான் பிரபு..
அட்டைப் பெட்டியை திறந்து பார்த்தாள். என்ன ஆச்சரியம்? அம்மாவின் புடவை டிசைனிலேயே இருந்தது புதுப் புடவை. ஆகாய வண்ணம்.....வெண்ணிலா டிசைன். பாதி தங்க நிறம். பாதி வெள்ளி நிறம்.....எப்படி?
“நான் தான் பாட்டி புடவை டிசைன் மாதிரி ஆர்டர் பண்ணி வரவழைச்சேன். இப்ப சந்தோஷமா? ஐடியா கொடுத்தது உன் மாப்பிள்ளைதான்.” என்றாள் மாலதி.
அஞ்சு வருஷத்து வலி அன்று காணாமல் போனது. என் அம்மா நாச்சியார் தான் மாப்பிள்ளை பிரபு மூலம் எனக்கு இந்தப் புடவையை பரிசா கொடுத்திருக்கா போலிருக்கு. இன்னொரு வானம் என்ற கவிதை தான் ரஞ்சனியின் மனசில் தோன்றியது. கிளை முறிந்த இடத்தில் பசுமை படர்ந்தது. எமிலி டிக்கின்சன் கவிதை எவ்வளவு நிஜம்!
“ரொம்ப நன்றி மருமகனே.... “
“மகனேன்னு சொல்லுங்க அத்த.”
இரண்டு திருட்டு. ஒன்றில் பறிபோனது புடவை. இன்னொன்றில் பறிபோனது இதயம். இன்னொரு வானத்தில் ரஞ்சனி பறந்தாள்.
புடவை என்பது வெறும் புடவை இல்லை. அதில் எத்தனையோ சுவாரஸ்ய கதைகள் ஒளிந்திருக்கும்.
“அப்பாடா.....என் பெண்டாட்டி சிரிச்சிட்டா.” என்றார் ஆறுமுகம்.