அரசின் கடனை அடைப்போம்

ஓவியம்: ராம்
ஓவியம்: ராம்
Published on

விடுமுறை நாளானதால் தாமதமாக எழுந்தான் கதிர்வேல். வயது 35. பென்சில் போல் மெலிந்த தோற்றம். தேவைக்கு அதிகமாய் எண்ணெய் தேய்த்த தலைகேசம். திருநீறு பூசிய நெற்றி. கிராமிய தோற்றம். யானை நிறம். அரசு மருத்துவமனையில் ரத்த பரிசோதனை கூடத்தில் பணிபுரிபவன். மனைவி பெயர் மாலதி. இல்லத்தரசி. இரு மகன்கள் எட்டு வயதில் தர்வேஷ்,  ஐந்து வயதில் லோகேஷ்.

மனைவி கொடுத்த காபியை உறிஞ்சியபடி வீட்டு உண்டியல்களை உடைத்தான் கதிர்வேல். ரூபாய் நோட்டுகள் கொட்டின. நோட்டுகளை நீவி நீவி அடுக்கினான். மனைவி, படுக்கைக்கு அடியிலிருந்து... அஞ்சறை பெட்டியிலிருந்து... பீரோவிலிருந்து ரூபாய் நோட்டுகளை எடுத்து வந்து நீட்டினாள். “எனக்கென்னமோ நீங்க செய்ற வேலை அறவே பிடிக்கல… இந்த பணம் இருந்தா நம்ம பையன்கள் படிப்புக்கு உதவும்!”

“ஒரு நல்லகாரியம் பண்ணும்போது குறுக்குசால் ஓட்டாதே மாலு!”

மொத்த பணத்தையும் எண்ணி முடித்தான் கதிர்வேல். ஒரு லட்சத்தி முப்பதாயிரம் இருந்தது. சட்டைப்பையில் இருந்த சம்பளக் கவரை எடுத்து பிரித்தான். இருபதாயிரம் ரூபாய் இருந்தது. இரண்டு பணமும் சேர்ந்து ஒரு லட்சத்தி அம்பதாயிரம் காட்டியது. ஒரு வெள்ளைத்தாளை எடுத்து எழுத ஆரம்பித்தான் கதிர்வேல்.

அன்புள்ள தமிழக முதலமைச்சருக்கு வணக்கம்.

தமிழக அரசின் 2022-23 கடன் 11.5லட்சம் கோடி எனவும் தமிழ்நாட்டின் ஒவ்வொருவர் மீதும் 144836 ரூபாய் கடன் இருப்பதாகவும் பத்திரிகையில் வந்த செய்தியை படித்தேன். அச்செய்தியை படித்ததிலிருந்து எனக்கு சரிவர தூக்கமில்லை. கண்ணாடி முன் நின்றால் எனது பிம்பம் என்னை ‘கடங்காரா கடங்காரா’ என கேலி செய்கிறது.

அதனால், நான் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். எனது பங்கு கடனை அடைக்கும் எண்ணத்துடன் நாளை வங்கிக்கு செல்கிறேன். ஒருலட்சத்தி நாற்பத்தி நாலாயிரத்து எண்ணூத்தி முப்பத்தியாறு ரூபாய்க்கு ‘இந்திய ரிசர்வ் வங்கி தமிழ்நாடு அரசின் கணக்கு’ என்கிற பெயரில் கேட்பு வரைவோலை எடுத்து உங்களுக்கு பதிவு தபாலில் அனுப்புகிறேன். எந்தவித தயக்கமுமில்லாமல் பெற்றுக்  கொள்ளுங்கள். தந்தை பட்ட கடனை மகன் அடைப்பதில்லையா, அது போல்தான் இதுவும்.

‘என்னடா பணத்தை கொடுத்துவிட்டு அட்வைஸ் பண்ணுகிறானே’ என எரிச்சலுறாதீர்கள். இனி தேவையில்லாமல் கடன் வாங்காதீர்கள். டாஸ்மாக்கை மூடுங்கள். நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள் லாபத்தில் இயங்க போர்க்கால நடவடிக்கை எடுங்கள். இலவசங்களை ஒழியுங்கள். மழைநீர் கடலில் கலக்காமல் இருக்க தடுப்பு அணைகள் கட்டுங்கள். அரசு செலவீனங்களை கட்டுப்படுத்துங்கள். அணைகளில் தூர் வாருங்கள். எம்எல்ஏகளுக்கு கொடுக்கும் சலுகைகளை ஓய்வூதியங்களை துண்டியுங்கள். ஆறுகளில் கழிவுநீர் கலக்கும் இடங்களில் கழிவுநீரை சுத்தப்படுத்தும் பிளான்ட்டை நிர்மாணியுங்கள். விவசாயிகளிடமிருந்து வாங்கும் நெல் மழையில் நனையாமலிருக்க தார்பாய் வாங்காதீர்கள் பாதுகாப்பு கான்கிரீட் கொடவுன் கட்டுங்கள்.

அடுத்த சட்டசபை தேர்தல் வருவதற்கு முன்  தமிழ்நாட்டின் நிதிநிலையை சரி செய்து விட்டீர்கள் என்றால் மிக மகிழ்வேன்.

என்றென்றும் கீழ்ப்படிந்துள்ள  தமிழ்நாட்டு குடிமகன்

கோயம்புத்தூர்

07.01.2023

(கதிர்வேலின் கையொப்பமும் முகவரியும்)

பணத்தை சாமி படத்தின் முன் வைத்து குடும்பத்துடன் கும்பிட்டான் கதிர்வேல். “எடுத்த காரியம் சிறப்பாக நடக்க அருள்புரி பழனி முருகா!”

முருகன் குயுக்தியாய் சிரித்தார்.

றுநாள் காலை 10.30 மணிக்கு கதிர்வேல் 144836 ரூபாய்க்கு கேட்பு வரைவோலை எடுத்தான். கேட்பு வரைவோலைக்கான விண்ணப்பதாளில் தனது பான்கார்டு எண்ணை இணைத்தான். வரைவோலையை முந்தினநாள் எழுதிய இணைப்பு கடிதத்துடன் இணைத்து ஒரு கவரில் இட்டான்.

பெறுநர் முகவரியில் மாண்புமிகு கி.மு.ஹோசிமின், தமிழக முதலமைச்சர், முதலமைச்சர் அலுவலகம், சென்னை- என எழுதினான். அனுப்புநர் முகவரியில் தன் முகவரி எழுதினான்.

தபால் அலுவலகம் மூலம் பதிவுதபால் அனுப்பினான் கதிர்வேல்.

கேட்பு வரைவோலை அனுப்பி ஒருமாதமாகியும் முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து எந்த பதிலும் வரவில்லை. கிணத்தில் போட்ட கல்தான். முப்பத்தியோராவது நாள் அரசு முத்திரையுடன் கூடிய பதிவுதபால் கதிர்வேல் பெயருக்கு வந்தது. பணி முடிந்து மாலை வீடு திரும்பிய கணவனிடம் அந்த பதிவு தபாலை ஓடோடி வந்து நீட்டினாள் மாலதி.

“நீங்க டிடி அனுப்பிச்சதுக்கு சிஎம் பாராட்டி எழுதியிருப்பார். உங்களுக்கு எதாவது அவார்டு தமிழ்நாடு அரசு கொடுத்தாலும் கொடுக்கும். மீடியா முழுக்க உங்க புகழ்தான் கொடிகட்டி பறக்கப் போகுது!”

“அவசரப்படாதே. பிரிச்சு பாத்தாதான் தெரியும் வந்திருப்பது தேனா... தேளா என்று…”

“எப்ப பார்த்தாலும் பெஸிமிஸ்டிக்கா பேசுங்க. உங்க பெருந்தன்மையை பாராட்டி தமிழக அரசாங்கம் எனக்கு ஏதாவது வேலை போட்டு கொடுத்தாலும் கொடுக்கும்!”

‘எது? ஸ்வீப்பர் வேலையா அல்லது சத்துணவு ஆயா வேலையா?”

“ப்ளஸ்டூ பாஸ் பண்ணின எனக்கு வேறெந்த வேலை தருவாங்க?”

தபாலை பிரிக்காமல் காபி குடித்தான். கடிதத்தை பல கோணங்களில் வைத்து பார்த்தான்.

“சஸ்பென்ஸ் தாங்கல. பிரிச்சு தொலைங்க!”

கடிதத்தை மேஜையில் வைத்து ஒரு குத்தாட்டம் போட்டான் கதிர்வேல்.

ஏறக்குறைய ஒரு மணி நேரத்துக்கு பின் கடிதத்தை பிரித்தான் அதில்-

திரு.இரா.தி.கதிர்வேல் அவர்களுக்கு வணக்கம்.

நீங்கள் அனுப்பி வைத்த ரூ144836க்கான கேட்பு வரைவோலையும் இணைப்பு கடிதமும் கிடைத்தன.

கீழ்க்கண்ட கேள்விகளை உங்கள் முன் எடுத்து வைக்கிறேன்.

1. 1947லிருந்து 2014வரை மத்திய அரசு வாங்கிய கடன் 53லட்சம் கோடி. கடந்த எட்டு வருடங்களில் மத்திய அரசு வாங்கிய கடன் 112.2லட்சம் கோடி. மத்திய அரசின் கடன் மூலம் இந்தியர் ஒவ்வொருவர் தலைமீதும் 75000கடன் இருக்கிறதே, அதனை முதலில் அடைத்துவிட்டு நீங்கள் தமிழ்நாட்டுக்கு வந்திருக்கலாம்.

2. நீங்கள் உங்கள் தலைக்கு ரூ144836 கட்டி விட்டீர்கள். உங்கள் மனைவி மகன்களுக்கான பங்கை எப்போது கட்டப் போகிறீர்கள்?

3. நீங்கள் பணம் அனுப்பியதன் உண்மையான நோக்கம் என்ன? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கேலி செய்கிறீர்களா? மத்திய - மாநில அரசுகளால் தடை செய்யப்பட்ட எதாவது ஒரு அரசியல் அமைப்பில் உறுப்பினராக இருக்கிறீர்களா? ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்து இந்திய மீடியாக்களின் ஒரு நாள் முழுதும் பேசுபொருளாக நாடகம் போட்டுள்ளீர்களா?

4. அரசாங்கத்துக்கு அதை செய் இதை செய் என அறிவுரை கூறும் நீங்கள் என்ன பொருளாதார நிபுணரா? ஜிஎஸ்டியில் 5 சதவீதம் வரை கடன் வாங்கலாம் என மத்திய அரசு அனுமதித்துள்ளது. ஆனால் நாங்களோ நான்கு சதவீதம்தான் வாங்கியுள்ளோம். இந்திய மாநிலங்களில் பஞ்சாப், ராஜஸ்தான், கேரளா, மேற்குவங்கம், பீகார், ஆந்திரபிரதேசம், ஜார்கண்ட், மபி, உபி, ஹரியானா நம்மைவிட அதிகம் கடன் வாங்கியுள்ள மாநிலங்கள். அங்கு போய் உங்கள்  அறிவுரையை கூறுங்கள்.

5. தமிழ்நாட்டின் ஜனத்தொகை எட்டு கோடி. வறுமை கோட்டுக்கு கீழே இருப்பவர் கீழ்மட்ட நடுத்தர வகுப்பினர் தவிர அதிகபட்சம் ஒரு லட்சம் பேர் உங்களை போல கடனை அடைக்க முயற்சிக்கக்கூடும். அந்த பணம் வாங்கிய கடனுக்கு ஒரு மணி நேர வட்டி கட்டகூட போதாது.

6. உங்களுக்கு மாத சம்பளம் பிடித்தம் போக 25000 இருக்கலாம். நீங்கள் எப்படி 144836 அனுப்பினீர்கள்? அனுப்பிய பணத்துக்கு கணக்கு வைத்துள்ளீர்களா? கேட்பு வரைவோலை எடுக்கும்போது வங்கியில் ஏன் டிடிஎஸ் பிடிக்கவில்லை? இதுபோல் கணக்கில் காட்டாத கறுப்புபணம் மேலும் எவ்வளவு வைத்துள்ளீர்கள்?

7. ஏழை மக்களின் விருப்பங்களையும் தேவைகளையும் உணர்ந்துதான் இலவசங்களை கொடுக்கிறோம். இலவசங்களை எதிர்க்கும் நீங்கள் வெகுஜனத்திற்கு எதிரானவர்.

8. தமிழகஅரசு உபரி பட்ஜெட்டில் இயங்குகிறது என்றால் லாபத்தில் பங்கு கேட்பீர்களா?

9. நீங்கள் அனுப்பிய பணத்தை கொரோனா நிதியில் சேர்க்க உத்திரவிட்டுள்ளேன்.

10. உங்களின் கடந்த கால முழுமையையும் விசாரிக்க காவல்துறைக்கு உத்திரவிட்டுள்ளேன். உங்களின் மீது துறை ரீதியான விசாரணை முடுக்கி விடப்படும். விசாரணை முடியும் வரை உங்களை தற்காலிக பணி நீக்கம் செய்ய சிபாரிசு செய்துள்ளோம். காவல்துறை நடவடிக்கைக்கும் துறை ரீதியான நடவடிக்கைக்கும் ஒத்துழைக்க வேண்டுகிறேன்.

நன்றி.

இப்படிக்கு உண்மையுள்ள

 (ஹோசிமின்னின் கையொப்பம்)

பின்குறிப்பு : உங்கள் கடிதத்தில் பெரியார் சீர்திருந்த தமிழ் எழுத்துகளை புறக்கணித்துள்ளீர்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com