அரைபடி அரிசி!

அரைபடி அரிசி!

படித்ததில் பிடித்தது

சாண்டோ சின்னப்பா தேவரும், எம்.ஜி.ஆரும் தொடக்கத்தில் மிகச்சாதாரண நிலையில் இருந்தபோதே நெருங்கிய நண்பர்கள். இருவருமே வறுமையில் வாடிய நாட்கள் அவை. அப்போது நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றைப்பற்றி, மூத்த கதாசிரியர், தயாரிப்பாளர் கலைஞானம் அவர்கள் ஒரு கட்டுரையில் சொல்லி இருக்கிறார்…  ஒருநாள் எம்.ஜி.ஆரின் தாயார் சத்யா (சத்யபாமா) அம்மா, எம்.ஜி.ஆர் வருகையை எதிர்பார்த்து வீட்டுக்கு வெளியே நின்று நான்கு திசைகளிலும் பார்த்துக்கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த சாண்டோ சின்னப்பத்தேவர்,

எம்.ஜி.ஆர் அம்மாவிடம், “என்ன ஆத்தா இங்க நிற்கிறீங்க?” எனக் கேட்க,

“சாப்பாட்டுக்கு ஒன்னும் இல்லடா… ராத்திரி வரும்போது அரிசி வாங்கிட்டு வாடான்னு சொல்லியிருந்தேன்… இன்னும் ஆள காணும்” எனக் கூறுகிறார் சத்யா அம்மா.

 உடனே தேவர், “ஒண்ணும் கவலைப்படாத ஆத்தா… பத்து நிமிஷத்துல நான் வாரேன்” எனக் கூறிவிட்டு அவர் வீட்டை நோக்கி வேகமாக நடக்க ஆரம்பிக்கிறார்.

தேவர் வீட்டு வாசலில் அவர் அம்மா வெளியே உட்கார்ந்து பக்கத்து வீட்டு ஆட்களுடன் பேசிக்கொண்டிருக்கிறார்.

அவரைத் தாண்டி உள்ளே நுழைந்த தேவர், அவர் அம்மாவுக்கு சந்தேகம் வந்துவிடக் கூடாது என நினைத்து, பித்தளை பானையில் தண்ணீர் குடிப்பது போல பாவனை செய்கிறார். பின், சட்டையிலும் கொஞ்சம் தண்ணீரை ஊற்றி நனைக்கிறார். நேரே அரிசி வைக்கப்பட்டிருந்த மண்பானைக்கு அருகில் சென்று இரு கைகளிலும் அரிசியை அள்ளி டவுசர் பையை நிரப்புகிறார். அதன் அளவு எப்படியும் அரைப்படி இருக்கும். பின், அவர் அம்மாவுக்கு கேட்குமாறு பெரிய ஏப்பம் விட்டு விட்டு எம்.ஜி.ஆர். வீட்டை நோக்கி நடக்க ஆரம்பிக்கிறார்.

சத்யா அம்மாவிடம் வந்து, “முறத்தை எடு ஆத்தா” என்கிறார். அவரும் எதற்கு கேட்கிறார் என்பது புரியாமல் குழப்பத்துடன் முறத்தை எடுக்கிறார். தேவர், தன்னுடைய இரு பைகளிலும் உள்ள அரிசியை அள்ளி அந்த முறத்தில்

போடுகிறார். “ஏதுடா சின்னப்பா இவ்வளவு அரிசி” என எம்.ஜி.ஆர். அம்மா கேட்க, “அதை விடு ஆத்தா… தம்பி வர்றதுக்குள்ள நீ போய் சோறாக்கு” என்கிறார் தேவர்.

அம்மா சமைக்க ஆரம்பிக்கிறார். அன்று பணம் திரட்ட முடியாததால் அரிசி வாங்காத சோகத்துடன் வீடு திரும்புகிறார் எம்.ஜி.ஆர்.

படம் பிள்ளை
படம் பிள்ளை

 வீட்டுக்குள் எம்.ஜி.ஆர். நுழைந்ததும் அரிசி வேகும் வாசனை கமகமன்னு வருது. “உனக்கு ஏதும்மா அரிசி வாங்க காசு” என எம்.ஜி.ஆர்.  கேட்க,  “சின்னப்பன்தான் கொண்டு வந்து கொடுத்தான்” என சத்யா அம்மா நடந்ததை விளக்கிக் கூறுகிறார். உடனே தேவரை கட்டியணைத்து கண்ணீர் வடிக்கிறார் எம்.ஜி.ஆர்.

அன்றைக்கு அரைப்படி அரிசி கொடுத்ததற்காக நன்றி மறக்காத எம்.ஜி.ஆர், வாழ்நாள் முழுவதும் தேவருக்கு உடன்பிறப்பாக இருந்து 16 படங்கள் நடித்துக் கொடுத்தார். 

சாதாரண ஆளாகத்தான் தேவர் சென்னைக்கு வந்தார். அவர் சென்னை வரும்போது அவரது நிலை என்னவென்று அனைவருக்கும் தெரியும். அப்படி சாதாரண மனிதரை கோடீஸ்வரனாக்கி  எம்.ஜி.ஆர். அழகு பார்த்ததற்கு காரணம், அந்த அரைப்படி அரிசிதான்! நன்றி மறப்பது நன்றன்று!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com