Interview: அருள்நிதிக்கு ஏன் கருணாநிதி பெயர்? - அருள்வான் இயக்குனர் கணேஷ் விநாயகன் Open Talk!

அருள்வான் படத்தின் சுவாரஸ்யமான பின்னணி மற்றும் மலைவாழ் மக்களின் கல்விப் போராட்டம் குறித்த பிரத்யேக நேர்காணல்.
Arulvaan movie - Director Ganesh Vinayakan
Arulvaan movie - Director Ganesh Vinayakan
Updated on
Q

"கருணாநிதியின் பெயரை ஹீரோவுக்கு வைத்தது ஏன்?”

A

'ஹீரோவுக்கு என்ன பெயர் வைக்கலாம்?' என்று யோசித்தபோது ஹீரோ அருள்நிதிக்கு அவரது தாத்தா மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதியின் முழு பெயரான முத்துவேல் கருணாநிதி என்பதிலிருந்து எடுத்து முத்துவேல் என்ற பெயரை வைத்தேன். இது ஆடியன்ஸிற்கும் கனெக்ட் ஆகும் என்பதும் ஒரு காரணம். இதில் மறைக்க ஒன்றும் இல்லை,"

என்று வெளிப்படையாக பேசுகிறார் அருள்வான் பட இயக்குனர் கணேஷ் விநாயகன். இவரின் இயக்கத்தில் அருள்நிதி, ரம்யா பாண்டியன் நடிப்பில் அருள்வான் படம் இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளது. படத்தின் டிரைலரில் இது கல்வியைப் பற்றி பேசும் படம் என்று புரிகிறது. இன்னும் பல விஷயங்களை நாம் புரிந்து கொள்ள சில கேள்விகளை இயக்குனரிடம் முன் வைத்தோம். படம் ரிலீசில் பிஸியாக இருந்த இயக்குனர் கணேஷ் விநாயகன் 'கல்கி ஆன்லைன்'காக நேரம் ஒதுக்கி நம்மிடையே பேசினார்...

Q

அருள்வான் என்ற தலைப்பிற்காக ஹீரோவை செலக்ட் செய்தீர்களா? அல்லது ஹீரோ அருள்நிதிக்காக அருள்வான் என்று தலைப்பு வைத்தீர்களா?

Arulvaan movie - Arulnithi - Ganesh Vinayakan
Arulvaan movie - Arulnithi - Ganesh Vinayakan
A

இரண்டும் இல்லை. அருள்நிதி அவர்களின் நட்பு 'தகராறு' படத்திலிருந்து இன்று வரை தொடர்கிறது. நான் என்னுடைய அடுத்தடுத்த படங்களை பற்றியும், திட்டங்களையும் அருளிநிதி அவர்களிடம் விவாதிப்பேன். அருளிநிதி அவர்களும் தன்னுடைய படங்களை பற்றி என்னிடம் பேசுவார். இப்படி பேசும்போது தான் அருள்வான் கதையை பற்றியும் பேசினேன். ஒரு இளம் வயது கலெக்டர் என்ற கேரக்டருக்கு அருள்நிதி சரியாக இருப்பார் என்று தோன்றியதால் அருள் நிதியை ஹீரோவாக்கினேன். அருள்வான் என்பது கல்வியை குறிக்கிறது.

Q

கல்வி தொடர்பான படம் என்று சொல்கிறீர்களே... இன்று தமிழ்நாட்டில் முழுமையான கல்வி அறிவு வந்துவிட்ட சூழ்நிலையில் கல்வி விழிப்புணர்வு பற்றிய படம் தேவையா?

A

தேவைதான். எனக்குத் தெரிந்த என் ஜி ஓ அமைப்பு ஒரு ஆய்வு மேற்கொண்டார்கள். அவர்களின் கருத்துப்படி தமிழ்நாட்டில் மலை கிராமங்களில் இருக்கக்கூடிய பழங்குடி மக்களுக்கு 25 சதவீத கல்விதான் கிடைத்திருக்கிறது. இன்னும் 75 சதவீத கல்வி கிடைக்கவில்லை என்ற தகவல் வந்திருக்கிறது.

இதைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்குதான் இந்த படம் இயக்குகிறேன். இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ் ஜி சரவணன் பல குழந்தைகளை படிக்க வைக்கிறார். எனவே இயல்பாகவே தயாரிப்பாளருக்கு இந்த கதை பிடித்துப் போனது.

Q

இந்தப் படம் இயக்கும் பொழுது நீங்கள் புரிந்து கொண்ட விஷயங்கள் என்ன?

A

இந்த படத்தை பெரிய குளம் அருகில் உள்ள சின்னார் என்ற ஒரு மலை கிராமத்தில் இயக்கினேன். இங்கே பள்ளிக்கூடம் இல்லை. அரசு இயந்திரங்கள் "இங்கே பள்ளிக்கூடம் கட்டி கல்வியை தருவது கடினம். நீங்கள் சமவெளிக்கு வாருங்கள்" என்று மலைவாழ் மக்களை அழைக்கிறார்கள். அதற்கு அம்மக்கள் "எங்கள் வாழ்வாதாரம் இந்த மலையை சுற்றி உள்ளது. நாங்கள் கீழே வருவது கடினம். ஒரு தேர்தலுக்காக எப்பாடுபட்டாவது அதிகாரிகள் வாக்கு இயந்திரங்கள் போன்றவற்றை மலைகள் பகுதிக்கு கொண்டு வந்து தேர்தல் நடத்தும் அரசு ஏன் ஒரு பள்ளிக்கு ஒரு ஆசிரியரை கூட அனுப்ப முடியவில்லை?" என்ற கேள்வி கேட்கிறார்கள். இந்த கேள்வி மிகவும் நியாயமானதாக நான் உணர்ந்தேன்.

Q

படத்தில் ரம்யா பாண்டியன் நடிக்க மாட்டேன் என்று சொன்னதாக கேள்விப்பட்டோமே உண்மையா?

A

உண்மைதான். கிராமத்து கதைகளில் நான் நடிக்க மாட்டேன் எனக்கு அனைவரும் கிராமத்து கதைகள் தான் தருகிறார்கள். கிராமத்துக் கதைகளில் நடித்து எனக்கு அலுத்து விட்டது என்று வருத்தப்பட்டு தான் வந்தார். சூட்டிங் ஸ்பாட் வரும் வரை அவர் முழு மனதுடன் நடிக்க வரவில்லை. அதன் பிறகு அங்கே படித்த ஸ்கிரிப்ட்டையும், அவருக்கு கொடுக்கக்கூடிய ரோலை பார்த்தும் மிகவும் மகிழ்ச்சி அடைந்து அந்த கதாபாத்திரத்தில் ஒன்றிணைத்து விட்டார்.

Q

படப்பிடிப்பில் நீங்கள் பார்த்து வியந்த விஷயம் எது?

Arulvaan movie - Ganesh Vinayakan
Arulvaan movie - Ganesh Vinayakan
A

நாம் ஆச்சரியமாகவும், பயத்துடன் பார்க்கும் விஷயத்தை இந்த மலைவாழ் மக்கள் சாதாரணமாக கடந்து செல்கிறார்கள். உதாரணமாக நாங்கள் படப்பிடிப்பு நடத்தும் போது ஆங்காங்கே காட்டு யானைகள் தென்பட்டன. இவைகளை இம்மக்கள் சாதாரணமாக கடந்து செல்கிறார்கள். இது எங்களுக்கு பயத்தை ஏற்படுத்தியது. இங்கே காட்டுவெள்ளம் அடிக்கடி வரும். இது இவர்களுக்கு பழகிய ஒரு விஷயமாக இருக்கிறது . சுற்றுலா செல்லும்போது பார்க்கும் மலை கிராமங்கள் என்பது வேறு. அருகில் அங்கே வாழ்பவர்கள் வாழ்க்கை என்பது வேறு. இதை இந்த படப்பிடிப்பு எனக்கு புரிய வைத்தது .

Q

மலை கிராமங்கள் என்றாலே ஒளிப்பதிவிற்கு சுகுமார் வந்துவிடுகிறார் எப்படி?

A

சுகுமார் ஒளிப்பதிவில் ஓர் உயிர் இருக்கும். இந்த படத்திற்கு உயிரோட்டமான ஒரு ஒளிப்பதிவு தேவைப்பட்டது. எனவே சுகுமாரை தவிர எனக்கு வேறு ஒருவரும் நினைவுக்கு வரவில்லை.

Q

நீங்கள் கடந்த 2021 ஆம் ஆண்டு இயக்கிய 'தேன்' திரைப்படம் விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. ஆனால் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இது உங்களுக்கு வருத்தம் அளிக்கிறதா?

A

கண்டிப்பாக. இருந்தாலும் சில நாட்களுக்குப் பிறகு இப்படம் ஓடிடி தளத்தில் வரவேற்பு பெற்ற பிறகு ஓரளவு மகிழ்ச்சி அடைந்தேன். வெளி உலகம் தெரியாத ஒரு மலை கிராம மனிதன் எப்படி வஞ்சிக்கப்படுகிறான் என்று படத்தில் சொல்லியிருந்தேன். இப்படத்தை பலர் ஓடிடியில் பார்த்து பாராட்டினார்கள் . அண்ணன் சீமான் கூட இப்படத்தை ஓடிடி யில் பார்த்து என்னை அழைத்து சிறந்த படம் என்று பாராட்டினார். இதை எனக்கு கிடைத்த ஒரு விருதாக எண்ணுகிறேன். அப்போது கோவிட் பிரச்னைகள் இருந்ததும் இப்படம் மக்களிடையே சரியான வரவேற்பு கிடைக்காததற்கு முக்கிய காரணம்.

இதையும் படியுங்கள்:
ராஜாஜி அரங்கம்: காலத்தை வென்ற தமிழ் சினிமாவின் அடையாளப் படிக்கட்டுகள்!
Arulvaan movie - Director Ganesh Vinayakan
Q

கடந்த 2018 ஆம் ஆண்டு கன்னடத்தில் 'ஹைப்பர்' என்ற படம் இயக்கினீர்கள்... அங்கே தமிழ் இயக்குனர்களுக்கு வரவேற்பு எப்படி இருக்கிறது?

A

கன்னடத்தில் தமிழ் இயக்குனர்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது . நாம் வெளியில் பார்க்கும் கன்னடம் , தமிழ் என்ற பிரச்னைகள் எல்லாம் கன்னட சினிமாவில் இல்லை . அங்கே திறமையானவர்களை மதிக்கிறார்கள். மீண்டும் கன்னடத்தில் படம் இயக்க ஒரு ஐடியா வைத்துள்ளேன்.

இதையும் படியுங்கள்:
மிஷ்கினுக்கு முத்தம் கொடுத்த மக்கள் செல்வன்... மேடையிலேயே வெளிப்பட்ட அந்த மிகப்பெரிய ரகசியம்!
Arulvaan movie - Director Ganesh Vinayakan
Q

இப்படத்தில் அருள்நிதிக்கு கலெக்டர் கேரக்டர் தந்துள்ளீர்கள்... உங்களைக் கவர்ந்த கலெக்டர் யார்?

Arulvaan movie - Arulnithi - Ganesh Vinayakan
Arulvaan movie - Arulnithi - Ganesh Vinayakan
A

1953 -55 காலகட்டங்களில் திருச்சி மாவட்டத்தில் மலையப்பன் என்ற கலெக்டர் இருந்தார். இவர் நரிகுறவர்கள் எனப்படும் நாடோடி மக்களுக்காக போராடியவர் . இவர் அடிப்படையில் ஒரு ஆசிரியரும் கூட. அன்று ஒரு நாள் இவருக்கு பணியில் இருந்து ஓய்வு பெறும் தினம் வருகிறது. காலையிலிருந்து இவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடத்த அலுவலக பணியாளர்கள் காத்திருக்கிறார்கள். ஆனால் இவர் அலுவலகத்திற்கு வரவில்லை. வீட்டிலும் இல்லை. காவல்துறை இவரை பல இடங்களில் தேடுகிறது. ஆனால் இவர் எங்கேயும் இல்லை. அன்று மாலை 6 மணிக்கு மேல் அலுவலகம் வருகிறார் கலெக்டர் மலையப்பன். இவரது உடல் முழுவதும் சேரும் மண்ணுமாக இருக்கின்றது. என்ன விஷயம் என்று அனைவரும் கேட்க "இன்று எனக்கு இப்பணியில் கடைசி நாள். நரிக்குறவர் மக்களுக்கு நான் இருக்கும் போது அவரது நிலத்திற்கான பட்டா வழங்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால் நானே நேரடியாக அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்திறகு மண்வெட்டி எடுத்து அளவுகோல் வைத்து அவர்களது நிலங்களை அளந்து கணக்கெடுத்து விட்டு வந்தேன். அதனால்தான் என்னுடைய ஆடையும் உடலும் சேரும் சகதியும் ஆக இருக்கிறது" என்றார். இந்த தகவலை மலையப்பன் அவர்கள் எழுதிய ஒரு புத்தகத்தில் நான் படித்தேன். இவரது இந்த செயலும் நாடோடி மக்களுக்காக இவர் போராடியதும் எனக்கு ஒரு இன்ஸ்பிரேசனாக இருந்தது.

இன்றும் திருச்சியில் நரிக்குறவர்கள் வாழும் பகுதியில் இவர் சிலை இருக்கிறது. இது போன்ற மனிதர்கள் நமது தமிழ்நாட்டிலேயே இரத்தமும் சதையுமாக வாழ்ந்து சேவை செய்து இருக்கிறார்கள் என்று இவர் எழுதிய புத்தகத்தை படிக்கும்போது எனக்குப் புரிந்தது.

இதையும் படியுங்கள்:
ஆலியா பட்டின் 'ஆல்பா': தியேட்டரை அதிரவைக்கும் சர்ப்ரைஸ் ட்விஸ்ட்கள்!
Arulvaan movie - Director Ganesh Vinayakan
Q

உங்களின் அடுத்தடுத்த படங்கள் எப்படி இருக்கும்? 

A

மக்களின் வாழ்வியல் சார்ந்த பிரச்னைகள் பற்றி பேசும் படமாக இருக்கும். அதே சமயத்தில் கமர்சியல் தளத்திலும் இருக்கும். அருள்வான் படத்திலும் மலைவாழ் பழங்குடி மக்களின் வாழ்வியல் சார்ந்த பிரச்னைகளை கமர்சியல் பின்னணியில் தந்துள்ளேன்.

'அருள்வான்' வெறும் வணிகத் திரைப்படம் மட்டுமல்ல; அது சமூக மாற்றத்திற்கான குரல். மலைவாழ் மக்களின் கல்வி உரிமை மற்றும் வாழ்வியல் சிக்கல்களை அழுத்தமாகப் பதிவு செய்யும் இப்படைப்பு, ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். சமூகப் பொறுப்புணர்வையும், சிந்தனையையும் தூண்டும் ஒரு முக்கியமான முயற்சியாக இப்படம் அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இப்படம் வெளியீட்டிற்குப் பிறகு நிச்சயம் பெரும் வரவேற்பைப் பெறும்.

logo
Kalki Online
kalkionline.com