கி.மு. 1000க்கு முன்பு சிறு கிராமங்களாக ஒரு தலைவனின் தலைமையில் இருந்த கிரேக்க கிராமங்கள் காலபோக்கில் நகரங்களாகவும், நகரங்கள் சிங்கபூர் மாதிரி நகர-நாடுகளாகவும் (city state) மாறின. ஒவ்வொரு நகருக்கும் ஒரு காவல் தெய்வம். கிரேக்கத்தின் புகழ்பெற்ற ஏதென்ஸ் நகரின் காவல் தெய்வம் அதீனா (Athena).
மொத்த கிரேக்கத்துக்கும் அனைத்து தெய்வங்களும் பொது என்றாலும் மதுரை மீனாட்சி மதுரைக்கு ஸ்பெஷல் என்பது போல் தான் கிரேக்க தெய்வங்களும். அதீனா மிக தொன்மை கொண்டவள். ஹோமரின் இலியாட், ஒடிசியில் குறிப்பிடப்படுபவள் (இலியாட், ஒடிசி காலம் கிமு 800. ட்ராஜன் போரில் ஒடிசியசுக்கு அருள் பாலித்தவள். ட்ராய் போர் நடந்தது கிமு 1300ம் ஆண்டு. ஆக உலகின் மிக தொன்மையான தெய்வங்களுல் ஒருத்தி அதீனா.
அதீனா வெறும் அறிவுத்தெய்வம் மட்டுமல்ல. போர்க்கலை, ராஜதந்திரத்தின் தெய்வம். அதீனா ஏதென்ஸின் காவல் தெய்வமானது குறித்து பின்வரும் தொன்மம் ஏதென்ஸில் கூறப்படுகிறது.
கடல் அரசன் பொசீடன் (Poseidon) மற்றும் அதினா இடையே யார் ஏதென்ஸின் காவல் தெய்வம் ஆவது என போட்டி நிலவியது. பொசீடன் தன் சூலத்தால் பூமியை குத்தி ஒரு நீரூற்றை உருவாக்கி ஏதென்சுக்கு கொடையாக அளித்தான். அதீனா உலகின் முதல் ஆலிவ் மரத்தை உருவாக்கி அளித்தாள். ஏதென்ஸ் மக்களுக்கு ஆலிவ் மரம் பிடித்துபோக அதீனா காவல் தெய்வம் ஆனாள்.
கிமு 480ல் பாரசிக படைகளை தோற்கடித்தபின் அக்ரோபொலிஸ் எனும் மலையின் மேல் அதீனாவுக்கு மிகப்பெரிய ஆலயம் எழுப்பப்பட்டது. ஏதென்ஸ் கல்வி, கலைகளிலும் சிறந்து விளங்கி பண்டைய உலகின் அறிவுக்கூடமாக திகழ்ந்தது. அக்ரோபொலிஸில் தான் நாடககலை பிறந்ததாக கூறுகிறார்கள்.
அலெக்சாந்தர் உள்பட அனைத்து கிரேக்க மன்னர்களும் அங்கே காணிக்கை, வழிபாடு செலுத்தியுள்ளனர். பின்னாளில் ரோமானியர்கள் கிரேக்கத்தை பிடித்தபோதும், அதினா ஆலயத்துக்கு மரியாதை செலுத்தி, ஆலயத்தையும் புதுப்பித்தனர். பின்னாளில் கிரேக்கம் கிறிஸ்தவ சமயத்துக்கு மாறியபின் கிபி 6ம் நூற்றாண்டில் அதினா ஆலயம் சர்ச் ஆக மாற்றபட்டது.
அதினா பார்த்தினோஸ் (Athena Parthenos) எனும் ஆலயத்தின் பெயர். அதன் பெயர் கன்னி அதீனா என்பது ஆகும். அதனால் கன்னிமேரி ஆலயமாக மாற்றப்பட்டது. அதன்பின் ஆட்டோமான் துருக்கியர்கள் காலத்தில் மசூதி ஆனது. ஒரு போரில் இத்தாலியர்கள் அதை பீரங்கி வைத்து தகர்த்ததால் முழுமையான இடிபாடுகளாக கட்டிடம் மாறியது.
இப்போது அங்கே கிடந்த தூண்கள், கற்களை எடுத்து லேசர்கள் மூலம் பழைய கோயில் எப்படி இருந்திருக்கும், எதன் சிதிலங்கள் எங்கே பொருந்தும் என பார்த்து அவற்றை மீண்டும் ஒட்டி ஆலயத்தை மீள்கட்டுமானம் செய்து வருகின்றனர். இன்னும் சில பத்தாண்டுகளில் கிமு 437ல் இருந்தது போன்ற ஆலய அமைப்பு அங்கே மீண்டும் உருவாகும்.
ஏதென்ஸ் போய் அதினா பார்த்தினோஸ் ஆலயத்தை பார்க்க முடிந்தது மிக இனிமையான அனுபவம். எத்தனையோ ஞானியர்களும், மன்னர்களும் நின்ற மண்.