ஆய்க்குடி அமர் சேவா சங்கம்!மாற்றுத்திறனாளிகளின் ஆனந்த இல்லம்!

Ayikudi Amar Seva Sangam
Ayikudi Amar Seva Sangam
Published on

தென்காசி அருகில் ஆய்க்குடி என்ற  இடத்தில் 1981 ஆம் ஆண்டு அமர் சேவா சங்கம் தொடங்கப்பட்டது. உடல் மன வளர்ச்சி  குன்றியவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டது இந்த மையம். 

இந்த நிறுவனத்தை திரு.ராமகிருஷ்ணன், திரு.சங்கரராமன்  ஆகிய இருவரும் சேர்ந்து நடத்தி வருகிறார்கள். இவர்கள், கழுத்துக்கு கீழ் எந்த உறுப்பும் செயல்படாத நிலையில் சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு இந்த நிறுவனத்தை திறம்பட நடத்தி வருகிறார்கள்.

இங்கு நூற்றுக்கணக்கான சிறுவர், சிறுமியர்கள் உடல் ஊனமுற்ற நிலையில் தங்கி உள்ளார்கள். இங்கு தங்கும் அவர்களுக்கு, விடுதிகள், பள்ளிகள், மருத்துவமனை, கைத்தொழில் முதலியவை உள்ளன. இங்கு பயிலும் மாணவர்களுக்கு கைத்தொழில் கற்றுத் தரப்படுகிறது. மேலும் இங்கு பயிற்சி பெற்ற மாணவர்கள் சென்னை பெங்களூர் போன்ற இடங்களில் மேற்படிப்பு படித்தும் வேலை பார்த்தும் வருகிறார்கள்.

சங்கரராமன் தங்கை அமெரிக்காவில் உள்ள டோரண்டோ நகரில் தன் கணவருடன் இணைந்து, இதே போன்ற அமைப்பை சிறப்பாக நடத்தி வருகிறார். ராமகிருஷ்ணன், சங்கர் ராமன் இருவரும் நிறைய விருதுகள் பெற்றுள்ளனர். ஆரம்ப காலத்தில் ராமகிருஷ்ணன் கடற்படை பயிற்சி எடுக்கும்போது உயரமான இடத்திலிருந்து கீழே விழுந்து உடல் உறுப்புகள் இயங்காமல் போனது.

அதேபோன்று சங்கரராமன் என்பவரும் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் இவருடன் சேர்ந்து கைகோர்த்துக் கொண்டு இந்த மறுவாழ்வு மையத்தை மிகச் சிறப்பாக நடத்தி வருகிறார்கள்.

உடல் ஊனமுற்றோர் சிகிச்சை மையம் தட்டச்சு தொழில் பயிற்சி, கை வேலைப்பாடு போன்ற வேலைகள் இங்கு உள்ளவர்களுக்கு கற்றுக் கொடுத்து அதன் மூலம் இங்கு செய்யப்படும் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. 

இங்கு ஒரு கோசாலை உள்ளது. அதில் 40 பசுக்கள் உள்ளன. அதன் மூலம் இந்த நிறுவனத்துக்கு பால் தடையின்றி கிடைக்கிறது. இந்த மையத்தில் 80 கிலோ வாட் கொண்ட சோலார் மையம் உள்ளது. இதன் மூலம் இங்கு மின் சப்ளை செய்யப்படுகிறது. பிசியோதெரபி, நர்சிங் மையம் இங்கு திறம்பட செயல்பட்டு வருகிறது. தமிழக அரசு இந்த மையத்திற்கு 2 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. ஜப்பான் அரசு இங்கு வந்து பார்வையிட்டு அவர்கள் செலவில் நான்கு கட்டடங்கள் அழகாக கட்டிக்கொடுத்து உதவி புரிந்துள்ளனர். 

ராமகிருஷ்ணன் பத்மஸ்ரீ விருது மற்றும் பல விருதுகளுக்கு சொந்தக்காரர். ராமகிருஷ்ணன் கடற்படையில் வேலை பார்க்கும் போது நடந்த விபத்தில் அவருக்கு கை கால் செயல் இழந்த நிலையில் அங்கு பணிபுரிந்த ஏர் மார்ஷல் அமர்ஜித் அவருக்கு பல வகையிலும் உதவி புரிந்தார். எனவே அவர் நினைவாக இந்த மையத்துக்கு அமர்சேவா சங்கம் எனப் பெயர் வைத்துள்ளார்.

தற்போது இந்த மையத்தில் 800 குழந்தைகள் உள்ளனர். தென்காசியில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் ஆய்க்குடி என்ற கிராமத்தில் இந்த அமர்சேவா சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆய்க்குடி என்ற ஊர் தான் ராமகிருஷ்ணன் அவர்களின் சொந்த ஊராகும். ராமகிருஷ்ணன், சங்கரராமன் இருவரும் சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு இந்த மையத்தில் சுற்றி வலம் வந்து திறம்பட நடத்தி வருகிறார்கள். பத்மஸ்ரீ விருது அம்பேத்கர் விருது இவர்களை தேடி வந்தது.

இதையும் படியுங்கள்:
Non-Stick பாத்திரங்களில் ஒளிந்துள்ள ஆபத்து... ஜாக்கிரதை!
Ayikudi Amar Seva Sangam

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com