உ.பி.யில் பா.ஜ.க.வின் புது கணக்கு!!

உ.பி.யில் பா.ஜ.க.வின் புது கணக்கு!!

ராமர் கோயில், மோடியின் கவர்ச்சி, யோகியின் மாயாஜாலம், திறமையான கட்சித் தலைவர்கள், திட்டப் பயனாளிகளின் விசுவாசம் இவை போதும் நாங்க உத்தரப்பிரதேசத்தில் 80 மக்களவைத் தொகுதிகளையும் வெல்வதற்கு என்கின்றனர் பா.ஜ.க.வினர்.

பிரதமர் நரேந்திர மோடியின் கவர்ச்சியும், யோகி ஆதித்யநாத்தின் புகழும் அரசியலில் பா.ஜ.க.வின் முக்கிய அம்சங்களாக இருந்தாலும், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் மீதான சிறப்பு கவனம், புல்டோசர் அரசியல், போதாக்குறைக்கு சமூக ஊடகப்பிரிவினரின் சிறப்பான செயல்பாடு என பொதுத் தேர்தலில் வெற்றியை தக்கவைத்துக் கொள்வதற்கான காரணிகளை வரிசையாக அடுக்குகிறது பா.ஜ.க. மேலும், மத்தியில் ஆட்சியமைப்பதற்கு 80 தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேசம் முக்கிய பங்கு வகிக்கும் என்று அக்கட்சி நம்பிக்கையுடன் இருக்கிறது.

ஹிந்துக்களின் தலைவராக யோகி ஆதித்யநாத் உருவாகி வருவதும், அவரது கடுமையான நிர்வாகத்திறனும், அவருக்கு இருக்கும் புகழும், செல்வாக்கும் நிச்சயம் 2024 தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வெற்றியைத் தேடித்தரும் எனறும், 2022 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிக்குப் பின், இடைத்தேர்தல்களிலும், சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களிலும் பா.ஜ.க.வின் அமோக வெற்றிக்கு யோகியின் கடுமையான உழைப்புதான் காரணம் என்றும் பா.ஜ.க.வினர்  நினைக்கிறார்கள்.

உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க. இதுவரை ஒரே ஒரு உத்தியைத்தான் பின்பற்றி வருகிறது. அது தேர்தலுக்காக தொண்டர்களை அணி திரட்டுவதுதான். தொண்டர்களின் வேலை அடிக்கடி தொகுதி பக்கம் சென்று மக்களை சந்திப்பதுதான். தொண்டர்கள் சோர்ந்துவிடாமல் பார்த்துக்கொள்வதுதான் எங்களது பணியாகும். எங்களது தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் இப்போதே வெற்றிக்கு உழைக்க ஆரம்பித்துவிட்டனர். குறிப்பாக கட்சி பலவீனமாக உள்ள பகுதிகளில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர் என்கிறார் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர்.

முந்தைய தேர்தலில் சிறப்பாக செயல்பட்ட சுனில் பன்ஸ்ஸாலையே 2024 இல் தேர்தல் பொறுப்பாளராக இருக்கும்படி பா.ஜ.க. தலைமை கேட்டுக் கொண்டுள்ளது. மாநிலத்தில் கட்சியை எப்படி நடத்திச் செல்வது என்பது பன்ஸாலுக்கு கைவந்த கலை. தொண்டர்களை பின்னணியிலிருந்து இயக்குவது எப்படி என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். வரும் தேர்தலில் வேட்பாளரைத் தெரிவு செய்வதிலும் அவர் முக்கியப் பங்காற்றுவார் என்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள்.

இதற்கிடையே எதிர்ப்பு அலைகளை சமாளிக்க வேட்பாளர்களை மாற்றுவதிலும் பா.ஜ.க. கவனம் செலுத்தி வருகிறது. 70 வயதை கடந்துவிட்ட  வேட்பாளர்கள், தொகுதியில் சிறப்பாக செயல்படாத உறுப்பினர்களுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிப்பதில்லை என்று பா.ஜ.க. முடிவு செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் செய்யத்தவறியவை, வாரிசு அரசியல், ஊழல், தேசிய எதிர்ப்பு வாதம் ஆகியவற்றை கையிலெடுத்து பிரசாரம் செய்யவும் பா.ஜ.க. திட்டமிட்டு வருகிறது. எதிர்க்கட்சிகள் பிரிந்து நின்றால்தான் தங்களுக்கு வெற்றி சாதகம் என பா.ஜ.க. நினைக்கிறது.

சிறுபான்மையினர் மற்றும் தலித் வாக்குகளைக் கவர்வதில் பா.ஜ.க. முக்கிய கவனம் செலுத்தி வருகிறது. அவர்கள்தான் மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகளால் அதிகம் பயன்பெற்றவர்கள். எனவே அவர்களை அணுகி வாக்குகளைப் பெறுவதில்தான் நாங்கள் குறியாக இருக்கிறோம் என்று தொண்டர் ஒருவர் குறிப்பிட்டார்.

மாஃபியாக்களுக்கு எதிரான புல்டோசர் நடவடிக்கைகள் மூலம் நடுத்தர மற்றும் உயர்சாதி மக்களின் கவனத்தை ஈர்க்கவும் பா.ஜ.க. தேர்தல் வியூகத்தை வகுத்துள்ளது. இப்போதெல்லாம் வர்த்தகர்களும், கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் யாரும் தங்களை மிரட்டி பணம் பறிப்பதாக புகார் கூறுவதில்லை. இதுவும் எங்களுக்கு சாதமான அம்சமாகும் என்கின்றனர் பா.ஜ.க.வினர்.

எங்களது வெற்றிக்கு சாதகமான அம்சங்கள் பல இருக்கின்ற போதிலும் நாங்கள் மெத்தனமாக இருக்க விரும்பவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து பிரிந்து சென்றவர்களை நாங்கள் இப்போது மீண்டும் அணிக்குள் இழுத்துவந்துள்ளோம்.

தேர்தல் பிரசாரத்திற்காக சினிமா நட்சத்திரங்களையோ அல்லது கிரிக்கெட் வீரர்களையோ நாங்கள் நம்பியிருக்கவில்லை. எங்களுக்கு மோடியும், யோகியும் இருக்கும் போது, வேறு யாரை நாங்கள் தேடிச் செல்லவேண்டும் என்கின்றனர் பா.ஜ.க. தலைவர்கள்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com