திருப்பத்தூருக்கு வந்தாச்சு ஆய்வகம்!

Tirupattur Laboratory
Tirupattur Laboratory
Published on

பல்வேறு நிர்வாக காரணங்களுக்காகவும், மக்களின் அலைச்சலை குறைப்பதற்காகவும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை என மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. இதில் திருப்பத்தூர் மாவட்டத்தை பொருத்தமட்டில் மாவட்டம் பிரிக்கப்பட்டிருந்தாலும் பல்வேறு வசதிகள் இல்லாமலேயே இருந்து வந்தது. குறிப்பாக அலுவலகங்களுக்கு கூட கட்டிடங்கள் இல்லாத நிலை காணப்பட்டது. பின்னர் படிப்படியாக அரசிடம் இருந்து எம்.எல்.ஏ, எம்.பி மூலமாக நிதி பெற்று, அரசுக்கு சொந்தமான கட்டடங்கள் பல கட்டப்பட்டன.

மேலும், புதிதாக மாவட்டம் பிரிக்கப்பட்டாலும், இங்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு தலைமை மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு ஏதாவது ரத்த பரிசோதனை செய்ய வேண்டும் என்றால் ரத்த மாதிரிகள், வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அல்லது கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றிற்கு கொடுத்து விடப்பட்டு, அங்குள்ள ஆய்வகங்களில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் முடிவுகள் தெரிவிக்கப்பட்டு வந்தன. இதனால் நேரமும், காலமும் வீணாகிக் கொண்டே சென்றது. இதனால் சிகிச்சை அளிப்பதிலும் சற்று தாமதம் ஏற்பட்டு வந்தது.

அதன் பின்னர் திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் மூலமாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்திற்கு ஒரு ஆய்வகம் தொடங்க அரசு நிதி பெறப்பட்டு புதிதாக கட்டுமான பணி தொடங்கியுள்ளது.

டெங்கு உட்பட பல்வேறு இனம் புரியாத காய்ச்சல்கள் வந்து மக்களை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குவதால் ரத்த பரிசோதனை என்பது உடனடியாக செய்து, முடிவுகளை தெரியப்படுத்த வேண்டிய கட்டாயம் திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்திற்கு ஏற்பட்டது. இதைக் கருத்தில் கொண்டு சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் சித்ரசேனா மற்றும் டாக்டர்கள் குழுவினரின் பல்வேறு முயற்சிகளுக்கு பின்னர் பொது சுகாதாரத் துறை சார்பில் மாவட்ட அளவிலான ஒரு ரத்த பரிசோதனை ஆய்வகம் திருப்பத்தூர் புதுப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தினுள் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு ஒரு மைக்ரோ பயாலஜிஸ்ட், ஒரு லேப் டெக்னீசியன் மற்றும் ஒரு உதவியாளர் ஆகியோர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்:
சென்னை மாநகர சாலைகள் ஆக்கிரமிப்பு! மனிதனோ கடைகளோ இல்லை... பின் வேறென்ன?
Tirupattur Laboratory

மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் யாரேனும் காய்ச்சல் என அனுமதிக்கப்பட்டால் அவர்களின் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு இங்குள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். இங்கு வரும் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு, அவர்களுக்கு என்ன மாதிரி காய்ச்சல் என்பதை மறுநாளே தெரிவிக்கும் வகையில் இங்கு முழுவீச்சில் பணிகள் நடந்து வருகின்றன. நாள் ஒன்றுக்கு 30 முதல் 40 பேர்களின் ரத்த மாதிரிகள் இங்கு பரிசோதிக்கப்படுவதாக மருத்துவ வட்டாரத்தினர் தெரிவித்தனர்.

இதனால் காலமும் நேரமும் மிச்சம் மற்றும் மக்களும் உடனுக்குடன் தங்களுக்கு என்ன மாதிரியான காய்ச்சல் என்பதை தெரிந்து கொள்ளலாம். அதற்கேற்ற சிகிச்சையும் உடனடியாக தொடங்கப்பட்டு விடும் என்பது ஆறுதலான விஷயமாகும்.                     

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com