டிமான்டே ஜீசஸ்

அத்தியாயம் - 3
டிமான்டே ஜீசஸ்
Published on

காலை எழுந்தேன். ஓட்டலுக்கு அருகே இருந்த பேக்கரிக்கு சென்று காப்பி மற்றும் சாண்ட்விச்சை உண்டேன். மூன்றரை யூரோதான் வந்தது. நான் சென்றது வெயில் பீக்கில் இருக்கும் ஜூலை மாதம் என்பதால் எலெக்ட்ரோலைட்ஸ் பவுடரை நிறைய வாங்கிப்போயிருந்தேன். ஒரு பாட்டில் குளிர்நீரை வாங்கி எலெக்ட்ரோலைட்ஸ் பவுடரை உள்ளே போட்டு குலுக்கினால் எலெக்ட்ரோலைட்ஸ் நீர் தயார். வெயில் காரணமாக வரும் டிஹைட்ரேஷனில் நாவரட்சி முதல் உயிரிழப்பு வரை ஏற்படும். காரணம் வியர்வையில் உப்பு இழப்பு ஏற்படுவதுதான். வெறும் நீர் குடித்து அதை சரி செய்துகொள்ள முடியாது. 

காலை உணவுக்கு பின், வெயில் கொளுத்தியது. ஓட்டலில் இருந்து நான் செல்லவிருந்த மிந்கோ பல்கலைக் கழகத்துக்கு (University of Minho)  நடந்து சென்றேன். அரைகிமி தூரம். அதனால் எலெக்ட்ரோலைட்ஸ் நீரை மெதுவாக உறிஞ்சியபடி மின்கோ பல்கலைகழகத்துக்கு சென்றேன். பிராகாவின் பெரிய பல்கலைகழகம் என பெயர். ஆனால் நம் ஊர் கல்வி தந்தைகள் நடத்தும் சுயநிதி கல்லூரிகளை எல்லாம் பார்த்தபின் இதை பார்த்தால் ரொம்ப சாதாரணமாக இருந்தது. கிளாமரே இல்லாத கட்டிடங்கள். போர்ச்சுக்கீசிய மானவர்கள் நம் கல்விதந்தையரின் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைகழகங்களை பார்த்தால் மயக்கம் போட்டு விழுந்துவிடுவார்கள்.

பல்கலைக்கழக மாணவன் ஒருவன் நல்லா பேசினான். போம் ஜீசஸ் டிமாண்டே (Bom jesus De Monte) எனும் மலைக்கோயிலுக்கு செல்ல பரிந்துரைத்தான். “போம் ஜீசஸ்” என்றால் “நல்ல ஜீசஸ்” என பொருளாம். டிமான்டே என்றால் "மலைமேல்" என பொருளாம். "மலை மேல் உள்ள நல்ல ஏசு" என பொருள். “டிமான்டே” என்ற பெயரை எங்கே கேள்விப்பட்டிருக்கிறேன் என யோசித்ததும் "டிமான்டே காலனி" திரைப்படம் நினைவுக்கு வந்தது. ஆக இந்த திரைப்படத்தின் பின்னனியிலும் இருப்பது போர்ச்சுக்கீசியரின் பாதிப்புதான் போல.

இந்த போம் ஜீசஸ் டிமான்டே கோயில் போர்ச்சுக்கலின் மிக தொன்மையான ஆலயங்கலில் ஒன்று. யுனெஸ்கோ வரலாற்று சின்னமாக அறிவிக்கபட்டுள்ளது. 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சர்ச். "இங்கிருந்து ஐந்து கிமி தொலைவுதான். பஸ்ஸீல் போகலாம். ஆனால் பழங்காலத்தில் நடந்து மலையேறி தான் சர்ச்சுக்கு போவார்கள். ஏசுவின் துயரத்தை (Passion /Suffering of Christ) சித்தரிக்கும் சர் என்பதால் மலை மேல் ஏறுகையில் முட்டி போட்டுக்கொண்டு நடந்தே மலையில் 700 படிகளையும் ஏறுவார்கள்" என்றான் மாணவன்.

அப்பர் கையிலாய மலைக்கு முட்டி போட்டுக்கொண்டு யாத்திரை போனதாக படித்த நினைவு. ஏதோ ஆழ்வார் ஒருவர் திருப்பதி மலையையும் முட்டி போட்டு ஏறியதாக படித்துள்ளேன். முட்டிபோட்டு முழுமலையும் ஏறுவது சாத்தியமா என சந்தேகமே படவேண்டாம்.  "ஐ ஸ்மார்ட் ஷங்கர்" எனும் தெலுங்குபடம் ஒன்று ஓடவேண்டும் என்பதற்காக ஒரு ரசிகர் முழு திருப்பதி மலையையும் முட்டிபோட்டு ஏறி வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.

போம் ஜீசஸ் மலைக்கோயிலுக்கு பஸ்ஸீல் போனேன். நம் ஊர் பழனியில் இருப்பது மாதிரி விஞ்ச் (ரோப் கார்) இருந்தது. மூன்று யூரோ கட்டணம். நடந்தே ஏறினேன். வழியெங்கும் சேப்பல் எனும் சிறுகோயில்களில் பைபிள் காட்சிகளை நினைவூட்டும் சிலைகளை வைத்திருந்தனர்.

சர்ச் மிக அழகாக பழங்கால கட்டுமானக்கலையின் முழு அழகையும் பிரதிபலிக்கும் வகையில் இருந்தது. சர்ச்சில் ஒரு கல்யாணம் வேறு நடந்துகொண்டிருந்தது. பெரிய வீட்டு கல்யானம் போல. பி.எம்.டபீள்யூ, ஆடி, லிமோசின் கார்கள் எல்லாம் காணப்பட்டன. மணமகனின் கையை பிடித்து சர்சுக்குள் அழைத்து செல்ல அவனது தாய் மகிழ்ச்சியுடன் நிற்கும் காட்சியை விடியோவில் பிடித்தேன்.

அதன்பின் ஓட்டலுக்கு திரும்பி ஒரு மதிய நேர கோழிதூக்கம் போட்டுவிட்டு மாலை நேற்றுபோன உணவகத்துக்கு போய் க்ரில் போர்க் ஆர்டர் செய்தேன். நல்ல பெரிய நாலு துண்டு போர்க், சாலட், அரிசி, ஒரு பாட்டில் நீர் எல்லாம் சேர்த்து நாலு யூரோ தான் என்றால் நம்ப முடிகிறதா?

நாளைக்கு போய் மிந்கோ பல்கலைகழகத்தில் ஒரு வேலை கொடுங்கன்னு கேட்டு இங்கேயே செட்டிலாயிடலாம்னு இருக்கேன். அந்த அளவு இந்த ஊர் பிடிச்சுபோயிடுச்சு.

இதன் பிரதமர் அன்டோனியோ கோஸ்டோ (Antonio Costo). இவரது அப்பா, தாத்தா இருவரும் கோவாவில் பிறந்தவர்கள். இவரது அப்பா போர்ச்சுக்கீசிய மொழியில் புகழ்பெற்ற எழுத்தாளர். அவர் தன் கோவா அனுபவங்களை எழுதிய நூல் போர்ச்சுகிசிய மொழியில் ரொம்ப பிரபலம். பிரதமர் அன்டோனியோ கோஸ்டோ இளவயதில் மர்கோவாவில்தான் வளர்ந்தார். அவரது பூர்விக வீடு அங்கேதான் இருக்கு. உறவினர்கள் அங்கே இப்போதும் வசிக்கிறார்கள்.

2017ல் அங்கே வந்து விசிட் அடிச்சு சாப்பிட்டுவிட்டும் போயிருக்கிறார். அங்கே கொன்கணி மொழியில் அவரது செல்ல பெயர் பபாஷ்  (பொடியன்)

பபாஷுக்கு இந்திய அரசு ஓவர்சீஸ் இந்திய குடியுரிமை கார்டு கொடுத்திருப்பதால் அவரை பார்த்து ஒரு போர்ச்சுகீஸ் க்ரீன் கார்டு கேட்டால் கொடுக்காமயா இருக்கப்போறார்?

அன்டோனியோ கோஸ்டா கோவாவில் இருந்திருந்தால் கோவா முதல்வர் ஆகி இருந்திருப்பார். போர்ச்சுக்கல் போனதால் அதன் பிரதமர் ஆகிவிட்டார்.

 (தொடரும்)

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com