புத்தரின் வாழ்க்கையும், 3 R சுற்றுச்சூழல் தத்துவமும்!

புத்தரின் வாழ்க்கையும், 3 R சுற்றுச்சூழல் தத்துவமும்!

சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு நாம் 3 R - Reduce, Reuse, Recycle என்பதைப் பின்பற்ற வேண்டும். பொருட்கள் அதிகமாக நிலத்துக்குச் செல்வதால், நமது நிலம் மாசடைகிறது. நமது நிலத்தடி நீர், ஆறு, குளங்கள் போன்றவை மாசடைகின்றன. இவற்றை எரிப்பதன் மூலம், நமது காற்று மாசடைகிறது.

எனவே, நாம் இந்த ‘மூன்று ஆர்’ (3 R) விதியைப் பின்பற்ற வேண்டும்.

1. Reduce - குறைத்துக் கொள் - பொருட்கள் வாங்குவதைக் குறைக்க வேண்டும். தேவைக்கு மட்டுமே பொருட்கள் வாங்க வேண்டும். தரமான நீண்ட நாட்கள் உழைக்கும் பொருட்களை வாங்க வேண்டும். உதாரணமாக, ஏற்கனவே, 10 சட்டை உள்ளவர், 11வது சட்டை வாங்குவதைத் தவிர்க்கலாம்.

2. Reuse - மறுபடி பயன்படுத்து - பொருட்களை மறுபடி மறுபடி பயன்படுத்த வேண்டும். பொருட்களை வேறு பயன்பாட்டுக்குப் பயன்படுத்த வேண்டும். உதாரணமாக, கண்ணாடி சீசாக்களை வீட்டில் பொருட்களை சேமிக்கப் பயன்படுத்தலாம்.

3. Recycle - மறுசுழற்சி செய் - பொருட்களை மறுசுழற்சி செய்யலாம். பாதுகாப்பான முறையில், பொருட்களை மறுசுழற்சிக்கு அனுப்பலாம். உதாரணமாக, பழைய செய்தித்தாள்கள், இரும்பு, அலுமினிய பொருட்களை காயலான் கடைக்கு கொடுக்கலாம். பழைய பொருந்தாத துணிகளை ஆசிரமங்களுக்குக் கொடுத்து உதவலாம்.

இவ்வாறு நாம் செய்வதன் மூலம், பொருட்கள் ஆரோக்கியமானதொரு முறையில், பயன்பாட்டில் உள்ளன. சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வகையில், பொருட்களின் பயன்பாடு உள்ளது.

புத்தரின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சி, இதனை நமக்கு நன்கு விளக்குகிறது.

புத்தரின் சீடர், புத்தரிடம் ஒரு வேண்டுகோளினை வைத்தார்:

சீடன்: குருவே. எனது ஆடை மானத்தினை காப்பாற்றும் அளவினை விடவும், மோசமாகி விட்டது. எனக்கு புதிய ஆடை ஏற்பாடு செய்யுங்கள்.

புத்தர் சீடனது ஆடையினைப் பார்த்து, அது நிஜமாகவே மோசமான நிலையில் இருப்பதனைக் கண்டார். கடைக்குச் சென்று, சீடனுக்கு புதிய ஆடைகளை வாங்கித் தந்தார்.

சில நாட்களுக்குப் பின்னர், சீடனைக் காண, அவனது இருப்பிடம் சென்றார்.

புத்தர்: உனக்கு புதிய ஆடைகள் சௌகரியமாக உள்ளனவா ?

சீடன்: நன்றி குருவே. புதிய ஆடைகள் மிகவும் சௌகரியமாக உள்ளன.

புத்தர்: புதிய ஆடைகள் வந்து விட்டனவே. பழைய ஆடைகளை என்ன செய்தாய் ?

சீடன்: அவற்றை நான் எனது படுக்கை விரிப்பாகப் பயன்படுத்துகிறேன் குருவே.

புத்தர்: நல்லது. பழைய படுக்கை விரிப்பினை என்ன செய்தாய்?

சீடன்: அவற்றை நான் திரைசீலையாகப் பயன்படுத்துகிறேன் குருவே.

புத்தர்: நல்லது. பழைய திரைசீலைகளை என்ன செய்தாய் ?

சீடன்: சமையலறையில் சூடான பாத்திரங்களைக் கையாளப் பயன்படுத்துகிறேன் குருவே.

புத்தர்: நல்லது. பழைய சூடான பாத்திரங்களை கையாளும் துணிகளை என்ன செய்தாய்?

சீடன்: அவற்றை தரையினைச் சுத்தம் செய்யப் பயன்படுத்துகிறேன் குருவே.

புத்தர்: நல்லது. பழைய தரையினைச் சுத்தம் செய்யும் துணிகளை என்ன செய்தாய் ?

சீடன்: அந்த துணிகள் மிகவும் கிழிசலாக உள்ளபடியால், அவற்றை கொண்டு திரிகள் செய்து, விளக்குகள் ஏற்றப் பயன்படுத்துகிறேன் குருவே.

இருக்கும் பொருட்களை மறுசுழற்சி செய்யும் சீடனின் குணத்தினைக் கண்டு திருப்தியடைந்த புத்தர், ஒரு புன்னகையினைப் பூத்தபடியே, இருப்பிடத்தினை விட்டு வெளியேறினார்.

புத்தரின் இந்தக் கதையானது, பொருட்களின் மறு சுழற்சி பற்றிய 3 R என்ற தத்துவத்தை (Reduce, Reuse, Recycle) அருமையாக விளக்குகிறது. பொருட்களை வாங்குவதைக் குறைக்க முடியுமா, பொருட்களை மறுபடி மறுபடி பயன்படுத்த முடியுமா? பொருட்களை மறுசுழற்சி செய்ய முடியுமா என்பதனை புத்தரின் சீடரின் வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது.

பொருட்களை மறுசுழற்சி செய்வதன் மூலமாக, நாம் சிக்கனமாகப் பணம் சேமிப்பது மட்டுமன்றி, சுற்றுப் புற சூழலுக்கும் பாதகம் ஏற்படுத்தாமல், வாழ்க்கையினை வாழ முடியும். அத்தகையதொரு வாழ்க்கையினை நாம் அமைத்துக்கொள்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com