பைபாஸ் சர்ஜரி

பைபாஸ் சர்ஜரி
Published on

ள்ளிரவு...  தாம்பரம் பைபாஸ் சாலையில் காலியாக வந்து கொண்டிருந்த டாக்ஸியை சிநேகமாக கைகாட்டி நிறுத்தினார் அந்த பெரியவர்...

  ‘ சொடக்கு மேல சொடக்கு போடுது... என் விரலு வந்து... நடுத்தெருவில் நின்னு... சொடக்கு மேல... ஏய் சொடக்...’

கார் ஸ்டீரியோவை பாஸ் செய்துவிட்டு சவாரியை கவனித்தார் டிரைவர்...

தமிழ்நாட்டின் பிரபல அரசியல் கட்சிக்கு இந்த வயதிலும்  சளைக்காமல் தொண்டனாகவே உழைத்துக் கொண்டிருக்கிறார் என்று அவர் வேஷ்டியின் கறைக் கோடுகள் தெரிவித்தது...

       “ இன்னா பெருசு... எங்க போணும் ?” என்றான்.

        பெரியவர் கார் கதவருகே நெருங்கி வந்து... சற்று குனிந்து... வெண் புருவங்களை சுருக்கி... அவனை சில நொடிகள் உற்றுபார்த்து... வயதுக்கேற்ற முதிர்ந்த குரலில்,

         “ சமயபுரத்துக்கு...” என்றார்...

        ஒரு மஞ்சப்பை அவர் கக்கத்தில் அடைகாக்கப்பட்டிருந்தது... அளவெடுத்து தைக்கப்பட்ட தோல் செருப்பு... அது வாங்கியபோது கருப்பாக இருந்திருக்கலாம்... நரைக்க மறுத்த சில கருப்பு மயிர்கள் தலையிலும் மீசையிலும் ஊடுருவியிருந்தது... ஒளி வீசும் கண்கள்... அதனால் முகத்தில் ஒருவித தேஜஸ்...

        டிரைவர், “ ஸ்ஸ...மய...புரமா...? நைட்டு சவாரியாச்சே... ரேட் ஜாஸ்தியாகும்...” என்றான்.

        “எவ்வளவு ஆகும்...?” என்று பெரியவர் கேட்கும்போது,

        எதிரே பேய்கள் போல அலையும் கார், பஸ், லாரிகளின் தவணை முறை லைட் வெளிச்சத்தில்,

        பெரியவரின் வலது கை மணிக்கட்டில் சிவப்பு சாமிக் கயிறு... இடது கையில் பிரபல கம்பனியின் பழைய மாடல் வாட்ச்... சட்டை பாக்கெட்டில் பௌண்டைன் பேனா... விரலில் கல் பதித்த ஒரு வெள்ளி மோதிரம்... கழுத்தில்... கழுத்தில்... அது வெறுமையாகவே இருந்தது... 

        டிரைவர் அடிக்கடி வாயில் குச்சியை வைத்து பல் இடுக்குகளில்...

        சற்று முன்புதான் அவன் (நான்-வெஜ்) சாப்பிட்டுருக்க வேண்டும்..

        “ த்தூ...   தூ...   த்தூ...” என்று சில துப்பல்களுக்கு இடையில் ரேட்டை கூறினான்... அவன் பேச்சில் சென்னைத்தனம் தெரிந்தது...

        அவன் சொன்ன தொகையை கேட்டு பெரியவருக்கு மார்பு வலி எதுவும் வரவில்லை...

        “ ரொம்ப ரொம்ப ஜாஸ்தியா தெரியுதேப்பா...” என்றார் சன்னமான குரலில்...

        அதற்கு அவன், ‘ சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு..,  டீசல் விலையேற்றம்.., ஜி.எஸ். டி.., டோல்கேட் கப்பம்.., ஆர். டி. ஒ. ஆபிஸ் அட்டூழியங்கள்’ போன்ற எந்த காரணத்தையும் உதவிக்கு கூப்பிடாமல்,

        “ இஷ்டம்னா குந்து... இல்லாங்காட்டி வுடு” என்றான்.

        தெனாவெட்டாக பேசிய அவன் முகத்தில்,

        ‘இரண்டு நாளா சரியாவே தூங்கல’ என்றது சிவந்த கண்கள்... பெருத்துக் கொண்டிருக்கும் வயிறு. ஸ்டியரிங்கிற்கும் அதற்கும் ஒரு இன்ச் இடைவெளி இருந்தது. சிகரெட் நெடியை பாக்கு வாசனை சமாளித்துக் கொண்டிருந்தது. அடர்த்தியான மீசையும் குறுந்தாடியும் அவன் வயதை முப்பத்தி எட்டுக்குள் அடக்கியது. சட்டைப்பையில் ஸ்மார்ட் போனின் தலை தெரிந்தது.

        பெரியவர், “சரிப்பா கோவிச்சுக்காதே... நான் ஏறிடுறேன்...”

        பின் சீட்டில் ஏறி, நடுவாந்தரமாக அமர்ந்து, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.  பிறகு இரண்டு கைகளையும் அகல விரித்து ஒரு சமஸ்தானத்தின் ராஜாபோல அமர்ந்தார்.

        டிரைவர் டேஷ் போர்டுக்கு மேலே கதம்பமாக கிடந்த பில் போன்ற பேப்பர்களை வேகமாக களைந்து சரிபார்த்து சீலிங் ரேக்கில் சொருகினார். நியூஸ் பேப்பரை மடித்து கதவு பையில் திணித்தார். ரியர் கிளாஸ் ஏற்கெனவே சரியான நிலையில்தான் இருந்தது.

        கார் கண்ணாடியின் வலது ஓரத்தில் ‘வாடகைக்கு’, கீழே இரண்டு ‘செல் நம்பர்கள்’ இருந்தன. சின்னச்சின்ன சாமி போட்டோக்கள் ஆங்கங்கே சொருகியும் ஒட்டியும் இருந்தது.

        பெரியவர் மஞ்சப்பையை எடுத்து மீண்டும் ஒருமுறை அதை சுருட்டி அருகில் வைத்துக்கொண்டார்....

        கண்ணாடி நடுவில் ஆடிக்கொண்டிருந்த வெளிநாட்டுச் சிறுமி பொம்மை யாரோ தூக்கில் தொங்கியதை அவருக்கு நினைவுப்படுத்தியது.

        டிரைவர், “ஏ சி யா...?  நான்-ஏ சி யா...? என்றார்.

        “இந்த குளிர்ல எதுக்குப்பா ஏ.சி., அதான் ஜன்னல் திறந்திருக்கே... இதேபோதும்... ரேடியோல ஏதாவது பழைய பாட்டா போடேன்...”

        அவன் உடனே செய்யவில்லை. சார்ஜில் இருந்த இன்னொரு மொபைலை எடுத்தான். முழு உயிர் இன்னும் வராததால் அப்படியே வைத்தான். தண்ணீர் குடித்தான்... ஹான்ஸை நசுக்கி கீழ் உதடை விரலால் இழுத்து உள்ளே புதைத்து மூடினான்... இருக்கையை சரிசெய்து கொண்டு...

இப்போது பெரியவரின் ஆசையை நிறைவேற்றினான்... எஃப். எம்மில்,

        ‘மா... னா... ட்டம்... தங்க மயிலாட்டம்... பூவாட்டம்... வண்ணத் தேராட்டம்... தானாடும் மங்கை சதிராட்டம்...” 

        அக்கம்பக்கத்தில் மங்கள ஹாரன்கள் முழங்க, பலாத்காரமாக ஸ்டியரிங் சுழன்று, இப்போது சவாரி சமயபுரத்துக்கு ரெடியாகி, நகரத்தின் போக்குவரத்துப் பூச்சிகளோடு பூச்சியாய் கலந்து பறந்தது.

        வண்டியின் வேகம் ஆரம்பத்திலேயே அதிகமாக இருந்தது.

பி. சுசீலாவின் குரலில் லயித்துக் கொண்டிருந்த பயணி,

       “ இவ்வளவு வேகம் வேண்டாம்ப்பா... மெதுவாவே போ...” என்றார்.

அதற்கு அவன், ‘இதெல்லாம் ஒரு ஸ்பீடா’ என்பது போல சிரித்தான்.

        அவருக்காக இல்லாவிட்டாலும் பெருங்குளத்தூரில் கொஞ்சம் டிராஃபிக் அதிகம் என்பதால் வேகத்தைக் குறைத்தான்.

        பிறகு மீண்டும் அதே வேகம்...

        சென்னை டு திருச்சி பஸ்...முந்தினான்... ஒரு டிப்பர் லாரி... முந்தினான்... ஒரு சிவப்பு கார்... முந்தினான்... ஒரு வெள்ளை கார்...முந்தினான்... சென்னை டு தூத்துக்குடி பஸ்...முந்தினான்... மண் லாரி...முந்தினான்... பால் வண்டி(அவசரம்)...முந்தினான்... ஏ.பி.டி. பார்சல் சர்விஸ்...முந்தினான்... எக்ஸ்பிரஸ் கொரியர்...அதையும் முந்தி...

        சார்ஜரில் இருந்த செல்ஃபோனை உருவி, “பெரியவரே! உங்க செல்லை சார்ஜ் பண்ணனும்னா பண்ணிக்கோங்க...”

       “என்கிட்ட செல்போன்லாம் கிடையாதுப்பா...” என்றது பின்சீட்டு.

       “இன்னா பெருசு... இந்த அவசர உலகத்துல செல்ஃபோன்லாம் வச்சிக்க வேண்டாம்மா...”

       “அப்படி என்னப்பா அவசரம்...கட்டையில போற அவசரம்?” என்று கேட்டபோது, அந்த கார் 120ல் சென்று கொண்டிருந்தது... அவன் அதற்கு அசைப்போட்டபடி சிரித்தான்.

        ஒரு ஏரோப்பிளேன் பயங்கர சத்தத்துடன் அருகாமையில் சென்றது. அதை பெரியவர் கூர்ந்தார்....

        அவனிடம் பேசுவதற்கு சுவாரசியமான விஷயம் ஒன்றும் இருக்கப் போவதில்லை என்று பார்வையை விலக்கினார்... பிறகு ஜன்னலோரம் சாய்ந்தவாறு, சிங்காரச் சென்னையின் அறுந்த வால் பகுதிகளையெல்லாம் பார்க்க ஆயத்தமானார்.

       தண்ணீர் குழாயின் கடைசி சொட்டுக்கள் போல ஒன்று இரண்டு ஐ.டி.கம்பெனிகள். வங்கிகள்... சில ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல்கள், தொண்டு நிறுவனங்கள்... சுவரெங்கும் நேற்றைய இன்றைய நாளைய முதல்வர்களின் அரசியல் புகழாரங்கள்... ஸ்டார் ஹோட்டல்கள்... சின்னச்சின்ன ஹோட்டல்கள்... கையேந்தி பவன்கள்... பிரைவட் பஸ் டிராவல்ஸ்... பெரிய பெரிய அபார்ட்மெண்ட்கள்... வேலி போல ஊரெங்கும் சினிமா போஸ்டர்கள்... பிளக்ஸ் போர்டுகள்... நடைபாதை நித்திரையில் பிச்சைக்காரர்கள்... போலிஸ் செக் போஸ்டுகள்... குப்பை மேடுகள்... மங்கலான தெருவிளக்கு வெளிச்சத்தில் சில பெண்கள் (?)...

       நகர இயந்திரம் பகலில் ஆர்ப்பரித்து ஓடி இரவில் மெல்ல அடங்கி இருந்தது...

       பி. சுசீலா எப்பவவோ போய் டி.எம்.எஸ்,

       ‘செல்லக் கிளிகளாம் பள்ளியிலே.. செவந்திப் பூக்களாம் தொட்டிலிலே என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை’ பாடிக் கொண்டிருந்தார்...

        சில நொடிகளில் பெரியவர் கண் அயர்ந்தார்...

        டிரைவரின் வலது கை ஸ்டீரிங்கிலும் இடது கை வாட்ஸ் அப்பிலும் இருந்தது... அப்போதும் கார் அனாயசமாக சென்று கொண்டிருந்தது.

        ஒரு மணி நேரம் தாரளமாக கடந்திருந்தது.

        திடீரென டயர் அழுந்தி தேயும் சத்தம் கேட்க, இடது கதவருகே சாய்ந்திருந்த பெரியவர் வலது பக்கம் தொபுக்கென்று விழுந்து எழுந்தார்... காரணம்...

1.     சடன் ப்ரேக் 2. வலது பக்கம் ஒடித்தது 3. இடது பக்கம் ஒடித்தது 4. கியர் மாற்றியது 5. ஆக்சிலேட்டரை விட்டு விட்டு மிதித்தது...

        மேற்கூறிய பஞ்ச பாவங்களை க்ஷ்ண நேரத்தில் டிரைவர் செய்ததால்.

        பெரியவருக்கு காதிலும் தலையிலும் தோளிலும் வலி விர்ர்....

        “என்னப்பா ஆச்சு...?” என்றார் கோபமாக...

        “ஒண்ணுமில்ல பெருசு... ஒரு நாய் சட்னியாயிருச்சு...” என்றான்.

        அதிர்ந்துபோன பெரியவர், “என்னப்பா இப்படி இரக்கமில்லாம சொல்ற...?” என்றார் பரிதாபமாக.

        “வுடு பெருசு அதுக்கு விதி அவ்வளவுதான்...”

        “ஒருவேளை மனுஷங்க யாரவது குறுக்கே வந்திருந்தா...?”

        “அவனும் சட்னிதான்...”

        “அய்யோ..! முதல்ல இந்த சட்னின்னு சொல்றதை நிறுத்துப்பா...கேட்கவே நாராசமா இருக்கு...” காதைப் பொத்திக் கொண்டார்.

        “நான் என்ன பண்ணுவேன் பெருசு... வண்டி போற வேகத்துல நாயி... எரும... கன்னுகுட்டி... கைத... ஆளுன்னுலாம் பார்க்குமா சொல்லு...”

        “மனுஷாள் யாராவது அடிபட்டு செத்துப்போயிருந்தா அவனேயே நம்பியிருக்குற குடும்பம் உடஞ்சி போகுமே... அதை பத்தி எப்பவாவது யோசிச்சியா...?”

        “அதான் சொன்னேனே பெருசு.. .வண்டி போற வேகத்துல...”

        பெரியவர் தலையை தடவிக்கொண்டே, “சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லாதப்பா... உனக்கும் ஒரு குடும்பம் உன்னை நம்பி இருக்கு...?”

        “எதுக்கு இப்போ தேவையில்லாம டென்ஷன் ஆவுற...? இங்க பாரு பெருசு... (திரும்பிப்பார்த்து) பதினேழு வருஷம் எக்ஸ்பீரியன்ஸ்... ஸ்டாண்டாண்ட வந்து கேளு, நம்ம பேரே (திரும்பி) ஸ்பீடு பாஸ்கரன்பாங்க... ஸ்டீரிங்கை புடிச்சன்னா வண்டி சும்மா (திரும்பி) ராக்கெட் மாதிரி போகும்...”

        “பாஸ்கரா ! நான் சொல்றது உனக்கு விளங்கலன்னு...”

        “கம்முன்னு இரு பெருசு... எரிச்சல கிளப்பாத...” என்று அவர் முகத்தில் அறைந்தாற் போல கூறி, ஸ்டீரியோவில் பழையப் பாட்டை நிறுத்தி...

        புத்தம்புது புரியாத பாடலை போட்டுக் கொண்டார்... அந்தப் பாடலில், வாத்தியங்களின் நாய்ஸ் பாடகரின் குரலை சின்னாபின்னமாக்கிக் கொண்டிருந்தது...

        இருவரும் சில நிமிடங்கள் பேசவில்லை... காருக்குள் இன்ஜினின் சீரான இசையும், பாடலின் இரைச்சலையும் தவிர ஒருவித  மௌனம் நிலவியது...

        ஹெட்லைட்டில், ‘திண்டிவனம் உங்களை வரவேற்கிறது’ போர்டு தெரிந்தது.

        பாஸ்கரன், பாடல் ஒலியை லேசாக குறைத்து பின்னால் திரும்பி, பெரியவர் தூங்கவில்லை என்று தெரிந்து...

        “என்ன பெருசு... சைலண்ட் ஆயிட்ட போல, கோவமோ...?”

        “அதெல்லாம் ஒண்ணுமில்லப்பா...”

        “சரி... என்னவோ சொல்லவந்தியே... அதை முழுசாத்தான் சொல்லிறேன்...”

        “தம்பி ! இங்க பிரச்னை உன் திறமையப்பத்தி இல்லை...

நம்மளோட அதீத ஆர்வமும் திறமையும் வேகமும் அடுத்தவங்களை காயப்படுத்திட கூடாது...”

        “நான் ஒண்ணும் வேணும்ன்னு செய்யலையே... தெரியாமதானே நடக்குது...?”

        “நாம செய்யிற தவறுகள்ல பாதி தெரியாமதான் செய்யிறோம்...

ஆனா அதுக்காக கொஞ்சம்கூட வருத்தப்படாம இருக்குறதுதான் தவறுலேயே பெரிய தவறு... இப்போ நீ நாயை அடிச்சிட்டு...”

        “அட சும்மா உளறாத பெருசு... அது விதி... என் வண்டியலதான் சாகணும்னு இருக்கு... அதுக்கு என்ன பண்ண முடியும் சொல்லு...”

        “தம்பி உயிர்ச்சேதம் பழி பாவத்தைக் கொண்டு வரும்பா...”

        “நல்லா கொண்டு வந்துச்சு... இதுக்கே இப்படி பீல் ஆகுறியே... போன மாசம் நடந்த கதையை கேட்டே நீ மெர்சல் ஆயிருவே...”

        “பரவாயில்ல சொல்லு...”

        “போன மாசம் இதே பைபாஸ்ல, இதே நேரம், இதைவிட வேகமா, திண்டிவனம் தாண்டி போயிட்டு இருந்தேன்...”

        பெரியவர் கேட்க ஆர்வமானார்...

        “திடீர்னு எந்த கபோதியோ குறுக்கே வர...”

பெரியவர் நெஞ்சை பிடித்துக் கொண்டார்... “அய்யய்யோ...”

        “அவ்வளவுதான் ‘தடார்... டம்... தடார் ’னு ஒரு சத்தம் மட்டுந்தான் கேட்டுச்சி...”

        பெரியவர் பதைந்துபோய் “இறங்கிப்போய் பார்த்தியா...?”

        “பார்த்தேன்... அம்பது அடிக்கு அங்கிட்டு ஒரு பாடி துடிச்சிட்டு கிடக்கு... வெள்ளைச்சட்டை வெள்ளை வேட்டி பூரா ஒரே ரத்தம், வேர்ல்டு மேப் மாதிரி...” சிரித்துக்கொண்டே கூறினான்.

        “ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போகல?” என்றவரிடம்,

        “எவன் பெருசு போலீஸு கேசுன்னு அலையிறது... சுத்திப்பார்தேன்... என் அதிர்ஷ்டம்... கரிக்டா அந்த செகண்ட் யாரும்  இல்லை... ஒரு வண்டிகூட போகல... வரல... நல்ல அமாவாசை இருட்டு... ‘ஜோதி நகர் ப்ளாட் விற்பனைக்கு’ன்னு ஒரு சிமெண்ட் போர்டு மட்டும் லேசா கண்ணுக்கு தெரிஞ்சுது... அவ்வளவுதான் சிட்டா பறந்துட்டேன்...”

        “அப்படின்னா யாரும் பாக்கலைன்னு அம்போன்னு விட்டுட்டே...?”

        “ஆமாம்... இப்ப என்னாச்சு... யாருக்கு தெரியும் சொல்லு...?”

        “நீ அப்படி பண்ணியிருக்கக் கூடாது... எப்படியாவது காப்பாத்திருக்கணும்...” என்றபோது,

         அவன் வாய் பாடல் வரியை கூடவே உச்சரித்தது...

        “சரி போகட்டும்... நான் உன்னை ஒண்ணு கேட்கிறேன்... அதுக்காக நீ எப்பவாவது வருத்தப்பட்டுருக்கியா?”

        “சத்தியமா இல்லை... இதெல்லாம் எங்க தொழில்ல சகஜம் பெருசு...”

        “சரி... இந்த நிமிஷமாவது தப்புன்னு உனக்கு தோணுதா...?”

        “நீ வேற.... அப்டிலாம்  ஒண்ணும் தோணலை... நான் எஸ்கேப் ஆனதே பெரிய விஷயம்..” என்றான்.

        பெரியவரின் கண்கள் சிவந்தன... இதற்கு மேல் டிரைவரிடம்  பேச அவர் விரும்பவில்லை...

        அவனோ விடுவதாக இல்லை... தன் பதினேழு வருட அனுபவத்தில் இதுபோன்ற பல  வீரப்பிரதாபங்கள் செய்தது பற்றி தொடர்ந்து பறைசாற்றிக் கொண்டே வந்தான்.            

        பின் சீட்டில் இருந்து எந்த சத்தமும் இல்லை... கார் விழுப்புரத்தை நெருங்கிக் கொண்டிருந்தது...

        “இன்னா நைனா! நான் பேசிட்டே வர்றேன், நீ பதிலே சொல்லாம...” என்று பின் சீட்டை திரும்பிப்பார்க்க, 

    சீட் காலியாக இருந்தது... 

              திடுக்கிட்ட  பாஸ்கரன் பயத்தில் உறைய... ஸ்டீரிங்கில் இருந்து கைகள் உதறி நழுவியது... கண்ட்ரோல் முறை தவறியது... அதாவது இடது பக்கம் ஒடித்தால் வலதுபக்கமும் வலதுபக்கம் ஒடித்தால் இடது பக்கமும் வண்டி திரும்பியது... அந்நேரம் பார்த்து எதிரே பார்க்கும் தூரத்தில் மஞ்சக்கலர் மண் லாரி ஒன்று வேகமாக வந்துகொண்டிருக்க...  

          அதை யமனே கிளினரோடு ஓட்டிக்கொண்டு வருவது போல தெரிந்தது அவன் கண்களுக்கு... நெடுஞ்சாலையின் இடது ஓரத்தையும் வலது ஓரத்தையும் மாறி மாறி வேகம் குறையாமல் தொட்டுக்கொண்டு போனது டயர்கள்...

          இப்போது மண் லாரி நெருங்கும் தூரத்தில் சர்ரென்று வர, இங்கே காரின் முன்னால் சடுதியில் தோன்றி புகையாக மறைந்தது அந்த பெரியவரின் உருவம் அகோரமாக சிரித்தபடி...

          அதற்குள் லாரி வந்த வேகத்தில் கார் மேல் புயலாக மோதி, கார் முற்றிலும் கட்டுப்பாட்டை இழந்து... கண்ணாடிகள் சிதறி... உள்ளே இருந்த பொருள்கள் இடம் மாறி... (ஸ்டீயரிங்க மேல் பாஸ்கரனின் கால்கள்)... இது பத்தாமல் ஐந்து முறை உருண்டு, நொறுங்கி இறுதியாக பெருத்த சத்தத்துடன் அங்கே இருந்த ‘ஜோதி நகர் ப்ளாட் விற்பனைக்கு’ சிமெண்ட் போர்டில் இடித்து சாந்தமானது...

         அந்த உருவத்தின் வெள்ளைச் சட்டையில் ரத்தக்கறை இருந்தது வேர்ல்டு மேப் மாதிரி...

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com