
வாய்விட்டுச் சிரிக்கும்போது உடல்ரீதியாக என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன.
மனம் மகிழ்ச்சியாய் இருக்கிறபோது, உடலில் சில ஹார்மோன்கள் சுரக்கின்றன. எப்படி கோபமாக இருக்கும்போது உடல் நலனுக்கு எதிரான சில சுரப்பிகள் செயல்படுகின்றனவோ, அதுபோல மனம் மகிழ்ச்சியாய் இருக்கும்போது உடல் நலனுக்கு ஏற்ற ஹார்மோன்கள் சுரக்கின்றன. அது நோய்க்கு எதிர்ப்புச் சக்தியையும், உடலுக்கு வலுவும் கொடுக்கும் திறனுள்ளது. இப்போதும்கூட, தொழுகையாலும் பிரார்த்தனையாலும், மட்டுமே கான்சர் போன்ற நோய்களிலிருந்துகூட நோயாளி பிழைத்திருப்பதாகக் கேள்விப்படுகிறோம். அதுபோல, மனிதருக்குள்ளே அவர் உணராமலே மருந்தும் இருக்கிறது. பிரார்த்தனை போலவே, ஆரோக்கியமான மனநிலையோடு சிரிப்பும், மகிழ்ச்சியும் நோயிலிருந்து அவருக்கு விடுதலை தருகிறது.
உளவியல் மருத்துவர் டாக்டர் என். மாத்ருபூதம் உள்ள ரீதியாக என்னென்ன மாறுதல்கள் ஏற்படுகின்றன என்பதை விளக்குகிறார்:
நகைச்சுவை போல அதிகபட்ச மனத் தளர்வு (மென்ட்டல் ரிலாக்சேஷன்) தருவது வேறு எதுவுமில்லை. மென்ட்டல் ரிலாக்சேஷன் எனும் இந்த மனத் தளர்வுதான், உடல் அளவிலான ஓய்வையும் தருகிறது. நகைச்சுவையை உணர்ச்சிபூர்வமாக ரசித்து, மனமும் பிறகு உடலும் அதை ஏற்கும் நிலை உன்னதமானது.
ஸ்ட்ரெஸ் என்னும் மன அழுத்தம் மிக்க சூழ்நிலை யிலிருந்து விடுதலை பெற, நகைச்சுவை உடனடியாக உதவுகிறது. நகைச்சுவை உணர்வு மிகுந்த ஒரு நபரிடம் இந்த மன அழுத்தம் இருக்க முடியாது. 'ஒரு மணி நேரம் தமாஷாகப் பேசிக்கொண்டிருந்தேன் சார். அந்த ஒரு மணி நேரமும் என்னை மறந்து இருந்தேன்!’ என்று சிலர் சொல்லுவார்கள். மனம் இறுக்கமான சூழ்நிலையில் தத்தளிக்கும்போது, இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் அதை விடப் பெரிய மருத்துவம் கிடையாது. இன்னொன்று: நகைச்சுவை உணர்வு, கடுமையான சூழ்நிலையை மனத்தளவில் அநாயாசமாக எதிர்கொள்ள நம்மைத் தயார் செய்துவிடுகிறது.
நம்முடைய குறைபாடுகளை எண்ணிப் பார்த்துச் சிரித்து நாமே பழகிக்கொள்ளக் கற்றுக்கொள்வது இன்னும் விசேஷமானது. அப்போதுதான், அதையே பிறர் சுட்டிக்காட்டும்போது தவறாக எடுத்துக்கொள்ளாமல் சரியான மனப்பக்குவத்தோடு தவறுகளை உணர்ந்துகொள்ள முடியும். அந்தப் பக்குவம், மனித உறவுகளை மேலும் பலப்படுத்தும். மனித உறவுகள் சுமுகமாகவும் சந்தோஷமாகவும் இருக்கும்போது 'மன இறுக்கம்' என்பதற்கு வழியே கிடையாதல்லவா! இப்படி நகைச்சுவை உணர்வு எல்லாக் கோணங்களிலும் சந்தோஷமளித்து ஓர் ஆரோக்கியமான மனநிலையைக் கொடுப்பதால்தான் ‘வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்’ என்கிறார்கள்.
பின்குறிப்பு:-
கல்கி 14 ஏப்ரல் 1991 இதழில் வெளியானது இக்கட்டுரை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே !
- ஆசிரியர், கல்கி ஆன்லைன்