(இசை) கலை உலகின் தலைநகரமாம் சென்னை!

Madras Day 2023
(இசை) கலை உலகின் தலைநகரமாம் சென்னை!
Madras Day 2023
Madras Day 2023

மதராஸப்பட்டணம், சென்னைப் பட்டினம், மதராஸ், சென்னை.... எப்படி அழைத்தாலும் நா இனிக்கும் வகையில் அமைந்துள்ள நகரம்தான் நம் சிங்காரச் சென்னை...! இது தமிழ் நாட்டின் தலைநகரம் மட்டுமல்ல.  கலையுலகிற்கே தலைநகரமாகும் என்றால் மிகையல்ல.

சென்னை மாநகரத்தின் வரலாற்றிலும் அதன் அபரிமிதமான பரிணாம வளர்ச்சியிலும் மகத்தான பங்கு வகித்து நிழல் போல கூடவே வருவது இசைக் கலையின் வளர்ச்சியாகும்.

1900-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தொன்மை வாய்ந்த ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி சபா இதற்கொரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. 123 வருடங்களைக் கடந்தும் நம் சென்னையைப் போலவே இன்றும் இளமையுடன் மிளிர்ந்து கொண்டிருக்கிறது.

1918-ஆம் ஆண்டிலேயே ஜெகன்னாத பக்த சபை எனும் சபை எழும்பூர் நெடுஞ்சாலையில் இருந்த ‘வேத விலாஸ்’ எனும் இல்லத்தில் தொடங்கப்பட்டது. இசை நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல் கதாகாலட்சேபங்களும் இங்கு நடைபெற்றன.

ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி சபா
ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி சபா

1927-ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடத்தப்பட்ட மாநாட்டில் இடம்பெற்ற ஒரு இசைக் கச்சேரியே பின்னர் மார்கழி (டிசம்பர் சீசன்) இசை விழாவிற்கு மட்டுமல்லாமல் மியூசிக் அகாதெமி எனும் சங்கீத வித்வத் சபை தோன்றுவதற்கும் வித்தாக அமைந்தது.

ஆரம்பத்தில் இசைப்புரவலர்கள், போஷகர்கள், ஜமீன்தார்கள், செல்வந்தர்கள் போன்றோர் இசைக்கலையையும் நாட்டியத்தையும் போஷித்து வந்தார்கள். கீற்றுக் கொட்டகைகளிலும் ஓலைக் கீற்றுப் பந்தல்களிலும் மைக் வசதி கூட இல்லாமல் பல கச்சேரிகள் நடந்துள்ளன. ஜார்ஜ் டவுன் பகுதியில் கோகலே ஹால், மயிலாப்பூர் பி.எஸ். ஹை ஸ்கூல் மைதானம் போன்ற இடங்களில் இன்றைய மியூசிக் அகாடமியில் கச்சேரிகள் நடந்துள்ளன. இன்று வானளாவிய பிரம்மாண்டமான சொந்த அரங்கில் ‘சங்கீத கலாநிதி’ விருது வழங்கும் விழாவினை நூற்றுக்கணக்கான ரசிகர்கள் ரசிக்கும் வண்ணம் மியூசிக் அகாடமி  மாறியுள்ளது.

1929-ல் மயிலாப்பூர் பகுதியில் உதயமானது ரசிக ரஞ்சனி சபா. எத்தனை எத்தனை ஜாம்பவான்கள் இங்கு  தங்கள் கலைகளை ரசிகர்களுக்கு அர்ப்பணித்துள்ளார்கள்!வடசென்னை பகுதியைச் சார்ந்த ரசிகர்களின் கலைத்தாகத்தைப் போக்க உதயமானது பெரம்பூர் சங்கீத சபா(1931).

இதன் கலை நிகழ்ச்சிகள் தர்மமூர்த்தி கலவல கண்ணன் செட்டி பள்ளி வளாகம், அன்னதான சமாஜம் என்று பல இடங்களிலும் நடைபெற்று வந்துள்ளது. அடுத்த ஆண்டான 1932ல் பிறந்தது இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி.

சென்னையின் ஒவ்வொரு பகுதியின் விரிவாக்கத்திலும் கலைத்துறையின் பங்கு மகத்தானது. மாம்பலம், தி. நகர் வாசிகளுக்காகவே சித்தூர் வி. நாகைய்யாவால் 1940களில்  தொடங்கப்பட்டதுதான் வாணி மகால் (ஸ்ரீ தியாகப்பிரம்ம கான சபா). இதே காலகட்டத்தில் தமிழ் இசை இயக்கம் தீவிரமாக இருந்தபோது ராஜா. சர். அண்ணாமலை செட்டியார் எழுப்பியதுதான் தமிழ் இசை சங்கம்..!

1950களில் மயிலாப்பூர் ஃபைன்ஆர்ட்ஸ், 1953-ல் ஸ்ரீ கிருஷ்ண கான சபா, 1958-ல் நாரதகான சபா, மற்றும் நாதோபாசனா என்று பல கலை நிறுவனங்கள் தோன்றி சென்னையின் கலை மற்றும் கலாச்சாரத்துக்கு மேலும் அழகு சேர்த்தன.

1975ல் கார்த்திக் ஃபைன்ஆர்ட்ஸ், பின்னர், வருடம் பூராவும் நிகழ்ச்சிகளை நடத்தி ரசிகர்களை மகிழ்வித்து வரும் பாரதிய வித்யா பவன், NRI எனப்படும் வெளிநாட்டு வாழ் இந்திய கலைஞர்களின் திறமைகளை வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டவே பிரத்தியேகமாக ஹம்ஸத்வனி, நுங்கம்பாக்கம் கல்சுரல் அகாடமி
(சென்னை அகாடமி) மற்றும்  கலாரசனா, முத்ரா,மொட்டாய்  மலரவிருக்கும் இசை கலைஞர்கள் முதல் முதிர்ந்த ஜாம்பவான்கள் வரை ஒருசேர அனைவரையும் பங்களிக்க வைக்கும் பாரத் கலாச்சார் உள்ளிட்ட  இன்னபிற சபைகள் சென்னையின் பரிணாம வளர்ச்சிக்கேற்ப  வளர்ந்துகொண்டே வருகின்றன.

கீற்றுக் கொட்டகைகளில் தொடங்கி குளுகுளு ஏ.சி. வசதி, புரவலர்களில் தொடங்கி ஸ்பான்சர்களின் ஆதரவில் ஆன்-லைன் லைவ் நேரடி ஒலி ஒளி பரப்பு எனும் அசுர வளர்ச்சியோடு சிருங்காரமான இசைக் கலைகளும் வளர்ந்து கொண்டுதானிருக்கின்றன. இந்த வளர்ச்சியில் கல்கி கிருஷ்ணமூர்த்தி, சுதேசமித்திரன் நீலம், இந்து நாளிதழின் என்.எம். நாராயணன், சுப்புடு, வீயெஸ்வி போன்ற இசை விமர்சகர்கள் மற்றும் கலைஞர்களை கேலிச்சித்திரமாக வரைந்த ஓவியர்கள் மாலி, ராஜு, கோபுலு, கேஷவ் ஆகியோரது பங்கும் மகத்தானது.

இந்திய தேசிய காங்கிரசின் மாநாடு நடந்ததையொட்டி பிறந்தது சங்கீத வித்வத் சபை. அதேபோல் தமிழ் இசை இயக்கத்தின் தாக்கத்தால் உதித்தது தமிழ் இசை சங்கம். இவ்விரண்டு சபைகளும் சென்னை மாநகரத்தின் வரலாற்றிலும் முத்திரை பதித்தவைகளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று 2023ல் ரசிகர்களின் எண்ணிக்கையும் ரசிகத்தன்மையும் அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. இசை விழாவில் குரலிசை மட்டுமல்லாமல் வாத்திய இசை,  நாட்டிய வடிவங்கள், நாடகங்கள், நாம சங்கீர்த்தனம், வட இந்திய இசை, மெல்லிசை, திரை இசை, பட்டிமன்றம் என பல வடிவங்கள் இடம்பெற்று வருகின்றன. இது ஒரு போற்றத்தக்க சாதனை ஆகும்.

கடல் கடந்து ரசிகர்களும் ரசிகத்தன்மையும் வளர்ச்சியடைந்துள்ளது. இது கலையுலகிற்கு மட்டுமல்ல, சென்னை மாநகரத்திற்கே பெருமை சேர்க்கும் விஷயமாகும். கலைகளின் தலைநகரமான சென்னையில் எந்தவொரு கலைவிழா நடந்தாலும் உலகமே  வியந்து பார்க்கின்றது. அதே போல் உலகின் எந்த மூலை முடுக்கில் இருந்தாலும் சென்னை சபாக்களில் வந்து நிகழ்ச்சிகள் நடத்துவதை  பெருமையாகவும் தனி அந்தஸ்துடன் கௌரவமாகவும் கருதுகிறார்கள் கலைஞர்கள்.

பிரிக்க முடியாதது எது? என்ற கேள்விக்கு, ‘சென்னையும் கலையும்’ என்று அடித்துக் கூறலாம்தானே?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com