மகளிர் தின வாழ்த்துச் செய்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

Chief Minister M. K. Stalin's Women's Day greetings
Chief Minister M. K. Stalin's Women's Day greetings

நாளைய தினம் (8.2.2024) உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது மகளிர் தின வாழ்த்துச் செய்தியைக் கூறி இருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் வாழ்த்துச் செய்தியில்,

“மகளிருக்கான உரிமையை நிலைநாட்டியதில் திராவிட இயக்கத்தின் பங்களிப்பு, நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டது. தந்தை பெரியார் தலைமையில் 1929ம் ஆண்டு செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் பெண்களுக்குச் சொத்தில் சமபங்கு உரிமை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் பிறகு பேரறிஞர் அண்ணா தலைமையில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன், சுயமரியாதை திருமணத்திற்கு அங்கீகாரமளிக்கும் சட்டத்தை நிறைவேற்றினார். அதன் பின்னர் முதலமைச்சரான கலைஞர் பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை வழங்குவதற்கான சட்டத்தை நிறைவேற்றினார்.

அதுமட்டுமின்றி, முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டம், ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவித் திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு கைம்பெண் மகளிர் மறுமண நிதி உதவித் திட்டம், அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்புத் திருமண நிதி உதவித் திட்டம், அன்னை தெரசா அம்மையார் நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதி உதவித் திட்டம், ஈ.வெ.ரா மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதி உதவித் திட்டம், கைம்பெண்களுக்கும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கும் முதியோர் உதவித் தொகை, 50 வயது கடந்து திருமணமாகாமல் வறுமையில் வாடும் ஏழைப் பெண்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம், மகளிர் சிறு வணிகக் கடன் திட்டம், பெண்களே நடத்தும் நியாய விலைக் கடைகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், இந்தியாவிலேயே முதல் முறையாக உள்ளாட்சி அமைப்புகளில் தமிழ்நாட்டில் மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு, இந்தியாவிலேயே முதல் முறையாக 1973ல் காவல் துறையில் மகளிர் நியமனம் என்று கலைஞரின் ஆட்சிக் காலங்களில் மகளிரை மேம்படுத்துவதற்காகச் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் பட்டியல் மிக நீளமானவை.

இவற்றின் நீட்சியாக தற்போது நடைபெற்று வரும் ஆட்சியிலும் பெண்களின் சமூக, பொருளாதார விடுதலையை, மேம்பாட்டை உறுதி செய்வதற்கான பல உன்னதத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம்.

உலகின் முன்னேறிய நாடுகளில் கூட இல்லாத வகையில், மகளிருக்கான ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பை 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தினோம். அரசுப் பணியிடங்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை 40 விழுக்காட்டுக்கு உயர்த்தி எல்லா அலுவலகங்களிலும் ஆண்களுக்குச் சமமாகவும், ஆண்களை மிஞ்சியும் மகளிர் பணிபுரியும் நிலையை ஏற்படுத்தியுள்ளோம்.

மூவலூர் மூதாட்டி இராமாமிருதம் அம்மையாரின் பெயரால் பெண்கள் உயர்க்கல்வி பெறுவதை உறுதி செய்யும் ‘புதுமைப் பெண்’ திட்டத்தையும் தொடங்கி, கல்லூரிக்குச் செல்லும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கி வருகிறோம். இத்துடன், இந்த ஆண்டு பிப்ரவரி 21ம் நாள், தமிழ்நாட்டில் மகளிர் நலனை மேம்படுத்திடும் வகையில், ‘தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024’ஐ வெளியிட்டோம்.

இதையும் படியுங்கள்:
கோவையை அடுத்து மதுரைக்கும் வளர்ச்சித் திட்டங்கள் அறிவிப்பு!
Chief Minister M. K. Stalin's Women's Day greetings

பெண் விடுதலை என்பதே முழுமையான சமூக விடுதலை என்ற முழுமையான புரிதலுடன், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் வழியில், திமுக அரசு பெண்கள் உரிமை மற்றும் மேம்பாட்டை உறுதிப்படுத்தும் பல்வேறு திட்டங்களைத் தீட்டி நடைமுறைப்படுத்தி வருகிறது.

சமூகத்தின் சரிபாதியான பெண்கள் அவர்களுக்குரிய அனைத்து உரிமைகளையும், நலன்களையும் முழுமையாகப் பெறும் வரை அதை நோக்கிய நமது பயணம் தொடரும் என்ற உறுதியுடன் பெண்கள் அனைவருக்கும் மகளிர் நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறி இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com