சின்னகோபாலா வா!

சின்னகோபாலா வா!

எஸ். விஸ்வநாதன் என்கிற ’சாவி’ எண்ணற்ற சிறுகதைகள், கட்டுரைகள் எழுதியவர். சிறந்த நகைச்சுவை எழுத்தாளர். அனுபவம் மிகுந்த மிகச்சிறந்த பத்திரிகையாளர்.

‘விடாகண்டன்’ என்ற பெயரில் எழுதி வந்த அவரை கல்கி சதாசிவம் அழைத்து கல்கி வார இதழுக்கு துணை ஆசிரியராகப் பணியில் அமர்த்தினார். அமரர் கல்கியை தன் மானசீக குருவாகக் கொண்டு, கல்கி பத்திரிகையில் பல படைப்புகளை எழுதியுள்ளார் ‘சாவி’ அவர்கள். பின் சொந்தமாக சாவி என்ற பெயரில் வாரப் பத்திரிகையைத் தொடங்கி அதன் ஆசிரியராகவும் பணியாற்றி இருக்கிறார்.  

இன்று அவரது 107 வது பிறந்த நாளை முன்னிட்டு 1946 கல்கி தீபாவளி மலரில் வெளியிடப்பட்ட சிறுகதை இன்று கல்கி களஞ்சியத்திலிருந்து மீண்டும்…

ஸ்தமன சூரியனின் சாய்ந்த கிரணங்கள் பட்டுச் சாலை மரங்களின் நிழல்கள் நீள நீளமாய்ப் படித்தன. பட்சி ஜாலங்கள் தத்தம் கூடுகளை நோக்கிப் பறந்தன. சின்ன கோபாலனும் தன் தோழன் கஸ்தூரியுடன் விளையாடியிட்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தான்.

சாலை ஓரத்தில் குவியல் குவியலாகக் கொட்டியிருந்த கிராவல் கற்கள் அவன் கவனத்தைக் கவர்ந்தன. அவற்றிலிருந்து வழ வழப்பான கற்களாக இரண்டைப் பொறுக்கி எடுத்துக்கொண்டான். வீட்டுக்குப் போகும் வழியில்தான் அவனுடைய பள்ளிக்கூடம் இருந்தது. அந்த இரண்டு கற்களையும் தூக்கிப் போட்டுப் பிடித்தவாறே மெதுவாக நடந்து வந்துகொண்டிருந்தான்.

பள்ளிக் கூடத்துப் பக்கமாய் வகும்போது காம்பவுண்டு சுவரில் எதோ எழுதியிருந்தது. கோபாலன் சட்டென்று நின்று அது என்னவென்ற கவனித்தான்,

“சின்ன கோபாலா, வா!”

என்று குண்டு குண்டாக எழுதியிருந்து. தன்னுடைய பெயரை யாரோ எழுதியிருப்பதைக் கண்டதும் கோபாலனுக்கு ஒரே ஆச்சரியமாயிருந்தது. அதை யார் எழுதியிருப்பார்கள்? எழுத்தைப் பார்த்தால் கஸ்தூரியினுடைய எழுத்தைப்போல் இருந்தது. அவன்தான் இப்படி குண்டு குண்டாகச் சாய்த்து எழுதுவான். ஆனால் கஸ்தூரிதான் இந்தனை நேரமும் தன்னுடன் விளையாடிக் கொண்டிருந்தானே? ஆசையால் அவன் எழுதியிருக்க முடி யாது.  பின் யார் எழுதியிருப்பார்கள்?  கோபாலன் சுற்றிலும் ஒரு தடவை பார்த்தான். பின்னர், சுவரண்டை நெருங்கிச் சென்று எழுத்துக்களை உற்று நோக்கினான்.

சாக்குக் கட்டியால் எழுதப்பட்டிருந்த அந்த எழுத்துக்களைப் பார்க்கப் பார்க்க கோபாலனுடைய ஆச்சரியம் அளவு கடந்ததாய்ப் போயிற்று.

கோபாலனுடைய வீட்டு வாசல் முன்பாக அவனுடைய தங்கையும் இன்னும் சில சிறுமிகளும் 'ஸ்கிப்பீங்'  விளையாடிக்கொண்டிருந்தார்கள். தங்கையை அணுகி, "சீதா! பள்ளிக்கூடத்துச் சுவரில் என்னை வரச் சொல்லி யார் எழுதினது?" என்று கேட்டான்.

விளையாட்டு மும்முரத்தில் இருந்த சீதா, "அது யாரோ? எனக்குத் தெரியாது போடா!" என்று அலட்சியமாகப் பதில் கூறிவிட்டு "ஸ்கிப்பிங்”கைத் தொடர்ந்து நடத்தினாள். சுற்றியிருந்த சிறுமிகளையும் கேட்டுப் பார்த்தான். ஒரு குழந்தை ஆடிக்கொண்டே பதில் சொன்னாள். இன்னொரு குழந்தை பதில் கூடச் சொல்லாமல் ஓடினாள்.

இத்தனை அக்கரையாகத் தன்னை வரச் சொல்லி எழுதியிருப்பது யார்? எங்கே வரச் சொல்லி எழுதியிருப்பார்கள் என்று தெரிந்துகொள்ள அவன் மனம் துடியாய்த் துடித்தது. சின்ன கோபாலா என்று தன்னுடைய செல்லப் பெயரை எழுதியிருப்பதால் யாரோ ரொம்பவும் தெரிந்த பேர்வழியாய்த்தான் இருக்க வேண்டும்.

ஒருவேளை எதிர் வீட்டுச் சுந்தரமா யிருக்குமோ என்று ஒரு சந்தேகம் வந்தது அவனுக்கு. ஆனால் சுந்தாம்தான் அவன் அப்பாவுடன் காலையிலேயே ஊருக்குப் போய் விட்டானே?

எதற்கும் கஸ்தூரியை விசாரித்து வரலாம் என்று எண்ணியவனாய்க் கஸ்தூரியின் வீட்டுக்குச் சென்றான்.

கஸ்தூரி, "நான் எழுதவில்லை!" என்றதும் கோபாலன் மிகுந்த மனச்சோர்வுடன் பேசாமல் திரும்பினான்.

வீட்டுக்குத் திரும்பி வரும்போது அவனை அறியாமல் அவன் கண்கள் அந்தக் காம்பவுண்டு சுவரிலிருந்த எழுத்துக்களை நோக்கின.

“சின்ன கோபாலா, வா!"

எதிரே சஸ்தா ஒரத்தில் இருந்த அரசமரத்தடியில் போய் நின்று சிறிது நேரம் உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கான். கடைசியில் ஒன்றும் புரியாமல் வீட்டுக்கே வந்து சேர்ந்தான்.

அம்மா அடுப்பங்கரையில் வேலையாயிருந்தாள். கோபாலன் அம்மாவிடம் ஓடிப்போய், " அம்மா! என்னை எந்தப் பையனாவது தேடிக்கொண்டு வந்தானா" என்று பரபரப்பாய்க் கேட்டான். அவன் அம்மாவக்கு அதுதானா கவலை?  "யாரும் வரவில்லை” என்றாள் எங்கோ ஞாபகமாக .

கோபாலன் காம்பவுண்டு சுவரில் தன் பேர் எழுதியிருக்கும் விஷயத்தை அம்மாவிடம் கூறினான்.

"ஒருவேளை எதிர் வீட்டுச் சுந்தரம் எழுதியிருப்பான்''  என்றான் அவன் தாயார்.

“இருக்காது, அம்மா! அவன்தான் காலையிலேயே அவனுடைய அப்பாவுடன் ஊருக்குப் போய்விட்டானே?" என்றான் கோபாலன்.

“காலையில் ஊருக்குப் போகு முன்பே எழுதியிருப்பான்'' என்று இன்னொரு சந்தேகத்தைக் கிளப்பினாள் தாயார்.

"இல்லை அம்மா; காலையில் நான் அந்தப் பக்கம் போயிருந்தபோது அந்த எழுத்து அங்கே இல்லையே?” என்றான் கோபாலன்.

தாயார் "அது என்னவோ போ; பேசாமல் சாப்பிட்டு விட்டுப் படுத்துத் தூங்கு; நாளைக்குத் தன்னால் தெரியும்" என்றாள் சமாதானமாக.

இருந்தாலும் கோபாலனுக்கு நிம்மதி ஏற்படவில்லை. அந்த மர்மத்தை உடனே கண்டு பிடிக்க வேண்டும் போலிருந்தது. அப்பா அறைக்குள் போய்ப் பார்த்தான். நல்லவேளையாக அப்பா இன்னும் ஆபீஸிலிருந்து வரவில்லை. எனவே, அங்கிருந்த டெலிபோனில் தனக்குத் தெரிந்த சிநேகிதர்களை எல்லாம் கூப்பிட்டுக் கேட்டான். எல்லோரும் இல்லை என்றே பதில் சொன்னார்கள். கோபாலன் குழாயடிக்குச் சென்று முகத்தைக் கழுவிக்கொண்டு வாசற்படியில் வந்து உட்கார்ந்தான். அங்கே ஏற்கெனவே அவனுடைய தாயார் அவனுடைய அப்பாவின் வரவை எதிர்பார்த்து நின்றுகொண்டிருந்தாள்.

கோபாலன் மெதுவாக அம்மாவைக் கேள்வி கேட்க ஆரம்பித்தான்.

“அம்மா! கடவுளுக்கு எழுதத் தெரியுமோ?"

'அவர் இந்த மாதிரியெல்லாம் எழுத மாட்டாரடா, கண்ணு!"

“பின் எப்படி எழுதுவார் அம்மா!''

"எலோருடைய தலையிலேயும் எழுதி வைப்பார்.”

"எல்லோருடைய தலையிலும் என்னத்தைக் கொண்டு எழுதுவார்?" "அதெல்லாம் இப்போது உனக்குச் சொன்னால் தெரியாது."

'அம்மா! கடவுளிடம் சாக்பீஸ் இருக்குமா?"

"கிடையாதுடா கண்ணே, ஆனால் அவர்தான் சாக்பீஸையெல்லாம் படைத்தவர். பூலோகம், ஆகாசம் எல்லாம் அவருடைய சிருஷ்டிதான்" என்றாள் தாயார்.

இதற்குள் அவனுடைய அப்பாவும் ஆபீஸிலிருந்து வந்துவிட்டார். அப்பா ரொம்பக் கோபக்காரர் என்பது கோபாலனுக்குத் தெரியுமாகையால் அவன் இது விஷயமாக அப்பாவிடம் பேச்சு மூச்சே விடவில்லை. அத்துடன் அன்றைக்கு அபீஸிலிருந்து வரும்போதே அவர் 'சிடுமுடு என்றிருந்தார்.

கோபாலன் சாப்பிட்டுவிட்டுப் படுத்துக் கொண்டான். வெகு நேரம் வரை தூக்கம் வரலில்லை. விழித்தபடியே நீண்ட யோசனையில் ஈடுபட்டிருந்தான்.

*******

ன்னல் வழியாகச் சந்திர வெளிச்சம் புகுந்து முதலில் அறைக்குள் படிந்தது. பிறகு தரையிலிருந்த வெளிச்சம் சிறிது சிறிதாக நகர்ந்து வந்து சுவர்மீது ஏறி மேலே போயிற்று. கோபாலன் கட்டிலைவிட்டு இறங்கி ஜன்னலருகே சென்று வெளியே எட்டிப் பார்த்தான். வானத்தில் மரங்களுக்கு மேலே வட்ட வடிவமான சந்திரன் அழகாகப் பிரகாசித்துக்கொண்டிருந்தான். எங்கும் நிசப்தம் நிலவியது. மரங்கள், பட்சிகள் எல்லாம் நித்திரையில் ஆழ்ந்திருந்தன.

கோபாலன் மெதுவாக எழுந்து பூனைபோல் வாசல் பக்கம் நடந்தான். வாசல் கதவை எவ்வளவு மெதுவாகத் திறந்தானோ அதைவிட மெதுவாகச் சாத்திவிட்டு வெளியே போனான். கூழாங்கற்கள் இரண்டும் ஒன்றோடொன்று உராய்ந்து நாங்கள் சட்டைப் பைக்குள் இருப்பதை கோபாலனுக்கு அறிவித்துக்கொண்டன. கோபாலன் வேகமாக நடந்தான். வாசலில் நிலா பட்டப் பகல்போல் காய்ந்துகொண்டிருந்தது. நேராகப் பள்ளிக்கூடத்துக் காம்பவுண்டு சுவரை அடைந்தான்.

வெள்ளை வெளேரென்ற சாக்குக் கட்டியால் எழுதியிருந்த எழுத்துக்கள் பால் போன்ற நிலவொளியிலே பளிச்சென்று மின்னிக்கொண்டிருந்தன. கோபாலனைப் பார்த்து அந்தக் காம்பவுண்டு சுவரே பேசுவது போல் இருந்தது.

"சின்ன கோபாலா. வா!"

கோபாலனுடைய கண்களில் முத்துப் போன்ற இண்டு நீர்த்துளிகள் தோன்றி மறைந்தன. மறுபடியும் அதை ஒரு தடவை படித்துவிட்டுக் கஸ்தூரி வீட்டை நோக்கி நடந்தான்.

கஸ்தூரி வீடும் கோபாலன் வீட்டைப் போலவே உறக்கத்தில் ஆழ்ந்திருந்தது. வாசல் அறைப் பக்கம் இருந்த ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தான்.  கஸ்தூரி நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தான். அவனுடைய அப்பா ஆனந்தமாய்க் குறட்டை விட்டுக் கொண்டிருந்தார்.

கஸ்தூரியைப் பலமாக இரைந்து கூப்பிட்டு அந்த அழகான நிலா வெளிச்சத்தில் அவனுடன் விளையாட வேண்டும்போல் இருந்தது. ஆனால் கத்துவதற்கு ஏனோ தைரியம் வரவில்லை. பேசாமல் திரும்பிப் பள்ளிக்கூடத்து வாசலுக்கே வந்து சேர்ந்தான். அதற்குமேல் என்ன செய்வதென்று அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. எதிரிலிருந்த தாமரைக் குட்டையின் அருகில் சென்று வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றான்.  ஆகா! அந்தச் சின்னஞ் சிறு குட்டை ஜலம் சலனமற்றுத் தெளிவாகக் காணப்பட்டது. வட்ட வடிவமான வானத்துச் சந்திரன் அந்தக் குட்டையிலே பிரதிபலித்தான். ஜலத்தின் மீதிருந்த தாமரை இலைமீது தவளை ஒன்று உட்கார்ந்திருந்தது. மண்டூகம்! அதற்கென்ன தெரியும்,  அந்த நிலவின் அற்புத அழகை அனுவிக்க?

மேற்படி தவளை 'கடக்' கென்று ஒரு தடவை சப்தப்படுத்தி நிசப்தத்தைக் கலைத்தது. நிலா விரிந்த குளிர்ந்த இரவில் அந்தக் குட்டையின் செளந்தரியத்தை அனுபவித்துக் கொண்டிருந்த கோபாலனுக்குத் தவளையின் குரல் பெரும் கோபத்தை உண்டாக்கியது. எனவே, அவனுக்கு அந்தத் தவளையை என்னவோ செய்ய வேண்டும் போல் இருந்தது. கால் சட்டைப் பைக்குள் கையை விட்டான். கையில் கூழாங்கற்கள் தட்டுப்பட்டன. அவற்றில் ஒரு கல் எடுத்துத் தவளையின்மீது போட்டான். 'சடச்' கென்று கத்திய தவினை 'சடக்'கென்று பாய்ந்து சென்றது.

கூழாங்கல் விழுந்த வேகத்தில் சலனமற்றிருந்த ஜலத்தின் மத்தியிலிருந்து சிறு சிறு வட்ட அலைகள் கிளம்பி, சுழித்துக் கொண்டுப் பெரிதாகப் பரிணமித்து மண்டலம் போட்டன. சற்று நேரம் இந்த வேடிக்கையைப் பார்த்து. போண்டிருந்து விட்டு அரசமரத்தடிப் பக்கம் வந்தான் கோபாலன். மறுபடியும் அத்த எழுத்தைப் பார்த்தான்.

"சின்ன கோபாலா. வா!''

கோபாலனுடைய முகம் பரிதாபமாய்க் காணப்பட்டது. அந்த நிசப்தமான இரவிலே 'சின்ன கோபால வா!' என்று அடிக்கடி யாரோ தன்னை அழைப்பதை போல் ஒரு பிரமை தோன்றியது அவனுக்கு. கீழே பார்த்தான். காம்பவுண்டு சுவரிலிருந்த முனிசிபாலிடி குழாயிலிருந்து சொட்டுச் சொட்டென்று ஜலம் சொட்டி கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் கோபாலனுக்கு, தன் வீட்டுப் பால்காரனுடைய ஞாபகம் வந்தது. பால்காரன் தினமும் அந்தக் குழாயில்தான் ஜலம் பிடிப்பது வழக்கம். ஐயோ! பொழுது விடிகிற நேரம் ஆகிவிட்டதோ? பால்காரன் வந்து விடுவானோ? அவர் வந்து விட்டால் இங்கே தன்னைப் பார்த்ததாக அப்பாவிடம் போய்ச் சொல்லி விடுவானே. ஆகையால் அவர் வருவதற்குள் வீட்டுக்குப் போய்விட வேண்டும் என் எண்ணினாள்.

இந்தச் சமயம் பின்னாலிருந்து '"சின்ன கோபாலா! என்று ஒரு குரல் கேட்டது. கோபாலன் திடுக்கிட்டு திரும்பினான். என்ன அதிசயம்! அரச மரத்தடியில் ஒரு தாடிக்காரன் நின்றுகொண்டிருந்தான்.

கோபாலன் நடுங்கிக்கொண்டே அவனிடம் சென்று "நீ யார்?" என்று கேட்டான்.

"நான் உன்னைப் பிடித்துக்கொண்டு போக வந்திருக்கிறேன். உன்னை வரச் சொல்லி நான்தான் சாக்கு கட்டியால் எழுதி வைத்தேன்.''

சின்ன கோபாலனுக்கு விஷயம் பளிச்சென்று புரிந்துவிட்டது. அவன் பிள்ளை பிடிக்கும் தாடிக்காரன் என்பதை கணநேரத்தில் ஊகித்துவிட்டான். உரக்க அழலாம் என்று நினைத்தான். ஆனால், ஏனோ அழுவதற்கு வாய் வரவில்லை

தாடிக்காரன் கையைக் காட்டித் தன் பின்னே வரும்படி சைகை செய்தான். கோபாலனும் பயந்தபடி அவன் பின்னோடு மந்திர சக்தியால் கட்டுண்டவன் போல் நடந்து சென்றான்.

வெகு தொலைவில் ரயில ஊதும் சப்தம் கேட்டது. கோபாலன் பின் தொடர தாடிக்காரன் ஸ்டேஷனை நோக்கி நடந்தான்.

ஸ்டேஷனை அடைந்ததும் தாடிக்காரன் கோபாலனின் கையைப் பிடித்துக்கொண்டான். ஸ்டேஷனில் கூட்ட '''ஜே ஜே' என்றிருந்தது. ரயில் வந்ததும் அதிலிருந்த கூட்டம் இடித்துப் பிடித்துக் கொண்டு கீழே இறங்கியதும் பிளாட்பரத்திலிருந்தவர்கள் இறங்குபவர்களைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தார்கள். தாடிக்காரனும் கோபாலனுடன் வண்டியில் ஏறினான். அதே வண்டியிருந்து ஜரிகை துப்பட்டாவுடன் ஒரு ஆசாமி கீழே இறங்கி வந்தார். அவர் கோபாலனுடைய அத்திம்பேர்! மறுநாள் தலை தீபாவளிக்காக அவர் கோபாலன் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தார். கோபாலனைக் கண்டுவிட்டு அவர்,  நீ எங்கேயடா  வந்தாய்" என்று பரம ஆச்சரியத்துடன் வினாவினார். கோபாலன் மௌனம் சாதித்தான். அவனுக்குப் பின்னாலிருந்த தாடிக்காரன் பிள்ளை திருடிய கள்ளனைப் போல் பேந்தப் பேந்த விழித்தான்.

தாடிக்காரனைப் பார்த்ததுமே சின்ன கோபாலனுடைய அத்திம்பேருக்கு விஷயம் வெட்டவெளிச்சமாகி விட்டது. உடனே இரைந்து,” பிடியுங்கள், உதையுங்கள், தாடிக்காரன், பிள்ளைத்திருடன்" என்று கத்தினார். பிளாட்பாரத்தில் கூட்டத்துக்கா குறைச்சல்? அவ்வளவு பேரும் தாடிக்காரனைப் பிடித்துக்கொண்டு நையப் புடைத்தார்கள், தாடிக்காரன் முதுகில் அடித்த ஒவ்வொரு அடியும் கோபாலனுக்குத் தன்னுடைய முதுகில் அடிப்பதுபோல் இருந்தது. தாடிக்காரனை ஜனங்கள் அடித்தால் தன்னுடைய முதுகில் வலிப்பானேன் என்று கோபாலன் திகைத்தான்.

"கோபாலா! எழுந்திரு; எண்ணெய் தேய்த்துக் கொள்ள வேணும், தீபாவளி அல்லவா?" என்று தூங்கிக் கொண்டிருந்த கோபாலனுடைய முதுகைத் தட்டி எழுப்பிக் கொண்டிருந்தாள் அவளுடைய தாயார். கோபாலன் சட்டென்று கண் விழித்துப் பார்த்தான். அவனுடைய தாயார் எதிரே நின்றுகொண்டிருந்தாள். கோபாலன் கண்களைத் துடைத்துக்கொண்டு பார்த்தான். நான் இவ்வளவு நேரமும் கண்டது கனவு என்பதை நினைக்கும்போது அவனுக்கு ஆச்சரியமாயிருந்தது; கொஞ்சம் ஏமாற்றமாயுமிருந்தது.

இதற்கும் வாஸ்வமாகவே அவனுடைய அத்திம்பேர் தலைதீபாவளியை உத்தேசித்து வாசலில் ஜட்கா வண்டியில் வந்து இறங்கினார். கோபாலனுக்காக நிறையப் பட்டாசுக் கட்டுகள் வாங்கி வந்திருந்தார். கோபாலன் அவற்றையெல்லாம் சுட்டுத் தீர்ப்பதற்கும் பொழுது விடிவதற்கும் சரியாக இருந்தது.

lll

கோபாலன் காலையில் கடைத் தெருவுக்குப் போயிருந்தான். அங்கே இவனுடைய பழைய தோழன் சந்துருவைக் கண்டான். போன வருஷம் சந்துரு கோபாலனுடைய வகுப்பில் வாசித்துக் கொண்டிருந்தான். அவன் அப்பாவுக்கு உத்தியோகம் மாற்றலாகி விடவே வெளியூருக்குப் போய்விட்டான். இப்போது தீபாவளிக்கு அவனுடைய மாமா வீட்டுக்கு வந்திருந்தான்.

கோபாலனைக் கண்டதும் சந்துரு குதித்து ஓடி வந்து, "நேற்று என் உன்னை வந்து வீட்டில் தேடிப் பார்த்தேன், காணோம். பள்ளிக்கூடத்துச் சுவரில் 'சின்ன கோபாலா,வா!' என்று எழுதிவிட்டு வந்திருந்தேனே, பார்த்தாயா?" என்று கேட்டான்.

“அட! நீதானா அது?” என்றான் ஆச்சரியத்துடன், கோபாலன். தனக்காக அடிபட்ட தாடிக்காரனை நினைத்து அவனுக்கு வருத்தம் உண்டாயிற்று. அவனைப் பார்த்து அவனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டுமென்று விரும்பினான். ஆனால் கனவில் கண்ட அந்த தாடிக்காரன் அப்புறம் அகப்படவே இல்லை!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com