பல திட்டங்களுடன் படுத்து உறங்கினேன்...

அத்தியாயம் - 5
பல திட்டங்களுடன் படுத்து உறங்கினேன்...

லிஸ்பன் நகரம்

போர்ச்சுக்கல் தலைநகரம் லிஸ்பன். கோவாவை பார்த்தால் லிஸ்பனை பார்க்கவேண்டியது இல்லை என்பார்கள். ஆனால், நான் இதுவரை கோவாவை பார்த்தது இல்லை. லிஸ்பனை பார்க்க கிளம்பினேன். பிராகா ரயில் நிலையத்துக்கு பேருந்தில் சென்றேன். இணையம் மூலமாக லிஸ்பனுக்கு ரயில் டிக்கட் வாங்கியிருந்தேன். சுமாராக 360 கி.மீ., தொலைவு. மூன்றரை மணிநேர ரயில்பயணம்.

ரயில்வே நிலையத்தில் நம் ஊர் போலவே பிளாட்பாரங்கள், ரயில் வருவது, போவது பற்றிய அறிவிப்பு எல்லாம் இருந்தன. போர்ச்சுக்கீசிய மொழி தெரியாதெனினும், லிஸ்பன், ரயில் எண் பற்றி சொல்லியதை வைத்தும், ரயில் நிலையத்தில் இருந்த பலகையை வைத்தும் மொழிப்பிரச்னை இல்லாமல் ரயிலை சரியான அடையாளம் கண்டு ஏறமுடிந்தது.

ரயில் நிலையத்தில் பீட்சா விற்றுக்கொண்டிருந்தார்கள். பார்க்க நன்றாகவே இல்லை. வாங்கி சாப்பிட்டிருந்தால் என்ன ஆயிருக்குமோ? போர்ச்சுக்கீசிய உணவகங்களில் பெரும்பாலும் சாண்ட்விச், பர்கர், சிக்கன் மாதிரி தான் கிடைத்தன. அரிசியை பார்ப்பது மிக அரிதாக இருந்தது.

லிஸ்பன் சென்று இறங்கி மீண்டும் மெட்ரோ ரயிலை பிடித்து ஹில்டன் ஓட்டலை அடைந்தேன். மெட்ரோவில் ஒன்பது யூரோ கொடுத்து 24 மணிநேர பஸ் பாஸ் வாங்கினேன். அடுத்த 24 மணிநேரம் லிஸ்பனில் எந்த பஸ், டிராமிலும் எத்தனை முறை வேண்டுமானாலும் போகலாம்.

ஓட்டலுக்கு வந்து இறங்கினேன். வரவேற்பு அறையில் அப்பாவியாக ஒரு இளைஞன் நின்றுகொண்டிருந்தான். நல்லா சிரிக்க, சிரிக்க பேசி "ஹில்டன் ஓட்டல் கிரெடிட் கார்டு எல்லாம் வெச்சிருக்கேன். 14 வருட கஸ்டமர்" என எல்லாம் பேசியதில் இரு நாட்களுக்கு இலவச காலை உணவை கொடுப்பதாக ஒப்புக்கொண்டான். இல்லையெனில் ஏழு யூரோ கட்டணம். பேகன், ஆம்லட் எல்லாம் இருக்கும் என்றான்.

சுற்றுப்பயணத்தில் எந்த ஒரு இடத்திலும் டாக்ஸி, யூபர் என்ற பேச்சே இல்லை. அதுவும் போர்ச்சுக்கல் நாட்டில் ரயில்வே நிலையம், விமான நிலையத்துக்கு எல்லாம் மெட்ரோ ரயில் ஜம் என வருகிறது. டாக்ஸி எடுக்கும் அவசியமே கிடையாது. நல்லா ஆராய்ச்சி பண்ணி எல்லா வேலையையும் நாமே செய்தால் ரொம்ப மலிவா சுற்றலாம். வழக்கமான டூரிஸ்ட் பாணியில் பேக்கேஜ் டூர், டாக்ஸி எல்லாம் எடுத்து சுற்றினால் பெரிய ஆப்பாக வைப்பார்கள்.

லைட்டா பயணம் செய்யணும். சூட்கேஸ் ஹெவியா இருக்கக்கூடாது. அங்காங்கே துணி துவைக்க லாண்ட்ரோமாட் பிடிக்கணும். மலிவான, ஆனால் உணவு தரமாக இருக்கும் இடங்களில் சாப்பிடணும். சுற்றுலா தானே என கண்டதையும் சாப்பிடாமல் புரதம், காய்கறிகள் உள்ள உணவா எடுக்கணும். தினம் நல்லா நடந்து சுற்றினால் இரவு படுத்ததும் நல்லா உறக்கம் வரும்.

இன்று லிஸ்பனில் லிஸ்பன் கோட்டை, 1125ம் ஆண்டு கட்டப்பட்ட லிஸ்பன் கதீட்ரல், 1775ம் ஆண்டு பழைய நகரவீதிகள் எல்லாம் சுற்றிபார்க்கணும். எல்லாம் டிராமில், பஸ்ஸீல்தான். மாலை லிஸ்பன் பீச்சில் இறங்கி ஒரு குளியல் போடணும். எனக்குதான் நீச்சல் தெரியாதே? அதனால சும்மா கடல் தண்ணில நின்னுட்டு வரணும்.

இப்படிப்பட்ட திட்டங்களுடன் படுத்து உறங்கினேன். “கடைசிவரை அட்லாண்டிக் சமுத்திரத்தை பார்க்கும் வாய்ப்புகூட கிட்டாது” என்பதை நான் அப்போது அறிந்திருக்கவில்லை

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com