வண்ணங்களும் எண்ணங்களும்...

வண்ணங்களும் எண்ணங்களும்...
Published on

ஜெயராமன் ரகுநாதன்

இந்தப் படத்தில் உள்ள லூவெர் ம்யூசியம் ஃப்ரான்ஸ் தேசத்தின் பாரிஸில் இருக்கிறது. இந்தக்கண்ணாடி முக்கோணத்தைப் பார்க்கும்போதெல்லாம் அந்தக் கட்டிடத்தின் உள்ளே இருக்கும் எண்ணற்ற அறைகளில் தொங்கிக்கொண்டிருக்கும் அபார ஓவியங்கள் என் கண் முன்னே ஆடுகின்றன.

“நான் மலர்களைத்தான் வரைய விரும்புகிறேன். அப்போதுதான் அவை வாடாமல் இருக்கும்” என்கிறார் ஃப்ரீடா காலோ ( Frida Kahlo).

“ஒரு பறவை கீதமிசைப்பதை அப்படியே வரைய வேண்டும்” என்று ஏங்குகிறார் (Claude Monet) மோனே என்னும் மிகப் பிரபல ஃப்ரெஞ்சு ஓவியர்.

ஜார்ஜ் ஒகேஃப் என்னும் ஓவியர், “ஒரு மலையோ... மரமோ அது மலை அல்லது மரம் என்பதற்காக ஓவியம் ஆகிவிடுவதில்லை. கோடுகளும் வண்ணங்களும் இறைக்கப்பட்டு அவற்றை ஓவியமாக்குகின்றன” என்கிறார்.

ஆம், கோடுகளும் வண்ணங்களும் இணைந்த ஓவியங்கள் உங்களின் கவனத்தைக் கலைத்து மனதை வேறெங்கோ இட்டுச் செல்லும் வலிமை கொண்டவை. கலை என்பதே மனித மனத்தை ஆட்படுத்தி மென்மையாக்கி நல்ல உணர்ச்சிகளைத் தூண்டச் செய்பவைதானே!

கையைக்காலை ஆட்டியும் உரக்க சப்தமிட்டும் மனிதன் சக மனிதனோடு தொடர்பு கொண்ட காலங்களிலிருந்து வெகு தொலைவு வந்துவிட்டோம். மொழி வளர்ந்து அதன் மூலம் இயலும் இசையும் வளர்ந்து கலைகளாய் சித்திரமும் வளர்ந்து மனிதனை வசப்படுத்தியிருக்கின்றன.

நான் பலமுறை வெளி நாட்டுப்பயணம் செய்திருக்கிறேன். போகும் ஒவ்வொரு இடத்திலும், முக்கியமாக ஐரோப்பிய நகரங்களில், தவறாமல் அங்குள்ள ம்யூசியங்களுக்கு போய்விடுவேன். பலமணி நேரப் பசி தாகத்தை மறக்கடிக்கச் செய்யும் ஓவியங்கள் என்னை பரவசத்தில் ஆழ்த்தியிருக்கின்றன.

சொன்னால் நம்ப மாட்டீர்கள், ஓவியம் ஒவ்வொன்றும் ஒரு கதை சொல்லக்கூடியவை. அதை வடித்தெடுத்த ஓவியனின் வரலாறுமே சுவையானதும் பரிதாபமானதும் கூடத்தான்.

வண்ணங்களைக் குழைத்து மிகப்பெரிய திரையில் அவற்றை உருவங்களாகவும் இயற்கைக் காட்சிகளாகவும் ஓவியன் வரைந்திருப்பதன் அருமையை நாம் ரசித்துக்கொண்டிருக்கும்போதே அவற்றின் பின்னால் ஓடும் நம் எண்ணங்கள் சொல்லும் கதை மிகச் சுவாரஸ்யமானவை. ஓவியங்களின் பின்னணியில் நம் அனுவங்களைப் பொருத்திப்பார்ப்பது எத்தனை ரசமான அனுபவம்!

அவற்றில் சிலவற்றை அடுத்த வாரத்திலிருந்து பார்ப்போமா?

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com