
வாழ்வில் நமக்கு இறைவன் கொடுத்த மிகப்பெரிய வரம் பேச்சு. ஒருவர் பேசும் வார்த்தைதான் அவரின் பண்பைக் காட்டுவதில் முதன்மையாக இருக்கிறது அன்பான வார்த்தைகள் மிகுந்த சக்தி வாய்ந்தது. ஆனால் மனதைக் காயப்படுத்தும் ஒரு சிறிய வார்த்தை குடும்ப உறவையே முறித்துக்கொள்ளும் அளவுக்குப் போய்விடும்.
பேச்சு ஒருவரது உணர்ச்சிகளையும், எண்ணங்களையும் வெளிப்படுத்துவதால் நன்றாக சிந்தித்து பிறகு பேசுவது நல்லது நல்ல விஷயங்களை யோசித்தால்தான் நல்ல வார்த்தைகளைப் பேச முடியும். சிந்தனையற்ற பேச்சு பிறரை புண்படுத்தும். கனிவான வார்த்தைகள் கல் மனம் கொண்டவரையும் கரைத்து அன்புடையவர்களாக்கி விடுகின்றன.
பேசும் பேச்சில் விளையாட்டாய்ச் சொல்லும் வார்த்தைகள் விபரீதங்களை ஏற்படுத்தி விடுகின்றன. கடுமையான வார்த்தைகள் பிரிவைக் கூட ஏற்படுத்தி விடும். சில வேளையில், நாம் விளையாட்டாகச் சொல்லும் வார்த்தைகள் கூட பிறருக்குத் தவறாகத் தோன்றும். நாம் நல்லவராக இருந்தாலும், நம்முடைய பேச்சு அவர்களிடம் நம்மைத் தீயவர்களாக்கி விடும். சிறு பிள்ளைகளுடன் பேசும் போது கூட நம் விளையாட்டான பேச்சு அவர்களைக் காயப்படுத்தலாம். கவனமாகப் பேச வேண்டும் .குழந்தைகளுக்கும் பிறரை எடுத்தெறிந்து பேசாமல் தன்மையாகப் பேசக் கற்றுத்தர வேண்டும். இது இளைய சமுதாயம் மேம்பட ஒரு வகையில் உதவி புரியும்.
மற்றவர்களுடைய உணர்வுகளை அடிக்கடி புண்படுத்தியிருந்தால், எப்படிப் பேசுகிறீர்கள் என்பதைக் குறித்து அதிக கவனமாக இருக்கவேண்டும். நெருங்கிய உறவினர் ஒருவர், திருமணம் மற்றும் பிற விஷேச நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் சமயம் வேடிக்கையாக பேசுவதாக நினைத்துக் கொண்டு மற்றவர்களை நோகடிப்பார். அங்கு நிலவும் சந்தோஷமான சூழ்நிலையே அவரால் மாறிவிடும். இதனால் சிலர் அவரிடமிருந்து ஒதுங்கியே இருப்பார்கள்.
பேச்சு எப்போதும் இனிமையாகவும் சுவையாகவும் இருக்க வேண்டும்; அப்போதுதான், ஒவ்வொருவருக்கும் எப்படிப் பதில் அளிக்கவேண்டும் என்பதை அறிய முடியும். கோபமாக இருக்கும்போது படபடவென பேசி வார்த்தைகளை இறைத்துவிடாமல் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு பேசப் பழகவேண்டும். கொட்டிய வார்த்தைகளை திரும்ப அள்ள முடியாது. மற்றவர்களுக்கும் நமக்குமான தொடர்பே பேச்சில்தான் இருக்கிறது. கோபமான பேச்சால் உறவுகள் முறிந்து விடுவதை கண்கூடாகப் பார்க்கிறோம்.
“தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு” என்கிறார் வள்ளுவர். ஒருவர் நம்மை இழிவுபடுத்தி பேசிய வார்த்தைகள் மனதில் அப்படியே மறையாமல் இருக்கும்.
தற்போது எவரிடமும் உண்மையான பேச்சு இல்லை. தவறான எண்ணங்களை தங்களுக்குள் மறைத்து வைத்துக் கொண்டு, வெளியில் நல்லவர்களைப்போல் வேடமிட்டுப் பேசுபவர்களே அதிகம். நாம் தான் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் நம் கண்களைப் பார்த்து பேசினால் பெரும்பாலும் நேர்மையானதாகதான் இருக்கும்.
ஒருவரின் பேச்சு நம் மனதை அதிகமாகக் காயப் படுத்தினாலோ அல்லது நமக்கு மன உளைச்சலைத் தரும்படி இருந்தாலோ அவரிடமிருந்து ஒதுங்கி விடுவதுதான் சிறந்தது.
“புறங்கூறுபவன் தனது நாவினால் மற்றவர்களின் அழுக்கை (குறைகளை) அகற்றி நீக்குகிறான். ஒரு வகையில் அவன் தன்னால் திட்டப்படுபவனுக்கே உதவுகிறான். இதற்காக அவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்” என்கிறார் ஷீரடி ஶ்ரீ சாயி பாபா.