ஊர்த் திருவிழாவில் சாமி பார்க்க
அப்பாவின் பின் கழுத்தில் அமர்ந்து
இரு தோள்களின்கீழ்
கால்கள் தொங்கவிட்டு
தலைமுடியைக் கொத்தாகப் பிடித்து
அசைந்து நடக்கும்
அப்பாவின் நடையில் ஆனந்தப் பாட்டு!
‘சாமி தெரியுதா’ என்று
தன் கால் உயர்த்தி
எக்கி நின்று காட்டுகையில்
சாமியைக் காட்டிலும்
உயர்ந்து நின்றார் அப்பா!