தேசிய கவிஞர் பாரதியார்: சுதந்திர உணர்வு முதல் சமூக சீர்திருத்தம் வரை!

டிசம்பர் 11 மகாகவி பாரதியாரின் 141வது பிறந்த தினம்
பாரதியார்
பாரதியார்
Published on

பாரதி யார்?

பாரதியார் தேசியக் கவிஞர், தன்னுடைய பாடல்களின் மூலம் சுதந்திர உணர்ச்சியைத் தூண்டியவர். இவை மட்டும் தானா அவர்?

இவை எல்லாவற்றிற்கும் மேலாக அவர் மிகச் சிறந்த சீர்திருத்தவாதி. முற்போக்குச் சிந்தனை கொண்டவர். 39 வருடங்களே வாழ்ந்த பாரதியார் வாழ்ந்த காலம் அன்னிய ஆட்சியில் இருந்ததுடன், சாதிப் பிரிவினைகள், பெண் அடிமைத்தனம் இருந்த காலம். தேச உணர்வுகளைத் தன் கவிதைகள் மூலம் பரப்பிய பாரதி, கவிதைகள், கதை, கட்டுரைகள் மூலம் சமுதாயத்தை உயர்த்த மறக்கவில்லை.

பண்டையத் தமிழ் பாக்களில் ஏகபாதம், மாலைமாற்று என்ற வகைகள் உண்டு. ஒரே அடி நான்கு முறை மடக்கிவந்து சொற்கள் சிதைந்து ஒவ்வொரு அடியும், நான்கு வேறு பொருட்கள் தருகின்றவாறு பாடலை அமைப்பது ஏகபாதம் எனப்படும்.

ஒரு பாடலை முன்னிருந்து படித்தாலும், அல்லது பின்னிருந்து படித்தாலும் அதே பாடலாக அமைவது மாலைமாற்று எனப்படும். சித்திரக்கவி என்று சொல்லப்படுகின்ற இது போன்ற பாடல்கள் படித்தவுடன் பொருள் தருவதில்லை.

பண்டைய புலவர்கள் பலர் இவ்வகைச் செய்யுள்களை அமைத்துள்ளார்கள். இவை சொல் விளையாட்டு, உண்மையான இலக்கியமாகக் கொள்ள முடியாது என்று, இதுபோன்ற கவிதைகளை பாரதியார் பழித்து ஒழித்ததன் பின் இவ்வகையான பாடல்களுக்கு தமிழிலக்கயத்தில் இடம் இல்லாமல் போயிற்று.

பாரதியார் தன்னை கவிதை என்ற வட்டத்திற்குள் அடக்கிக் கொள்ளவில்லை. கதை, கட்டுரைகள் எழுதினார். அவருடைய கதைகளில் அன்றைய சமூக அவலங்களைச் சாடினார் பாரதியார். கலப்புத் திருமணம், விதவைத் திருமணத்தை ஆதரித்து எழுதினார் பாரதியார். பாரதியார் ஒருமுறை தன்னுடைய நண்பரிடம் “நீ பாற்கடல் கடைந்ததை நம்புகிறாயா?” என்று கேட்டார். “பாற்கடல் என்ற ஒன்று இல்லை. இது கதை” என்றார் நண்பர். இதற்கு பாரதியார் அளிக்கும் விளக்கம் புதுமையானது.

‘”ஒவ்வொருவர் உள்ளமும் பாற்கடல். நம்முடைய உள்ளம் என்கின்ற இந்த பாற்கடலை, தீய எண்ணமும், நல்ல எண்ணமும் எந்த நேரமும் கடைந்து கொண்டிருக்கிறது. தீய எண்ணம் அசுரர்கள், நல்ல எண்ணம் தேவர்கள். இப்படிக் கடைந்து கொண்டிருக்கும் போது முதலில் வருவது மூதேவி. அதாவது, நமது மனதைக் கடையும் போது தீய எண்ணம் தான் முதலில் தோன்றுகிறது.

அதற்குப் பின்புதான் சீதேவி தோன்றுகிறாள். அதாவது நல்ல எண்ணம் நம்முடைய மனதில் உதிக்கிறது. அடுத்துத் தோன்றுவது ஆலகால விஷம். விஷத்தைக் கண்டு எல்லோரும் பயந்து ஓட, சிவபெருமான் அதைச் சாப்பிட்டார். அதைப்போல நம்முடைய மனதில் தீய எண்ணங்கள் தோன்றும் போது, இறைவனை சரணடைந்தால், இறைவன் அதனை ஏற்றுக் கொண்டு அருள் புரிவான்”

பெண்களின் முன்னேற்றம் பற்றி வலியுறுத்துவதற்காக “சக்கரவர்த்தினி” என்ற மாதப் பத்திரிகை 1905ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. ஆனால், அந்தப் பத்திரிகையில் அதிகமாக தேசத்திற்காக உழைத்த தியாகிகள், ஞானிகள் ஆகியவர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் இடம் பெற்றிருந்தன. மாதர்கள் முன்னேற்றம் பற்றிய கட்டுரைகள் அவ்வப்போது வந்து கொண்டிருந்தன.

ஒரு முறை பாரதியாரைச் சந்தித்த பெண்மணி ஒருவர் “விவேகானந்தரின் சன்னியாசம், புத்தரின் வாழ்க்கை இவற்றைப் பற்றி எழுதுவதனால் பெண்கள் முன்னேற்றம் எப்படி ஏற்படும்” என்று கேட்டார். அந்தப் பெண்ணிற்கு சமாதானம் சொல்லியனுப்பினார் பாரதியார். ஆனால், அந்தப் பெண் சொன்னது அவரது மனதை உறுத்திக் கொண்டிருந்தது.

அப்போது அவர் செய்த முடிவு, “மாதர்களுக்குப் பயன்படவேண்டுமென்ற நோக்கமிருக்குமாயின், இந்த நிமிஷமே மாதர்களுக்கு அர்த்தமாகக் கூடிய நடையிலே எழுத ஆரம்பிக்க வேண்டுமென்று நிச்சயித்து விட்டேன்.” அறிமுகமில்லாத ஒரு பெண் சொன்னதில் உள்ள உண்மையை உணர்ந்து அதற்கேற்ப தன்னுடைய பத்திரிகையின் எழுத்து நடையை மாற்றிக் கொள்ள தயங்காத பெருந்தன்மை இந்த சம்பவத்தில் தெரிகிறது.

“ஊருக்கு நல்லது சொல்வேன்” என்ற பாடலில், ஒவ்வொரு வரிகளும் அற்புதம் என்று சொல்ல வேண்டும்.

“சாதிப் பிரிவுகள் சொல்லி – அதில் தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்”

“சாதிக் கொடுமைகள் வேண்டாம் – அன்பு தன்னிற் செழித்திடும் வையம்”

“பெண்களறிவை வளர்த்தால் – வையம் பேதைமை யற்றிடும் காணீர்”

கவியரசர் கண்ணதாசன் “பாரதியாரைக் கொண்டாடாதவனுக்குத் தமிழன் என்று சொல்லிக் கொள்ள அருகதையில்லை” என்றார்.

உண்மைதான். பாரதியார் மறைந்தாலும், அவருடைய கவிதைகள், கருத்துக்கள் ஞாலம் உள்ளவரை நிலைத்து நிற்கும். இன்று முன்டாசு கவி பாரசியாரின் 141வது பிறந்த தினம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com