

நாட்டில் அனைத்து தொழில்களுக்கும் அடிப்படையாக கருதப்படுவது தொழிற்கல்வியாகும். மேல்நிலைக் கல்விக்கு பிறகு மாணவர்கள் மருத்துவம், பொறியியல், சட்டம், ஆசிரியர்கல்வி போன்ற தொழிற்படிப்புகளில் சேர்ந்து படித்து வெற்றி பெற்று தகுந்த பணி ஒன்றில் சேருகிறார்கள். வாழ்வில் உன்னத நிலைக்கு வருகிறார்கள்.
நாட்டில் உள்ள பள்ளிகள் அனைத்தும் அவற்றில் படிக்கும் மாணவர்களுக்கு அறிவு, திறமை, வாழ்வியல் திறமைகள், ஒழுக்கம் ஆகியவற்றை கற்பிக்கும் சிறந்த தளமாக செயல்பட வேண்டும். இதற்கு ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு உணர்வு மிகவும் முக்கியம். பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களால்தான் ஒரு ஒழுக்கமுள்ள சமுதாயத்தை உருவாக்க முடியும். இதனால்தான் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தொடக்கக் கல்வி முதல் உயர் கல்வி வரை அனைத்து குழந்தைகளும் வாய்ப்பினை பெறும் வகையில் அரசு கல்வியை இலவசமாக வழங்கி வருகிறது.
தற்காலத்தில் மாணவர்களை கண்டிப்பதில் ஆசிரியர்களுடைய கைகள் (வாயும் தான்) கட்டப்பட்டுள்ளன. பெற்றோர்களும் தனிக் குடும்ப வாழ்க்கை முறையில் அதிக அளவிலான தரமான நேரத்தை தங்கள் குழந்தைகளுடன் செலவிடுவதில்லை.
நல்ல நட்புகளும் அருகி விட்டன. பள்ளிகளில் ஒழுக்கக் கல்விக்கு என நேரமும் ஒதுக்கப்படுவதில்லை. இந்நிலையில் பொது வெளிகளிலும், குடும்பங்களிலும், பள்ளிகளிலும் மாணவர்களின் ஒழுக்கம் ஒரு கேள்விக்குறியாக மாறி வருகிறது.
பொதுவாக நாட்டில் குற்றங்கள் பெருகுவதற்கு மக்களிடையே காணப்படும் கல்வி அறிவின்மை ஒரு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது. கல்வியறிவு உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. அதனால் கனிசமான வருமானத்தை பெறும் தனிநபர்கள் வருமானத்திற்காக குற்றச்செயல்களில் ஈடுபடும் வாய்ப்புகள் மிகவும் குறைவு. எனவே, நாட்டில் குற்றங்கள் குறைய கல்வி நிறுவனங்கள் தங்களது பணியை சிறப்பாக செய்ய வேண்டும்.
தற்போது கல்வி ஒரு வியாபார பொருளாக மாறி விட்டது. இந்நிலையில், லாபத்தை ஈட்டுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு இவைகள் செயல்படுவது துரதிஷ்டவசமானது. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவுபடுவதன் காரணமாக பல பள்ளிகள் மூடப்படுகின்றன. இதற்கான காரணங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய அவசரத் தேவை ஏற்பட்டுள்ளது. ஆனால், ஒவ்வோரு வருடமும் புதியதாக தனியார் பள்ளிகள் மட்டும் உருவாகி வருவது புரியாத புதிராக இருக்கிறது.
ஒவ்வொரு பள்ளியிலும் ஒவ்வொரு வருடத் துவக்கத்திலும் மாணவர்களின் உடல்நலம் பற்றிய முழு விவரங்கள் அடங்கிய பதிவுகள் இருப்பது நல்லது. அதை அடிப்படையாகக் கொண்டே மாணவர்களை ஆசிரியர்கள் அணுகும் முறை அமைய வேண்டும். முக்கியமாக பொருளாதார பின்னடைவில் உள்ள மாணவர்களின் குழந்தைகளுக்கு புகலிடம் அரசுப் பள்ளிகளே ஆகும். அரசும் இப்பள்ளிகளுக்காக கணிசமான நிதியை ஒதுக்கித் தருகின்றன. எனவே ஆசிரியர்கள் தங்களின் சமூகப் பொறுப்பை நன்கு உணர்ந்து செயல்படும் போது மட்டுமே ஓர் ஆற்றல்மிகு சமுதாயம் உருவாகும்.
சமுதாயத்தில் அடுத்து ஒரு முக்கியமான பணி உயிர்காக்கும் மருத்துவப் பணியாகும். சமீபத்திய டெல்லி குண்டு வெடிப்பு நிகழ்வில் தற்கொலை படையில் ஒரு மருத்துவர் ஈடுபட்டது அவர் தொழில் தர்மத்தை மீறிய செயலாகவே கருதப்படுகிறது. மருத்துவத் துறையும் இப்பொழுது வணிகமயமாகி விட்ட நிலையில், சாதாரண காய்ச்சலுக்கான சிகிச்சைக்குக் கூட அதிக அளவில் மருத்துவச் செலவுகளை எதிர்நோக்கும் நிலை சாமான்ய மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளின் சேவைக் குறைபாடுகளை அரசு நேர் செய்தால் தனியார் மருத்துவமனைகளை பொதுமக்கள் தவிர்ப்பார்கள்.
இதேபோன்று நாட்டின் கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் பொறியாளர்கள் அமைக்கும் சாலைகள், பாலங்கள், அடுக்குமாடிக் கட்டிடங்கள் கட்டப்பட்டு சில நாட்களிலேயே விழுந்துவிடும் அவல நிலைகளை ஊடகங்கள் நம் கவனத்திற்கு கொண்டு வருகின்றன.
அடுத்த முக்கியமான துறை நீதித்துறையாகும். நீதித்துறையில் நீதிபதி ஒருவரின் வீட்டிலேயே சமீபத்தில் கோடிக்கணக்கில் ரூபாய் நோட்டுகள் எரிக்கப்பட்ட நிகழ்வு நம் மனதை விட்டு இன்னும் நீங்காமல் இருக்கிறது. இந்நிகழ்வு நீதி தேவதையின் கண்களில் கண்ணீரை கண்டிப்பாக வரவழைத்திருக்கும். எனவே நீதித்துறையும் களங்கம் நிறைந்ததாகவே காணப்படுகிறது.
சிறைக் கைதிகளும் கைப்பேசி போன்ற சாதனங்களுடன் சிறையில் வசதியான வாழ்வு வாழ்வதாக குற்றச்சாட்டுகள் அவ்வப்போது வருகின்றன. மொத்தத்தில் கல்வி, காவல், நீதி, மருத்துவம், பொறியியல், சட்டம் போன்ற அனைத்து துறைகளிலும் தொழில் தர்மங்கள் நீர்த்துப் போய் விட்டதாகவே நாம் கருத வேண்டியிருக்கிறது.
தொழிற்கல்வியை வெற்றிகரமாக முடிக்கும் மாணவர்கள் தங்களின் பல்கலைக்கழகச் சான்றிதழ்களை பெறும்போது தங்கள் தொழில் வாழ்வில் நேர்மையுடனும், கண்ணியத்துடனும் நடந்துகொள்வதாக உறுதிமொழி எடுத்துக் கொள்வது குறிப்பிடத்தக்கது.
‘படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் ஐயோ என்று போவான்’ என்றான் பாரதி. எனவே, தொழிற்கல்வி ஒன்றை முடித்து தொழில் ஒன்றை வாழ்வில் தேர்ந்தெடுப்பவர்கள் பாரதியின் இந்த வார்த்தைகளை நினைவில் இனியாவது இருத்திக் கொண்டு செயல்படுவது நல்லது. அவர்கள் தங்களுடைய தொழில் வாழ்வில் தொழில் தர்மம் நீர்த்துப் போகாமல் பார்த்துக் கொள்ளுவதன் மூலம் மட்டுமே வளமான இந்தியா உருவாகும்.