கோவை டி.பி.சாலையின் ஒரு மூலையில், வனக் கல்லூரி சந்திப்பில் நின்றிருக்கும் உயர்ந்த கட்டிடம் ‘ஒப்லி டவர்ஸ்’. வாசலில் நின்றுகொண்டு அந்தப் பெரிய பலகையில் பெயர்களைப் படித்தபடி நின்றிருந்தேன்.‘கல்வித் துறை பெயரே இல்லையே... ஆனா, டி.இ.ஒ.ன்னு சொன்னாங்களே... ‘காம்ப்ரோ ஆபீஸ்‘னு வேற சொன்னாங்க... ஒண்ணும் புரியலையே” என்று யோசித்தபடி 3ம் மாடியில் இருந்த ‘காம்ப்ரோ’ அலுவலகத்திற்குப் போனேன்.“இங்க செம்மலர்ன்னு ஒருத்தங்க...”“டி.இ.ஓவா? உக்காருங்க...”10 நிமிடங்களுக்கு பிறகு கதவைத் திறந்துகொண்டு வந்த பெண்ணுக்கு மிஞ்சிப் போனால் 20 வயது இருக்கலாம். மாந்தளிர் நிறம். சுமாரான உயரம். ஒல்லியான உடம்பு. பூப்போட்ட சுடிதார். குறும்பு சொட்டும் அழகான சிரித்த முகம். பளிச்சென்ற கண்கள். ஒற்றைப்பின்னலை முன்புறம் கொண்டுவந்து அதன் முனைகளை நீவியவாறு பக்கத்தில் வந்து நின்றாள். “ம்ம்.... சொல்லு... நாந்தான் செம்மலர். என்ன வேணும் உனக்கு? நீ யாரு?”ஆ... இவங்க... இவ... இவதான் டி.இ.ஓ வா? என்னமோ ரொம்ப நாள் பழகின மாதிரி நீ நீங்கறா... தப்பான இடத்துக்கு வந்துட்டமா? என்று குழம்பியபடி எழுந்து நின்றேன்.“ஹலோ... மரியாதை மனசுல இருந்தாப் போதும்” என்று சிரித்தாள்.“அ...அது... ரவிராஜ் அனுப்பிச்சாரு. போய் டி.இ.ஓ செம்மலரைப் பாரு... ஏதாவது பார்ட் டைம் வேலை இருக்கும்னு சொன்னாரு... அதான்...” என்று இழுத்தேன்.“என்னத்துக்கு பதட்டம்? உக்காரு மொதல்ல... “ என்றபடி சுவாதீனமாக பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள்.“ஆமா... என்ன படிச்சுருக்க?”“டி எம் ஈ... பொள்ளாச்சில..”“அது சரி... கோயம்புத்தூர்ல இல்லாத ஃபாக்டரியா? கம்பெனியா? இங்க எங்கிட்ட வந்து நிக்கற? ஏன்... அரியர்ஸ் நிறைய வெச்சுருக்கியா?”“இல்லல்ல... பாஸ் ஆயிட்டேன்” என்று அவசரமாக மறுத்தேன்.மறுபடி ஒரு குறும்புச் சிரிப்பு.“ம்ம்... சரி சரி. எல்லாத்துக்கும் பதட்டப்படாத... இது கம்ப்யூட்டர் சென்டர். நான் டாடா என்ட்ரி ஆபரேடர். பார்ட் டைம் வேலை இங்க நிறைய இருக்கு. உனக்கு கம்ப்யூட்டர் தெரியுமா? படிச்சிருக்கியா? எப்பவாச்சும் வேலை செஞ்சிருக்கியா?”.“வேலையெல்லாம் செஞ்சதில்ல. காலேஜ்ல ஒரு செமஸ்டர்ல ஒரு பாடம் இருந்தது. அப்ப கொஞ்சம் பழக்கம்...”“அது போதும். இங்க கம்பெனிகள்ல இருந்து வண்டி வண்டியா ஃபார்ம்க வரும். ஒண்ணொண்ணா படிச்சு கம்ப்யூட்டர்ல அடிக்கணும். முடியுமா?”“ஓ... முடியும். சொல்லிக் குடுங்க”“ஒரு நாளைக்கு 500 ஃபார்மாவது அடிக்கணும். ஆயிரம் அடிக்கறவங்க எல்லாம் இருக்காங்க”“சரி”“பாக்கத்தானே போற... சரி டீடெய்ல்ஸ் சொல்லு..” என்றபடி அறையின் மூலையில் இருந்த ஒரு கம்ப்யூட்டரில் என் பெயர், விலாசம், படிப்பு விவரங்களைக் கேட்டு மடமடவென்று டைப் செய்தாள்.“நாளைக்குக் காலைல 9 மணிக்கெல்லாம் வந்துரு. 1 மணி நேரம் ட்ரைனிங். அப்பறம் வேலை ஆரம்பிக்க வேண்டியதுதான். ஒரு ரெக்கார்டுக்கு 10 பைசா... புரிஞ்சுதா?” வெளியே வரும்போதுதான் உறைத்தது. டி.இ.ஓ. என்பது நான் நினைத்தபடி ‘டிஸ்ட்ரிக்ட் எஜுகேஷன் ஆபீசர்’ கிடையாது; டாடா என்ட்ரி ஆபரேட்டர் !!ஆனாலும் அந்த பளிச் செம்மலர் மீதும் அவளின் சுறுசுறுப்பு மீதும் ஒரு சின்ன ஈர்ப்பு.மறுநாள் காலையில் கம்ப்யூட்டரை இயக்குவது, படிவங்களைக் கையாள்வது, படிப்பது, டாடா அடிப்பது எல்லாம் சொல்லிக்கொடுத்தாள்.பிறகு ஒரு கம்ப்யூட்டரின் முன்னால் உட்காரவைத்துவிட்டு 5 கட்டு காகிதங்களைக் கொண்டுவந்து கொடுத்தாள். ஒவ்வொரு கட்டின் மீதும் ஒரு சின்ன லேபிளில் ஒரு பேட்ச் எண் இருந்தது. அதில் என் பெயரை எழுதி வைத்தாள். “பேர் எழுதியாச்சுன்னா இந்த பேட்ச் ஃபார்ம் எல்லாம் நீதான் அடிக்கணும். முடியல... ஆள மாத்துங்கன்னு வரக்கூடாது. புரிஞ்சுதா?”சொல்கிறாளா மிரட்டுகிறாளா என்று தெரியவில்லை. ஆனால், அவள் எல்லோரிடமும் அப்படித்தான் என்று சிறிது நேரத்தில் தெரிந்து போனது.முதல் நாள் தத்தித் தத்தி முக்கி முக்கி 100 முடிப்பதற்குள் எனக்கு முழி பிதுங்கிவிட்டது.“அது சரி... இப்பிடி நத்தையாட்டம் வேலை செஞ்சா என்னிக்கு முடிக்கிறது? இங்க பாரு ஒரு வாரம்தான் பாப்பேன். இம்ப்ரூவ்மென்ட் இல்லைன்னா நின்னுக்கலாம்” என்று தாட்சண்யம் இல்லாமல் சொன்னாள்.அப்படி இப்படி ஒரு மாதம் ஓடிவிட்டது. ஒரு நாள் மாலையில் மின்சாரம் இல்லாததால் எல்லாரும் வெளியே வந்துவிட்டோம். மெதுவாக படிகள் ஏறி மொட்டை மாடிக்குப் போனேன. அங்கே ஒரு மூலையில் செம்மலரைப் பார்த்தேன். கைகட்டியபடி எங்கோ தூரத்தில் பார்த்தபடி தனியாக நின்றிருந்தாள். “தனியா நின்னு என்ன யோசிக்கிறீங்க? என்ன மாதிரி நத்தையெல்லாம் என்னிக்கு முயல் ஆகறதுன்னா? பாருங்க... ஒரு மாசம் ஆச்சு இப்பதான் 300 வரைக்கும் வந்திருக்கேன்” என்றேன். என் சிரிப்பில் இருந்த செயற்கைத்தனம் எனக்கே பிடிக்கவில்லை.“ம்ம்... வா...வா..... இன்னிக்கு கரண்ட் வந்தமாதிரிதான்... இப்பவே மணி நாலாச்சு.”“அது சரிங்க. நான் வந்து ஒரு மாசமாச்சு. இன்னும் பணம்னு எதுவும் தரலையே” “அதெல்லாம் ஒவ்வொரு மாதமும் 5ம் தேதி அக்கௌண்டண்ட் பணத்தோட வந்து கணக்குப் பார்த்துக் குடுப்பாரு”“ஓ... சரி.. எனக்கு என்ன... ஒரு 400 இல்ல 500 வரும்னு நினைக்கிறேன். அது போகட்டும். ஆமா... நீங்க என்ன கம்ப்யூட்டர் படிச்சீங்களா? எம்.சி.ஏ. வா? எந்த காலேஜ்? உங்க வீடு கூட இங்க பக்கத்துலதானோ? காலைல டாண்ணு 9 மணிக்கு வந்துடறீங்க...”சட்டெனத் திரும்பியவளின் மீது மாலைச் சூரியனின் தங்க வெளிச்சம் விழுந்ததில் ஒரு கூடுதல் ஜொலிப்பு தெரிந்தது.“நானா? காலேஜா?”எனக்கு சந்தூர் சோப்பு விளம்பரம் நினைவுக்கு வந்தது.“எங்க ஊர்ல +2 படிச்சாலே ஜாஸ்தி” என்றாள்.“....” கொஞ்சம் அதிர்ச்சியுடன் பார்த்தேன்.“என்ன? உடனே வெறும் +2 படிச்ச இவதான் நம்மளை எல்லாம் மேய்க்கறாளான்னு இருக்கா?” என்று வழக்கமான குறும்புச் சிரிப்பு சிரித்தாள்.“அ...அ... அதெல்லாம் இல்லை” “சரி சரி.. வழக்கம்போல பதட்டப்படாத. இங்க வா... அங்க மேற்கால பாரு.... அதோ அங்க ஒரு மலை தெரியுதா?”முதலில் மேற்கு எது என்பதை தெளிவாக்கிக்கொண்டு அங்கே பார்த்தேன்.“அங்கதான் ஆனைகட்டி இருக்கு. எங்க ஊரு. ஒரு மணி நேரத்துக்கு ஒரு பஸ்ஸு. அதுவும் ப்ரைவேட் பஸ். மூட்டைல புளி அடைக்கிற மாதிரி அடைச்சுக்கிட்டு வரும். காலைல 7 மணி பஸ்ஸைப் புடிச்சாத்தான் இங்க எட்டரைக்காவது வரமுடியும். நீங்க முடிச்ச வேலையெல்லாம் சாம்பிள் செக் பண்ணிட்டு நான் 7மணிக்கு மேல கிளம்பி வீடு போக ராத்திரி 9:30 மணி ஆயிடும். சமயத்துல மழை பெஞ்சா பதினோரு மணி கூட ஆயிடும்”“...”“இதெல்லாம் எதுக்கு சொல்றேன்னா... இங்க பொதுவா எல்லாருமே பார்ட் டைம் வேலை செய்யறவங்கதான். என்னை மாதிரி ஒண்ணு ரெண்டு பேர்தான் பெர்மனண்ட். கொஞ்சம் எக்ஸ்ட்ரா பணத்துக்காக ரெண்டு அல்லது மூணு மணி நேரம் வந்து அவசர அவசரமா டேடா என்ட்ரி பண்ணிட்டு வீட்டுக்கு ஓடிப்போறவங்கதான் எல்லாரும். என்னை என்னமோ ஒரு கண்டிப்பான டீச்சர் மாதிரிதான் பாக்கறாங்க. போகட்டும். எல்லாருக்கும் வேலை நடக்கணும். அவ்வளவுதான். நீயும் என்ன... உன் படிப்புக்கு ஏத்த வேற நல்ல வேலை கிடைச்சா போயிடப் போற...”“...”“ஆனா... அட்லீஸ்ட் நான் யாரு? என்ன படிப்பு என்னன்னு கேக்கணும் உனக்காவது தோணுச்சே...”“இல்ல.. நான் சாதாரணமாத்தான் கேட்டேன். அதுவுமில்லாம படபடன்னு பேசி பரபரப்பா இருக்கற உங்களையே எப்பவும் பார்த்துட்டு இன்னிக்கு இப்பிடி அமைதியா நிக்கும்போது ஆச்சரியமா இருந்துது... அதான்...”“எங்க ஊர்ல இருந்து கோயமுத்தூரை விட பல பேர் கேரளா பக்கம் இருக்கற ஹோட்டல்களுக்கோ கெஸ்ட் அவுசுகளுக்கோ வேலைக்குப் போயிடுவாங்க. ரொம்ப நோகாத வேலை. காசு பணம் டிப்சுன்னு ஜாஸ்தி. எனக்கோ சின்ன வயசுல இருந்தே நிறைய படிக்கணும்னு ஆசை. ஆனா வீட்டுலயும் அவ்வளவு வசதி இல்ல. ஊர்லயும் இல்ல. +2ல நான் டிஸ்ட்ரிக்ட் செகண்ட். அப்படியும் மேல படிக்க முடியல. அப்படியே ரெண்டு வருஷம் வேஸ்ட். வீட்டுக்காக கூலி வேலைக்கு போகவேண்டியதாப் போச்சு. எனக்கென்னமோ கோயமுத்தூர்லதான் என் வாழ்க்கை இருக்குன்னு ஒரு நம்பிக்கை. அதான்... வீட்ல கெஞ்சிக் கூத்தாடி இங்க வந்து அலைக்கழிஞ்சேன். யாரோ ஒரு நல்லவர் மூலமா இந்த சென்டர் வந்தேன்”“ஓ... ““நம்ம முதலாளி பென்ஸ் சார்தான் இதைக் கத்துக் குடுத்தார். அப்ப பால் கம்பெனி பக்கத்துல அவர் வீட்டுலயே ரெண்டு கம்ப்யூட்டர் வெச்சிருந்தாரு. கொஞ்சம் கொஞ்சமா வளந்து 5 வருஷத்துல ஆள் போட்டு பண்ற அளவுக்கு வந்திருக்கு”“அட..... அப்ப நீங்க இங்கயே இருக்கலாமே. எதுக்கு தினம் போய் வரணும்?”“உனக்கெல்லாம் இங்க யாராவது சொந்தக்காரங்க, ஃப்ரெண்ட்ஸ் இருப்பாங்க. அவங்க கூட இருந்துக்குவ. ஆனா எங்க ஊர்ல என்னை மாதிரி படிச்சு முன்னுக்கு வரணும்னு நிறைய பொண்ணுக இருக்காங்க. 6வதுல இருந்து +2 படிக்கற வரைக்கும் 15 பேர் இருக்காங்க. காலைல 4 மணிக்கு அவங்களுக்கெல்லாம் ட்யூசன் எடுக்கறேன். நான் இங்க வந்துட்டா அவ்வளவுதான். அவங்க வீட்ல எல்லாம் கூலிக்கு அனுப்பிச்சுருவாங்க. போன வருஷம் ரெண்டு பொண்ணுக +2ல ஆயிரத்துக்கு மேல மார்க்கு. கலெக்டர் ஆபீஸ் போய் கைல கால்ல விழுந்து காலேஜ் அட்மிசன் போட்டோம். இன்னும் ஒரு பத்து பேரையாவது தூக்கிவிட்டுட்டேன்னா அப்பறம் அந்த வண்டி அது பாட்டுக்கு ஓடும். நானும் மேல படிக்கணும். இந்த வேலையெல்லாம் எப்படி வாழ்க்கை முழுக்க செய்ய முடியும்? மேல போயாகணும்...”இதில் எனக்கும் ஏதோ செய்தி இருப்பதாகப் பட்டதால் கொஞ்சம் அசௌகரியத்துடன் வேறுபக்கம் பார்த்தேன். எதிர்பார்த்தபடியே பேசினாள்.“நீயெல்லாம் படிச்சவன். அதுவும் தொழில் படிப்பு. அதுவும் ஃபர்ஸ்ட் க்ளாஸ். அப்பறம் ஏன் இந்த வேலையெல்லாம் செய்யணும்? போய் முசுவா தேடுனா கிடைக்காதா என்ன? உண்மையச் சொன்னா... நீயெல்லாம் கவர்மெண்ட் வேலை வேணும். அதுவும் உன்னைக் கூப்ட்டுக் குடுக்கணும்னு இருக்க. அது வரைக்கும் எதாவது பண்ணலாம்னு இருக்க. இதையே உன் படிப்புக்கு ஏத்த தொழில் கத்துக்கலாமே...”அவள் சொன்னது முற்றிலும் தவறு என்றும் சொல்லிவிடமுடியாது. ஒன்றும் சொல்லாமல் எங்கோ பார்த்தேன். “இங்க பாரு.... வயசுல உன்னை விட நான் ரெண்டோ மூணோ பெரியவளா இருக்கலாம். படிப்பும் கம்மிதான். ஆனா நான் இருக்க வேண்டிய இடம்னு ஒண்ணு வெச்சுருக்கேன். போயே ஆகணும். அதுக்கான வசதி வாய்ப்பை கொஞ்சம் கொஞ்சமா கட்டிக்கிட்டு இருக்கேன். உனக்கெல்லாம் என்ன? இருக்கற வாய்ப்புகளுக்கு எங்கயெல்லாமோ போகலாம். என்னெல்லாமோ பண்ணலாம்”முதலில் அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன். எங்கெல்லாமோ வலித்தது. யாரோ என்னைப் பொதுவில் நிர்வாணப்படுத்தியதைப் போல ஒரு சங்கடமும் கூச்சமும் பிய்த்தன.அதற்குப் பிறகு இரண்டு நாட்கள் அங்கே போகவில்லை. செய்த வேலைக்கான பணத்தை வாங்க மறுநாள் போனபோது முன் அறையில் யாரோ இருவரிடம் அவள் பேசிக்கொண்டிருந்தாள். “டாடா என்ட்ரி பண்ணத் தெரியுமா? பார்ட் டைம் வேலைதான் இங்க...”நான் கொஞ்ச நேரம் காத்திருந்துவிட்டு அவளிடம் இனிமேல் வரப்போவதில்லை என்று சொல்லிவிட்டு வந்தேன். அதே குறும்புச் சிரிப்புடன் ‘சரி’ என்றாள்.சில வருடங்களுக்குப் பிறகு டில்லியில் இருந்து விடுமுறைக்கு வந்தபோது கோவை எல்.ஜி. நிறுவனத்தில் ஒரு நண்பனைப் பார்க்கப் போய் வரவேற்பறையில் உட்கார்ந்திருந்தேன். யாரோ இரண்டு மூன்று பெண்கள் என்னைத் தாண்டிப் போகும்போது சட்டென உறைத்தது. எழுந்து நின்று “ஹலோ...மேடம்..” என்றேன்.மூவருமே திரும்பினார்கள். இடது பக்கம் இருந்தவளைப் பார்த்து “நீங்க செம்மலரா?” என்றேன்.“ஆமா. நீ?” என்றாள்.“நாந்தான்... அங்க டேடா என்ட்ரி சென்டர்ல...” என்று சொல்ல ஆரம்பிக்க….“ஓ... நீங்க போங்க” என்று மற்றவர்களிடம் சொல்லிவிட்டு பக்கத்தில் வந்தாள்.“நீன்னு கேட்டதுமே உறுதியாயிடுச்சு அது நீங்கதான்னு...” என்று சிரித்தேன்.“அது சரி. நான் இங்க ஐ டி டிபார்ட்மென்ட் ஹெட்டா இருக்கேன். நீ இப்ப என்ன பண்ற? எங்க இருக்க? இங்க எதுக்கு வந்திருக்க? ஏதாவது இண்டர்வ்யூவா?” வழக்கம்போல படபட கேள்விகள்.“உங்களைப் பார்க்கத்தான் வந்தேன்” என்று சிரித்தபடி பொய் சொன்னேன். .மனதில் நின்ற மனிதர்கள் - 20. ‘மெஸ்’ மகாதேவன்புதுதில்லி மயூர் விஹார் வாழ் தமிழர்களுக்கு இந்தியா கேட் அல்லது குதுப்மினார் கூட ஒருவேளை தெரியாமல் இருக்கலாம். ஆனால் “மகாதேவன் மெஸ்” தெரியாமல் இருக்கவே முடியாது. காலையும் மாலையும் 7மணிலிருந்து 10 மணிவரை பரபரப்பாக இயங்கும் அந்த மெஸ் எத்தனையோ ஊரு விட்டு ஊரு வந்த ராமராஜன்களின் பசியைப் போக்கியிருக்கிறது.முதல்முறையாக அந்த மெஸ்ஸை ஏதோ ஒரு இரவு 8 மணிக்கு பல்வேறு DDA ப்ளாக்குகளுக்கு நடுவே ஒரு கட்டிடத்தின் முதல் மாடியில் ஒரு நண்பர் அறிமுகப்படுத்திவைத்தார். ஒரு 2BHK வீட்டின் முன் அறையில் 3 சிறிய மேசைகளும் சில ஸ்டூல்களும். நான்கைந்து பேர் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.“வாங்க... வாங்க... சார் யாரு? நம்ம ஏரியாக்கு புதுசா? டில்லிக்கே புதுசா?” கையில் சாம்பார் வாளியுடன் உள்ளே இருந்து வந்தவர் கேட்டார்..“ஊருக்கே புதுசு. நேத்துத்தான் வந்தான். பேர் மகேஷ். இங்கதான் பாக்கெட் 5ல இருக்கான்... இவர்தான்டா மகாதேவன்”“சௌகர்யமாப் போச்சு. காலம்பரயும் நைட்டும் இங்க வந்துடுங்கோ. சனி, ஞாயிறு மட்டும் கிடையாது” என்றார் மகாதேவன் சிரித்தபடியே.அந்த நேரத்திலும் பளிச்சென்ற வெள்ளை அரைக்கைச் சட்டை, மடித்துக் கட்டிய வெள்ளை வேட்டி, நெற்றியில் குங்கும் என்று பளபளவென்று இருந்தார். சுமாரான உயரம்தான் என்றாலும் எம்ஜியார் போல சிவப்பாக கொஞ்சம் பூனைக்கண்களுடன் வசீகரமான சிரிப்பு. இரண்டு கைகளிலும் மணிக்கட்டில் சிவப்பு, மஞ்சள், கருப்பு என ஏதேதோ கயிறுகள் கட்டியிருந்தார். உள்ளே சமையலறையில் யார், எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று கடைசிவரை தெரிந்ததேயில்லை. உள்ளே போய் எடுத்து வருவது, பரிமாறுவது, மேசைகளைத் துடைப்பது, தண்ணீர் வைப்பது எல்லாம் அவரேதான். சில நாட்கள் காலை வேளைகளில் அவருடைய இளைய சகோதரர் உதவிக்கு இருப்பார். மற்றபடி ஒற்றை ஆளாகவே பம்பரமாகச் சுற்றுவார்.தட்டில் ஆவி பறக்க அவர் சாதம் பரிமாறுவதில் ஒரு நளினம் இருக்கும். பரபரவென்று இருந்தாலும் எதையும் கீழே சிந்தாமலும், தன் உடைகளில் தெறித்துக்கொள்ளாமலும் வெகு நாசூக்காக வேலை செய்வார்.“தயவு செஞ்சு தட்டு, தம்ளரெல்லாம் அங்க மூலைல பக்கெட்ல போட்டுடுங்க. நன்றி” என்று அவ்வப்போது அனிச்சையாக வாய் சொல்லிக்கொண்டேயிருக்கும்.முதல்மாடி வீடு கொஞ்சம் சிரமமாக இருந்ததால் பிரதான சாலையில் கொஞ்சம் விஸ்தாரமான தரை தள வீட்டுக்கு மாறியபின் பரபரப்பு இன்னமும் அதிகமாகிப் போனது. அவ்வப்போது வாடிக்கையாக சாப்பிட வரும் யாரிடமாவது யாருக்காகவாவது உதவி கேட்பார். பெரும்பாலும் தமிழகம் போய்வருபவர்களிடம் ஏதாவது பொருட்கள் அல்லது யாருக்காவது வேலை கேட்பார். “வாங்க சாமிநாதன் சார். நம்ம பையன் ஒருத்தன் போன வாரம் வந்தான். டைபிங் ஷார்ட்ஹேண்ட் தெரியுமாம். எங்கயாவது பி.ஏ., செக்ரடரி, டைபிஸ்ட் வேலை இருந்தா சொல்லுங்களேன். துடியா வேலை செய்வான். நான் கேரண்டி”“தோ பாருங்க... இவர்தான் ராகவன். காசியாபாத்ல லிஃப்ட் கம்பெனில மெக்கானிக். 3 வருஷமாச்சு... இவர் ரிப்பேர் பண்ற லிஃப்ட் எல்லாம் உசரக்க போறது. ஆனா சம்பளம் மட்டும் உசரவேயில்ல. நீங்க கூட ஏதோ இஞ்சினீயரிங் கம்பெனிதானே. பார்த்து எதாவது பெட்டர் சம்பளத்துக்கு சேத்தி விடுங்களேன்”“நம்ம கிரிநாத்.. உங்களுக்குக் கூடத் தெரியும். கல்யாணம் ஆகி வைஃபைக் கூட்டிட்டு வந்துட்டார். இன்னிக்கு டில்லில ஒரு இஞ்சின் ஓடினா பத்தாதே. அவர் வைஃப் எதோ ஹெச் ஆராமே... அதுல ஒரு வேலை கிடைச்சா கொஞ்சம் பரவால்லன்னு ஃபீல் பண்றா. யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க”இப்படி ஒரு எம்ப்ளாய்மெண்ட் எக்ஸ்சேஞ் போல தினம் ஒரு சம்பாஷணை கேட்கலாம். ஆனால், அவர் மூலமாக பலருக்கு நல்ல இடங்களில் வேலை அமைந்து டில்லிக்குள்ளேயே தொலைவில் வேறு இடங்களுக்குப் போய்விட்டாலும் முடிந்தபோதெல்லாம் வந்து விசாரித்துவிட்டுப் போவார்கள். அவர்களாக வரவில்லையென்றாலும் அவர்களுக்குத் தெரிந்தவர்களிடம் அவ்வப்போது இவரும் நலம் விசாரித்துக்கொள்வார்.ஒரு சனிக்கிழமை மாலை வேளையில் குருவாயூரப்பன் கோவிலில் ஒரு மூலையில் அக்கடா என்று உட்கார்ந்திருந்தார். சொற்ப கூட்டமே இருந்தது. சுற்றி வருகையில் என்னைப் பார்த்துவிட்டு அழைத்தார்.“வாப்பா... இப்படி உக்காரு”“என்ன சார்... விச்ராந்தியா உக்காந்திருக்கீங்க. கோயில் அமைதியா இருக்கு. இதுவும் நல்லாத்தான் இருக்கு”“ஆமா... இது மாதிரி எப்பவாவதுதான் அமையும். ஒருத்தருக்காக காத்திருக்கேன். வர நேரமாகும் போல இருக்கு. உனக்கும் வேற அவசர வேலை இல்லேன்னா ஒக்காரேன்” “இல்லை சார். கரோல் பாக் போற வேலை இருந்தது. போயிட்டு வந்தாச்சு. இனிமே ஒண்ணும் இல்ல” என்றபடியே நானும் அமர்ந்தேன்.“ஏன் சார் முகம் கொஞ்சம் வாடின மாதிரி இருக்கு? உடம்பு சரியில்லையா?” என்றேன்.“அதெல்லாம் இல்ல. கொஞ்சம் முடை. அதான் ஒருத்தர் கிட்ட உதவி கேட்டிருக்கேன். அவர் வந்து கிடைக்கும்னு தெரிஞ்சா நிம்மதியா இருக்கும்”“உங்களுக்குக் கூடவா முடை?” “எனக்கு முடை இல்ல. பசங்க 3 பேருக்கும் காலேஜ் ஃபீஸ் கட்டியாகணும். கவுன்சிலிங் ஆயிடுத்து. 10 நாளைக்குள்ள 1 லட்சம் கட்ட வேண்டியிருக்கு”“இஞ்சினீயரிங்கா? மெடிகலா? ஆனா, உங்களுக்கு ரெண்டு பெண்கள்தானே? ஸ்கூல்ல இல்ல படிக்கிறாங்க?”“இல்லப்பா... அவங்களுக்கு இல்ல. இரு சொல்றேன். நம்ம மெஸ்ஸுக்கு எப்பவும் ஆனந்த் விஹார் மார்கெட் போய்த்தான் கறிகாயெல்லாம் மொத்தமா வாங்குவோம். அங்க நம்ம தமிழ்காரங்க நிறையபேர் இருக்காங்க. டில்லில வீட்டு வாடகை மத்த செலவெல்லாம் ஜாஸ்தின்னு காஸியாபாத், சஹிபாபாத் அங்கெல்லாம் தங்கிப்பாங்க. அவங்களுக்கெல்லாம் இன்சூரன்ஸா ஒண்ணா... எதுவும் கிடையாது. அஞ்சாறு வருஷம் முன்னால... பாலுன்னு ஒருத்தன் காய்கறி லாரில ஆப்ட்டு போய்ட்டான். ரொம்ப நல்லவன். அவன் குடும்பத்துக்கு ஏதானா பண்ணணும்னு நானும் தம்பியுமா கொஞ்சம் போட்டு, அப்பறம் உன்ன மாதிரி சாப்பிட வரவாகிட்டயெல்லாம் கேட்டு ஒரு அமவுண்ட் கலெக்ட் பண்ணிக் குடுத்தோம்”“ஓ... ரொம்ப நல்ல விஷயம் சார்...”“அப்பறம் அதையே தொடர்ந்து பண்ணலாமேன்னு சின்னதா ஒரு டிரஸ்ட் ஆரம்பிச்சு அதுல இருந்து இந்த மாதிரி கஷ்டப்படற தமிழ் குடும்பங்கள் தெரியவரும்போது அப்பப்ப ஹெல்ப் பண்றோம். நம்ம DTEAல படிச்ச பசங்க 3 பேரு... நல்ல மார்க்கு. கிண்டி, வேலூர், தஞ்சாவூர்ன்னு கவுன்சிலிங்ல சீட்டு கிடைச்சாச்சு. 4 வருஷம் ஹாஸ்டல்ல தங்கிப் படிக்கணுமே. குறைச்சல்னாலும் ஃபீஸ் இருக்கே. குடுக்கறோம்னு சொல்லிட்டோம். அதான் சிலபேர் கிட்ட கேட்டு இன்னிக்கு ஒருத்தர் வரேன்னிருக்கார். வெய்ட் பண்றேன். உள்ள நிக்கறான் பாரு குருவாயூரப்பன்... அவனதான் நம்பியிருக்கேன்” என்று கைகூப்பி பிரார்த்தித்தார்.எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. மௌனமாக உட்கார்ந்திருந்தேன். “என்ன அமைதியாயிட்ட?”“இல்ல சார். மெஸ் நடத்தறதே இடுப்பு ஒடியற வேலை. இதெல்லாம் கூட இழுத்துப்போட்டு...”“இழுக்கவும் இல்ல தள்ளவும் இல்ல... பத்து பேர் கிட்ட வாய் வார்த்தையா சொல்றது. கிடைச்சப்பறம் தேவையிருக்கறவாகிட்ட சொன்னா வந்து வாங்கிண்டு போறா... அது பாட்டுக்கு அவன் நடத்தறான். நான் ஒரு போஸ்ட்மேன்... அவ்வளவுதான்...”“அது சரி... நீங்க சிம்பிளாச் சொல்றீங்க. எனக்கு மலைப்பா இருக்கு. ஏன்னா நீங்க பாட்டுக்கு கமிட் பண்றீங்க. தேவையானது கிடைக்கலேன்னா... ”“அதுக்கு என்ன பண்ண முடியும்? நாலு பேர்கிட்ட வாய் விட்டு கேக்கத்தான் முடியும். இன்னிக்கு தரேன்னு சொல்றவா நாளைக்குத் தரலேன்னா கழுத்துல துண்டைப் போட்டா கேக்க முடியும்? வேற முயற்சிகள் செய்ய வேண்டியதுதான். குடுக்கறவா நிலைமையையும் நாம யோசிக்கணுமில்லயா? ஆத்துக்காரி உங்களுக்கெதுக்கு வீண்வேலைன்னு சொல்லலாம். நெஜமாவே அவங்களுக்கு வேற நெருக்கடி வந்துடலாம். சொல்ல முடியாது பாரு...”“ஆனா உங்ககிட்ட அட்மிஷனுக்கு கேட்டவங்க உங்களை மலையா நம்பியிருப்பாங்களே..”“ஆமாம். தோ... ரெண்டு நாள ராத்திரி 10 மணியானா டாண்ணு போன் வருது. ஆயிடுமா சார்.. எப்ப சார் கிடைக்கும்.. அடுத்த வாரம் பணம் கட்டணும் தப்பா நினைக்காதீங்கங்கறா... கஷ்டந்தான்”“...”“என்ன முழிக்கற? அதெல்லம் அப்படித்தான். உள்ள நிக்கறாம் பாரு கைல கமலத்தோட... அவனுக்குத் தெரியாதா எப்படிக் குடுக்கறதுன்னு..”பேசிக்கொண்டிருக்கும்போதே கோவில் நிர்வாகி வந்தார்.“மகாதேவன்... இங்கதான் இருக்கீங்களா... நல்லதாப் போச்சு. நாலஞ்சு மாசம் முன்னால சொன்னேனே ஒரு எஜுகேஷன் ஃபண்ட் ஆரம்பிச்சிருக்கோம்னு. நீங்க பல வருஷமாப் பண்றேள்னு உங்களைப் பத்தி ஏற்கெனவே சொல்லி வெச்சுருந்தேன். கேந்திரீய வித்யாலயா மட்டுமில்ல, DTEA ஸ்கூல் பசங்களுக்கும் குடுக்கலாம்னு டிரஸ்ட்ல முடிவாயிடுத்து. 5 பேர் வரைக்கும் சாங்ஷன் பண்ணலாம். சரியா?”மகாதேவன் என்னைப் பார்த்தார்.“நான் எதிர்பார்த்த ஆசாமி வரல்ல... சாமியே வந்திருக்கான்” (நிறைந்தது… )