
சுமிதா துவண்டு கிடந்தாள். உடல் வலியைவிட மனதின் வலி அதிகமாகத் தெரியக் கண்களில் லேசான கண்ணீர் கோடு.
“சுமி, ரிலாக்ஸ், வோர்ல்ட் ஹாஸ் நாட் கம் டு அன் எண்ட். மறுபடியும் முயற்சிப்போம். இல்லையா டாக்டர்.”
ராகவ்விடம் எதையோ அவசரமாகச் சொல்ல வந்த டாக்டர் அதைச் சொல்லாமல் தன்னை நிதானப்படுத்திக் கொண்டார்.
“சாரி, இதுவரை ஆறுமுறை IVF இன்ஜெக்ட் செஞ்சு பாத்துட்டோம். உங்க வைஃப் இனிமேல் தாங்க மாட்டாங்க”
சடாரென்று சுமிதா எழுந்துஉட்கார்ந்தாள்.
“அப்படின்னா இனிமேல் எங்களுக்குக் குழந்தை பாக்கியமே இருக்காதா டாக்டர்?”
டாக்டரின் மௌனம் அவளுக்குப் பதில் அளித்தது. சுமிதா சற்றே அதிகமாகத் தளர்ந்தாள். ராகவ் அவள் கைகளை அழுத்திப் பற்றினான்.
“ஜெஸ்டேஷனல் சரோகேஷன், இதை வேண்டுமானால் ட்ரை செய்து பார்க்கலாம்”
“சரி” என்ற அவர்கள் எடுத்த தீர்மானம் தான் காயத்ரியை சுமிதாவிடம் கொண்டுவந்து சேர்த்தது.
“காயத்ரி, நாளைக்கு டாக்டர் கிளினிக்கிற்கு வரச் சொல்லி இருக்கார். எம்ப்ரியோஃபெர்டிலைஸ் ஆயிடுத்தாம். காலை பத்துமணி அப்பாயிண்ட்மெண்ட். ரெடியாயிடு”
காயத்ரி அப்படி ஒன்றும் அழகில்லை. நிறமும் சுமார்தான்.
“டாக்டர் ,நீங்க தப்பா நினைக்கிலேன்னா ஒண்ணு கேட்கவா..? சரகேட்டாக இவங்களை தேர்ந்தெடுத் திருக்கீங்க. இவங்க ஜாடை குழந்தைக்கு வந்திடுமா?’
டாக்டர் லேசாகக் கமறிக்கொண்டார் .
“லுக் சுமிதா. இந்த IVF ப்ரொசீஜரில் உன்னோட கரு முட்டையும் உன் கணவரோட semenயும் இணைத்து பெர்டிலைஸ் செய்து அந்த எம்ப்ரியோவைத்தான் காயத்ரி கருப்பையிலே செலுத்துவோம். அதுனால குழந்தைக்கு அவளோட டிஎன்ஏ எதுவும் இருக்காது. அதே போலக் குழந்தை ரத்தத்திலே கூட அவளோட ரத்தம் கலக்காது. ஸோ…..கவலைப்படாதே. இன்னும் கொஞ்சம் சொல்றேன் கேட்டுக்குங்க. குழந்தை பிறந்த பிறகு தாய்ப்பால் கொடுக்க கூட அவங்க வேண்டாம். சமாளிக்க வேற நிறைய வழி இப்போ இருக்கு ”
காயத்ரி சாமி படத்திற்கு முன் நின்றாள்.
கடவுளே…. என்முதல் குழந்தையை நான்தான் கலைச்சேன். அது தப்புதான். ஆனால், அப்போ வேறவழி தெரியலை. ஆனால், இப்போ இதோ இவங்களோட குழந்தையை சுமக்கப் போறேன்… வெறும் வாடகைத் தாயா… நான் செஞ்சபாவம் என்னோடு போகட்டும். இந்தக் குழந்தை ஒழுங்கா உருவாகணும். நீதான் என் கூடவே இருக்கணும்”
சுமிதாவும் வேண்டிக்கொண்டாள்.
கடவுளே, என் கருவிலேதான் குழந்தை உருவாகாம போச்சு. இதோ இப்போ வாடகைக்கு கருப்பை எடுத்து எங்க குழந்தையை வைக்கப் போறோம். குழந்தையை நீதான் கூட நின்னு காப்பாத்தணும்.
“சுமிதா, ஒரு சந்தோஷ செய்தி. முதல் IVFலேயே சக்சஸ். காயத்ரி இப்போது உங்கள் குழந்தையைச் சுமக்கிறாள். இனிமேல்தான் காயத்ரியை நீங்கதான் ஜாக்கிரதையா பாத்துக்கணும்.போதுமான வருமானமில்லாமத்தான் இதைச் செய்ய முடிவு எடுத்திருக்கா. அதனால அவள் சாப்பாட்டு விஷயத்திலே காம்ப்ரமைஸ் செய்யாமல் பார்த்துக்கோ. தேவைப்படும் ஊட்டச் சத்தைச் சரியா கொடுத்தாத்தான் குழந்தை ஆரோக்கியமா வளரும். என்னபுரியுதா?”
சுமிதாவிற்கு சந்தோஷம்தான். ஆனாலும் என் குழந்தை ஏன் என் வயிற்றில் வளர மறுத்தது? லேசான வருத்தம் எட்டிப் பார்த்தது.
“ராகவ், காயத்ரியை நம்ம வீட்டுக்கு வந்து தங்கச் சொல்லட்டுமா. நான் பக்கத்திலே இருந்து பாத்துகிட்டா சரியா இருக்கும்.”
ராகவ் மறுத்துவிட்டான்.
“வேண்டாம் சுமி, அவங்க நம்மைவிட்டுத் தள்ளி இருந்தாலே நல்லது. நாளைக்குக் குழந்தை பிறந்ததும் அவங்களை வீட்டைவிட்டு அனுப்புறது சிரமமாயிடும்.”
அவன் கைகளில் காயத்ரியுடன் அவர்கள் போட்ட ஒப்பந்தப்பத்திரம் படபடத்தது.
“இதை ஜாக்கிரதையா லாக்கர்லே வெச்சுடறேன்... மிக முக்கியமான டாகுமென்ட் இது.
••• ••• •••
சற்றே சதை போட்டிருந்த காயத்ரி கண்ணாடியின் முன் நின்று தன்னைப் பார்த்துக்கொண்டாள்.
“அழகாத்தான் ஆயிட்டேன்”
நான்காவது மாதம் அவளைத் தளதளவென்று காட்டியது. லேசாக மேடிட்ட வயிறு அவள் கலைத்த அவளுடைய குழந்தையையும் அந்த நாட்களையும் நினைவுபடுத்தியது.
”எனக்கு பயமா இருக்கு... நாள் தள்ளிப்போயிருக்கு”
கேஷவ் அவளைப்பிடித்து இழுத்தான்.
“அதெல்லாம் இருக்காது. நீ சும்மா தேவையில்லாம பயப்படற”
அவன் கைகளைத் தள்ளிவிட்டாள்.
”இல்லை. எனக்கு என் உடம்பு பத்தி நன்றாகவேத் தெரியும். இருபத்திமூணுநாள் கணக்கு தப்பவே தப்பாது. இப்போது நாற்பதுநாள்.”
கேஷவ் பதில் சொல்லவில்லை.
“நீ உடனே கல்யாணம் பண்ணிக்க. இல்லே என்னால வெளிலே தலைகாட்ட முடியாது. ஆபீஸ் முழுவதும் காரிதுப்பும்.”
துக்கம்,கோபம்,பரிதாபம் எனும் கலவையாகக் கெஞ்சினாள். அவன் எதுவும் பேசாமல் அடுத்தநாள் காணாமல் போனான்.
••• ••• •••
உள்ளே நுழைந்த சுமிதா கண்ணாடியில் தெரிந்தாள்.
“வாங்க….”
“மெதுவா….மெதுவா…ஆறுமாசம் வரை ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்.
இந்தா ஆப்பிள், சாத்துக்குடி, மாதுளை... ரெண்டு வேளையும் பழங்கள் சாப்பிடறதானே? ஹார்லிக்ஸ் இருக்கா ஆயிடுத்தா… மாத்திரைகளையும் நேரம் தப்பாமல் தானே எடுக்குற? சரி…இந்த வாரம் டாக்டர் செக்அப். திங்கள் காலையிலே கார் எடுத்துட்டு வந்துடுறேன். ரெடியா இரு”
சுமிதா வீட்டைச் சுற்றி ஒரு கண்ணோட்டம் இட்டாள். பராவாயில்லை நீட்டாக்த்தான் வைத்திருக்கிறாள். அது அவர்கள் காயத்ரிக்காக, புறநகர் பகுதியில் வாடகைக்கு எடுத்த வீடு.
”மேடம், வீட்டிலே அம்மா இருக்காங்க. அவங்களுக்கு நான் செய்யப் போறது தெரியாது. தவிர, அங்கே இருக்கிறவங்க அசிங்கமா பேசுவாங்க. அதனால, இந்த ஒரு வருஷம் ஆபீஸ் வேலையா வெளியூர் போகணும்ன்னு சொல்லிட்டு கிளம்பிடறேன். வீடு ஒண்ணு பாத்து கொடுங்க.” காயத்ரி ஒப்பந்தப்பத்திரம் கையெழுத்திடும் முன்னரே கேட்டுக்கொண்டபடி இந்த வீட்டை சுமிதா வாடகைக்கு எடுத்திருந்தாள்.
ஓர் ஓரமாக இருந்த மேடையில் கைகளில் எடுத்து வந்திருந்த ம்யூசிக் சிஸ்டமை பொருத்தி அதை மெதுவாக ஓடவிட்டாள்.
“குழந்தை மூன்றாம் மாசத்திலே இருந்து வெளியே இருக்கும் சத்தங்களைக் கேட்கத் தொடங்கி விடுமாம். அதான் இதிலே நிறையப்பாட்டுக்கள் லோட் செய்து வெச்சிருக்கேன். நிறையகேளு”.
ம்யூசிக் சிஸ்டம் அருகில் ஒரு வெள்ளை நிற கவரையும் வைத்தாள். அதில் காயத்ரிக்கு அவள் கொடுக்கும் இரண்டாவது இன்ஸ்டால்மெண்ட் தொகை இருக்கிறது என்பதை அவளும் சொல்லவில்லை காயத்ரியும் கேட்கவில்லை.
காயத்ரி ம்யூசிக் சிஸ்டம் அருகில் சென்று மெதுவாக ஒரு பாடலை ஓட விட்டாள்.
வயிற்றில் அவள் குழந்தை மெதுவாக அசைந்தது.
“போக்கிரி…பாட்டுகேட்டு டான்ஸ் ஆடுவியா… ம்…நெளியிற”
இருபது வயதில் அவள் செய்த தவறை உணர்த்த முப்பது வயதில் குழந்தை எட்டி உதைப்பதுபோல் தோன்றியது.
“ரொம்ப சாரிடா செல்லம், வேறவழி இல்லாமதான் நான் உன்னை கலைச்சேன்.ஒண்ணு தெரியுமா, உன்னை எனக்கு ரொம்பவே பிடிக்கும். எவ்வளவு நாள் உன்னை எண்ணி அழுதிருக்கேன் தெரியுமா…”வயிற்றில் குழந்தை அவள் பேசுவதைப் புரிந்து கொண்டு கேட்டது போலிருந்தது.
••• ••• •••
சுமிதாவும், ராகவ்வும் ஹாஸ்பிடலின் காரிடாரிலேயே காத்திருந்தார்கள்.
“அங்கே சீட் காலியா இருக்கு. டாக்டர் ஸ்கான் முடிச்சுட்டு வெளியே வருவாங்க…போய் உட்காருங்க” வெள்ளை உடை நர்ஸ் அவர்களை இடம் மாற்றினாள்.
“கொஞ்சம் பயமா இருக்கு.”
சுமிதா ஆறு முறை வயிற்றில் வளராமல் கலைந்துவிட்ட கருமுட்டையை நினைத்து பயந்தாள்.
“சுமி….ரிலாக்ஸ். இப்போ ஆறுமாசம் ஆகப் போறது. இனிமேல் கலைய வாய்ப்பில்லை. எல்லாம் சரியாத்தான் இருக்கும்”
டாக்டர் ஜெல்லை காயத்ரி வயிற்றில்படர விட்டார். அல்ட்ராசோனோப்ரோப்பை அவள் வயிற்றில் மெதுவாக நகர்த்தினார்.
“டக்…டக்…”லேசானஅதிர்வுகள் எதிரேஉள்ள கம்யூட்டர் திரையில் தெரிந்தது. குழப்பமாக ஏதோ தெரிந்தது.
என் குழந்தை….என் குழந்தை….காயத்ரியின் இதயம் ஒரு நிமிடம் சந்தோஷத்தில் நின்று பின்மறுபடியும் அடித்துக்கொள்ளத் தொடங்கியது.
டாக்டர் கைகளைத் துடைத்துக் கொண்டு வெளியே செல்ல நர்ஸ் அவள் வயிற்றை மெல்லிய டிஷ்யூ காகிதத்தால் துடைத்து விட்டாள்.
“எல்லா பராமீட்டர்களும் சரியாக இருக்கிறது. குழந்தையும் சரியான வளர்ச்சி காட்டுகிறது. ஆனால்……” என்று டாக்டர் சொல்லிக்கொண்டே வெளியே நிற்கும் ராகவ்வை தனியாக அழைத்து சென்று ஏதோ பேசிக் கொண்டிருப்பதை காயத்திரி கவனித்தாள்
”சிஸ்டர், எல்லாம் நார்மல்தானே?”
“கவலைப்படாதீங்க, குழந்தை ஹெல்தியா இருக்கு.”
ஒரு நிமிடம் காயத்ரிக்குச் சிரிப்பு வந்தது
“இது என்ன உன் குழந்தையா? பொறந்த உடனே தூக்கிகிட்டு போயிடப் போறாங்க. அப்புறம் நீ அதைப் பார்க்கக் கூட முடியாது. உன் உடம்பு நார்மல்தானேன்னு கேட்டுக்க. அதைவிட்டுட்டு…’.
என்றோ கருவில் இறந்துபோன அவள் குழந்தை ஞாபகம் வந்தது. மெதுவாக மேசையிலிருந்து கீழே இறங்கினாள்.
“மெதுவா….மெதுவா…இனிமேல் ஜாக்கிரதையா இருக்கணும். குழந்தை நல்லா பார்ம் ஆயிடுச்சாம்….” ஏனோ சுமிதாவின் முகத்தில் அசாத்திய சந்தோஷம். காயத்ரி மெதுவாக நடந்தாள்.
அன்று இரவு காயத்ரிக்குச் சொப்பனம். அதில் முகம் தெரியாமல் குழப்பமாக ஒரு கலவையாகத் தெரிந்த ஒரு சிறிய உருவம் அவளைப் பார்த்துத் தேம்பித் தேம்பி அழுதது.
“என்னைக் கொன்னுட்டே இல்ல……”
வியர்வை பெருகி ஊற்ற காயத்ரி திடுக்கிட்டு விழித்தாள். எதிரே கண்ணாடியில் தெரிந்த அவள் வயிறு பெருத்து விரிந்திருந்தது. ஒரு குழந்தை முகமாக மாறி
“என்னையும் கொடுத்துடுவே இல்ல…?”
காயத்ரி மெதுவாக ஆம் என்று தலை அசைக்க அந்தக்குழந்தை அழத்தொடங்கியது.
••• ••• •••
காலை அவள் நடைப்பயிற்சிக்குச் செல்ல தயாரானபோது கூட அவள் கண்கள் சிவந்தே இருந்தன.
இன்னும் டாக்டர் கொடுத்த தேதிக்கு சில நாட்களே இருந்தது. காயத்ரியின் வயிறு மிகவும் விரிந்துவிட்டது. நடக்கும்போது சற்றே மூச்சிரைத்தது. கால்கள் இரண்டும் வீக்கம் காட்டத் தொடங்கின . அவ்வப்போது வயிற்றின் மேற்புறத்தை சின்னஞ்சிறிய கால் ஒன்று உதைத்தது.
சுமிதா இப்போதெல்லாம் அடிக்கடி அந்த வீட்டுக்குவரத் தொடங்கி இருந்தாள். அவ்வப்போது சுமிதா தன் கைகளை காயத்திரியின் மேடிட்ட வயிற்றில் வைத்துப் பார்த்தாள்.
“போக்கிரிப் பையா…. என்பையன் சரியான விஷமக்காரந்தான்”
காயத்ரிக்கு சட்டென்று வலித்தது.”என்ன பையனா….?”
முகமாற்றத்தை சுமிதா கவனிக்காமல்இருப்பதற்காக பேச்சை மாற்றினாள்.
“அது ஏன் பையன். ஒருவேளை பொண்ணா இருந்தா?”
“இருக்காது. ஜோசியர் ஜாதகப்படி பையன்கள் தான்னு சொல்லி இருக்காரு”
”பையன்களா….? ஓ அடுத்த வாடகைத்தாய்க்கு ஏற்பாடு செஞ்சுட்டாங்கபோல இருக்கு’
அப்போது அருகில் எதிர்பாராத டமால் என்று பட்டாசு வெடிக்கும் சத்தம். காயத்ரி ஒரு நிமிடம் பயத்தில் உடல் நடுங்கி நின்றாள்.
“அய்யோ, இப்படி பயப்பட்டு நிக்கிறது குழந்தைக்கு அதிர்ச்சியில்ல தரும். தீபாவளிக்கு இன்னும் இரண்டு நாள்தான் இருக்கு. இனிமேல் இந்த சத்தம் அதிகமாகத்தான் போகும். ஒண்ணு பண்ணுவோம். இனிமேல் என்னைக்கு வேணும்னாலும் பிரசவம் இருக்கும்ன்னு டாக்டர்சொல்லிட்டார். நீ இங்கே தனியா இருக்க வேண்டாம். ஆஸ்பிட்டலில் அட்மிட் செய்து விடுவோம். ஏசி ரூம் எந்தச் சத்தமும் குழந்தையைப்பாதிக்காது.
••• ••• •••
மறுநாள் திபாவளி. அந்த இரவு காயத்ரிக்கு வலி எடுத்தது.
காயத்ரி மயக்கத்திலிருந்து கண் முழித்தபோது அவள் அருகே இரண்டு மலர்மொட்டுக்கள்.
“இரட்டைகுழந்தைகளா...?”
“யெஸ்… இரண்டும் ஆண் குட்டிகள். ஆரோக்கியமா வளர்ந்திருக்கும் குழந்தைகள்.”
காயத்ரி தொட்டிலில் ஆடிக்கொண்டிருந்த இரண்டு குழந்தைகளையும் பார்த்தாள்.
மெதுவாக அவள் பக்கத்தில் சுமிதா வந்து அமர்ந்தாள்.
“தாங்க்யூ காயத்ரி….நான்கேட்டத்துக்கு மேலேயே கடவுள் எனக்கு கொடுத்துட்டார் . ஐ ஆம் வெரி வெரி ஹாப்பி”
ராகவ் கைகளால் ஒரு குழந்தையைத் தடவியபடி
“தாங்க்யூமா, உங்களுக்குக் கொடுக்க வேண்டிய கடைசி பேமெண்ட்டை உங்க அக்கெளண்ட்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணிட்டேன். இனி….”
அவன் பார்வையில் உன் வேலை முடிந்துவிட்டது. இனி நீ கிளம்பலாம் எனும் வார்த்தைகள் கசிந்துநின்றன.
காயத்ரி மெதுவாக நகர்ந்து இரண்டு பூச்செண்டுகளின் கைகளையும் தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டாள்.
“உங்க இரண்டுபேருக்கும் இரட்டைகுழந்தைகள் பிறக்கப்போவது முதலிலேயே தெரியுமா”
ராகவ் முதலில் தலைஅசைக்க சுமிதா அவள் அருகில் வந்து நின்றாள்.
“தெரியும் காயத்ரி, உனக்கு சோனோகிராம் செய்தபோதே டாக்டருக்கு தெரிஞ்சுபோச்சு. சொன்னாங்க
“ஆனா என்கிட்ட சொல்லலியே…..”
“அது….வந்து….ஆங்….நீங்க பயந்துடப் போறீங்கன்னு சொல்லித்தான்”
“ஹக்…”காயத்ரி வினோதமான சத்தம் ஒன்றை எழுப்பினாள்.
காயத்ரிக்கு அழுகை வந்தது. இனி இந்த மலர்மொட்டுக்களை அவள் பார்க்க முடியாதா? இவை அவள் குழந்தைகள் இல்லையா….?
ஏதோ யோசனையில் இருந்தவள் சட்டென்று நிமிர்ந்தாள். கண்களில் ஒரு மின்னல்
“சார், காண்ட்ராக்ட் போடும்போது பிறக்கும் குழந்தையை நான் உரிமை கொண்டாட முடியாதுன்னுதானே போட்டிருந்தீங்க”
ராகவ் அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பது புரியாமல் ஆம் என்று தலையசைத்தான்.
“அப்போ ஒரு குழந்தையை எடுத்துக்குங்க . இந்தக் குழந்தையை த் தரமாட்டேன்”
தொட்டிலில் இருந்த ஒரு குழந்தை அவள் சுண்டுவிரலைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருந்தது.
“நான்சன்ஸ்… இங்கே பாருங்க நீங்க கேட்ட தொகையை நாங்க முழுசா கொடுத்துட்டோம். இப்போ இது மாதிரி நீங்க அடாவடி செஞ்சீங்கன்னா…..நாங்க…நாங்க…..”மேலே பேசமுடியாமல் தடுமாறினான்.
“போலீக்கு, கோர்ட்டுக்குபோவோம்”சுமிதா முடித்து வைத்தாள்.
காயத்ரி சிரித்தாள்.
“பணத்தை திருப்பி கேட்பீங்களா…கேட்டுக்குங்க... ஜெயில்லே தூக்கி போடுவீங்களா…? போட்டுகுங்க. ஆனா ஒப்பந்தபடி உங்க குழந்தையை உங்ககிட்டே பத்திரமா கொடுத்துட்டுத்தான் போகிறேன்… இது என் குழந்தை... நான் வலித்துப்பெற்ற குழந்தை... இதை கொடுக்கமாட்டேன்.”
காயத்ரி அவள் விரலைப்பிடித்துக் கொண்டிருந்த குழந்தையைச் சுற்றியிருக்கும் துணியோடு தன் கைகளில் எடுத்துக் கொண்டு வேகமாக வெளியேறினாள்.
”இது சில வருஷங்களுக்கு முன் நான் தொலைத்த கிருஷ்ணர்….”
என்ன நடக்கிறது என்று சுமிதாவும் ராகவ்வும் திகைத்து நிற்கும் நிமிஷத்தில் காயத்திரி குழந்தையுடன் ஏறிய ஆட்டோ பறக்கிறது.
சுமிதா கண்களில் நீர் பெருக்கெடுக்கிறது. ராகவ் மொபைலில் யாரையோ பிடிக்க நம்பர்களைத் தொட்டுக் கொண்டிருக்கிறான்.
தொட்டிலில் படுத்திருந்த தேவகிநந்தன் ஏதோ புரிந்தார் போல் சிரித்துக் கொண்டிருந்தான்.
தூரத்தில் எங்கோ வெடிசத்தத்துடன் ஓளிச்சிதறல் ஒன்று தீபாவளியை வரவேற்றது.