தேவனின் ‘துப்பறியும் சாம்பு’ – சாகாவரம் பெற்ற நகைச்சுவைக் காவியம்!

தேவன் பிறந்த நாள் செப்டம்பர் 08
தேவனின் ‘துப்பறியும் சாம்பு’ – சாகாவரம் பெற்ற நகைச்சுவைக் காவியம்!
Published on

ழுத்தாளர் தேவன் என்று சொன்னால், மனதில் முதலில் தோன்றுவது துப்பறியும் சாம்பு என்ற நகைச்சுவை கலாட்டா.

ஆர்.மகாதேவன் என்கின்ற தேவன் பிறந்தது செப்டம்பர் 8ஆம் தேதி, 1913ஆம் வருடம், திருவிடைமருதூரில். கும்பகோணம் அரசுக் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்ற அவர் பல வருடங்கள் ஆனந்தவிகடனில் பணியாற்றினார். தமிழ் எழுத்துலகில் தனக்கென்று ஒரு சிம்மாசனம் அமைத்துக் கொண்ட சுஜாதா, தன்னுடைய எழுத்திற்கு முன் மாதிரியாகக் குறிப்பிட்டது அமரர் கல்கி மற்றும் தேவன் இருவரையும்தான். சோ, அவருடைய எழுத்துலக முன்னோடியாகக் குறிப்பிட்டது தேவன் அவர்களை.

நாற்பத்து நான்கு வயதில் இறைவனடி சேர்ந்த தேவன் குறுகிய காலத்தில் அற்புதமான நாவல்கள் படைத்தார். அவர்கள் படைத்த சில நாவல்கள் ஜஸ்டிஸ் ஜகந்நாதன், கோமதியின் காதலன், சி.ஐ.டி.சந்துரு, ராஜத்தின் மனோரதம் மற்றும் பல. துப்பறியும் சாம்பு, ‘ஆனந்த விகடன்’ பத்திரிகையில் தேவன் அவர்கள் எழுதிய ஒரு அற்புதமான சித்திரத் தொடர் கதை.

துப்பறியும் கதைகளில், துப்பறிவாளர் கூர்ந்த அறிவு, மதிநுட்பம், பார்த்தவற்றை மனதில் எளிதில் கிரகிக்கும் தன்மை, மற்றவர்களை எடை போடும் திறமை கொண்டவராக அமைப்பது வழக்கம்.  உதாரணத்திற்கு ஹெர்குல் பாய்ராட், மேரி மார்ப்ள், ஷெர்லக் ஹோம்ஸ், சங்கர்லால் மற்றும் கணேஷ், வசந்த். கதாநாயகன் வசீகரமான, மெத்தப் படித்தவனாக, சாகசம் செய்யும் வல்லமை படைத்தவனாக இருப்பான்.

ஆனால் இவற்றிற்கெல்லாம் எதிர் மறையானவன், இந்தக் கதையின் நாயகன் சாம்பு. நாற்பது வயது, வழுக்கைத் தலை, நீள மூக்கு, அகலக் காதுகள், அசட்டுப் பார்வை என்ற லட்சணங்கள் கொண்டவர். அலுவலகத்தில் அவரது பட்டப் பெயர் முட்டாள். இவரை மையமாக வைத்து ஒரு நீண்ட தொடரை எழுதி, வாசகர்களை வசீகரிக்க வைத்தது தேவனின் மகத்தான சாதனை என்று சொல்லலாம். துப்பறியும் சாம்பு நாவலை தேவனின் “மாஸ்டர் பீஸ்” என்பார்கள்.

விகடனில், துப்பறியும் சாம்பு, கோபுலு அவர்களின் சித்திரத்துடன், சித்திரத் தொடர் கதையாக வந்தது. பின்னர் ஐம்பது பகுதிகள் கொண்ட நாவலாக புத்தக வடிவில் வந்தது, சித்திரங்கள் இல்லாமல். இதனை புத்தக வடிவில் சித்திரக் கதையாக பிரசுரம் செய்தால் இதனுடைய மெருகு இன்னும் கூடும் என்பது என்னுடைய அபிப்ராயம்.

கதைக்கரு: முட்டாள் சாம்பு என்ற பட்டத்துடன், வங்கி வேலையிலிருந்து வெளியே அனுப்பப் படுகிறார் சாம்பு. சாம்புவிற்கு துப்பறிவதில் அலாதி மோகம். காக்கை உட்காரப் பனம் பழம் விழுந்தது போல, அவர் அறியாமல் செய்கின்ற செயலில் திருட்டுப் போன பொருட்கள் கிடைக்கின்றன, குற்றவாளிகள் பிடிபடுகின்றனர். மகா சமர்த்தரான சாம்புவிடம் “எப்படிக் கண்டு பிடித்தீர்கள்” என்று கேட்டால், அவருடைய பதில் அசட்டுச் சிரிப்புதான். (பாவம் அவர் என்ன செய்வார்? தெரிந்தால் தானே சொல்வதற்கு). இன்ஸ்பெக்டர் கோபாலன், அவருடைய நண்பர் ஆகிறார். காவல்துறையினரால் கண்டு பிடிக்க முடியாமல் போன குற்றங்கள், சாம்புவிடம் உதவி கேட்டு வரும் போது, துப்பு துலங்கி குற்றவாளிகள் அகப்பட்டுக் கொள்கின்றனர்.

சாம்பு லண்டன் சென்று ஸ்காட்லாண்ட் யார்ட் கண்டு பிடிக்க முடியாத, பதுக்கல் பேர்வழிகளை, அவருடைய பாணியில் கண்டு பிடித்து, மேலும் புகழுடன் இந்தியா திரும்புவதுடன் தொடர் முடிகிறது.

இந்தத் தொடர் பிரபலமடைந்த போது, தபால் துறை ஒரு விளம்பரம் கொடுத்தது. “உங்கள் தபால்காரர், துப்பறியும் சாம்பு இல்லை. ஆகவே விலாசத்தை தெளிவாக எழுதவும்.”

இந்தக் கதையை புத்தகமாக வெளியிட்ட கிழக்குப் பதிப்பகம், “சாகாவரம் பெற்ற நகைச்சுவைக் காவியம்” என்று முகப்பில் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com