ஆண்டுதோறும் சென்னையில் நடைபெறும் புத்தகக் கண்காட்சி இந்த வருடமும் கடந்த ஜனவரி மாதம் 3ம் தேதி தொடங்கி 21ம் தேதி வரை நடைபெற்றது. இதில் ஏராளமான புத்தகப் பதிப்பு நிறுவனங்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. வருடந்தோறும் புத்தகக் கண்காட்சியில் விற்பனையில் முதலிடம் பிடிக்கும் அமரர் கல்கியின், ‘பொன்னியின் செல்வன்’ நாவல் இந்த வருடம் விற்பனையில் மிகவும் பின்தங்கி விட்டது எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து செய்தி சேனல் நிறுவனம் ஒன்று, புத்தகப் பதிப்பு உரிமையாளர் ஒருவரிடம் கேட்டபோது அவர், “பொன்னியின் செல்வன் நாவல் இத்துப்போய் விட்டது. இனி அதன் கதை அவ்வளவுதான். அதற்குக் காரணம் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த, ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை ஏராளமானோர் பார்த்து விட்டதுதான். இனிவரும் காலத்திலும், ‘பொன்னியின் செல்வன்’ நாவல் அச்சுப் பிரதி விற்பனையை எதிர்பார்க்க முடியாது” என்று கூறி இருக்கிறார்.
இதுகுறித்து பழம்பெரும் எழுத்தாளரும், அமரர் கல்கியின் மீது மிகுந்த அபிமானம் கொண்டவரும், கல்கியின் பல்வேறு நூல்களைத் தொகுத்தவருமான சுப்ர.பாலனிடம் கருத்து கேட்டபோது,
“பொன்னியின் செல்வன்' நூல் விற்பனை இந்த வருடம் புத்தகக் கண்காட்சியில் பெரிய அளவில் பாதிப்படைந்தது என்பது உண்மைதான். நானும் நண்பர் ப்ரியனும் புத்தகக் கண்காட்சியில் இதைப் பலரிடம் கேட்டறிந்தோம். ஆனால், 'அந்த சகாப்தமே முடிவடைந்துவிட்டது, அவ்வளவுதான்' என்பது போன்ற கருத்தை ஏற்பதற்கில்லை.
இந்த நிகழ்வு தற்காலிகமான ஒன்றுதான். காரணம், மணிரத்னம் இந்த நாவலை திரைப்படமாக்கியது மட்டுமில்லை; Soft copy வடிவில் கையடக்கக் கருவிகளில் எங்கே வேண்டுமானாலும் எளிதாக எடுத்துச் சென்று படிக்கும் வசதி, குறிப்பாக 'கிருமி ஊமத்தை' நோய்த்தொற்று முடக்கநிலைக்குப் பிறகு பெருகியிருப்பதும் முக்கியமான காரணம் என்பது என் எண்ணம்.
'லெய்ட'னில் மேற்படிப்புக்காகப் போன எனது நண்பரின் மகள், இத்தனைக்கும் தமிழ்நாட்டுக்கு வெளியில் கல்வி கற்றவர், ஒரே மூச்சில் என்பதுபோல் கைக்கருவியில்தான், 'பொன்னியின் செல்வன்’ நாவலைப் படித்தார் என்பதை நான் அறிவேன்.
மிகைபடச் சொல்வதாகவே எடுத்துக்கொண்டாலும் கவலையில்லை. இராமாயண, மகாபாரதம் மாதிரி மகாகாவியப் பெருமை உள்ள ஒரே இலக்கியம் பொன்னியின் செல்வன் மட்டுமே.
இராமாயணம் திரைப்படமாகியது, நாடகங்கள் ஆகிவிட்டது, உபந்நியாசம் செய்கிறார்கள் என்பதற்காக அது மதிப்பிழந்து காலாவதியாகிவிடவில்லை. எதிர்மறை விமர்சனங்களைத் தாக்குப்பிடித்து இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு உயிர்ப்போடுதான் இருக்கப்போகிறது.
1950 – 54ம் ஆண்டுகளில் 'பொன்னியின் செல்வன்' வாராவாரம் தொடராக வெளியானபோது தஞ்சாவூரில் சில இடங்களில், ‘இங்கே பொன்னியின் செல்வன் கதை சாயங்காலம் நாலு மணிக்குப் படிக்கப்படும்' என்கிற அறிவிப்போடு கல்கி இதழ் வெளியான வெள்ளிக்கிழமைகளில் படிக்கப்பட்டதாக ஓர் அன்பர் பதிவிட்டிருக்கிறார்.
இந்தப் பெருமை இந்திய மொழிகளில் வெளியான எந்த சமகால இலக்கியத்துக்கும் கிடைத்ததில்லை. இனியும் எதற்கும் அந்த வாய்ப்பு கிடைக்கப்போவதுமில்லை.
நாடு சுதந்திரம் பெற்ற புத்துணர்வு நாட்களில் தமிழ் மொழியின் பெருமை, வரலாறு, பண்பாடுகளை மையப்படுத்தி கல்கி அவர்கள் இதை எழுதியபோது திருச்சி சிவா, வைகோ போன்ற திராவிட இயக்கப் பற்றாளர்கள் பலரையும் மயக்கிய எழுத்து அது.
பின்நாட்களில் தாய்மொழிப்பற்றை ஊக்கப்படுத்தியே ஓர் இயக்கம் வளர்ந்து, அரசு கட்டிலில் ஏறியது என்றால் அதற்குப் பின்னணி இசையாக இருந்து உதவியது பொன்னியின் செல்வன் ஊட்டி வளர்த்த தமிழ் உணர்வும்தான். தொடக்க காலம் முதலே திராவிட இயக்க அனுதாபியாக மட்டுமே இருக்கும் நான் இதைத் தயக்கமின்றிக் கூறுவேன்.
அடுத்துவரும் புத்தகக் கண்காட்சிகளில் இந்த நிலைமை கண்டிப்பாக மாறும் என்பது எனது கணிப்பு. எந்த வடிவத்திலேனும் இந்தச் சூரியன் மங்காமல் சுடர்விட்டுக் கொண்டேதான் இருக்கும்.
மேலும் இது குறித்து, எழுத்தாளர் சுசீலா மாணிக்கத்திடம் கருத்து கேட்டபோது...
“சமீபத்தில் ஒரு வலைத்தளத்தில் ஒரு பதிப்பாளரின் கருத்தை பார்க்க நேர்ந்தது. ‘பொன்னியின் செல்வன் நாவலை இனி பதிப்பாளர்கள் பதிப்பதும், விற்பதும் கேள்விக்குரியது. அந்த நாவல் விற்பனை சரிந்து விட்டது என்று சொல்வதை விட, பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்குப் பிறகு அதன் விற்பனை இறந்தே விட்டது என்றுதான் கூற வேண்டும்’ என்று பதிவிட்டிருந்தார்.
பொன்னியின் செல்வன் திரைப்படம் வருவதற்கு முன்பும் வந்த பின்பும் அந்த நாவல் விற்பனை கணிசமாக அதிகரித்திருந்ததை ஒரு புள்ளிவிவரம் குறிப்பிடுகிறது. ‘சமீபத்தில் புத்தகக் கண்காட்சியில் பொன்னியின் செல்வன் நாவல் விற்பனை சற்று மந்தமாக இருந்தது’ என்றார். இதற்குக் காரணம் கடந்த காலங்களில், குறிப்பாக திரைப்படத்துக்கு முன்னும் பின்னுமான அதிக விற்பனையாய்க் கூட இருக்கலாமே.
முன்பெல்லாம் சென்னை புத்தகக் கண்காட்சி ஒரு திருவிழா போல நடக்கும். காத்திருந்து வாங்குவோர் பட்டியலோ மிக நீளம். புத்தக விற்பனையும் அமோகமாக இருக்கும். இப்போதெல்லாம் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் கண்காட்சி நடைபெறுவதால் வாசகர்கள் ஆங்காங்கே வாங்கிக் கொள்கிறார்கள். இது ஓர் தற்காலிக விற்பனைச் சுணக்கமாக இருக்கலாமே தவிர, நிரந்தரம் அல்ல. பொத்தாம் பொதுவாக, ‘பொன்னியின் செல்வன் நாவல் விற்பனை ஆகாது. உயிர் போய்விட்டது’ என்றெல்லாம் மிகைப்படுத்தி கூறி இருக்க வேண்டாம். கடந்த 50 வருடங்களுக்கு மேலாக எத்தனையோ பதிப்பகங்களை இன்றுவரை உயிர்ப்புடன் வைத்ததற்கு முக்கியக் காரணங்களுள் ஒன்று பொன்னியின் செல்வன் நாவல் என்பதை யாராலும் மறுக்கவோ, மறக்கவோ, ஏன் மறைக்கவோ இயலாது.
காலமும் வாழ்வியல் முறைகளும் மாற மாற எல்லாவற்றிலும் ஒரு மாற்றம் இருக்கத்தானே செய்யும். கடந்த 50 வருடங்களில் எத்தனையோ கோடி பொன்னியின் செல்வன் நாவல் பிரதிகள் விற்கப்பெற்றிருக்கும். அத்தனையும் இன்றுவரை அனைவர் வீடுகளிலும் பாதுகாக்கவும் பட்டிருக்கிறது. இப்போதெல்லாம் மத்திம வயதுடையோர் மற்றும் இளையோரிடமே புத்தக விற்பனை பெரிதும் சார்ந்து இருக்கிறது எனலாம். அப்படிப் பார்க்கும்பொழுது இந்நாட்களில் பதிக்கப் பெற்று வரும் புது பரிமாணங்களுடனான பல்வேறு புத்தகங்கள் இன்றைய தலைமுறையை கவர்வதில் வியப்பேதும் இல்லை.
இந்த விற்பனை சுணக்கம் எல்லா நாவல்களுக்கும்தானே. அப்படியிருக்க, பொன்னியின் செல்வன் நாவல் விற்பனையை மட்டும் ஏன் இப்படி தனித்துக் கூற வேண்டும். ஒருவேளை எப்பொழுதும் நிரந்தரமாக தொடர் விற்பனையாகிக் கொண்டிருக்கும் நாவல், விற்பனையில் திடீரென ஓர் தொய்வு ஏற்பட்டதால் ஏற்பட்ட மனத்தாங்கலாகக் கூட இருக்கலாம். அது சரி… ‘காய்த்த மரம்தானே கல்லடிப் படும்.’
எத்தனை மாற்றங்கள் வந்தாலும் தாய் எனும் உறவும் உணர்வும் எப்படி அன்றிலிருந்து இன்று வரை மாறாமல் இருக்கிறதோ, அதேபோலத்தான் பொன்னியின் செல்வனும். பொன்னியின் செல்வன் எங்களுக்கெல்லாம் தாய்.